Wednesday, June 3, 2009

தன்னிகரில்லாத் தமிழன் – பழ.நெடுமாறன்.

"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில், வாளோடு முன்தோன்றி மூத்தக் குடி" என புகழ்பெற்ற வீரக்குடியினராகத் தமிழர்கள் சிறந்திருந்தார்கள். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ் செழியன், கரிகால்பெருவளத்தான், இராஜராஜ சோழன், இராஜேந்திரசோழன் என மன்னாதி மன்னர்கள் பலர் தங்கள் வீரத்தால் தமி ழனின் பெருமையை இந்தியத் துணைக் கண்டம் முழுமைக்கும், அதற்கப்பால் மேற்கே ரோமாபுரியிலிருந்து கிழக்கே சீனம் வரையிலும் பரப்பியிருந்தார்கள்.

பொற்கோட்டு இமயத்தில் விற் கொடியைப் பொறித்து தமிழனின் வீரத்தை உலகறியச் செய்த சேரன் செங்குட்டுவனின் படைத்தளபதியாக விளங்கியவன் வில்லவன் கோதை.

உத்தரபாரதத்தின் ஏக சக்ரவர்த்தியாக விளங்கிய ஹர்ஷவர்த்தனன் தென்னகம் நோக்கி படையெடுத்தபோது அவனைத் தோற்கடித்த பெருமைக்குரியவன் சாளுக்கிய மாமன்னன் புலிகேசி. அத்தகைய பேராற்றல் படைத்த பெருவீரனான புலிகேசியை முறி யடித்து அவனின் தலைநகரமான வாதாபியை அழித்த மாமல்லச் சக்கரவர்த்தியின் படைக் குத் தளபதியாக விளங்கியவன் பரஞ்சோதி.

அசோக சக்கரவர்த்தியினாலேயே வெல்ல முடியாத கலிங்கத்தை வென்றான் குலோத்துங்கச் சோழனின் படைத்தளபதியாக விளங்கிய கருணாகரத் தொண்டமான். தமிழர்களின் வீரவரலாறு விவரிக்கும் அழிக்கமுடியாத உண்மைகள் இவை.

பழமையும், பெருமையும் மிக்க தமிழர் வரலாற்றுக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுக்காலமாக எத்தனையோபேர் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

ஆனால் இது எல்லாம் பண்டைய பெருமையாய், பகற்கனவாய் மறந்துவிட்டன. எந்தெந்த நாடுகளில் தமிழன் வெற்றிக்கொடி நாட்டினானோ அந்தந்த நாடுகளிலேயே தமிழன் கொத்தடிமையாகச் சென்று வாழத் தொடங்கினான். தமிழர்கள் என்றாலே நல்ல கொத்தடிமைகள் என்று உலகம் கருதியது. அடிமைச் சேற்றில் நெளியும் புழுக்களாக புறநானூற்றுத் தமிழர்கள் ஆன இழிநிலை வந்தது. அடிமை வாழ்வினைத் தமிழன் விதியென நினைத்து ஏற்றுக்கொண்டான்.

"விதியே விதியே தமிழச்சாதியை என்செய நினைத்தாய்" என மகாகவி பாரதி மனம்நொந்து பாடும் அளவுக்கு தமிழனின் படை நிலை தாழ்ந்தது.

வெள்யைனை எதிர்த்து தமிழ்நாட்டில்

பூலித்தேவனும், வீரபாண்டிய கட்டபொம்ம னும், ஊமைத்துரையும், வீரமருதுச் சகோதரர்களும், தமிழீழத்தில் பண்டார வன்னியனும் போராடியபோது தமிழர்கள் உறங்கிக் கிடந்தார்கள். அந்த மறவர்களின் வீரப்போராட்டத்திற்குப் போதுமான ஆதரவளிக்கவில்லை. கோழைகளாகிவிட்ட தமிழர்களுக்கு நடுவே வாழ்வதை விடத் தூக்கிலே தொங்கி மடிவதே மேல் என அம்மாவீரர்கள் மாண்டு போனார்கள். அதற்குப் பிறகு தமிழர்கள் எவரேனும் ஆயுதம் தூக்கிப் போராடத் துணியவில்லை. இந்தியாவின் சுதந்திரப்போராட்டம் நடைபெற்றவேளையில் கூட தமிழகத்தில் ஆயுதப்புரட்சி உருவாகவில்லை.

