Saturday, June 27, 2009

இணையதளங்களுக்கு இளந்தமிழர் இயக்கம் விடுக்கும் அவசர வேண்டுகோள்!

  இன அழிப்பு உச்சத்தை எட்டிய 19/5 க்குப் பிறகு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களைப் பற்றியும்      விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும் உலகத்தமிழர்கள் மத்தியில் பல்வேறு விதமான குழப்பங்களும் சந்தேகங்களும் உலா வருகின்றன.

பல்லாயிரக்கணக்கில் நடந்த படுகொலைகளை மறந்து விட்டு, தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் ஆழ்ந்து போக வேண்டும் என்று சிங்கள அரசு விரும்பியவாறே தற்பொதைய நிலவரங்கள் உள்ளன.

மேலும், இயக்கத்தில் உள்ளதாக சொல்லப்படும் சில தலைவர்களின் அறிக்கைகள், “போராளிகள்” என அடையாளப்படுத்தப்படும் சிலரது கட்டுரைகள் சிங்கள அரசின் உளவுத்துறைக்கு நேரடியாகவே துணைபோவதாக நாம் கணிக்கிறோம். ஏற்கெனவே இது, இந்திய “றோ” உளவுத்துறையின் சதியாக இருக்கலாம் என்ற செய்தி “அதிர்வு”, “நெருடல்” இணையதளங்களால் எழுப்பப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

ஆயுதப் போராட்டம் நடத்தியது தவறு என்று சொல்வதும், இயக்கத்தின் கடந்த காலத் தவறுகள் குறித்து பட்டியலிடுவதுமாக சில கட்டுரைகள் கூட வெளிப்பட்டன. இயக்கத்திற்குள் நடைபெற வேண்டிய விவாதங்கள் பொது விவாதங்களாக்கப்பட்டுள்ளன. அதற்கு மிகச் சமீபத்திய உதாரணம்,

நெருடல் இணையதளத்தில் வெளியான

“இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற” என்ற கட்டுரை.

இயக்கத்தின் மீது சேறடிக்கும் விமர்சனங்களை எழுப்பும் அக்கட்டுரை பொது விவாதத்தளத்திற்கு விடப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது. அக்கட்டுரையில்,

· தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவு பலவீனப்பட்டிருந்தது,

· புலிகள் இயக்கத்தின் சகல மட்டங்களிலும் சிங்கள உளவுப்பிரிவினர் ஊடுருவியிருந்தனர்,

· சமாதானக் காலத்தில் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் வழி சொகுசு வாழ்க்கைப் பழக்கப்படுத்தப்பட்டது,

· இயக்கத்திற்குள் சிங்கள இராணுவம் ஊடுருவல்,

· கட்டாய ஆள் சேர்ப்பு உள்ளிட்ட எண்ணற்ற விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

இவை குறித்து நேரடியாக எந்தக் கருத்தையும் வெளியிடுவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தவிர வேறு யாருக்கும் உரிமையிருக்க முடியாது.

 

ஏனெனில் இவை அனைத்தும் இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்த உள்ளரங்கத் திறனாய்வுச் செய்திகள். இவை உண்மையா பொய்யா என்பதல்ல எமது அக்கறை. தமிழீழ விடுதலைப்புலிகள் குறித்து எதிர் முகாம் மேற்கொள்ளும் வழமையான அவதூறு பரப்பலின் அனைத்து அம்சங்களும் இந்த ஒரேக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். எழுதியவர் நோக்கத்தைக் குறித்து நாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதே வேளை, இக்கட்டுரை ஏற்படுத்தும் விளைவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

 

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இன்று சந்தித்திருக்கும் பின்னடைவு அவ்வியக்கம் கடந்த காலத்தில் செய்த தவறுகளின் விளைவு என்று பரவலாக பரப்புரை செய்யப்படுகின்றது. இப்படி செய்பவர்கள் அனைவரும் ஈழத்தில் இன அழிப்பு நடந்ததையோ இன்றும் முகாம்களில் விலங்குகளை போல அடைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் தமிழர்களின் வாழ்வை குறித்தோ அநியாயமாக திருப்பி அனுப்பப்பட்ட “வணங்காமண்” கப்பல் குறித்தோ எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்காதவர்கள் என்பதும், இவர்கள் அனைவரும் இலங்கையிலும் தமிழகத்திலும் அரசதிகாரத்தின் ஒட்டுக் குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நாம் அறிந்த செய்திகள். இந்நிலையில் இயக்கத்தின் மீது போகிற போக்கில் விமர்சனங்களை வீசும் மேற்கண்ட கட்டுரை இயக்கத்தின் ஆதரவு முகாமிலிருந்தே வெளியிடப்பட்டிருப்பது ஒட்டுக் குழுக்களுக்கு ஊட்டமளிக்கும் செயலாக அமைந்து விடும்.

 

ஏசியன் ட்ரைபியுன்” இணையதளம் நேற்று(22.06.09), தலைவர் பிரபாகரனை படுகொலை செய்தது பொட்டு அம்மானாகவே இருக்க முடியும் என்ற பொருளில் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக புலிகளின் புலனாய்வுப் பிரிவு செயல்பட்டது என்று கட்டுரை வெளியிட்டுள்ளது. இச்செய்தியை சிங்கள இராணுவம் வெளியிட்டதாக “ஏசியன் ட்ரைபியுன்” குறிப்பிட்டுள்ளது. இந்தக் கட்டுரை தமிழகத்தில் தினத்தந்தி நாளிதழில் விரிவாகவே வெளியிடப்பட்டுள்ளது. ஆக, பொட்டு அம்மான் மீதும் புலிகளின் புலனாய்வுப்பிரிவின் மீதும் தமிழர்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி தொடங்கப்பட்டதை நாம் உணர முடிகின்றது.

 

இந்தப் பின்னணியில் நெருடல் இணையதளம் வெளியிட்ட கட்டுரை தெரிந்தோ தெரியாமலோ சிங்கள உளவுத்துறையின் சதியின் ஒரு பகுதியாக மாறும் ஆபத்திருக்கிறது.

 

இது போன்ற சூழல்களை தவிர்ப்பது போராடும் இனத்திற்கு தேவையான அடிப்படை ஒழுங்கு என்று நாம் கருதுகிறோம். எந்த இயக்கமும், தலைமையும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டது அல்ல. ஆனால், விமர்சனம் செய்யப்படுவதற்கென்று களமும் காலமும் இருக்கின்றது. இணையதளங்கள் அதற்கான களமல்ல. இது அதற்கான காலமும் அல்ல. இதை ஒரு தீவிர சிக்கலாகவே கணக்கில் எடுத்துக் கொண்டு தமிழர் இணையதளங்கள் செயல்பட வேண்டும் என்று வேண்டுகிறோம்.

 

தோழமையுடன்,

க.அருணபாரதி,

ஒருங்கிணைப்பாளர்,

இளந்தமிழர் இயக்கம்.

நன்றி: http://tamilthesiyam.blogspot.com/


0 comments:

Post a Comment