களத்தில் போர்முனை சுருக்க மடைந்து வருகின்ற போதும், புலத்தில் அது விரிவடைந்து மக்கள் புரட்சிமிக்க களமாக வியாபித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. தமிழீழ போராட்டத்தின் பரிமாணங்கள் முற்று முழுதாக மாற்றம்பெற்று வருவதுடன் தற்பொழுது தனிநாட்டுக்கான அங்கீ காரத்திற்காக சர்வதேசத்தினை நோக்கித் தமது போராட்டங்களை முன்னெடுக்க வும் தொடங்கிவிட்டனர். ஈழத்தமிழர்கள்.
சர்வதேசமெங்கும் தமிழர்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியானப் போராட்டங்கள் உலகின் கவனத்தினை ஈர்த்துவரும் நிலையில் பல மட்டங்களில் அதன் வெளிப்பாடுகள் வெளிப் படுத்தப்பட்டு வருகின்றன.
வன்னிக்களம் இன்று மிகச் சிறியதொரு நிலப்பரப்புக்குள் அடக்கப் பட்டுவிட்டதாகவே அனைவரினாலும் கூறப்படுகின்றது. ஆனால் அதில் எந்தளவு உண்மை இருக்கின்றது என ஆழமாக ஆராய்ந்து பார்ப்போமானால்.... பல உண்மைகளை புரிந்து கொள்ள முடியும், அதாவது புலிகள் தாம் இவ் வாறான இக்கட்டான நிலைமையை அடைவதற்கு ஒருபோதும் தாங்க ளாகவே இடமளிப்பவர்கள் அல்லர். புலிகள் நினைத்திருந்தால் சிங்கள இராணுவத்தின் முன்னேற்றத்தினை பூநகரிக்கு முன்பாகவே தடுத்திருக்க முடியும். தமது நிலப்பரப்புகளை தக்க வைத்து இருந்திருக்கவும் முடிந்திருக்கும். ஆனால் அதற்கான மிகப்பலமான எதிர்ப்புக்களை அவர்கள் காட்டியிருக்க வில்லை. அப்படியிருக்க, புலிகள் படையினரை இவ்வளவு தூரத்திற்கு முன்னேற அனுமதித்தது ஏன்?
இக்கேள்விக்கு இராணுவ ரீதியி லான பல பதில்கள் இருந்தாலும், அரசி யல் ரீதியிலான காரணங்களே அடிப் படையாக இருக்கின்றதாக புலப் படுகின்றது.
ஏனெனில், நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்ததிலிருந்தே புலிகள் அரசியல் நகர்வுகளிலேயே சிரத்தை யெடுத்து வந்திருந்தனர். முன்னர், சந்திரிகா அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தைகளிலிருந்து தாமாக விலகி மூன்றாம் கட்ட ஈழப்போருக்குள் புலிகள் நுழைந்ததனால் சர்வ தேசத்தின் அதிருப்திகளை சம்பாதித்திருந்தனர். அதே தவறை புலிகள் இம்முறையும் இழைத்திருக்கவில்லை. மகிந்த அரசு தான் சமாதான உடன்படிக்கையிலிருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறியி ருந்தது. அன்றிலிருந்து இன்றுவரைக்கும் தாங்கள் அதை மதித்து நடந்து வருவதாகவே புலிகள் கூறிவருகின்றனர். மூன்றாம் கட்ட ஈழப்போரில் புலிகள் மாபெரும் வெற்றிகளை ஈட்டியிருந்தனர். தமிழீழ நிலப்பரப்பில் எழுபது சதவீத மான பகுதி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. யாழ்ப்பாணத்தினைக் கூட மீளக் கைப்பற்றும் வல்லமையைப் பெற்றிருந்தனர் புலிகள். அப்போதும் இதை தடுத்திருந்தது இந்திய அரசுதான். இவ்வாறு மிகப்பலம் பொருந்திய