Monday, June 22, 2009

இந்து மதத்தில் ஆண் - பெண்ணின் வக்கரித்த உறவுகள் – பாகம்-1.

இந்து மதம் சார்ந்து உருவான ஆண் - பெண் உறவுகள் வக்கரித்தே கிடக்கின்றன. அவற்றில் சில அக்காலத்துக்கே உரிய எதார்த்தச் சமுதாயத்தைப் பிரதிபலித்து இருக்கும். அதேநேரம், கால்நடைகளை மேய்த்தபடி புலம்பெயர்ந்து, இந்தியா வந்த பார்ப்பனர்கள், தமது மிருக இனவிருத்தியில் பாலியல் உறுப்புகளை நலமடித்த வழியில், மனிதப் படைப்புகளை உருவாக்கினர். அப்போது இங்கு இருந்த சிறுவழிபாடுகள் மீது பார்ப்பனியமும், பின்னால் இந்து மதமும் ஊடுருவி அழித்தபோது, சிறுவழிபாட்டுக் கடவுள்களை உறவுமுறைக்குள் இந்து மதம் கொண்டுவந்தது. இந்த உறவுகள், பிறப்புகள் எல்லாம் வக்கரித்த ஆணாதிக்க எல்லைக்குள், பாலியலை விகாரப்படுத்தி, உருவாக்கப்பட்ட கடவுள்கள் எல்லாம், ஆணாதிக்க காமவிகாரத்தை வெளிப்படுத்துகின்றது. இந்தப் பிறப்புகளின் பொய்மைகள் அறிவியல் முன்பு அருகதையற்ற நாற்றத்தைக் கொண்டவை. ஆனால் எதார்த்தம் ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை சார்ந்த விகாரத்தை எல்லாம் மனிதனின் வழிபாடாக்கும் நிலையில், இதைத் தொகுத்து அம்பலப்படுத்துவதும், ஈவிரக்கமற்ற வகையில் நிர்வாணமாக்கவேண்டியதும் அவசியமாகிவிடுகின்றது.

இப்படிப்பட்ட வக்கிரங்கள் தான், இன்று பின்நவீனத்துவம் கோரி முன்வைக்கும் வக்கரித்த ஆண் - பெண் உறவுகளின் அடிப்படையாகும். இன்று இதைக் கோரியும், எழுதியும்;, முன்வைக்கும் அனைத்துக்கும் முன்னோடியாக இந்து மதத்தின் வக்கரித்த உறவுகள் உள்ளன. இன்று பின்நவீனத்துவவாதிகள் வைக்கும் பலவற்றை அன்றே இந்து மதம் முன்வைத்தது என்ற உண்மையை எடுத்துக் காட்டுவதன் மூலம், இன்றைய நவீன ஏகாதிபத்தியப் பாலியல் வக்கிரமும் அம்பலமாகிவிடும்.

பார்ப்பனச் சனாதனத் தர்மமாக மனுசாஸ்திரத்தின்படி வர்ண, சாதி வகையில் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை விடுவிப்பதாகக் கூறிய புத்த மதம் இந்தியத் துணைக்கண்டத்தில் செல்வாக்குப் பெற்றது. அதனால் பார்ப்பன சனாதன மதம் அழிந்து போகும் நிலையை எட்டி பல ஆண்டுகளாகத் தலையெடுக்க முடியாமல் கிடந்தது. இந்நிலையில் காலடியில் தோன்றிய ஆதிசங்கரன் காசிவரை பயணம் செய்து அத்வைதத்தைப் பரப்பினார். வர்ண, சாதி வதையில் ஒடுக்கிவைக்கப்பட்ட மக்களை மீண்டும் பார்ப்பன மதத்துக்குள் ஈர்ப்பதற்காகச் சிறுதெய்வங்களை எல்லாம் பெருந்தெய்வங்களின் அவதாரங்கள் என உறவுபடுத்தும் மதக்கோட்பாடுகளை உருவாக்கினார். அதாவது குல, கண தெய்வங்கள் எல்லாம் புராண, இதிகாசக் கடவுள்களுடன் உறவுபடுத்தி புனைவுகளை உருவாக்குவதன் மூலம் பார்ப்பன மதத்துக்குப் புத்துயிர் கொடுக்க முனைந்தார்.