வ.உ.சி.யும். பாரதியும் ஊட்டிய தேச பக்திக்கனல் ஒரே ஒரு வீரவாஞ்சிநாதனைத் தோற்றுவித்தது. ஆனால் அப்போதும் தமிழகம் கிளர்ந்தெழவில்லை.

அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற்கொண்டாரடி! கிளியே! ஊமைச் சனங்களடி!

என பாரதி சித்தம் நொந்தான்.

பகற்கனவாகப் போய்விட்ட இந்தப் பழம்பெருமைகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து, முதன்முதலாகத் தமிழர்களே நடத்தும் ஆயுதப் புரட்சிக்கு வித்திட்டு அதற்குத் தலைமை தாங்கியிருப்பவர் "தம்பி" பிரபாகரன் ஆவார். இதன்மூலம் தமிழ்க்குலம் வீரத்தளபதி எவரையும் தோற்றுவிக்கவில் லையே என்ற குறையை பல நூற்றாண்டு களுக்குப் பிறகு பிரபாகரன் போக்கி இருக்கிறார்.

உலகில் தமிழனுக்கென்று ஒரு தனி நாட்டினை அமைக்கும் திருப்பணிக்காகத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டுள்ள தியாகப்படை ஒன்றை அமைத்து அதனை வழிநடத்திச் செல்கிற பிரபாகரன் தமிழர் வரலாற்றில் இதுவரை யாரும் கண்டும் கேட்டுமறியாத அற்புத சாதனையைப் புரிந்திருக்கிறார்.

விடுதலைக்காகப் போராடிய பல் வேறு நாடுகளில் பல தலைவர்கள் இத்த கைய விடுதலைப் படைகளை அமைத்தது உண்டு. ஆனால் அவர்களுக்கெல்லாம் ஏதேனும் ஒரு நாடோ, அல்லது பல நாடுகளோ உதவி புரிந்தன. இந்தியாவின் மாபெரும் தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு நெருக்கடியான காலக் கட்டத்தில் இந்தியாவைவிட்டு வெளியேறி னார். அந்த நிலையிலேயே அவர் உலக மறிந்த தலைவர். ஜெர்மனியும், ஜப்பானும் அவருக்கு உதவிசெய்ய போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தன. இந்திய மக்களின் மாபெரும் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட அவருக்கு உலகத்திலேயே இரண்டு பெரிய வல்லரசுகள் என்னென்ன உதவிகள் தேவையோ அந்த உதவிகளைச் செய்து கொடுத்தன. பிரிட்டிஷ் இந்திய இராணு வத்தில் பணியாற்றி ஜப்பானியர்களால் சிறைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த இந்திய போர்வீரர்களை மீட்டு அவர்களைக்கொண்டு இந்தியத் தேசிய இராணுவத்தினை நேதாஜி சிங்கப்பூரில் உருவாக்கினார். இந்த இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள். மற்ற உதவிகள் ஆகியவற்றை ஜப்பான் கொடுத்தது. நேதாஜியின் சுதந்திர அரசை ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி மற்றும் நட்பு நாடுகள் அங்கீகரித்தன.

நேதாஜியை தனது வழிகாட்டியாகக் கொண்டிருக்கிற அருமைத் தம்பி பிரபா கரனை நேதாஜியுடன் ஒப்பிடமுடியாது. வயதிலும் சிறியவர், அனுபவத்திலும் சிறியவர். நேதாஜியைப் போன்ற பெரிய தலைவராக உருவாகி அதற்குப் பின்னர் அவர் இந்தப் போராட்டத்தை தொடங்கவில்லை. இளைஞராயிருந்தபோது தன்னுடைய பதினாறாவது வயதில் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கினார்.