நிலையில் இருந்த புலிகள் மூன்றாம் கட்ட ஈழப்போரை முடித்துக்கொண்டு சமாதானப் பேச்சுவார்த்தை மேசைக்கு போகும்போது சிங்கள அரசை நம்பிப் போயிருக்கவில்லை. சர்வதேசம் தங்களுக்கு நியாயமானத் தீர்வொன்றை தருவதற்கு முன்வரும் என்று முழுமை யாக நம்பியிருந்தார்கள். ஆனால் நடந்தது தலைகீழாகவே இருந்தது. சிறியளவிலான அதிகாரப்பகிர்வுக்குக் கூட சிங்கள அரசு தயாராய் இல்லை என்பதையும் வெளிப்படுத்தியிருக்க, மறு பக்கத்தில் புலிகளை பலவீனப்படுத்தும் சதித்திட்டங்கள் திரைமறைவில் மேற் கொள்ளப்பட்டன. அதற்கு சர்வதேச நாடுகள் பலவும் உடந்தையாக இருந்தன. அதில் முக்கியமாக, கருணாவை புலிகளிலிருந்து பிரித்ததில் இந்தியாவின் "றோ" அமைப்பு பிரதான பங்கு வகித்த தைக் குறிப்பிட முடியும். ஐரோப்பிய நாடுகளும் தம் பங்கிற்கு புலிகளை தடை செய்திருந்தன. தமிழர் தரப்பு சர்வ தேசத்திடமிருந்தும் முற்றுமுழுதான ஏமாற்றத்தையே கண்டிருந்தது. மாண்புமிகு தியாகங்களினால் ஈட்டப்பட்ட மாபெரும் இராணுவ ரீதியான வெற்றிகள் கூட தமிழருக்கான நியாயமானத் தீர்வை பெற்றத்தர முடியாமல் போயின.
எனவேதான், நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்ததிலிருந்தே புலிகளின் குறி இராணுவ ரீதியான வெற்றி களிலிருந்து விலகி "சர்வதேச ஆதரவு" என்ற ஒன்றின் மீதே குறியாய் இருந்து வருகின்றது. அதன் தொடர்ச்சியான விளைவுகளாய்தான் தற்போதைய நிலைமைகள் தொடர்கின்றன. புலிகளின் தற்போதைய பின்னடைவாக கருதப் படுகின்ற விடயங்கள் அனைத்துமே உண்மையிலேயே புலிகளின் இராஜ தந்திர காய்நகர்த்தல்களுக்கு மாபெரும் வெற்றிகளை ஈட்டிக் கொடுத்துவரும் முக்கியமான அம்சங்கள். புலிகள் தமது இராணுவ வெற்றிகளைவிட சர்வதேச ரீதியிலான இராஜதந்திர வெற்றிகளே தமது இலட்சியமான தமிழீழம் எனும் தனிநாடு மிகவிரைவில் உருவாக வழிவகுக்கும் என்பதை நன்கு உணர்ந்திருக்கின்றார்கள்.
இம்முறை தமிழர் தரப்பு தமது களத்தினை பிரதானமாக சர்வ தேசத்திலேயே தொடங்கியிருக்கின்றது. "மக்களின் உணர்ச்சிமிக்க எழுச்சிகள் எப்போதும் இழப்புக்கள் அதிகமாகும் போது அது புரட்சியாகவும் மாறும்." அதற்கு ஏதுவாக சிங்கள அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகள் அமைந்து வருகின்றன. புலிகளின் தந்திரோபாயங்களை புரிந்து கொள்ளாமல் அவர்களின் பின்வாங்கல்களை தமது மாபெரும் வெற்றிகளெனக் கருதி வெற்றி மமதையில் கண் மண் தெரியாமல் அப்பாவி மக்களைக் கொன்று குவித்து மிகப்பெரும் இனவழிப்புப் போரையே சிங்கள அரசு நடத்தி வருகின்றது. அகதி களாகி அல்லற்படும் மக்களை அநியாய மாக கொன்றொழித்து வருகின்றது. அம்மக்களின் துயரங்களை வாயினால் சொல்ல முடியாது. எழுத்துக்களினால் வரித்திட முடியாது. காட்சிகளால் காண்பித்துவிட முடியாது.
