Friday, June 26, 2009

உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள் தினத்தன்று வருவார் எம்தலைவர்.


1989-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது.

அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மயிரிழை வேகமெடுத்துள்ளது. சோகநதிகளாய் தமிழர் கண்ணீரும் சேர்ந்து பெருக்கெடுத்துப் பாய்கிறது. ஆறறோரத்து அகதிமுகாம்கள், வயல்மேட்டின் புற்றுப்பிட்டிகள், வீதியோரங்களென விரிந்திருக்கும் இடப்பெயர்வின் துயர வாழ்வுக்குள்ளும் ஏதோ ஒரு திடமான நம்பிக்கை...
"
எங்களுருக்கு மீண்டும் செல்வோம்" "அந்த மகிழ்வான வாழ்வுகையில் கிட்டும்" "நாங்கள் கொடுத்திருக்கும் விலை கொஞ்சநஞ்சமல்ல." "போட்ட முதலை செலவாய் எண்ணிவிட முடியாது அறுவடை எடுத்துத்தான் ஆகவேண்டுமென்ற கட்டாயம் எங்களுக்கு..." என்ற உண்ணத்து நம்பிக்கைகளும் உணர்வுகளும் எம்மை வலுவாகவே பற்றி நிற்கின்றன.

இந்தநிலையில் உணர்வுகளில் உறுதி ஏற்றிக்கொள்வதற்காய் எம்முன்னே விரிகிறது இன்றைய நாள் கார்த்திகை 27, மாவீரர்களுக்காய் எடுக்கப்படுகின்ற பெருவிழா அல்ல, அவர்கள் நினைவிடயங்களின் முன்னே உறுதி ஏற்றிக்கொள்கின்ற உன்னத நாள் எங்கள் நம்பிக்கைகளின் மகத்துவங்களாய் மண்ணில் உறங்கும் மானிட தெய்வங்களுடன் மனம்விட்டுப் பேசும் உயிர்ப்புநாள், இந்த நாளுக்காக இன்று தமிழர் மனங்கள் மனமுருகி நின்கின்றன.

சிங்களப் பேரினவாத இனமொன்றினால் அதன் அரச இயந்திரத்தாலும் சிறுபான்மைத் தமிழினம் அழிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தவிர்க்க முடியாத தெரிவாய் ஆயுதத்தைக் கொண்டு அழிப்பவனை அழிக்கும் எமது விடுதலைப்போராட்டம் தொடங்கியது. படைவளம், படைப்பலம் கொண்ட ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராய் ஒரு சில உணர்வுள்ள தமிழ் இளையோரால் தொடங்கப்பட்டதே இந்த விடுதலைப்போராட்டம், ஆட்பல ஆயுதப்பல ஒப்பீடுகளுக்கு அப்பால் எந்தவகைத் தியாகத்தையும் செய்யத்துணிந்தெழுந்த போராளிகளின் மனபலம் தனிப்பெரும் சக்தியாகவே தமிழரைக் காத்து நின்றது. அந்தக் காப்பு சகத்திகளின் சாட்சியாக 22000 இற்கு அதிக மாவீரர்களை இந்த மண்ணிலே விதைத்து இன்று உறுதிபெற்று நிற்கின்றோம்.

ஒவ்வொரு மாவீரரின் உயிர்த்தியாகமும் ஒரே இலட்சியத்தைக் கொண்டதெனினும் அவர்களின் தியாகவடிவங்கள் தனித்துவமானவை."எனது மரணத்தின் பின்னால் இந்த மண் மகிழ்வான வாழ்வைப்பெறும் என்ற நம்பிக்கையில் போகிறேன்" என சொல்லிப்போன கரும் புலி மாவீரர்களினதும் "எனது வித்துடலைத் தாண்டித்தான் எதிரி எம் மண்ணை ஆக்கிரமிக்கமுடியும்" என இறுதிவரை உறுதியுடன் போரிட்டு வீழ்ந்த மாவீரர்களினதும், தாய் மண்ணின் இரகசியத்தைக் காப்பதற்காய் கடலிலும் தரையிலுமாக தம்மைத்தாமே மாய்த்துக்கொண்ட மாவீரர்களும் என மாவீரர்களின் தியாகப்பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை.

