Wednesday, September 2, 2009

தமிழ்ப் புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டும் - சண் தவராஜா.

image

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தம் என வர்ணிக்கப்பட்ட யுத்தத்தில் மிகப்பெரிய மனித அவலத்தைச் சந்தித்த சுமார் 3 இலட்சம் மக்கள் இன்று வன்னியின் வதைமுகாம்களில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள்.

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த| கதைக்கு ஒப்பான வகையில் அவரகள் அடைத்து வைக்கப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடைந்தள்ள வேளையிலும் அவர்களின் மீளக் குடியேற்றம் தொடர்பிலான தீர்க்கமான நடவடிக்கை எதனையும் சிங்கள அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. 180 நாட்களுக்குள் அவர்களை மீளக் குடியமர்த்தப் போவதாக அறிவித்திருந்த அரசு, தற்போது அந்த அறிவிப்பிலிருந்து முற்றிலுமாகப் பின்வாங்கியிருக்கின்றது.

'உலகில் யுத்தம் நடந்த இடங்களில் பார்த்திராத அவலத்தை சிறி லங்காவில் கண்டேன்" என ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்ததன் மூலம் யுத்தத்தின் சேதாரங்கள் என்னவென்பதை அவர் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார். இது தவிர, பன்னாட்டு சுதந்திர ஊடகங்களும் அவ்வப்போது யுத்த அவலங்களையும், வன்னித் தடுப்பு முகாம்களில் அப்பாவித் தமிழ் மக்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் தொடர்பிலும் தகவல்களை வெளியிட்டு வந்தன. இந்தத் தகவல்கள் முழுமையானவை அல்ல என்பதை, சிறி லங்கா மனித உரிமைகள் சட்டத்தரணியும், இமடார் நிறுவனத் தலைவியுமான கலாநிதி நிமல்கா பெர்ணாண்டோ அண்மையில் தமிழ்நாட்டில் வைத்துத் தெரிவித்த கருத்துக்கள் உறுதிப் படுத்துகின்றன.

~தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் பேசுகிறோம|; என இதுநாள்வரை கூறி வந்த பல தமிழர்களே, இன்று வாய்மூடி மௌனிகளாக உள்ள நிலையில் தனது உயிருக்கு நிச்சயம் ஆபத்து உள்ளது என்பதை நன்கு தெரிந்து வைத்துக் கொண்டும் கலாநிதி நிமல்கா இவ்வாறு தைரியமாகக் கருத்து வெளியிட்டமைக்காக அவரை நிச்சயமாகப் பாராட்டியே ஆக வேண்டும்.

இலங்கைத் தீவிலே வாழுகின்ற தமிழர்களை சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டுக் கொடுமைப்படுத்தி வருகையில், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகையில், அந்தச் சமூகத்தின் மத்தியிலே இருந்து - எதுவித உள்நோக்கமும் இன்றி - இத்தகைய கருத்துக்கள் வெளிவருவது என்பது ஆறுதலான ஒரு விடயம்.

அதேவேளை, அவர் வெளியிட்ட தகவல்கள் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளன. குறிப்பாக, இளம் தமிழ்ப் பெண்கள் சிங்களப் படையினரின் பாலியல் பசியைத் தீர்க்கப் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தமை கண்ணில் நீரை வரவழைக்கிறது.

யுத்தம் மிகவும் உக்கிரமமாக நடைபெற்ற இவ்வருட ஆரம்பத்தில் 'தமிழ்ப் பெண்களை உங்களுக்கு இரையாக்கிக் கொள்ளுங்கள். ஆண்களை கடலுக்கு இரையாக்குங்கள்" என சிறி லங்காவின் முன்னை நாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்ததாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

இந்தச் செய்தி உண்மையோ, பொய்யோ நாமறியோம். ஆனால், நடைபெறுகின்ற சம்பவங்களைப் பார்க்கும் போது சரத் பொன்சேகாவின் பாதையையே படையினர் பின்பற்றுவது தெரிகின்றது.

வன்னித் தடுப்பு முகாம்களில் நடைபெற்றுவரும் அவலம், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் அந்த மக்களின் துயரம் ஒட்டு மொத்தமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகள் எந்தவொரு மட்டத்திலும் எடுக்கப் படுவதாகத் தெரியவில்லை. மறுபுறம், ஈழத் தமிழர்கள் மத்தியில் இருந்தும் காத்திரமாக குரல் எழுப்பப் படுவதாகவும் தெரியவில்லை.

தடுப்பு முகாம் மக்களின் துயரம் முடிவடையாத சூழலில் பருவமழை வேறு அந்த மக்களை வெகுவாகச் சோதித்து வருகின்றது. மழை காரணமாக உருவான வெள்ளத்தினால் முகாம்களுக்குள் இருக்க முடியாத நிலையில் கொட்டும் மழையிலும் வெட்டவெளியில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கப் பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை.