அந்த வலிகளை அந்த இடத்திலிருந்து அனுபவித்துப்பார்த்தால் மட்டுமே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனாலும், உலகத்தமிழருக்கு அவ்வலியின் கொஞ்சமேனும் புரிய ஆரம்பித்தது. வீறுகொண்டு பொங்கியெழுந்தார்கள். தற்போது பாதுகாப்பு வலயம் என்ற சிங்கள அரசின் மரணப்பொறிக்குள் அகப்பட்டிருக்கும் இரண்டரை இலட் சத்துக்கு மேலான தம் உறவுகளை காப்பாற்றுவதற்காக புலம்பெயர் தமிழ் உறவுகளை ஆக்ரோசமாய் கிளர்ந் தெழுந்திருக்கின்றார்கள். தொடர்ச்சி யானப் போராட்டங்கள் மூலம் சர்வ தேசத்தின் கவனம் முழுவதையும் தம் பக்கம் இழுத்திருக்கின்றார்கள்.
பாதுகாப்பு வலயம் மீது மிலேச் சத்தனமான தாக்குதல்களை ஆரம்பித்தி ருக்கின்றது சிங்கள கொலைவெறி இராணுவம். ஆரம்பத்தில் பத்து இருபது என தினந்தோறும் படுகொலை செய் யப்பட்ட மக்கள் எண்ணிகை அதன் பின்பு நூற்றுக்கணக்காகி இப்போது தினந்தோறும் ஆயிரக்கணக்காகி இருக் கின்றது. அனைத்துலகத்தாலும் ஓரங்கட் டப்பட்ட பாவப்பட்ட ஒரு இனமாக அவலப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றது ஈழத்தமிழினம். போர் விதிகளுக்கு மாறாக அப்பாவி மக்களைக் கேடயங்களாகப் பாவித்தும், சர்வ தேசத்தினால் தடைசெய்யப்பட்ட ஆயு தங்களைப் பயன்படுத்தியும் தாக்குதல் களை மேற்கொண்டு பாதுகாப்பு வலயத்துக்குள் முன்னேறி தன் அழிவு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது சிங்கள இராணுவம்.
ஆனாலும் சர்வதேசம் அதை அசட்டை செய்வதாகவே தெரிகின்றது. ஆயிரமாயிரம் மக்கள் கொல்லப் படுவதை மெளனமாக பார்த்துக் கொண்டிருக்கின்றது. இலங்கை அரசின் கொடிய தாக்குதல்களிலிருந்து மக்களை காப்பாற்ற எந்தவொரு நாடும் உறுதியான நடவடிக்கையினை இன்றுவரை மேற்கொள்ளவில்லை.
பலஸ்தீனியர்கள் மேல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை இருபது நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வந்த சர்வதேச ஜாம்பவான்களால் அப்பாவித் தமிழ் மக்கள் மீது இத்தனை நாளாய் நடத்தப்படும் கொலைவெறித்தாக்குதல் களை ஏன் தடுத்து நிறுத்த இயலவில்லை?
ஈழத்தமிழினம் அழிந்து போகட்டும் என்று நினைக்கின்றதா இந்த சர்வதேசம்?
தமது சொந்த நிலங்களில் வாழும் உரிமையோ, ஆகக்குறைந்தது உயிரோடு தன்னும் வாழும் உரிமையோ ஈழத்தமிழ் மக்களுக்கு இல்லையா?
இவ்வாறான கேள்விகளோடு சர்வ தேசங்களின் முன்றல்களில் குதித்திருக் கின்றார்கள். பேரெழுச்சிக்கொண்ட புலம்பெயர் ஈழத்தமிழர்கள். இம்முறை சாக்குப்போக்குச் சொல்லி சர்வதேசத்தால் தட்டிக்கழிக்க முடியாத அளவுக்கு தமது போராட்டத்தினை வலுப்படுத்தி வரு கின்றார்கள். அவர்களின் முதன்மையான கோரிக்கை "போரை உடடினயாக நிறுத்தி வன்னி மக்களை அழிவிலிருந்து காப் பாற்ற வேண்டும்" என்ற மனிதாபிமான கோரிக்கைதான். அதைக்கூட நிறை வேற்ற சர்வதேசம் பின்னடிப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்.