நேதாஜிக்கு உலக வல்லரசுகள் துணைபுரிந்தன. அருமைத் தம்பி பிரபாகரனுக்கு திக்கற்ற தமிழ் இளைஞர்கள் மட்டுமே துணைநின்றனர். வேறு எந்த நாடும், எந்த வல்லரசும் அவருக்கு உதவிபுரிய முன்வரவில்லை. ஆனால் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் அள்ளி அள்ளித்தரும் நவீன ஆயுதங்களை வைத்திருக்கக்கூடிய சிங்கள இராணுவத்தை ஓட ஓட விரட்டி யடிக்கிற விடுதலைப் படையை பிரபாகரன் உருவாக்கியவிதம் கற்பனைக்கு எட்டாதது. அதைப் போலவே வலிமை வாய்ந்த இந்திய இராணுவத்தை எதிர்த்து அவர் நடத்திய வீரப்போராட்டமும் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாதது. இதை எப்படி அவர் சாதித்தார்? இன்னமும் புரியாத புதிர்தான். தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும் இன்னும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தருகிற சிறுசிறு உதவிகளைப் பெற்று அவற்றைக் கொண்டு ஆயுதங்களை வாங்கி தனது போராட்டத்தை அவர் தொடர்ந்து நடத்துகிறார். இராணுவ பலம் மிக்க ஒரு எதிரியை எதிர்த்து மக்கள் பலத்தைத் தவிர வேறு எந்த பலமுமில்லாமல் போராடிவரும் அவரது துணிவுக்கு ஈடுயிணையே இல்லை.

தமிழீழத்தில் சுற்றுப்பயணங்கள் செய்து அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து அறிந்ததன் விளைவாக எனக்கு ஒரு உண்மை தெளிவாகப் புரிந்தது. தமிழீழ விடுதலைப் போரின் முன்னணிப் படையாக விடுதலைப் புலிகளின் இயக்கம் திகழ்கிறது. அரசியல் அறியாத சிறுவர்களாக அவர் களைக் கருதுவதும், அவர்களின் முயற்சி வெறும் தற்கொலைக்கு ஒப்பாகும் என் றெல்லாம் சிலர் பேசிவருவதும் எவ்வளவு பெரிய தவறு என்பதை நான் நேரில் கண்டேன்.

வியட்நாம் விடுதலைப்போராட் டத்தை அந்நாட்டு மக்கள் உறுதியாக நடத்தியதைப் போல தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகள் வீறுகொண்டு நடத்துகிறார்கள். இதை ஒரு மக்கள் போராட்டமாக மாற்றி வருகிறார்கள். மக்களின் துணையோடு தங்கள் விடுதலைப் போராட்டத்தை அவர்கள் விரிவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் வீரப்போராட்டத்தின் விளைவாக சிங்கள இனவெறி ஆட்சியின் அத்திவாரம் ஆட்டம் கண்டிருக்கிறது.

விடுதலைப்புலிகள் முன்னின்று நடத்தும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மூலம்தான் தமிழினம் தன்னை முழுமை யாக உணரத்தொடங்கியுள்ளது. ஜாதி, மதம், கட்சி போன்றவற்றால் பிளவுபட்டுக் கிடந்த ஈழத்தமிழ் இனம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினால்தான் ஒன்றுபட முடிந் திருக்கிறது. உலகம் பூராவிலும் உள்ள தமிழர்களுக்கு எழுச்சியையும் உணர்ச்சியை யும் ஊட்டுகிற ஒரு போராட்டமாகவும் அவர்களை ஒன்றுபட வைக்கிற ஒரு போராட்டமாகவும் இப்போராட்டம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

எந்தவொரு நாட்டின் விடுதலைப் போராட்டமும் தகுந்த தேசியத் தலைமை யின் வழிகாட்டல் இன்றி வெற்றிபெற்ற தில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத் திற்கும் இது பொருந்தும். இப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முற்றிலும் தகுந்த தேசியத் தலைமையை விடுதலைப் புலிகளின் இயக்கம் தம்பி பிரபாகரன் வடிவத்தில் தந்துள்ளது. தமிழீழ மக்களும் இதை மனமுவந்து ஏற்றுக்கொண்டுள்ளனர். நானே நேரில் கண்ட உண்மை இது. 1985ஆம் ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களிலும், 1987ஆம் ஆண்டு செப்டம்பரிலும் தமிழீழப்பகுதியில் சுற்றுப் பயணம் செய்து பலதரப்பு மக்களையும் கண்டு பேசி அவர்களின் உள்ளத்து உணர்வுகளைப் புரிந்து கொண்ட பிறகே இதை எழுதுகிறேன்.