இந்த வேளையில் ஈழத் தமிழர் மத்தியில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே இந்த மக்களின் விடுதலைக்காகத் தொடர்ச்சியாகக் குரல் தந்து வருகின்றது. இந்தக் குரலுக்கு ஆதரவாக, பின்பலமாக இருக்க வேண்டிய புலம்பெயர் தமிழர்கள் சீரான தலைமை இல்லாத நிலையில் சிதறுண்டுபோய்க் கிடக்கின்றார்கள்.  இந்த நிலை வெகுவிரைவில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

'எங்கள் பகைவர் ஓடி மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே" என்ற வாசகம் இன்று பொய்த்துப் போயுள்ளது. தமிழர்கள் மத்தியலே இன்று முன்னெப்போதையும் விட அதிக அளவிலான பிளவுகளும், பேதங்களும், அவநம்பிக்கையும் நிலவி வருகின்றன.

இதற்கெல்லாம் காரணம் எம் மத்தியிலே சரியான அரசியல் தலைமை இல்லாமையே. தலைமைத்துவ வழிபாடு என்ற அபாயகரமான சிந்தனையின் வழி வளர்க்கப்பட்ட ஈழத் தமிழ்ச் சமூகத்தில், தேசியத் தலைவர் பிரபாகரனின் வெற்றிடம் இன்னமும் நிரப்பப்படவில்லை. அவரைப் போன்ற மற்றுமொரு ஆளுமைமிகு தலைமை இப்போதைக்கு உருவாவதற்கான சாத்தியங்களெதுவும் தென்படவும் இல்லை.

ஆனால், மீகாமன் இல்லாத கப்பல் போன்று தமிழ்ச் சமூகம் தொடர்ந்தும் நீண்ட காலத்துக்குப் பயணிக்க முடியாது. எனவே, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான ஒரு உறுதியான, பலமான, விவேகமான தலைமைத்துவம் அவசரமாகவும், அவசியமாகவும் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதில், தமிழ்ப் புத்திஜீவிகள் குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்பவர்கள் அதிக கவனஞ் செலுத்த வேண்டும்.


Tuesday, September 1, 2009

என் கனவு தேசம்!

image

கல்லறைகளையும்

சாம்பல் மேடுகளையும்

கொண்டே சாத்தியமாக்ப்படும்

என் கனவு தேசமே!

எத்தனை வலியகள் சுமந்தாய்

எத்தனை புயல்கள் கடந்தாய்

எத்தனை ஏமாற்றம் கண்டாய்

எதற்க்கும் சளைக்காத –என்

கனவு தேசமே!

நேற்றைய வேதனையை

வேதமாக்கிய உன்

வேள்விப்புருசர்கள்

நாளை உனை மீட்பர்

நொய்ந்து தினம் சாகும்

கோலத்தமிழினம்

உயந்து கொல்லும் பகை

என் கனவே தேசமே

காணமல் போய் விடாதே!

கருங்காலிகள் பலரின்

குள்ள நரித்தனத்தால்

காட்டிக் கொடுக்கப்பட்ட

என் கனவு தேசமே

கவலை கொள்ளாதே

பிரிவினில் வாடும் காதலர் என

அழுது நீ தவிப்பது புரிகிறது

உன் மகன் என் தலைவர்

அவர் காலடி உன் அடியில்

இருக்கும் வரை

அழுகை வேண்டாம்

என் கனவு தேசமே!

என் கனவு தேசமே

கல்லறையின் விதைப்பு உனக்காய்

காவலரணில் என் தோழனின்

விழிப்பும் உனக்காய் தான்

காத்திரு விழி பூத்திருக்கும்

உன் குழந்தைகள் உனை மீட்பர்.


Friday, July 31, 2009

கறுப்பு ஜீலை 1983 ல் இருந்து மே 2009 வரையில்…

கறுப்பு ஜீலையில் காணமல் போன உறவுகளுக்கு கண்ணீர் வணக்கம் செய்தபடியே நெருப்பு நினைவுகளை அள்ளிவரமுயல்கின்றேன். புகை எழுந்த கொழும்பு மாநகரத்தின் மத்தியில் எரிந்து கொண்டிருந்த தமிழர் வீடுகளும், வணிப நிறுவனங்களுக்கே தமிழர் உடல்களும் வெந்து கொண்டிக்க சிங்களம் எகத்தாளமிட்டு கூச்சலிட்டு கும்மாளம் கொண்டாடியது.