இந்துமத உருவாக்கத்தினூடாக, வக்கரித்த உறவுகள் புனையப் பட்டபோது, சிறுவழிபாடுகள் சீரழிக்கப்பட்டன. இங்கு சிறுவழிபாட்டுக் கடவுள்கள் ஏன், எதற்காக, எந்த உற்பத்தி மீது உருவாயின என்பதை ஆராய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக அந்தச் சிறுகடவுள்களைப் புணர்ந்தும், வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்தும் உறவாக்கிக் குடும்பத்தில் இணைத்ததன் மூலம், அவற்றோடு இந்துமதம் சார்ந்த உறவுகள் அங்கீகாரம் பெற்றன. அவற்றின் நாற்றத்தையும் ஆபாசத்தையுமே அம்பலப்படுத்துவதில் கவனமெடுக்கின்றது இப்பகுதி. இங்கு சில முன்கூட்டியே சிறுவழிபாட்டுத் தெய்வங்களாக இருந்து பின்னால் இந்துமயமானவை.. சில இந்துமதத்தின் தெய்வங்களாகவும் இருக்கின்றன. உதாரணமாக நற்றிணையில், (பாடல்-82)

''முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல...

காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடகாளின்"

காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடுகாளின் மகன் முருகு (முருகன்), மற்றொரு தாய்த்தெய்வமான வள்ளியை மனைவியாக்கினான். இங்கு முக்கியமாக முருகுவின் தாய் மட்டும் கூறப்படுகின்றது தந்தை பற்றித் தெரியாதநிலை காணப்படுகின்றது. இதுபோல அப்பருடைய தேவார வரிகள், இதற்குச் சான்று தருகின்றது.

''செல்வியைப் பாகங்கொண்டார் சேந்தனை மகனாய்க் கொண்டார்

மண்ணினை உண்ட மாயன் தன்னையோர் பாகங் கொண்டார்"

தாய்த் தெய்வமான செல்வி, முருகன், சேந்தன் (அய்யார்), மாயோன் போன்றவர்களுக்கிடையில் உறவுமுறையை இந்து மதம் ஏற்படுத்தியதைக் காட்டுகின்றது. எப்படி இந்துமதம் பின்னால் வளர்ச்சி பெற்றது என்பதை இது காட்டுகின்றது. நாம் இனி இந்த வளர்ச்சியின் ஆபாசத்தையும், வக்கிரத்தையும் புராண மற்றும் இந்து வரலாற்று இலக்கியம் மூலம் ஆராய்வோம்.

இராமாயணத்தின் கதாநாயகன் இராமனின் பெயரில் ஒரு வானரக்கூட்டம் இன்று இந்தியாவில்; ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றும், கற்பழித்தும் போடும் கூத்தின் பின்னால், இராமாயணப் புராண இலக்கிய வரலாறு மண்டிக்கிடக்கின்றது. இந்த இராமாயணம் உருவாகக் காரணம், விஷ்ணு தனது மனைவி இலட்சுமியைப் புணர்ந்ததால் ஏற்பட்டதாம். இதுபோல் கந்த புராணம் ஏற்பட காரணம் சிவன் உமாதேவியாருடன் நூறு வருடம் விடாமல் புணர்ந்து கொண்டிருந்ததால், வீரியமும் கர்ப்பமும் கொடுமை செய்துவிடும் என்று தேவர்கள் அஞ்சி முறையிட்டதால், கலவி முற்றுப்பெறுமுன் சிவன் நிறுத்தியதால் இந்திரியம் நிலத்தில் விழுந்து நிறைய ஆபாசமாகி இறுதியாகச் சுப்பிரமணியன் தோன்றவும், கந்தபுராணம் உருவாகவும் காரணமாகி விடுகின்றது. இந்த மாதிரி இந்து மத வக்கிரத்தை நாம் போற்றுகின்றோம்;?!

