Wednesday, June 24, 2009

வரலாறு உங்கள் முகங்களில் காறி உமிழும் – யதீந்திரா.

எனது நாட்குறிப்பிலிருந்து…

01.

தினமும் கிடைக்கும் வன்னிச் செய்திகள் மனதை பிழிந்தெடுக்கின்றன. உடனே நண்பர் கருணாகரன் எப்படி இருக்கின்றாரோ! திருமாஸ்டர் எப்படி இருப்பார், திருவையாறில் இருந்த நிலாந்தன் எங்கிருப்பார். அமரதாஸ், வளநாடன், இனுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் அவர்கள் எல்லாம் என்னவானார்கள், எங்கிருக்கிறார்களோ. ஒவ்வொரு முறை வன்னிச் செய்திகளை கேட்க நேரும் போதெல்லாம் இப்படித்தான் மனதில் எண்ணங்கள் எழும். ஆனால் இவர்கள் மட்டுமா எனது உறவுகள். அங்கு மரத்தின் கீழ் மழை பெய்தால் ஒதுங்குவதற்குக் கூட இடமில்லாமல் அல்லல்படும் இலட்சக்கணக்கான மக்கள் அனைவரும்தானே நமது உறவுகள். என்ன செய்வது மனித மனம் என்னதான் விசாலமான பார்வைகளை சேமித்துக் கொண்டாலும் சில வேளைகளில் அதனையும் கடந்து நமக்கு நெருக்கமான உறவுகளை தேடத்தான் செய்கிறது. நமக்கு நெருக்கமானவர்களுக்கு என்ன நடந்திருக்குமோ என்று மனம் பதறுகிறது. பதட்டம் சில சந்தர்ப்பங்களில் சோர்வை ஏற்படுத்தினாலும் எனது நம்பிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு தார்மீக அரசியல் நியாயத்தை சில சர்வதேச சதிகளின் பின்புலத்தில் நிரந்தரமாக அழித்துவிட முடியும் என்பதை நம்பாத எந்தவொரு மனிதனும் தடுமாறமாட்டான். காலம் தொடர்ந்தும் துயரச் செய்திகளை மட்டும் காவித்திரிவதில்லை. ஒரு விடுதலை அரசியல் வெறும் செய்திகளில் மட்டும் தங்கியிருக்கும் ஒன்றுமல்ல.

02.

விடுதலைப்புலிகள் முல்லைத்தீவுகளுக்குள் சுருங்குமளவிற்கு பின்னடைவுகளை சந்திருக்கின்றனர். ‘விழுந்தும் மீசையில் மண் ஓட்டவில்லையே’ என்று வாதிடும் அவசியம் காலத்தோடு இணைந்திருக்கும் ஒரு எழுத்தாளனுக்கு அவசியமற்றது. இதனை வெறுமனே விடுதலைப்புலிகளின் பின்னடைவாக பார்க்கும் சில அறிவாளிகள் மிகுந்த மகிழ்சியில் இருக்கின்றனர். அடிப்படை உண்மை குறித்த தெளிவில்லாமல். எப்போதுமே புலிக்காய்ச்சலை தமது சிந்தனைக்கான தளமாகக் கொண்டிருந்த இவர்கள் முன்னரைக்காட்டிலும் இப்போது சற்று அதிகமாக காய்ச்சல் தலைக்கேறிய நிலையில் உளறி வருகின்றனர். இவ்வாறானவர்களில் பலர் புலிகளின் பின்னடைவை மானசீகமாகவே எதிர்பார்த்திருந்தவர்கள். இன்னும் சிலரோ தமது மேதமைத்தனத்தை காட்டுவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவர்கள். நான் சமீபத்தில் எனது கருத்தியல் நன்பர் ஒருவருடன் பேசியபோது அந்த நன்பர் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டார். தனித்து இருப்பதான உணர்வு மேலிடுவதாகக் கூறிய அவர். அப்பவே மாகாணசபையை எடுத்திருக்கலாம் இவங்கள் பிழைவிட்டுட்டாங்கள் அதுதான் இவ்வளவு சிக்கலுக்கும் காரணம், என்ற தோறணையில் தனது நண்பர்கள் சிலரே பேச விழைவதாகக் குறிப்பிட்டார். நான் இதனைக் கேட்டு ஆச்சரியப்படவில்லை. உண்மையில் பிரச்சனை என்னவென்றால் நம்மில் சிலருக்கு புலிகளின் பலத்தின்மீது இருந்த நம்பிக்கைக்கு ஏற்ப அமைப்பின் மீது நம்பிக்கையிருக்கிவில்லை. அதனால் பலம் சற்று குன்றும் போது அவர்களது மனதில் நிலைகொண்டிருந்த அமைப்பின் மீதான நம்பிக்கையின்மை வெளிக் கிளம்புகிறது. இன்னும் சிலரோ கோமாளித்தனமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இனித்தான் தமிழர் மத்தியில் சரியான அரசியலை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு உருவாகும் என்றும் அது புலிகளின் தோல்வியில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது என்றும் அவர்கள் தமது ஆருடங்களை வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறான கருத்துக்களை எதிர்கொள்ள நேரிடும் போதெல்லாம் உண்மையிலேயே நான் கோபப்படுவதில்லை மாறாக அவ்வாறனவர்களின் மடைமைத்தனத்தை எண்ணி அனுதாப்படுகின்றேன். அவ்வாறனவர்களுக்கு சொல்வதற்கு பெரிதாக என்னிடம் ஒன்றுமில்லை. ஆனால் ஒன்றைச் சொல்லலாம், உங்களுக்கு அறிவில்லாமல் இருக்கலாம் நண்பர்களே ஆனால் முளை இருக்கிறதல்லவா கொஞ்சமாவது அதனை பயன்படுத்துங்கள். துருப்பிடித்து விடப்போகின்றது.