கறுப்பு ஜீலையில் நாம் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்தோம், பல்லாயிரம் பேர் அகதிகளாகி இன்று வரை மாற்றான் தேசங்களின் அலைகின்றனர். அதை விடவும்  பல மில்லியன் கணக்கான சொத்துக்கள் அழிந்து நாசமாய் போனது.

கறுப்பு ஜீலையின் நினைவுகளை ஈழத்தமிழனுக்கு யாருதம் சொல்லித்தர தேவையில்லை என்ற ரீதியில் அதன் வடு ஈழத்தமிழர் வாழ்வியலில் ஒரு அங்கமாகிவிட்டது.

ஜீலை மாதம் 83ம் மூன்றான் ஆண்டின் பின் எழுந்த தமிழர் வரலாற்று எழுச்சியானது தொடர்ந்து அவ்வாறனதொரு கலவரத்தை, சிங்கள் ஆளும் வார்க்கமும் காடையர் கூட்டம் நடாத்த அனுமதிக்கவில்லை. அதற்க்கு சாதகமான சூழல் தென்னிலங்கையிலும் சரி எந்த பிரதேசத்திலும் எழுந்திருக்கவில்லை.

தமிழீழ விடுதலைப்போரின் உச்சக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்ட போதும் அதன் தாக்கம் தென்னிலங்கை தமிழர்களை பாதிக்கவில்லை. அவர்களது அந்த அமைதிக்கு காரணம் சிங்கள இனத்துடனான ஒன்றிணைவு அல்ல. மாறாய் சிங்கள இனத்துக்கும் ஆளும் சமூகத்துக்கும் தமிழர் தலைமை மீது கொண்ட அச்ச உணர்வே.!

இத்தனைக்கு பின்னர் இன்று நாம் நட்டாற்றில் நிற்பதாய் பலரும் நம்ப தலைப்பட்டுள்ளனர். கறுப்பு ஜீலையை நினைவு கூரும் நாம் இன்னோரு கறுப்பு கறைந் படிந்த ஒரு “மே” யையும் நினைவு கூரத்தலைப்பட்டுள்ளோம். தமிழீழ போரின் எழுச்சியை கறுப்பு ஜீலையும் தமிழீழ விடுதலை;  போரின் பின்னடைவை கறுப்பு மே தீர்மானித்திருக்கின்றது.

கறுப்பு ஜீலையில் 2000 வரையிலான தமிழர் கொல்லப்பட்ட போது எமது இனம் பெற்ற எழுச்சியும், அந்த அழிவிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணமும்  மே மாதம் இருபதினாயிரம் போது மக்கள் கொல்லப்பட காரணமான சிங்கள இனவாத அரசின் போருக்கு எதிரான போராடவோ அல்லது அந்த போரின் போது சிதைவடைந்து போன எமது சில கட்டமைப்புகளை சீர் செய்யவோ இந்த மக்கள் தயாராய் இல்லை.

சிதைந்து போன கட்டமைப்புகளை சீர் செய்ய வேண்டிய காலத்தில் சிதைவுகளை மென்மேலும் வளர்ப்பதில் சிங்களத்தின் ஆதரவுக்குழுக்களை விடவும் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கிய கட்டமைப்புக்கள் செயல்ப்படுவது வருந்தத்தக்கது.

கறுப்பு ஜீலையில பிரசவித்த எத்தனையோ கண்மனிகளை விடுதலையின் விலையாய் தாய் மடியின் உரமாய் நாம் இட்ட போதும் விடுதலையை வெறும் அரசியலாய் மட்டும் பார்க்கும் கேவலமானவர்களுடன் நாம் வாழ நிர்பந்திக்கப்ட்டிருப்பது வேதனையான விடயமாகும்.

செய் அல்லது செத்து மடி என்று எம் தலைவன் காட்டிய பாதையில் நடந்த அந்த உன் வீரர்களின் கனவுகளை கலைத்து நம் சுயத்தை வெளிப்படுத்த முனைவோர் கறுப்பு ஜீலை ஒன்றில் கனடா ஓடி வந்தவர்களாகவே இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

கறுப்பு ஜீலையில் எம் தமிழன் சிந்திய குருதி எப்படி எழுச்சியை உண்டாக்கி ஈழ விடுதலையின் வாசலை அடைந்தததோ அவ்வாறு மே மாதம் எம் விடுதலைப் போரை அணைக்க, அழிக்க சிங்கள தேசம் மேற்க்கொண்ட அழிவு நடவடிக்கைகளிலிருந்து நாம் மீண்டும் எழ வேண்டும். நாம் மீண்டிட எமது கட்டமைப்புக்கள் மீண்டும் சரி செய்யப்பட வேண்டும் என்ற ஆவல் எல்லாத் தமிழ் மக்களின் மத்தியிலும் இருக்கத்தான் செய்கின்றது.