இனி நாம் இராமாயணத்தைப் பார்ப்போம்;. இந்த இராமாயணம் இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்த இராமனின் சொந்தத் தந்தை தசரதன் அல்ல. தசரதன் மூன்று பெண்டாட்டியையும், 60 ஆயிரம் வைப்பாட்டிகளையும் வைத்திருந்தவன்;. மூன்று பெண்ணுக்கும் குழந்தை பிறக்காததால், சிரங்கன் இடம் மூன்று பெண்ணையும் ஒப்படைத்து யாகம் செய்தான். இந்த யாகத்தில் மூன்று பிண்டங்களைப் பிடித்து உண்ணக் கொடுத்ததால் மூவரும் கர்ப்பமாகிக் குழந்தை பெற்றனர் என்கிறது, இராமாயணம்;. இங்கு மூன்று பெண்களின் தந்தை சிரங்கன் என்பது, இன்று மரத்தைச் சுற்றி பிள்ளை பெறும் பக்தியின் பின்னால் வேறு ஆண்களுடன் புணர்ச்சி நடப்பதும், கர்ப்பம் தரிப்பதுமே நிகழ்கின்றது. தசரதன் அல்லாத சிரங்கனுக்குப் பிறந்த இராமனை, இராவணன் தங்கை சூர்ப்பநகை தன்னைத் திருமணம் செய்யும்படி கேட்டதால், அவளின் மூக்கு, முலை, முடி போன்றவற்றை வெட்ட உத்தரவிட்டதன் மூலம் இராமன், பெண்களைக் கொச்சைப்படுத்துகின்றான்.

ஒரு பெண் ஆணை விரும்பி திருமணம் செய்யக் கோருவது குற்றமா? இதை இராமாயணம் மறுக்கிறது. பெண்ணின் உடலைச் சிதைப்பதுதான் இராமாயண நீதி. இன்று பெண் மீதான சித்ரவதைகள் இதுபோன்று இராமனின் வழிகாட்டலில் நடப்பதை நாம் எதார்த்தத்தில் காண்கின்றோம். காட்டுக்குச் சென்ற இராமன் சீதையின் மடியில் தலைவைத்துப் படுத்து இருக்கும்போது, கடவுளாகப் போற்றப்படும் இந்திரனுடைய மகன் சயந்தன் காக்கா வேடம் போட்டு வந்து, சீதையின் முலைக் காம்பைக் கொத்தி தனது பாலியல் வக்கிரத்தைத் தீர்த்த போது, அது குற்றமாகி விடவில்லை. சீதையின் கற்பின் ஒழுக்கத்தைக் கணவன் சார்ந்து மானம்கெட்டுப் போற்றப்படுகின்றது. இன்று பெண்களின் முலையை விளம்பர உலகம் முதல் பாடசாலை மாணவர்கள் ஈறாகத் தோல் உரித்து இரசித்துப் பார்க்க விரும்பும் ஆணாதிக்கப் பண்பாட்டையே, இந்து மதம் போற்றி இரசித்த வரலாற்றுக் கதைகள் எழுதியவர்கள், அதன் தொடர்ச்சியில் இன்றும் அதைப் போற்றுகின்றனர்.

சீதை இராமனின் சகோதரி என்ற இராமாயண வரலாறு மூலம், சகோதர - சகோதரி திருமணம் நிகழ்ந்த சமுதாயத்தையே எமக்குக் கோடிட்டுக் காட்டுகின்றது. வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 இல், இராமன் பல மனைவிமாரை வைப்பாட்டியாக வைத்திருந்ததை அம்பலப்படுத்துகின்றது. இராவணனை வென்ற இராமன் சீதையைப் பார்க்க மறுத்த நிலையில், ''இராவணனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந்தொல்லையை மேற்கொள்ளவில்லை"33 என்று தனது ஆணாதிக்க வக்கிரத்தை வெளிப்படுத்தினான். மேலும் அவன் ''உன் (சீதை) நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்கவேண்டும். உன்னைப் பார்க்கிறதே எனக்குப் பெரும் எரிச்சலூட்டுகிறது. சகிக்கவில்லை. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம்... அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா.."33 என்று கேட்கின்றபோது, தனது நிலையில் நின்றே உரைக்கின்றான். தான் இராவணன் இடத்தில் இருந்தால் கற்பழித்திருப்பேன் என்பதையே சொல்லாமல் சொல்லுகின்றான்;. இந்த இடத்தில் சீதை தெளிவாக அவனை நிர்வாணப்படுத்திக் கூறுவதைப் பார்ப்போம். ''நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே."33 இந்த இராமன், இராவணனிடம் இருந்து மீட்ட சீதை மீதான ஆணாதிக்கச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அவளைத் தீக்குளிக்கும்படி கட்டாயப்படுத்தினான்;. கற்பு பற்றி ஆணாதிக்க இறை ஒழுக்கம் வக்கிரம் பிடித்திருப்பதை இது காட்டுகின்றது. நாடு திரும்பிய பின் சீதை கர்ப்பமாக இருக்கும்போது, வண்ணான் ஒருவன் சீதையின் ஆணாதிக்கக் கற்பு ஒழுக்கத்தை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் சந்தேகப்பட்ட நிலையில், இராமன் அதன் வழியில் சீதையின் கண்ணைக்கட்டி, நடுக்காட்டில் துரத்திவிட்டான். இந்த இறைத் தூதர்களின் ஆணாதிக்கம் பெண்வதைகளைக் கொண்டது.

