Wednesday, June 24, 2009

இனப்படுகொலை நிகழ்த்திய இந்தியா! - சர்வதேச அரசியற் பின்புலம்: பாகம் – 1. - சபா.


மேற்குலக ஒழுங்கமைவானது ஒரு குறித்த தெளிவான வடிவத்திற்குள் உருவமைக்கப்பட்ட காலமான, 1949 இற்குப் பின்னர் இப்போது முதற் தடவையாக அதன் சர்வதேச வரிசைப்படுத்தலானது புதிய நிலைகளை நோக்கி நகரவாரம்பித்திருக்கிறது. இன்று மறுபடி உலகம் ஒழுங்கமைக்கப் படுகிறது.

பெரும் மூலதனத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் ஆதிக்க வர்க்கத்தின் தனிப்பட்ட நலன்களை மட்டுமே அடிப்டையாக முன்வைத்து இந்த ஒழுங்கமைப்பு அரசியல் உலகப் படத்தை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது.

மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும் பொருளாதார ஆதிக்கம், மேற்கு அதிகாரத்தால் தவிர்க்க முடியாத, புதிய பொருளாதாரச் சுற்றை ஆரம்பித்து வைத்திருக்கிறது. 1949 இல் உறுதியான பொருளாதாரச் சுற்று, 1970 களில் நெருக்கடிக்குள்ளான போது மறுபடி ஒழுங்கமைக்கப்பட்டது. பிரித்தானியப் பிரதமர் மாகிரட் தட்சர் மற்றும் அமரிக்க அதிபர் ரொனாட்ல் ரீகன் ஆகியோரது தலைமையில் உருவான இவ்வமைப்பு முறையானது புதிய தாராளவாதப் பொருளாதரக் கொள்கையை உருவாக்கியது.

இதன் வளர்ச்சிக் கட்டமான உலகமயமாதல் என்ற ஒழுங்கமைப்பு இன்று தவிர்க்க முடியாத அமைப்பியல் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.

ஒவ்வொரு தடவையும் உலகம் புதிதாக ஒழுங்கமைக்கப்படும் போது, அதன் முதற் பகுதியானது, படுகொலைகளும், ஆக்கிரமிபுக்களும், அவலங்களும், அசிங்கங்களும் நிறைந்ததாகவே காணப்பட்டது.

ஆயிரக்கணக்கில் மனித் உயிர்களைக் கொன்று குவித்துவிட்டு நெஞ்சை நிமிர்த்தி அதை வெற்றியெனக் கொண்டாடும் இலங்கை அரசின் இன்றைய நிலையானதும் அதற்கு இந்திய அரசு பின்புலமாக அமைவதும் இந்தப் புதிய ஒழுங்கமைவை அடையாளப்படுத்துகிறது.

இந்தச் சர்வதேச மாற்றங்களுக்கு முதல் பலிதான் 50 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்கள். அதிகாரத்திற்கும் ஏகத்துவத்திற்கும் எதிரான எந்த எதிர்ப்பியக்கமும் இந்த சர்வதேச மாற்றத்தின் புதிய அணிசேர்க்கைகளை நிராகரித்து வெற்றிகொள்ள முடியாது.

அமரிக்க அணியின் தலைமையிலான ஏகாதிபத்தியம் என்பது இன்றைக்குப் பல துருவ பிராந்திய ஏகத்துவப் பரவல்களாக விரிவடைந்து கொண்டிருக்க, புதிய அரசியற் சூழலை நோக்கி உலகம் நகர்த்தப் பட்டுக்கொண்டிருக்கிறது.

ஆசியாவின் புதிய அதிகாரங்கள், ரஷ்யாவின் மறு உருவாக்கம், அமரிக்க அணியின் பொருளாதாரச் சரிவு, இலத்தீன் அமரிக்காவின் மேற்குல எதிர்ப்பியல், மத்திய கிழக்கின் புதிய அணி சேர்க்கை என்பவையெல்லாம் இப்புதிய உலக ஒழுங்கு விதியின் பிரதான அரசியற் பொருளாதாரக் கூறுகள்.

