Monday, June 29, 2009

தலைவரை சாகடிப்பதனூடாக எதையுமே சாதிக்க முடியாது.


மக்களின் உளவியலை புரிந்து கொண்டு மக்கள் போராட்டத்திற்கு வழி விடுங்கள்

தமிழ் மக்களின் விடுதலைப்போர் அறுபத்து ஒரு வருடங்களை பல பரிணாமங்களின் ஊடாக கடந்த போதும், அது தற்போது ஒரு நெருக்கடியான கட்டத்தை அடைந்துள்ளது.

விடுதலைப்புலிகளின் மரபுவழியிலான படைபலத்தை பிராந்திய வல்லரசுகளின் துணையுடன் சிறீலங்கா அரசு முறியடித்த பின்னர் தமிழ் மக்களின் உரிமைக்கான போரின் அடுத்த கட்டத்தை நகர்த்துவதில் தமிழ் சமுதாயம் பல நெருக்கடிகளை எதிர் நோக்கி நிற்கின்றது.

விடுதலைப்போர் சந்தித்த மிகப்பெரும் மனிதப்பேரவலத்தின் இறுதி நாட்களில் வீறுகொண்டு எழுந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் எழுச்சிகள் தமிழ் மக்களின் உரிமைகள் கிடைக்கும் வரை தொடர வேண்டும். அதன் மூலம் தான் எமது இனம் சந்தித்த இழப்புக்களையும், துன்பங்களையும், பேரழிவுகளையும் உலகின் பதிவுகளில் இருந்து அழியாது பேணமுடியும்.

கடந்த ஏப்பிரல் மற்றும் மே மாதங்களில் உலகில் வாழும் ஒட்டுமொத்த தமிழினமும் ஏற்படுத்தியிருந்த பெரும் எழுச்சிக்கு கடந்த 20 ஆம் நாள் பிரித்தானியா தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை செயல்வடிவம் கொடுத்திருந்தனர்.

எமது எழுச்சிகள் அடங்கிப்போனால் எமது உரிமைகளும் அதனுடன் அடங்கி போய்விடும் என்ற சிறீலங்கா அரசின் எதிர்பார்ப்புக்கு அவர்களின் இந்த எழுச்சி மீண்டும் ஒரு பேரிடியை கொடுத்துள்ளது.

போராட்டம் அடுத்து பயணிக்கப்போகும் பாதைக்கு அனைத்துலகத்திலும் பரந்து வாழும் ஒட்டுமொத்த தமிழினத்தின் ஆதரவுகள் தேவை. ஆனால் அதனை சிதைத்துவிடுவதில் இந்திய - சிறீலங்கா அரசுகள் முனைப்பாக செயற்பட்டு வருகின்றன.

அவர்களின் தற்போதைய நடவடிக்கைகள் முழுவதும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை மையமாக கொண்டே நகர்த்தப்பட்டு வருகின்றன. அதனை உறுதிப்படுத்துவது போலவே வன்னியில் படை நடவடிக்கைகயை மேற்கொண்ட பல படை அதிகாரிகளை வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் சிறீலங்கா அரசு பணிகளில் அமர்த்தியுள்ளது. அவர்களின் மூலமும் பல ஊடுருவல்களை மேற்கொள்ள அரசு முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

ஆனால் அவற்றை எல்லாம் புறம்தள்ளி நாம் மேற்கொள்ளப்போகும் தொடர் போராட்டங்கள் மூலமே காத்திரமான அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான அழுத்தங்களை ஏற்படுத்த முடியும்.

கடந்த வாரம் பிரித்தானியாவில் அணிதிரண்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட உறவுகளை போல எதிர்வரும் 28 ஆம் நாள் பிரான்ஸிலும், ஏனைய நாடுகளிலும் நாம் ஒன்று திரண்டு எமது பலத்தை மீண்டும் மீண்டும் நிருபிக்க வேண்டிய கட்டயாம் உள்ளது.

எமது மக்கள் தாயகத்தில் சந்தித்த பேரழிவுகளுடன் எமது போராட்டமும் முடிவுக்கு வந்துவிட்டது என்ற கருத்தை நாம் தான் மாற்ற வேண்டும். ஆனால் எமது மக்களின் உளவுரைனையும், போராடும் மனவலுவையும் சிதறடிப்பதற்கு பல புறச்சூழல்கள் எம்மை சுற்றி உருவாக்கப்டுகின்றன.

பல அறிக்கைகளும், நேர்காணல்களும் எமது மக்களின் மனஉறுதியை தகர்க்கும் நோக்கங்களை மையமாக கொண்டு வெளியிடப்படுகின்றன. இது பெரும் உளவியல் சிதைவுக்குள்ளாகியிருக்கும் ஒரு இனத்தின் உளவியலை மேலும் பல மடங்கு சிதைப்பதற்கே உதவும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை எதிரி ஒரு முறைதான் தனது ஊடக வலிமையை கொண்டு சாகடித்தான்;

ஆனால் எம்மில் சிலர் மீண்டும் மீண்டும் அந்த மாமனிதனை தமது ஊடகச்சமரில் சாகடித்து வருகின்றனர். மேலும் எத்தனை முறை அவரை சாகடிக்கப்போகிறார்களோ தெரியாது.

இந்த ஆதாரமற்ற தகவல்களால் ஒரு இனம் எவ்வளவு தூரம் உளவியல் சிதைவுக்குள்ளாகியிருக்கிறது என்பதை யாருமே உணரத் தயாராக இல்லை. தலைவரை சாகடிப்பதனூடாக எதையுமே சாதிக்க முடியாது. அதை வரலாறு தெளிவாகப் பதிவு செய்து விட்டது.

எமது இனத்தைப் பொறுத்த வரையில் அவர் அந்த மக்களின் மனங்களில் இரத்தமும் சதையுமாக வாழ்கிறார். நாடு கடந்த அரசாங்கம் என்றாலும் இழந்த எமது உரிமைகளை மீளப்பெறுவதாக இருந்தாலும் அதற்கு பின்னால் மக்கள் அணிதிரள வேண்டுமானால் அந்த மக்களின் உளவுரனையும், மனவுறுதியையும் நாம் உயர்வாக பேணவேண்டும்.

மக்கள் ஆதரவு இல்லாத எந்த போராட்டமும் வெற்றியடைந்ததாக சரித்திரம் இல்லை. புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் போராட்டம் வினைத்திறன் வாய்ந்தது. ஆனால் அவர்களுடைய உழைப்பையும் சக்தியையும் சில சம்பவங்களை வீணடித்து விடுகின்றன.

ஆதாரங்கள் இன்றி தொடர்ந்து வலியுறுத்தப்படும் சில நிகழ்வுகள் கேலிக்கூத்தாக்கப்போவதை வரலாறு பதிவு செய்யக் காத்திருக்கிறது. எனவே மக்களின் உளவியலை புரிந்து கொண்டு மக்கள் போராட்டத்திற்கு வழி விடுங்கள்.


0 comments:

Post a Comment