இன்று எதார்த்தத்தில் பெண் மீதான சந்தேகங்கள், அது சார்ந்த சித்ரவதைகள், இதனால் பெண்ணைக் கைவிடுதல் போன்றவற்றின் முன்னோடியான தந்தையாக ஆணாதிக்க இராமன் இருக்கின்றான் என்றால் அதை மறுக்கமுடியாது. இங்கு இராவணன் சீதையைத் தூக்கிச் சென்று நடத்திய முறைகள் பொதுவான எல்லையில் ஆணாதிக்கக் கண்ணோட்டம் கொண்டவையல்ல. இராவணன் சீதையைத் தூக்கியதே, தங்கை சூர்ப்ப நகைக்கு நடந்த கொடுமையின் அடிப்படையில்தான்;. இந்த இடத்தில் இதற்காகச் சீதையைக் கொண்டு சென்றது குற்றமே ஒழிய (''வால்மீகி இராமாயணப்படி, சீதை இராமனை விட்டுவிட்டு இராவணனுடன் தானாகவே சென்றாள்."34), இராமன் செய்தது போன்ற இழிந்த ஆணாதிக்கக் குற்றமல்ல.

வரலாற்றில் மத யுத்தங்கள் முதல் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் வரை நடந்ததைப்போல பெண்களைக் கைப்பற்றுவதும், கற்பழிப்பதும், தொடர் விபச்சாரத்தில் தள்ளுவதும், தமது வைப்பாட்டியாக வைத்திருப்பதும் என்ற ஆணாதிக்கக் கொடூரம் எதையும் இராவணன் செய்ததில்லை. இராவணன் சீதையை விரும்புகின்றபோது, அவளின் விருப்பமின்றித் தொடுவதைக் கூடக் கைவிட்டவன்;. சீதையை இராவணன் தொடாது நிலத்துடன் தோண்டி சென்ற போது, சீதை தனது மேலாடைகளைக் களைந்து எறிந்த நிர்வாணமான நிலையிலும், இராவணன் காமம் கொண்டு சிதைக்கவில்லை. மாறாக, பெண்ணைப் பெண்ணாக மதித்தான். இராவணன் பெண்ணைத் தொடுவதால் மண்டை வெடித்துவிடும் என்றால், கற்பழிப்பை வேறுவழியில் நடத்தியிருக்கமுடியும். இராமாயணத்தின் நீதி இராவணன் தளத்தில் இருந்து சொல்லப்பட வேண்டிய பல்வேறு தரவுகளை உள்ளடக்கியதே ஒழிய, இதை மறுத்து இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தைச் சொல்லுவதே இராமாயணம்.

சீதையைக் காட்டுக்குத் துரத்திய இராமன் ஆட்சி எப்படி இருந்தது. உத்தர காண்டம் சரகம் 42, 43 இல், முறையே சுலோகம் 8,1 இல், ''குடி, கூத்துமாக மாமிசத்தை விழுங்கியபடி, பெண்களைக் கூட்டம் கூட்டமாகக் கொண்டு வக்கிரமான காமப் பசியாற்றுவதில் காலத்தையோட்டினான்;. சீதை அவனுடன் இருந்த போதும் இதையே செய்ததுடன், சீதையையும் இதில் ஈடுபடுத்தினான். இதில் இயல், இசை, நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா, அப்சரசுகள் போன்றவர்களும், பல அழகிகளும் அந்தப்புரத்தில் சிக்கி கிடந்தனர். சர்கா 4,2 செய்யுள் 18.21 இல், ''மதுபோதையில் மாமிசத்தைச் சுவைத்தபடி, சீதைக்கு மதுவைக் கொடுத்தபடி, மோகம் கொண்ட இராமன் வனமோகினிகள், நாகா மன்னனின் புத்திரிகள், கின்னரின் கன்னிப் பெண்கள், வேறு கன்னிப் பெண்களும் ஆபாசமாகப் பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தினர்.