மேலெழுந்துள்ள சீனா, இந்தியா போன்ற நாடுகளின் சர்வதேச சக்திகளானது 20ம் நூற்றாண்டில் அமரிக்காவின் சக்திக்கும், 19ம் நூற்றாண்டின் ஒருங்கிணைந்த ஜேர்மனியின் சக்திகும் இணையானதாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்று கூறும் அமரிக்க தேசிய உளவுத் துறையின் அறிக்கையானது, இந்தப் புதிய சர்வதேச சக்திகள், கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நிலவிவந்த புவிசார் அரசியலின் தன்மையை மாற்றத்திற்குள்ளாகிவிடும் என்கிறது.

அமரிக்க முன்னாள் இராஜங்கச் செயலாளர் ஹென்றி கிசிங்ஸர் கூறுவது போல்,அமரிக்க முன்னைப் போல சக்திவாய்ந்த அர்சாக இல்லாது போனாலும், புதிய ஒழுங்கமைப்பை உருவாக்குவதில் பிரதான பாத்திரம் வகிக்கும் என்கிறார்.

அமரிக்காவும் ஐரோப்பாவும் தனது அதிகார பலத்தின் ஒரு பகுதியை இழந்தாலும், இவ்வொழுங்கமைப்பில் தம்மை இணைத்துக் கொள்வதே தம்மைத் தக்க வைத்துக்கொள்வதற்கான ஒரே வழிமுறை என உணர்ந்து கொண்டுள்ளன.

28/03/2009 இல் பிரித்தானியாவில் நடந்தேறிய G20 மாநாட்டில் பல வெளிப்படையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டலும், அமரிக்க அதிபர் ஒபாமாவின் நோக்கம் என்பது சீனாவுடனான பேச்சுக்களுக்கும் உடன்படிக்கைகளுக்குமான மீளமைப்பே என்பதை பிரித்தானிய எகொனமிஸ்ட் சஞ்சிகை கூறுகிறது.

உலக நிதியொழுங்கு உலக மூலதனக் கட்டுப்பாடு என்பன பற்றியே அதிகம் கவனம் செலுத்தப்பட்ட இம் மாநாட்டில், இதுவரை உலகம் கண்டிராத புதிய அங்கீகாரங்களும், அணிசேர்க்கைகளும் வெளிப்படையாகத் தெரிந்தன.

உலகப் பொருளாதார ஒத்துழைப்பு, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் இவை அனைத்தினதும் சாராம்சமாக அமைந்திருந்தது, சீனாவினதும் இந்தியாவினதும் தலைமையில் உருவாகிக்கொண்டிருக்கும் ஆசியப் பொருளாதாரத்திடமிருந்து மேற்குலகம் எதிர்பார்க்கும் மூலதன ஒத்துழைப்பேயாகும்.

தெற்காசியாவின் ஒரு மூலையில் கொடிய ஆயுதங்களைக் கொண்டு அப்பாவி மக்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது மா‍ நாடு இரண்டு பிரதான முடிபுகளை வெளிப்படுத்திற்று.

1. ஆசியப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் துருவ வல்லரசுகளான இந்தியா மற்றும் சீனா போன்றவற்றிற்கான மேற்குலகின் அங்கீகாரம்.

2. இந்த அங்கீகாரத்தின் அடிப்ப்டையில் இவற்றிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பொருளாதார ஒத்துழைப்பு.

புதிய ஆசியப் பொருளாதாரத்தின் உருவாக்கம்.

அமரிக்க தேசிய உளவுத்துறை ஆலோசனைக் குழுவிலிருந்து ஸ்ரிகிலிட்ஸ், அமேர்திய சென் போன்ற செல்வாக்கு மிக்க பல பொருளியலாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் 2020 இல் இந்த ஆசியப் பொருளாதாரம் திட்டவட்டமான அரசியல் பொருளாதார எல்லைகளுடன் உருவாகிவிடும் என எதிர்வு கூறப்படுகின்றது.

ஆக, சர்வதேச அரசியல் சூழ் நிலை என்பது,

1. அமரிக்க ஐரோப்பிய அணியின் பொருளாதாரச் சரிவு.

2. சீனா இந்தியா போன்ற துருவ வல்லரசுகளின் பொருளாதார வளர்ச்சி.