03.

மாற்று கருத்துக்கள் குறித்து என்னிடம் எந்தவிதமான காழ்ப்புணர்வோ எதிர்ப்புணர்வோ இல்லை, அது ஒரு சரியான மாற்றுக் கருத்தாக இருக்கும் பட்சத்தில். ஒரு சமுதாயத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மாற்றுக் கருத்துக்கள் அவசியம் என்பதில் என்னிடம் இரு வேறு கருத்துக்கள் கிடையாது. ஆனால் அது வெறும் காழ்ப்புணர்விலும் தனிப்பட்ட அனுபவங்களிலும் நிலை கொண்டிருக்கக் கூடாது. துரதிஸ்டவசமாக நமது சூழலில் மாற்றுக் கருத்தாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டவர்கள் அனைவருமே பெரும்பாலும் புலிகள் மீதான காழ்ப்புணர்வின் மீதும், புலிகள் தொடர்பிலான தங்களது தனிப்பட்ட அனுபவங்களில் இருந்துமே சிந்தித்தவர்கள், சிந்திப்பவர்கள். இதன் வெளிப்பாடுதான் இன்று புலிகள் இராணுவ நிலையில் சில பின்னடைவுகளை சந்திக்கும் போது அதனை மானசீகமாக அங்கீகரிக்கும் மக்கள் விரோத நிலைக்கு அவ்வாறானவர்களால் உடனடியாகச் செல்ல முடிகிறது. அழிந்து கொண்டிருக்கும் மக்கள் குறித்து எந்தவிதமான கரிசனையும் இல்லாமல் புலிகள் குறித்தே சதா சிந்தித்துக் கொண்டிருக்க இவர்களால் முடிகிறது. இதன் மூலம் இவர்கள் சாதிக்கப்போவது என்னவென்று பார்த்தால் புலிகள் தோல்வியடைந்தார்கள் அல்லது அழிந்தார்கள் என்ற செய்திகள் மூலம் கிடைக்கும் மனத்திருப்பி மட்டும்தான்.