தம்பி பிரபாகரன் அவர்களைத் தமிழீழ மக்கள் தங்களது தவப்புதல்வனாகக் கருதுகிறார்கள். மனமார நேசிக்கிறார்கள். சிங்கள அரக்கர்களின் கொடுமைகளில் சிக்கித்தவித்து அடிமை இருளில் தடுமாறிக் கொண்டிருந்த தங்களின் வாழ்வில் தோன்றிய நம்பிக்கை நட்சத்திரமாக அவரைக் கருதுகிறார்கள்.

தமிழீழ மக்கள் தங்கள் நாடு முழுமையாக விடுதலை பெற்றால் ஒழிய தங்களுக்கு வாழ்வில்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அறவழியில் அதை அடைய முடியாது என்பதைக் கடந்த 30 ஆண்டுகால அனுபவம் அவர் களுக்கு உணர்த்தியிருக்கிறது. சமரசப் பேச்சுக்கள் அவர்களைச் சுதந்திர மனிதர்களாக்காது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு இழப்பு, இவ்வளவு அழிவு, இவ்வளவு தியாகத்திற்குப்பின் இனி ஒரு போதும் பின்வாங்கமுடியாது. விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துதுச் செல்வதைத் தவிர வேறுவழியில்லை என்பதை ஐயந்திரிபர உணர்ந்திருப்பதோடு அவ்வாறு செய்வதற்குத் தகுதியானவர் பிரபாகரனே என்பதையும் அறிந்திருக்கிறார்கள்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.

என வள்ளுவர் வாக்கின் பொருளை நன்குணர்ந்த ஈழமக்கள் தங்கள் விடுதலை என்னும் அரிய செயலை முடிக்கத் தக்கவன் பிரபாகரனே என்பதைத் தெளிந்து தேர்ந்து அவர் தலைமையை ஏற்றுக்கொண்டிருக் கிறார்கள்.

தனது சொந்த உறுப்பினர்களைக்கூட கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாத இயக்கங் களையும் தலைமைகளையும் கண்டு மனம் வெறுத்துப்போன தமிழீழ மக்கள் அவற்றோடு புலிகள் இயக்கத்தை ஒப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்த்தபிறகே இத்தகைய முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

கட்டுப்பாடு, ஒழுக்கம் இவற்றோடு தியாகமும், வீரமும் நிறைந்தவர்களாகப் புலிகளை மக்கள் கருதுகிறார்கள்.

மக்களால் வளர்க்கப்படும் மக்கள் இயக் கமாகப் புலிகள் இயக்கம் வளர்ந்திருக்கிறது. மக் களின் ஒத்துழைப்போடு தங்கள் போராட்டத்தை மக்கள் போராட்டமாகப் புலிகள் மாற்றியுள்ளனர்.

அடிமைச்சேற்றில் நெளியும் புழுக் களாகத் தமிழர்களைக் கருதியவர்கள் இன்று அவர்கள் புலிகளாக மாறி உறுமுவதைக்கண்டு கிலிகொண்டு நடுங்குகின்றனர். விடுதலைப்புலிகளின் வீரத்தினாலும், தியாகத்தினாலும் தமிழி னமே தலைநிமிர்ந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள் ளது. இதற்கு வழிவகுத்தவர் பிரபாகரனே.

காலங்காட்டும் இந்த உண்மைகளை உணராது தனது இராணுவபலத்தைக் கொண்டு பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் அழித்துவிட சிங்களர் முயலுவது பேதமை யாகும். இந்த நோக்கம் ஒரு போதும் நிறைவேறப்போவதில்லை.

தங்கள் சிந்தும் இரத்தத்தினால் ஈழமண் சிவந்துகொண்டேயிருந்தாலும், வங்கக்கடல் செங்கடலானாலும் பிரபாகரனும் அவரது தோழர்களும் தங்களின் இலட்சியக்கனவு நிறை வேறும்வரை போராடுவார்கள். தமிழீழத்தின் சுதந்திரக் கொடியை ஏற்றும் வரை தொடர்ந்து போராடியே தீருவார்கள். அவர்களுக்குக் காலம் இட்டிருக்கிற கட்டளை இது. அதை மீற எவராலும் இயலாது.

- பழ.நெடுமாறன் எழுதிய

"பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்"

நூலிலிருந்து சில பகுதிகள்.

நன்றி: http://www.thenseide.com


0 comments:

Post a Comment