அதை தமிழீழ விடுதலை; போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விளையும் பெருந்தகைகள் புரிந்து கொண்டு தமது அடுத்த கட்ட நகர்வுகளுக்கு செல்ல வேண்டும் அல்லது அடுத்த கட்டம் தொடர்பான ஆக்க பூர்வமான செயற்ப்பாடுகளுக்கு வழி விட வேண்டும்

கனடாவிலிருந்து ஆதவன்.


Thursday, July 30, 2009

இடஒதுக்கீடே தேசாபிமானத்தின் ரகசியம் – தந்தை பெரியார்.

image பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஏற்பட்டு சுமார் 15 வருட காலமே ஆகியிருந்தாலுங்கூட, அது ஏற்பட்ட பிறகு இந்த நாட்டுக்கு 100க்கு 97 பேர்களாய் உள்ள நம் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கும், சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கும் எவ்வளவு பயன் அளித்து வந்திருக்கின்றது என்பதை உணர்ந்தால், பார்ப்பனர்களின் சூழ்ச்சியும் அவர்களுக்கு உதவி செய்யும் மூடர்களுடையவும், கூலிகளுடையவும், குலத் துரோகிகளுடையவும், யோக்கியதையும் சிறிதாவது விளங்காமல் போகாது.

தென்னிந்தியாவில் போலிஸ் இலாக்காவிலும், முன்சீப் இலாக்காவிலும் (நிர்வாகம், நீதி என்கின்ற இரண்டு இலாக்காவிலும்) பார்ப்பனர்கள் ஆதிக்கம் இல்லாமல் இருந்திருக்குமானால், நேற்று நடந்த இந்திய சட்டசபைத் தேர்தல்களின் முடிவு இப்படி ஆகியிருக்காது என்பதற்கு அனேக ஆதாரங்கள் காட்ட நம்மால் முடியும். இது ஒருபுறமிருக்க, இந்த நாட்டுக்குப் பழம்பெரும் குடிமக்களாகிய பார்ப்பனரல்லாதார் நிலை இந்த இருபதாம் நூற்றாண்டிலும், சூத்திரராயும் சண்டாளர்களாயும் மதிக்கப்படவே முடியாது. ஆகவே, கப்பலுக்கு சுக்கான் எப்படி முக்கிய கருவியோ அதுபோல மக்களுக்கு மக்களை நடத்துவதற்கு போலிசும், முன்சீப்பும், சுக்கான் மாதிரியாய் இருந்து வருகின்ற அவ்வளவு முக்கியமானவையாகும்.

ஆனால், உத்தியோகம்தான் பெரிதா? தேசம் பெரிதா? என்று பார்ப்பனர்கள் நம்மைப் பார்த்துக் கேள்விகள் கேட்பார்கள்; பார்ப்பனர்களது கூலிகளும், அடிமைகளும் இதற்குப் பின்பாட்டும் பாடுவார்கள். உத்தியோகத்தை மனதில் வைத்தே தேசம், தேசாபிமானம் என்று பார்ப்பனர்கள் போசி வரும் ரகசியம் பார்ப்பனரல்லாத "தேசாபிமானிகள்' பலருக்குத் தெரியாது என்பதோடு, பலர் தெரிந்தும் தங்கள் பிழைப்புக்கு வேறு விதியில்லாமல் பின்பாட்டுப் பாடுகின்றார்கள் என்றே நினைக்கின்றோம்.

இன்று தமிழ் நாட்டிலுள்ள தேசபக்திப் பார்ப்பனர்களை எடுத்துக் கொண்டால், அவர்களது பிள்ளை குட்டிகள், போத்துப் பிதிர்கள் எல்லாம் எதை எதிர்பார்த்து இன்று வாழ்கின்றார்கள் வளர்க்கப்படுகின்றார்கள்? B.A., M.A, B.Com, IAS முதலிய படிப்புகள் படிக்க வைக்கிறார்கள் என்பவைகளைப் பார்த்தால், பார்ப்பனர்கள் தேசாபிமானத்தைப் பிரதானமாகக் கருதுகிறார்களா? அல்லது, உத்தியோகத்தைப் பெரிதாகக் கருதுகின்றார்களா? என்ற சூழ்ச்சி விளங்காமல் போகாது. பார்ப்பனர்கள், சர்க்கார் உத்தியோகத்தை எதிர்பார்க்காமலும் வெறும், புத்திக்காகவும் அறிவுக்காகவும், தேசபக்திக்காகவும் படிக்கின்றார்கள் என்று, இன்று எந்த முட்டாளாவது கருதியிருக்கின்றார்களா என்று கேட்கின்றோம்.