சீதையை மீட்ட இராமன் இராவணனின் மனைவி மண்டோதரியைத் துரோகி வீபீஷணனுக்குக் கொடுக்கின்றான். இதுதான் இராமனின் ஆணாதிக்க நீதி. இதுபோல் வாலியின் மனைவி தாரகையைச் சுக்ரீவனுக்குக் கொடுக்கின்றான். பெண்களை, பெண்களாக ஏற்றுக் கொள்ளாத இந்து மதம், வெறும் பாலியல் நுகர்வுப் பண்டமாகக் கைப்பற்றுவதும் கொடுப்பதுமாகப் பெண்களைச் சிறுமைப்படுத்தியது.

ஆணாதிக்க இராமன் சீதையைக் காட்டிற்குத் துரத்திய பின் சீதை வால்மீகியின் ஆசிரமத்தில் வாழ்கின்றாள். அங்கு இரட்டைக் குழந்தைகளை அவள் பெறுகின்றாள்;. 12 ஆண்டுகளுக்குப் பின் இராமனைக் காணும் வரை, சீதையை இராமன் சென்று பார்த்தது கிடையாது. 12 வருடத்திற்குப் பின் இராமன் செய்த யாகத்துக்கு அழைப்பு திட்டமிட்டே கொடுக்க மறுத்த நிலையில், வால்மீகி சீதையின் மகனை அழைத்துக் கொண்டு யாகத்துக்குச் சென்றான்;. அங்கு இராமன் மகனைக் கண்டதுடன், சீதை மீதான சந்தேகத்தை மீளவும் சுட்டிக் காட்டினான். அதை நிவர்த்திக்க விரும்பினால் சீதை பெரும் மக்கள் கூட்டம் முன்பு மீண்டும் தனது கற்பை நிரூபிக்க வேண்டும் என்றான். சீதை அழைத்து வரப்படுகின்றாள். அங்கு இராமனின் அவமானகரமான அவதூறுகளைக் கேட்டுத் தன்னைத்தானே தற்கொலைக்கு இட்டுச் செல்லுகின்றாள்;. கடவுளாகக் காட்டப்படும் ஆணாதிக்க இராமனின் யோக்கியதை இது. இதுதான் இந்தியாவின் இந்து ஆணாதிக்கமாகும். ஒரு பெண்மீதான அவதூறுகள், இழிவுகள் இராமனின் வழியில் இன்று இந்துப் பண்பாடாக இருப்பது சமுதாயத்துக்கே கேவலமானது. இந்தக் காட்டுமிராண்டித்தனத்துக்கு முடிவுகட்டாத வரை நாம் மனிதனாக வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கின்றது.

வானரங்கள் என்று இராமாயணத்தில் அழைக்கப்படுவோர் யார்? பிரம்மதேவனின் கட்டளையை நிறைவேற்ற கடவுள்கள் நடத்திய கற்பழிப்பில் பிறந்தவர்களே வானரங்கள். அழகிகளான அப்சரசு, விலைமாதர்கள், பருவமடையாத பெண்களைக் கற்பழித்தபோதும், நாகர்கள் மற்றும் யக்ஷசர்களுடைய மணமாகாத பெண்களையும், திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா, வித்யாதர், கந்தர்வர்கள், கிண்ணர்கள், வானவர்களுடைய மனைவிமார்களைக் கற்பழித்தபோது ஏற்பட்ட கலப்பில் பிறந்தவர்களே, இராமனுக்கு உதவிய வானரங்கள். அன்று பெண்கள் மீதான கற்பழிப்புகள் இறைக் கட்டளையாகக் கூறி பெண்கள் மீது நடத்திய கொடுமைகளே இன்று, இராமனின் பெயரால் முஸ்லிம் பெண்கள் மீதான கற்பழிப்பாக மாறியுள்ளது. இன்று இவை இராமன் என்ற கடவுளின் பெயரில் நடப்பதுதான் வேறுபாடு.

நன்றி: http://www.tamilcircle.net/


0 comments:

Post a Comment