அந்த அத்தனை மாவீரர்களினதும் வீரச்சாவு நிகழ்ந்த நாட்களும் வேறுபாட்டவை. எனினும் ஓரே இலட்சியத்திற்காய் விதையாகிப்போன மாவீரர்களை நினைவுகொள்ள கார்த்திகை 27 தெரிவுசெய்த சம்பவமும் எமது விடுதலைப்போராட்டத்தில் தனிப்பதிவாய் அமைந்தது.ஒரு சில போராளிகளாய் உருவாகி பரந்திருக்கின்ற எதிரிகளின் கண்களில் மண்ணைத் திருக்கின்ற எதிரிகளின் கண்களில் மண்ணைத் தூவுp போராட்டப் பாதையை செப்பனிட்ட காலமது. அந்தக் காலப்பகுதியில் தான் விடுதலைப்போரின் முதல் வித்தொன்று 1982.11.27 அன்று லெப்.சங்கராக வீழ்ந்தது.

லெப்.சங்கரின் பின்னால் பலவடிவங்களில் மாவீரர்களின் தியாகப் பயணங்கள் பதிவாகி வருகின்றன. இலட்சியத்தில் மாற்றம்பெறுகின்ற எமது விடுதலைப்போரின் ஒவ்வொரு மாற்றங்களிலும் வித்தியாசமான தியாக வடிவங்கள் பிரசவித்திருக்கின்றன. 1987 ஆம் ஆண்டு யாழ்குடா வடமராட்சியை முற்றுமுழுதாய் ஆக்கிரமித்துவிடவேண்டுமென்ற துடிப்புடன் படைநடவடிக்கையை மூர்க்கமாக முன்னெடுத்த சிங்களப் படைகளுக்கு கரும்புலி கப்டன் மில்லர் நெல்லியடி மத்திய மகாவித்தியாலய படைமுகாமில் கொடுத்த கரும்புலித் தாக்குதல் அன்றைய கால சூழ்நிலையே மாற்றிப்போடும் அளவிற்கு வீரப்பதிவு ஒன்றை எமது போராட்டத்திற்கு தந்திருந்தது.

அந்த ஒரு மாவீரனின் உயிர்க்கொடை சிங்கள தேசத்தின் அத்தனை வீரிய இராணுவ மமதையையும் ஒரே நொடியில் அதலாபாதாளத்தில் வீழ்த்தியது. அந்த மாற்றத்தால் அப்போதைய ஜெ.ஆர்.அரசு இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றிற்கு செல்லவேண்டி கட்டாயம் வந்தது என்பது வரலாறு.

அதன்பின் இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஒன்று உருவாக அமைதிப்படை என்ற பேரில் இந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் வந்திறங்கியது. தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கு வழிகோலாத அந்த ஒப்பந்தம்குறித்தும், இங்குவந்திறங்கிய அமைதிப்படையின் சுயவடிவம் குறித்தும் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தியாகவேண்டிய தருணமது. அமைதிப்பேச்சுக்கள் உடன்பாடு நிர்ப்பந்தங்களென அமைந்த அந்த சூழலில் பொதிந்துகிடக்கும் பின்னிலை அபாயங்கள் தமிழ்மக்களுக்கு சாதகமற்றதாகவே இருந்தது.

இந்நிலையில் இந்திய அரசின் உண்மைத்தோற்றத்தையும் தமிழீழ பகுதி எங்கும் ஆயுதங்களுகடன் குவிந்து கிடக்கும் இராணுவப் பிரசன்னத்தையும் வெளிச்சம் போட்டுக்காட்டும்தருணத்திற்காய் எமது ஆயுதம் தாங்கிய விடுதலைப்போராட்டம் அன்று அகிம்சைப் போராட்டம் ஒன்றை நடத்தவேண்டியதாயிற்று. நல்லூர் கந்தன் முன்றலில் லெப்.கேணல் திலீபன் தமிழ்மக்களின் பிரச்சினைத் தீர்விற்கான ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாநோன்பை தொடக்கினான்.

இலட்சக்கணக்கில் மக்கள் கண்ணீருடன் திரண்டிருந்த 12 நாட்கள் தொடர்ந்த அந்த அகிம்சைப் போருக்கு இந்தியா இறுதிவரை செவிசாய்க்கவில்லை. அந்த மக்கள் முன்னிலையிலேயே அந்த அகிம்சை நெருப்பு அணைந்துபோனது. ஆனால் தமிழர் மனங்களில் இலட்சிய நெருப்பு வேகமெடுத்தது. அந்தத் தியாக மரணம் எமது விடுதலைப்போராட்ட வீரர்கள், வல்லரசு ஒன்றுடன் பொருதும் மனஉறுதியை பெற்றுத்தந்தது. அச்சம்பவத்திற்குப் பின்னே இடம்பெற்ற இந்திய இராணுவத்துடனான மோதல் எமது விடுதலைப்போராட்டத்தின் முதல் பெண் மாவீரரை இந்த மண்ணில் விதையாக்கியது.