3. ஏனைய செல்வாக்குச் செலுத்தும் துருவ வல்லரசுகளாக வளர்ச்சியடையவல்ல ரஷ்யா பிரேசில் போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்ச்சியும்.

4. இவ்வல்லரசுகளிடையேயன அரசியல் பொருளாதார முரண்கள்.

என்பவற்றை அடிப்படையாக முன்வைத்தே ஆராயப்பட வேண்டும்.

2020 இல் சீனாவின் தேசிய உற்பத்தி என்பது ஐரோப்பாவின் ஒவ்வொரு தனித்தனி அரசுகளின் தேசிய உற்பத்தியை விட அதிகமாகும் என்பதையும் இந்திய உற்பத்தி என்பது ஐரோப்பிய சராசரி உற்பத்தியிலும் அதிகமாகும் எனபதையும் தேசிய உளவுத்துறையின் ஆலோசனை மையம் எதிர்வுகூறுகிறது.

2020 இன் சீனாவினுடைய எதிர்பார்க்கப்படும் சனத்தொகையானது 1.4 பில்லியனாகவும் இந்தியாவினுடையது 1.3 பில்லியனாகவும் எதிர்வு கூறப்படும் நிலையில் இவ்விரு நாடுகளினதும் மக்களின் சராசரி வாழ்க்கைத் தரம் மேற்கத்திய வாழ்க்கைத் தரத்தின் உயர் நிலையை எட்டியிருக்காதாயினும், இது வல்லரசுகளாக நிர்ணயிக்கப்படுவதன் அளவு கோலாக அமையாது என்கிறது அமரிக்கப் பாதுகாப்புச் சபையின் அறிக்கை.

“புதிய வல்லரசுகளாக சீனாவும் இந்தியாவும் உருவாதல் என்பது தவிர்க்கமுடியாத மறுதலையான உறுதியெனினும், சர்வதேச அளவில் அமைந்திருக்கும் எனைய வல்லரசுகளுடன் போட்டி போட்டியாகவா, அல்லது ஒத்துழைப்புடனா தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ளும் என்பது முற்றிலும் நிச்சயமற்றதாகவே உள்ளது” என்கிறது அமரிக்க தேசிய உளவுத்துறை ஆலோசனை மையம். இந்த நிச்சயமற்ற தன்மையிலிருந்து உருவான அமரிக்க-ஐரோப்பிய அரசியலென்பது மூன்று பிரதான காரணிகளை உள்ளடக்கியது.

1. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு.

2. ஆசிய தேசிய அரசுகளிற்கெதிரான எதிர்ப்பியக்கங்கள்.

3. துருவ வல்லரசுகளின் பிராந்திய அரசியல் முரண்பாடுகள்.

மேற்கின் ஆதிக்கமற்ற புதிய‌ உலகம்.

மத்திய ஆசியாவில் அமரிக்காவினதும் ஐரோப்பாவினதும் அரசியற் செல்வாக்கின் அடித்தளம் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது என்பதை மறுப்பதற்கு இன்று எந்த அரசியல் ஆய்வாளரும் தயாராகவில்லை.

ஆசியாவின் வரலாறு நினைத்துப் பார்த்திராத மனிதப் படுகொலையை இந்தியாவும் இலங்கையும் கூடுச்சேர்ந்து வன்னி மண்ணில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது மேற்கின் தலையீடு நன்கு திட்டமிட்டு நிராகரிக்கப்படுகின்றது.

ஐம்பதாயிரம் அப்பாவிப் பொதுமக்கள் எந்தச் சாட்சியுமின்றி ஒரு சில சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குள் முடக்கப்பட்டு, புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் கொல்லப்பட்ட போதும் மூன்று இலட்சம் மக்கள் முகாம்களில் காரண‌மின்றித் தடுத்து வைக்கப்பட்டு மனித குலத்திற்கெதிரான வன்முறைகளைக் அவர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட போதுள்ள போதும் ஐரோப்பிய அமரிக்க சார் எந்த சக்திகளுமே அங்கு அனுமதிக்கப்படவில்லை.