ஆகவே, உத்தியோகத்தையே நம்பி உயிர் வாழும் ஒரு கூட்டம் உத்தியோகத்திலேயே 100க்கு 70, 80, 90 கணக்கில் புகுந்து கொண்டும், நத்திக் கொண்டும் மற்றவர்களை உள்ளே விட ஒட்டாமலும் சூழ்ச்சி செய்து வயிறு பிழைக்கும் ஒரு கூட்டம் அதற்காகவே தங்கள் பிள்ளை குட்டி, போத்துப் பிதிர்களைத் தற்புத்தி செய்து கொண்டு அரசாங்க ஆதிக்கத்தைக் கைப்பற்ற எவ்வித இழி தொழிலையும் கையாளும் ஒரு கூட்டம், "உத்தியோகம் பெரிதா? தேசம் பெரிதா?' என்று உத்தியோகத்தில் 100க்கு 25 போர்கள்கூட இல்லாத நம்மைக் கேட்பதாயிருந்தால், இதில் யோக்கியப் பொறுப்போ, நாணயமோ, கடுகளவாவது இருக்க முடியுமா?

ஜஸ்டிஸ் இயக்கத்தின் பயனாய்ப் பார்ப்பனர்களின் ஏகபோக (உத்தியோக) அனுபவிப்பு குறைந்த பிறகுதான் பார்ப்பனர்கள் உத்தியோகம் வேறு, தேசாபிமானம் வேறு என்று சொல்ல ஆரம்பித்தார்களே தவிர, அதற்கு முன்பு வரை உத்தியோகங்களே தேசாபிமானமாய் இருந்து வந்தது யாரும் அறியாததல்ல. உதாரணமாக, ஜஸ்டிஸ் கட்சி ஏற்படும் வரை, காங்கிரஸ் பிரசிடெண்டுகளும் காரியதரிசிகளும், அய்க்கோர்ட் ஜட்ஜுகளாகவும், நிர்வாக சபை மெம்பர்களாகவும் இருந்து வந்ததே போதுமானதாகும்.

ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன்பு, தீண்டப்படாதார் நிலை எப்படியிருந்தது என்பது, இப்பொழுது கூலிக்கு மாரடிக்கும் பச்சோந்திகளுக்கும் தேசபக்தர்களுக்கும் "அரைடிக்கட்' தேச பக்தர்களுக்கும் தெரியாவிட்டாலும் ஒரு நாற்பது வயதிற்கு மேற்பட்ட பார்ப்பனர் - பார்ப்பனரல்லாத தேசபக்தர் எவரும் அறிந்ததேயாகும். ஆகவே, நமது பார்ப்பனரல்லாதார் சமூகம் அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சாரம் உத்தியோகத்தில் பெறும் வரையிலும் அல்லது பார்ப்பனர்கள் தங்கள் விகிதாச்சாரத்துக்கு மேற்பட்ட விகித உத்தியோகம் தங்களுக்கு வேண்டாம் என்று சொல்லும் வரையிலும் ஜஸ்டிஸ் கட்சி இருந்து தீர வேண்டியதே என்பதே நமது அபிப்பிராயம்.

அது தேசத் துரோகக் கட்சியாக ஆயினும் சரி, சர்க்கார் தாசர்கள் "குலாம்கள்' கட்சியாயினும் சரி, அதனுடைய பிறப்புரிமையைப் பெற்ற பிறகுதான் அது வேறு வேலையில் இறங்க வேண்டுமே தவிர, அதை விட்டுவிட்டுப் பார்ப்பனர்களுக்குப் பயந்து கொண்டு "எங்களுக்கு வகுப்புவாரித் திட்டம் வேண்டியதில்லை, யாரோ ஒருவர் இருவருக்கு மந்திரிப் பதவியோ, பெரிய சர்க்கார் உத்தியோகப் பதவியோ மாத்திரம் இருந்தால் போதும். நாங்களும் பெரிய தேசபக்தர்கள் கூட்டத்தில் சேர்ந்தவர்கள்தாம்' என்றால், அதைவிட ஈனத் துரோகமான கட்சி உலகில் வேறு இல்லையென்றுதான் சொல்லுவோம்.

பகுத்தறிவு' இதழின் தலையங்கம் - 23.12.1934


Tuesday, July 28, 2009

தமிழ்நாட்டுத் தமிழனுக்கு... – நிர்மலா.

