Sunday, June 28, 2009

ஆடையின்றித்தவிக்கும் நமது நடிகைகளுக்கு பழைய துணிகள் தானம் செய்யுங்கள்!

"மதுரையில் அனுமதியில்லாமல் விளம்பரம் மற்றும் பிற வகையான சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மதுரை மாநகராட்சி ஆணையர் எச்சரித்திருக்கும் நிலையில் சில குறிப்பிடும்படியான சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளன.
சாதாரணமாக திருமண விழா, காதுகுத்து, பிறந்தநாள், நினைவுநாள், கண்ணீர் அஞ்சலி, அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றிற்குத்தான் சுவரொட்டிகள் ஒட்டுவது வழக்கம். ஆனால் இந்தச் சுவரொட்டிகள் கோடம்பாக்கத்து அம்மணிகளுக்காக வருத்தப்படுவது போல் தாங்கி நிற்கும் வாசகங்களையும், செய்திகளையும் பாருங்கள்!
பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு!
"ஆடைகள் இன்றி கர்சிப்பில் உடை தைத்து நடித்து அவதிப்படும் சினிமா திரைப்பட நடிகைகளுக்கு பழைய துணிகள், சேலைகள் மற்றும் பாவாடை, ரவிக்கைகள் இலவசமாக அனுப்பும்படி பொதுமக்களை மிக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்பதோடு தன்னைப்பற்றிய முழு விவரங்களையும் சேர்த்து அச்சடித்திருக்கிறார் நண்பர் கே.ஜி.நாராயணன். திடீரென இப்படியொரு சுவரொட்டியை ஒட்டி நீங்களும் சுவரை நாறடித்துவிட்டீர்களே! என்று அதிகாலை சார்பாக கேள்வியெழுப்பியதற்கு.....
Image
"அப்படியல்ல! பொதுவா நம்ம வீட்ல குடும்பத்தோட ஒக்காந்து ஒரு படமோ, பாடலோ ஏன் டி.வி. நிகழ்ச்சியோ பாக்க முடியுதா? அந்த அளவுக்கு ஆடை குறைப்பு அதிகமாகிப்போச்சு. யாரும் அதுக்காக எதிர்ப்பு தெரிவிக்கிறதில்ல. பெண்கள் அமைப்புக்கள்கூட எந்தக் குரலும் கொடுக்கறதில்ல. சென்சார் போர்டும் இதப்பத்தி கவலப்பட்டதா எனக்குத் தெரியல. நடிகர்கள் எல்லாரும் இப்ப அரசியலுக்கு வந்துகிட்டுருக்காங்க. அவங்களும் இதப்பத்தி கண்டுக்கறதில்ல. சரி நம்ம பிள்ளைகளையும், சந்ததிகளையும் நாமதான் பாதுகாக்கணும். அதோட பொதுமக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தணுங்கறதாலதான் இப்படியொரு எண்ணம் வந்துச்சு.  இந்த சுவரொட்டி ஒட்டினதும், நெறைய பேரு போன் பண்ணி துணி எங்க வந்து தரணும், எப்படி அனுப்பறது அப்படின்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. நெறைய பேரு உற்சாகப்படுத்துறாங்க" என்றார் சற்று ஆதங்கத்துடன்.  இதோடு முடிந்துவிடவில்லை நண்பர் கே.ஜி.நாராயணன் அவருடைய இன்னும் சில வித்தியாசமான சுவரொட்டிகள் இதோ...
Image
"காணவில்லை...காணவில்லை! ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களைக் காணவில்லை.  கண்டுபிடித்து தருபவர்களுக்கு 3 மூ கமிசன் தரப்படும் என்றும், குறிப்பு : நாணயமே! நீயின்றி நாணயத்துடன் வாழ முடியாமல் தவியாய் தவிக்கிறேன். மிக விரைவில் வருவாய் நாணயமே! நாணயத்துடன் நாணயத்திற்காக எதிர்பார்க்கும் நாணயம்" என்று ஒரு சுவரொட்டியும்,
"அன்று மாதா, பிதா, குரு, இன்று குருகுலம், அசுரகுலம் ஆகிறது! கற்றவரும், கற்றவரின் (மாதா பிதாவின்) கண்ணீர் மல்க கறந்தால்.... நிதி நீதி கரையானுக்கு, கரையும் படிப்பு அறிவு துடிப்புக்கு தவிர துட்டு துடிப்பு அல்ல! ஓலைக் குடியிலும் அறிவு சுடரும்" என்று ஒரு சுவரொட்டியும்,
"பெண்ணின் பெருமை காப்பாய்! காலையில் நைட்டியில் உலாவரும் பெண்ணே! அதிகாலை கதிரவன் உலாவரும் முன்னே பெண்மைக்கு உண்டான உடையில் நகர்வலம் வருவாய்! மண்ணின் பெருமையை நிலை நாட்டுவாய்!"
- பண்பாடு எதிர்பார்க்கும் பழைய நண்பர்
என்று ஒரு சுவரொட்டி யுத்தமே நடத்துகிறார் நண்பர் கே.ஜி.நாராயணன். மேலும் தான் நடத்தி வரும் உணவு விடுதியில் உள்ள 'சிந்தனைப் பலகை'யில் தினமும் ஒரு சிந்தனைக் கருத்தை எழுதி வருகிறார். தான் சார்ந்துள்ள சௌராஷ்ட்ரா சமூகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார்.  அவற்றில் மிகக்குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது ஏழைக்குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டால் அவர்களை அடக்கம் செய்யும் செலவை இவர் ஏற்றுக்கொள்கிறார்.
சினிமாவும், அரசியலும் பொதுமக்களை கவர்கிறதோ இல்லையோ இதுபோன்ற வித்தியாசமான உத்திகளும், சேவைகளும் நம்மை கவரத்தான் செய்கிறது. மக்களைக் கவர்கிறது என்பதைவிட இவை சமூகத்தின் விழிப்புணர்வுக்கு வழி வகுக்கும் என்பதிலும், இவை பசுமரத்தாணிபோல் இன்றைய தலைமுறையின் எண்ணங்களில் பதிவையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.  சங்கம் வளர்த்த மதுரையில் சுவரொட்டிகள் மூலம் சமுதாய மாற்றத்திற்கும், கலாசாரப் பின்னடைவைக் களையவும் விதை தூவத்தொடங்கிவிட்ட நண்பர் கே.ஜி.நாராயணனுக்கு வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றோம்.
- அதிகாலைக்காக செய்தியும்-படமும் : ஆர்.கணேசன், மதுரை.


0 comments:

Post a Comment