அமரிக்க ஐரோப்பிய அரசுகள் சார் மனித உரிமை அமைப்புக்கள், சமூக உதவி அமைப்புக்கள், அதிகார அமைப்புக்கள், அரசின் பிரதினிதிகள் என்று அனைத்துத் தரப்பினருமே இப்பிரச்சனை பற்றி “மூச்சுவிடக் கூட” அனுமதிக்கப்படவில்லை.

கியூபா,சீனா,ஈரான்,இந்தியா,ரஷ்யா என்ற மேற்கின் அரசியற் செல்வாக்கிற்கெதிரான ஒரு புதிய அணி இலங்கையின் பக்கம் ஐரோப்பிய அமரிக்க நாடுகளைத் எட்டிக்கூடப் பார்க்கக்கூடாது என்று விரட்டியடித்திருக்கின்றன.

ரஷ்யாவினதும் சீனாவினதும் பொருளாதார இணைவு, இந்தியா, ஈரான் ஆகியவற்றை மேற்கின் அரசியல் ஆதிக்கத்திலிருந்து விடுதலை செய்வது மட்டுமன்றி திட்டவட்டமான புதிய இணைதலுக்கு வழிகோலுகின்றன.

சீனா,ரஷ்யா, இந்தியா,ஈரான் ஆகிய நாடுகளின் இணைவு என்பது மேற்கல்லாத புதிய பொருளாதார விசையைத் தோற்றுவித்திருக்கிறது என்கிறார் இந்திய பொருளியல் வல்லுனரான அஜய் சிங்.

“இந்தப் புதிய உலகம் முழுவதுமாக ஒருங்கு சேர இன்னும் caution new world order ahead பொருத்தப்படவில்லை. அரசுகள், தன்னார்வ அமைப்புக்களிலிருந்து தனிப்பட்ட வர்த்தக நிறுவனக்கள் வரையிலான அரசு சாரா சக்திகள் இன்னமும், இந்தப் புதிய உலகினுள் தம்மை உள்ளடக்கிக் கொள்வதற்கு இன்னமும் போராடிக்கொண்டே இருக்கின்றன” என்கிறது அமரிக தேசிய உளவுத்துறை ஆலோசனை நிறுவனம்.

ஆசியப் பொருளாதரத்துள் இழந்து போன மேற்கின் ஆதிக்கம்:

அமரிக்காவின் வயதாகிப் போன ஆதிக்கம் 2020 களிலும் செல்வாகுச் செலுத்தும் காரணியாக திகழுமாயினும் மேற்கிற்கும் சீனாவிற்கும் இடையிலான இடைவெளி தவிர்க்கமுடியாத பொருளாதாரக் காரணங்களால் குறைந்து கொண்டே செல்கிறது என்கிறார் பிரஞ்சு பொருளியல் ஆய்வாளர் தோமாஸ் பிக்கட்டி .

உற்பத்தித் துறையில் சீனா உலகின் மூன்றாவது இடத்தை வகிக்கும் உலக நாடாக இருப்பினும் இன்னும் சில வருடங்களில் உலகின் முதல் நிலைக்கு வந்துவிடும் என எதிர்வு கூறப்படுகிறது.

இதன் பிரதான உற்பத்திப் பகுதிகள் நான்கு வீதத்திலிருந்து பன்னிரண்டு வீதமாக கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்திருக்கிறது.

புதிய தலை முறைத் தொழில் நுட்பமான நானோ‍ பயோ வின் உருவாக்கத்தில் உலகில் இந்தியா முதலிடம் வகிகும் என எதிர்வு கூறப்படுகிறது.

நீர் மின் உற்பத்தியில் ஐரோப்பா சீனாவைத் தங்கியிருக்க வேண்டி நிலை உருவாகிவிட்டது.

ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் உற்பத்தி அருகிப் போய்விட்டது. வங்கிக் கடன் பொறிமுறையிலும், உற்பத்தித் திறனற்ற சந்தைப் பொருளாதாரத்திலும் தங்கியிருந்த மேற்கு நாடுகள், இப்பொருளாதாரப் பொறிமுறை நிரம்பல் நிலையை எட்டிய போது, சரிந்து விழ ஆரம்பித்து விட்டன. இன்று இவ்வலரசுகள் நடாத்திக் கொண்டிருப்பது தற்காலிக தற்காப்பு யுத்தங்களே தவிர வேறேதுமில்லை.