ஒரு வாதத்திற்காக, கேட்டுக் கொள்வோம் புலிகள் தோல்வியடைந்த பின்னர்தான் தமிழ் மக்களுக்கான சரியான அரசியலை முன்னெடுக்க முடியும் என்று ஒருவர் சொல்கின்றார். அது என்னமாதிரியான அரசியல்? மார்க்சிய சுலோகங்களை பாராயணம் செய்து கொண்டு அறைகளுக்குள் இருந்து எழுதுவதா? அல்லது தமிழர்களை அழித்தாவது அவர்களது அரசியலை இல்லாமலாக்குவோம் என்று சூளுரைக்கும் சிங்களத் தலைமைகளிடம் போய், பார்த்து ஏதாவது எங்களுக்கும் தாருங்களேன். பெரிதாக ஒன்றும் வேண்டாம் யாழ்ப்பாண நூலகத்திற்கு கொஞ்சம் மார்க்சிய நூல்கள் முடிந்தால் கூடவே கொஞ்சம் பின்நவீனத்துவ நூல்கள் மற்றும் தலித்தியம் பற்றிய நூல்கள் வெளியிடுவதற்கான ஒரு அச்சகம் இவ்வளவும் தந்தால் போதும். இதுவா அந்த சரியான அரசியல். இந்த மடையர்களுக்கு என்னவென்று புரியவைப்பது, இவ்வளவு பலம்பொருந்திய (சரி இப்போது சற்று பலம் குன்றியிருக்கலாம்) விடுதலைப்புலிகள் இருக்கும் போதே தமிழர்களுக்கான ஆகக் குறைந்தளவு தீர்வைப் பற்றியே பேச விரும்பாத, தொடர்ந்தும் தமிழர்களின் பலமையங்களை அழித்துவிட்டால் தீர்வைப் பற்றியே பேச வேண்டிய தேவையிருக்காது என்று கருதும், செயற்படும் சிங்கள மேலாதிக்கம் நீங்கள் முன்வைக்கும் மார்க்சிய சுலோகங்களையா பொருட்படுத்தும்;. அல்லது பூக்கோ தெரிதா என்றெல்லாம் கூறி அதிகார மையங்களை தகர்ப்போம் என்று உரத்துக் கத்துவதையா பொருட்படுத்தப் போகிறது? மீண்டும் சொல்வதென்றால் நண்பர்களே உங்களுக்கு சொல்வதற்கு என்னிடம் பெரிதாக ஒன்றுமில்லை ஒன்றைத் தவிர, ஞாபகத்தில் கொள்ளுங்கள் உங்கள் முகங்களில் வரலாறு காறி உமிழும்.

தமிழர் தேசிய விடுதலை அரசியலுக்கான நியாங்களை வெறும் பாக்கிஸ்தான் பல்குழல் பீரங்கிகளாலும், இந்திய உளவு விமானங்களாலும் அழித்துவிட முடியுமென நம்புவது ஒரு அறிவிலி வாதம். ஆக்கிரமிப்பாளர்கள் சில தற்காலிக வெற்றிகளைப் பெறலாம் ஆனால் அது நிரந்தரமானதல்ல.

‘சண்டைக் களத்தின் போது ஒரு எழுத்தாளன் மக்களின் பக்கம் நிற்பதா அல்ல மக்களை அழுத்திவைக்க முனையும் சக்திகளின் பக்கம் நிற்பதா என்பதை தீர்மானித்தாக வேண்டும். என்னளவில் எனது எழுத்து தர்மம் என்பது நான் நேசிக்கும் எனது மக்களுக்கு விசுவாசமாக இருப்பதுதான். இதற்கு மேல் எனக்கு எந்தவொரு அபரிமிதமான இலக்கொன்றும் கிடையாது”. (கூகி வா தியாங்கோ)

எனது தோளில் ஒரு போதும்

நான் துப்பாக்கி ஏந்தியதில்லை

அதன் விசையை இழுத்ததில்லை.

என்னிடம் இருப்பதெல்லாம்

ஒரு வீணையின் இசைதான்

என் கனவுகளை வரைவதற்கு

ஒரு தூரிகைதான்.

ஒரு மைக்குடுவைதான்.

என்னிடம் இருப்பதொல்லாம்

அசைக்க முடியாத நம்பிக்கைதான்

துன்புற்ற என் மக்கள் மீதான

ஒரு முடிவற்ற காதல்தான்.

தௌபீக் சையத் (-பாலஸ்தீனம்)

நன்றி: http://www.appaaltamil.com/


0 comments:

Post a Comment