அன்று

வணிகக் கப்பல்கள்

வரிசையாய் அணிவகுத்த நின்ற

நம் தென்கடலில்,

இன்று-ltte-tamilan-eelam

நச்சு உலைகள்

நங்கூரமிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன

நீ,

தாராளமாய்த் தாரைவார்த்துக் கொடுத்தத்

தமிழ் மண்ணில்

உன்னையே வேவுபார்க்க

உளவுக்கோபுரம் உயர்ந்து கொண்டிருக்கிறது

இங்கிருந்து

அமைதிப்படை புறப்பட்ட அன்றே

நம் கடல் பகுதியின்

அமைதி குலைக்கப்பட

அங்கீகாரம் வழங்கப்பட்டது.

உனக்கு ஏனோ

புரியாமல் போயிற்று

ஆன்றோர் அறிவுரை

உனக்கு

உறைக்காமல் போனது,

அன்று மட்டுமல்ல-

இன்று வரையிலும் தான்!

தமிழா!

ஈழ இளங்குருத்துக்களின்

குருதிக் கறை படிந்த

"கை"க்கும்

மானங்கெட்டு,

பிச்சைப் பாத்திரத்தினுள் கவிழ்ந்து

உதிக்க மறந்த "சூரியனு"க்கும்

நீ போட்டாயே ஓட்டு,

அவை திரும்பிவரும்...

பகைப்புலங்களின் ஆயுத வீச்சுகளாய்!

செய்தித்தாள்களில் மட்டுமே

நீ -

வாசித்தறிந்த வடபுலத்து யுத்தங்கள்

இன்று நம்

வாசற்கதவைத் தட்டிக் கொண்டிருக்கின்றன.

விண்மீன்களைக் கண்டால் கூட

வீறிட்டு அலறும்

ஈழக் குழந்தைகளின்

அவல அனுபவங்கள்,

நமது தலைமுறைகளுக்கும்

தயாராகிக் கொண்டிருக்கின்றன

நீயோ-

ஒலிம்பிக் விழாவில் சிதறும்

சீனப் பட்டாசுகளைப் பார்த்து

வாய்ப்பிளந்து கொண்டிருக்கிறாய்

ஈழத்திரு மண்ணில் -

பிணம் புதைக்கத் தோண்டப்பட்ட

குழிகளில் கூட

குருதி கொப்பளித்துக்கொண்டிருந்த

அக்கொடூரப் பொழுதுகளில்

நீ

"கவர்"களின் கனத்தக்

கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தாயே...

நினைவில் கொள்!

ஈராயிரம் ஆண்டுகளின் சாரம் ஊறி,

ஆறு பத்தாண்டுகளில் வைரம் ஏறி

உயிர் ஊற்றி வளர்த்திட்ட

ஈழமரம் -

வெட்டப் படுவதற்குக்

கோடாலி வார்க்கப்பட்டது

உனது உலைகளில்!

வெட்டப்பட்ட மரம்

நிச்சயமாய் துளிர்க்கும்;

ஆயிரமாயிரம் -

துவக்குகளாய் உயிர்க்கும்!

இங்கு நீயோ,

உன் வேர்களை வெட்டிக்கொண்டிருக்கிறாய்

எச்சரிக்கை!

நன்றி: http://www.thenseide.com


Saturday, July 25, 2009

சொல்லாமல் போகார் எம் தலைவர்.

தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற ஆய்வுகள் என்னைப் பொறுத்தவரை தேவையற்றவை என்றே நான் கருதுகின்றேன். தமிழ் மக்களை ஒன்றிணைத்து ஒரு மாபெரும் சக்தியாக வளர்த்தெடுத்து, தமிழர் தாயக தேசத்தை எவ்வாறு வென்றெடுக்க வேண்டும் என்பதை தமிழினத்திற்கு தலைவர் மிகத் தெளிவாக கூறிவைத்திருக்கின்றார்.

எனவே, தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற விவாதங்களைத் தவிர்த்துவிட்டு தலைவர் காட்டியுள்ள வழியில் சென்று தாயகத்தை வென் றெடுப்பதே இன்றைய நிலையில் தமிழ் மக்களின் காலப்பணியாக இருக்க வேண்டும்.

ஆனாலும், தங்களது சுய நலன் களுக்காக தலைவரை இந்திய, சிறீலங்கா அரசுகளைவிட பலமுறை தங்கள் அறிக்கைகளில் கொன்றுகொண்டிருக்கும் நம்மவர்களுக்காக இங்கே சில கருத்துக்களை நான் முன்வைக்கலாம் என்ற உணர்விலேயே பால்ராஜ் அண்ணையின் இந்தத் தொடரின் ஊடாக, கடந்த காலங்களில் நிகழ்ந்த சில விடயங்களை எமது மக்களோடு இந்தக் கால நேரத்தில் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

தலைவர் எப்போதும் தன்னை யொரு தலைவராக வைத்துக்கொள்ள விரும்பியதில்லை. ஒரு போராளியாக வாழவே அவர் எப்போதும் விரும்புபவர். ஒரு போராளியாக வாழ்ந்து, ஒரு போராளியாக களமுனையில் எதிரியுடன் மோதி வீரச்சாவைத் தழுவுவதே கெளரவமான சாவு என்று கருதுபவர்.