ஆசிய ஆபிரிக்க நாடுகளுடனான வியாபார மூலதனம் வங்கிகளை நிரப்பிக்கொண்டிருந்த போது அம்மூலதனத்தச் சுற்றிய இயக்கும் சக்திகளாக, வங்கிக் கடன், சொத்துச் சந்தை, சேவைத் துறை என்பன அமைய மக்களின் தொழில் சார் நடவடிக்கைகளும் இவற்றைச் சுற்றியே அமைந்திருந்தன.

ஆசியாவை நோக்கிய மூலதனத்தின் நகர்வின் பின்னர், ஐரோப்பாவினதும் அமரிக்காவினதும் பணமூலதன இருப்பு வற்றிப்போகவாரம்பித்தது. முதலீடுகள் கட்டுப்பாடின்றி ஆசியாவை நோக்கி நகர்ந்தது. இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் மூதலீடுகளின் தளமாக அமைய மேற்கத்தைய பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளானது.

இந்த நெருக்கடிக்குத் தற்காலிகத் தீர்வாக, ஆசியாவை நோக்கி நகரும் நிறுவங்களைக் கவரும் நோக்கோடு ஐரோப்பிய அரசுகள் தமது நாடுகளைச் சார்ந்த நிறுவனங்களுக்கு வரிவிலக்கை வழங்கியதுடன் மட்டுமன்றி, அரச பணத்தை அவற்றில் முதலீடு செய்தன. வங்கிகளுக்கு மில்லியன் கணக்கில் முதலீடுகள் வழங்கப்பட்டன. புதிய ஒழுங்குமுறைகள் புகுத்தபடுகின்றன‌. சேவைத்துறைக்கு பண இருப்பு மேலும் பயன்படுத்தப்பபடுகின்றது.

இவையெல்லாம் பொருளாதாரச் சரிவிலிருந்து ஐரோப்பாவையும் அமரிக்காவையும் தற்காத்துக் கொள்வதற்கான தற்காலிக நடவடிக்கைகளே.

இந்தத் தற்காப்பு யுத்தத்தின் அடிப்படை என்பது, பலத்தை மறுபடி நிலைநாட்டிக்கொண்டு ஆசியப் பொருளாதாரத்துடன் சமரசத்திற்கு செல்வதே என்பதைப் பல பொருளியல் வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஏப்பிரல் 2009 வரையான நிதி வருடத்தில் பிரித்தானியாவில் சீனாவின் முதலீடுகள் 13 வீதத்தால் அதிகரித்துள்ளது.

2009 இல் அமரிக்க திறைசேரியில் சீனாவின் முதலீடு தொடர்பாக கருத்து வெளியிட்ட ஹில்லரி கிளிங்டன், இரு நாடுகளும் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் நிலை உருவாகிவிட்டதாகத் தெரிவித்தார்.

ஆக, மேற்கின் பொருளாதாரம் ஆசியப் பொருளாதாரத்தின் உதவியின்றி உயிர்வாழ முடியாத நிலை உருவாகிவிட்டத.

மேற்கின் அரசியல் அதிகார அமைப்பு தனது பொருளாதாரத் தேவைகளுக்கும் நலன்களுகும் ஏற்றவாறு எவ்வாறு பொது விதிமுறைகளையும் ஒழுங்கமைப்புகளையும் ஆசியப்பொருளாதாரத்துடன் ஏற்படுத்திக் கொள்வதென்ற நடைமுறைத் தந்திரோபாயங்களே இன்று வகுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஆசியப் பிராந்தியத்தின் இன்றைய அதிபதிகளான இந்தியாவும் சீனாவும் மேற்கின் இந்தப் பலவீனத்தின் அடிப்படையிலேயே தமது அரசியல் பொருளாதரத் தளத்தை விரிவுபடுத்திக் கொள்கின்றன.

(தொடரும்…)

நன்றி - http://inioru.com/


0 comments:

Post a Comment