பெண் அடிமைத்தனத்தில் கட்டுண்டு கிடந்த எமது சமூக அமைப்பிலிருந்து போராடும் திறன்கொண்ட வல்லமைபடைத்த பெண்களை உருவாக்கிய வரலாற்றுக்கு சான்றாய் 10.10.1987 அன்று இந்திய இராணுவத்துடனான மோதலின்போது 02 ஆம் லெப்.மாலதி என்ற முதல்பெண் மாவீரர் தன் உயிரை ஈந்து வரலாற்றில் பதிவானாள். இவ்வாறாக எமது மாவீரர்களின் வீர தியாகப் பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை, அந்தவகையில் தமீழ விடுதலைப்புலிகள் என்ற போராளிக்கட்டமைப்பிற்கு அப்பால் மக்கள் படைக்கட்டுமானத்தால் எழுச்சிகொணட, எல்லைப்படை , சிறப்பு எல்லைப்படை, போர் உதவிப்படை, துணைப்படை போன்றவற்றின் ஊடாகவும் எமதுவிடுதலைப்போராட்டத்தின் மாவீரர் பதிவுகள் நீள்கின்றன.

அவை தவிர சிறப்புப்படை, காவல்துறை படைக@டாகவும் தமதுஉயிர்களைத் தியாகம் செய்து மாவீரர்களாய் உறங்கும் மகத்துவங்களையும் இந்த மண்பெற்றிருக்கிறது. இந்த அத்தனை மாவீரர்களுக்கும் தனிச் சிறப்பான பக்கங்கள் உண்டு. ஒவ்வொரு மாவீரர் குறித்த பதிவுகளையும் நாம் வரலாறாய் பார்கின்ற இச்சந்தர்ப்பத்தில் தாயகம் கடந்து எங்கெங்கோவெல்லாம் சென்று சாதனை படைத்துவிட்டு சரித்திரமாய் உறங்கும் முகம் காட்டா கரும்புலி மாவீரர்களின் தியாகங்கள்உச்சத்தைத் தொட்டு நிற்கின்றன.

சாதனைகளை மட்டுமே எமக்காய் சாற்றிவிட்டு சாதனைகளை மட்டுமே எமக்காய் சாற்றிவிட்டு சந்தனப்பேழையும் காணாது முகம்மறைத்து, முகவரி மறைத்து வெடியாகிப்போன அந்த மாவீரர்களின் தியாகம் பற்றியும் அவர்களின் உணர்வுகள் பற்றியும் யாரும் மதிப்பீடு செய்துவிட முடியாது.இவ்வாறாக இந்த மண்ணிற்காய் விதையாகிப்போன பல்லாயிரம் மாவீரர்களின் நினைவிடத்தின் முன்னின்று நாம் எதைப் பேசப்போகின்றோம்.

எதை நினைத்து சுடர் ஏற்றப்போகின்றோமென்ற கேள்விகளுக்கு விடைகாணவேண்டியவர்களாக நாமே உள்ளோம்இத்தனை விதைப்புகளுக்குமான அறுவடை எமக்கானது மட்டுமே. அந்த அறுவடையை நாம்தான் பெற்றாகவேண்டுமென்ற உறுதிப்பாடை ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் எடுத்தாகவேண்டும். இதுவே அந்த மாவீரர்களின் இலட்சியக்கனவை நிறைவேற்ற உதவும்.


ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு.

ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.

ஆனால் விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கிடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழீழ மக்கள் மண்ணின் விடிவிற்காகத் தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை எழிற்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்கள் குடும்பத்தினரை போற்றிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டும், நடுகற்கள் நாட்டப்பட்டும் வழிபாடியற்றப்படுகின்றது.

மாவீரர் நாளில் மாவீரரின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றிமதிப்பளிக்கப்படுகின்றனர்.

உலகிலே எங்குமே மாவீரர் நாள் நிகழ்வுகள் போல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள், அவர்களின் பெற்றோரும், குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ, நடைபெறுவதாகவோ வரலாறுகள் இல்லை.

மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும்

1989
ஆம் ஆண்டில் நவம்பர் 27ஆம் நாளை மாவீரர் நாளாகவும் 1990ஆம் ஆண்டில் இருந்து 1994ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள் வரை மாவீரர் எழுச்சியாகவும்(வாரமாகவும்) தமிழீழ மக்கள் எழுச்சி நிகழ்வாக நடைபெற்று வந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 1995ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25ஆம் நாள் முதல் 27ஆம் நாள்வரை மூன்று நாட்களில் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.



0 comments:

Post a Comment