இதற்கு பல ஆதரங்களை இங்கே முன்வைக்க முடியும். 1987ம் ஆண்டு களில் அனுபவ ரீதியாகக் கண்ட சில விடயங்களை இந்த இடத்தில் ஆதாரமாக வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தலைவர் டில்லியில் அசோகா விடுதியில் தங்க வைக்கப்பட்டி ருந்தார். விடுதலைப் புலிகள் ஆயுதங் களை ஒப்படைக்க வேண்டும் என்பதை அங்குவைத்து இந்திய அதிகாரிகள் தலைவரிடம் எச்சரித்தே கூறியிருந்தனர். வெளியுலக தொடர்புகள் துண்டிக்கப் பட்டிருந்த நிலையில் ஆயுதங்களை ஒப்படைப்பது குறித்து தலைவர் போராளிகளுக்கு அறிவிக்கவேண்டும் என அவர்கள் கூறியிருந்தார்கள்.

ஆனால், அவர்களின் கைகளில் மிகவும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இருந்தபோதும் அங்கு காவலுக்கு நின்ற கறுப்பு பூனைகள் படைப்பிரிவின் ஊடாகவே தலைவர் தாயகத்தில் உள்ள போராளிகளுக்கு ஒரு தகவலை அனுப்பியிருந்தார்.

அந்தத் தகவலில் அவர் மிகத் தெளிவாக ஒரு விடயத்தை சொல்லியிருந்தார். அதாவது,

தான் நேரில் வராமல் யாரும் ஆயுதங்களை ஒப்படைக்கக்கூடாது. அவ்வாறு ஒலி நாடாவில் எனது குரலோ, அல்லது ஒளிநாடாவிலோ நான் கதைத்த பதிவுகளை யாராவது கொண்டுவந்து தந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டாம்.

நான் நேரில் வந்து உங்களிடம் சொல்லும் வரைக்கும் யாரும் ஆயுதங் களை ஒப்படைக்கக்கூடாது. அதனையும் மீறி இந்திய இராணுவத்தினர் வந்தால் தாக்குதலைத் தொடங்குங்கள். அவ்வாறு இந்திய இராணுவத்தினருடன் மோது வதற்கு விருப்பம் இல்லாதவர்கள், ஆயுதங்களை வைத்துவிட்டு போகலாம்"

என்பதையும் இந்தியாவின் முற்றுகைக்குள் இருந்துகொண்டும் தலைவர் உறுதியாக அறிவித்திருந்தார்.

பின்னர், தலைவர் நேரில் வந்து அறிவித்ததன் பின்னரே ஆயுத ஒப்படைப்பு நிகழ்ந்தது என்பது வரலாறு.

இப்படிப்பட்ட தலைவர், எந்த மக்களுக்காக போராடுகின்றாரோ அந்த மக்களுக்கு எந்தவொரு கருத்தையும் நேரிலோ, ஒளிப்பதிவாகவோ சொல்லாமல், முகம் தெரியாத ஒருவரை நீங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவித்துவிட்டு சென்றுள்ளாரா என்பதை இந்தச் சம்பவத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.

நன்றி: ஈழமுரசு.


Sunday, July 19, 2009

காக்கத் தவறினோம்! கழுவாய் தேடுவோம்!! - பழ. நெடுமாறன்.

Nedumaran

உலகெங்கும் வாழும் சுமார் பத்துக் கோடி தமிழர்களில் ஏறத்தாழ ஆறரைக் கோடி தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ் கிறார்கள். எனவே உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தங்களுக்கு இடர் சூழும் போதெல்லாம் அதிலிருந்து மீள தமிழகத்தையே எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய கடமை தமிழகத்திற்கு உண்டு.

மியான்மர் முதல் பிலிப்பைன்ஸ் வரை உள்ள தென்கிழக்கு ஆசிய நாடு கள் எல்லாவற்றிலும் சீனர்கள் பெருந் தொகையாக வாழ்கிறார்கள். அவர்களின் நலனில் செஞ்சீனம் மிகுந்த அக்கறைக் கொண்டிருக்கிறது. எனவே இந்நாடுகளில் அவர்களுக்கு எதிராக சுண்டு விரலை அசைப்பதற்கு கூட மற்ற இனத்தவர்கள் அஞ்சுகிறார்கள்.