ஆனாலும் மக்கள் ஓயப்போவ தாக தெரியவில்லை. தங்களின் கோரிக் கைகளுக்கு சர்வதேசம் இணங்கும்வரை தமது போராட்டங்களை முன்னெடுக்க திடசங்கற்பம் பூண்டிருக்கிறார்கள். அமைதியாக கேட்டுப்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பொறுமையிழந்த மக்கள் தமது போராட்டங்களை வேறு வடிவங்களுக்கு மாற்றத் தொடங்கி யிருக்கின்றார்கள். வீதிமறியல்கள், சாகும்வரை உண்ணாவிரதம் என புதிய பரிமாணம் பெற்றுள்ளன போராட்டங்கள். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என அன்று தியாகி திலீபன் சொல்லிவிட்டுப்போன தீர்க்கதரி சனமான வார்த்தைகள் இன்று நிஜமா வதனை மக்கள் போராட்டங்களின்போது அவர்கள் காட்டும் உணர்வெழுச்சிகளிலிருந்து உணர முடிகின்றது. சிங்கள அரசு தானாக முன்வந்து தமிழருக்கானத் தீர்வைத் தரப்போவதில்லை என்பதை தமிழர் தரப்பு நன்கே உணர்ந் திருக்கின்றது. தமது இலக்கை அடை வதற்கு சர்வதேசத்தின் அங்கீகாரம் அத்தியாவசியம் என்பதனையும் ஏற்கனவே புரிந்துகொண்டுவிட்டனர். எனவே தமிழர் தரப்பின் போராட்டங்கள் சர்வதேசத்தினை நோக்கி தமது நியாயப்பாட்டினை வெளிப்படுத்துவதாக அமையத்தொடங்கியிருக்கின்றன.
புலிகளும் என்றுமில்லாதவாறு தமது போராட்ட வடிவத்தினை, பரி மாணத்தினை தந்திரோபாய ரீதியில் மாற்றி வருகின்றார்கள் என்றே தெரி கின்றது. அவர்களின் களங்கள் தற்போது மாற்றமடைகின்றன. தமிழ் மக்களின் எழுச்சிப் போராட்டங்களோடு அவர் களின் களங்கள் சமாந்தரமாக பயணிக் கின்றதனை அவதானிக்க முடிகின்றது. புலிகளும், புலிகளையே ஏகதலைமை யாக அறிவித்து புலம்பெயர் தேச மெங்கும் போராடும் மக்களும் ஒரே கோரிக்கையுடன் ஒரு இலட்சியத்துடன் சர்வதேசத்தினை நெருக்கத் தொடங்கி விட்டனர். மக்களின் எழுச்சிமயமான போராட்டங்களுக்கு சர்வதேசம் மதிப்ப ளிக்க தவறும் பட்சத்தில் அது புரட்சி மயமாக மாற்றமடையும் அதேவேளை, புலிகளின் அமைதிக்கும் பணிவுக்கும் தயவு காட்டாத சர்வதேசம் அதன் விளைவுகளை சிங்கள தேசத்தோடுச் சேர்ந்து அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்படும்.
ஈழத்தமிழரின் இன்றைய பிரச்சி னைகளுக்கு சர்வதேசம் "முக்கியமாக பிரித்தானியா" அன்றிழைத்த தவறுகள் தான் காரணம். சுதந்திரம் கொடுக் கின்றோம் என்று சொல்லி தமிழரின் சுதந்திரத்தினை சிங்களவரிடம் அடகு வைத்துவிட்டுப் போய்விட்டார்கள். அவர் களால் இழக்கப்பட்ட சுதந்திரத்தினை மீட்டுத்தரும் கடமையும் கடப்பாடும் சர்வ தேசத்திற்கு உண்டு. அதை சர்வதேசத்தி டம் அழுத்திக் கேட்கம் வரலாற்று உரிமை தமிழர்களுக்கு உண்டு. செய்தே ஆகவேண்டும் சர்வதேசம். தமிழன் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் சர்வதேசம் பதில் சொல்ல வேண்டி வரும். பரிமாணம் மாறும் தமிழர் போராட் டங்கள் நிச்சயமாக அந்நிலையை சர்வதேசத்திற்கு ஏற்படுத்தும். தமிழ் மக்களின் புரட்சி உச்சக்கட்டத்தினை அடையும்போது புலிகளின் மெளனமும் கலையும். அப்போது எதிரியின் நிலைகளும் குலையும். தமிழர்தம் இன்னல்கள் அனைத்தும் அகன்று, தமிழீழத் தேசம் மலர்ந்து சிங்கள வல்லாதிக்கத்தினதும், காந்தியக் காங்கிரசினதும், சர்வதேச நாசகார சக்திகளினதும் கொட்டம் அடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
நன்றி: http://www.thenseide.com/
0 comments:
Post a Comment