உலகத் தமிழர்களுக்கு தான் ஆற்ற வேண்டிய கடமையைத் தமிழகம் செவ்வனே செய்திருக்கிறதா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்வது நல்லது.

இலங்கையில் மிக அண்மையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர் கள் சிங்கள இராணுவ வெறியர்களினால் கொல்லப்பட்டார்கள். அதைத் தடுப்ப தற்குக் குரல் கொடுக்க வேண்டிய தமி ழகம் அந்த கடமையை முழுமையாகச் செய்யவில்லை. இந்த இரங்கத்தக்க நிலை இன்னமும் தொடர்கிறது. கடந்த 26-06-2009 அன்று தமிழகச் சட்ட மன்றத்தில் அ.தி.மு.க மற்றும் ம.தி.மு.க., பா.ம.க. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் சார்பில் கீழ்க்கண்ட தீர்மானம் முன் மொழியப்பட்டது. ‘சர்வதேசச் சட்டம் மற்றும் ஜெனிவா உடன்பாட்டில் உள்ள போர் விதிமுறைகள் ஆகியவற்றை முற்றிலுமாக மீறி அய்ம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர் களை கொன்று குவித்து ஓர் இனப் படு கொலையை இலங்கை அரசு நடத்தி யுள்ளது. இது மனித உரிமையை மீறிய செயலாகும். எனவே இலங்கை அரசின் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டி மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டும்.’

இத்தீர்மானம் எக்கட்சியின் நலன் சார்ந்த தீர்மானமும் அல்ல. ஈழத் தமிழர் நலன் பற்றிய தீர்மானமாகும். கட்சி எல் லைக் கோடுகளுக்கு அப்பால் அனைத் துக் கட்சிகளும் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் சட்டமன்றப் பேரவையின் தலைவர் இத்தீர்மானத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதைத் தள்ளிப் போட் டார். உடனடியாக எடுக்க வேண்டிய இத்தீர்மானத்தை ஒத்தி வைத்ததற்குப் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்பது வெளிப்படையாகும்.

இலட்சக்கணக்கானத் தமிழர் களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்த இலங்கை அரசை சர்வ தேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்த வேண்டியது தமிழனாகப் பிறந்த ஒவ் வொருவரின் கடமையாகும். ஆனால் அந்தக் கடமையை மறந்தும் துறந்தும் செயலாற்றுவது தமிழினத்திற்கு இழைக்கப்படுகிற துரோகமாகும்.

திட்டமிட்ட இனப் படு கொலையை சர்வதேச சமுதாயம் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளது. இரண் டாம் உலகப் போரில் ஏற்பட்ட அத் தனை அழிவுகளுக்கும் காரணமான ஜெர்மானியத் தலைவர்களைப் போர்க் குற்றவாளியாக்கி விசாரணை செய்ய நூரம்பர்க் எனும் நகரில் விசாரணை நீதிமன்றமும் ஜப்பானியப் போர்க் குற்ற வாளிகளை விசாரிக்க டோக்கியோவில் விசாரணை நீதிமன்றமும் அமைக்கப் பட்டன. இந்த நீதிமன்றங்கள் வகுத்த வரைமுறைகளிலும் அய்.நா பேரவை நிறைவேற்றியத் தீர்மானங்களிலும் 1948-ஆம் ஆண்டு இனப் படு கொலையைத் தடுப்பதற்கும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குமான மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர் மானங்களும் இன்று வரையிலும் இப் பிரச்னையில் உலக நாடுகளுக்கு வழி காட்டி வருகின்றன.

இரண்டாம் உலகப் போரின் போது கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ ஒரு கோடியே இருபது இலட்சம் சிலேவிய, யூத இனங்களைச் சேர்ந்த மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவில் வெள்ளை யர் ஆட்சியின் போது கருப்பினத்தைச் சேர்ந்த நீக்ரோ மக்களும் இந்திய மக்களும் இனப் படுகொலைக்கு ஆளானார்கள்.

இஸ்ரேல் ஆக்கிரமித்தப் பகுதி களில் இருந்த எண்ணற்ற அராபிய மக் கள் இனப் படுகொலைக்கு ஆளாயினர்.

வியட்நாமில் அமெரிக்கப் படை யினர் வியட்நாம் மக்களை இனப் படுகொலை செய்தனர்.

சீனா திபெத்திய மக்களைக் கொன்று குவித்தது.

பாகிஸ்தான் கிழக்குப் பாகிஸ் தானைச் சேர்ந்த வங்க இன மக்களை இனப் படுகொலைக்கு ஆளாக்கிற்று.

அதைப் போல இலங்கையில் தமிழ் மக்கள் சிங்கள இராணுவ வெறி யர்களால் திட்டமிட்ட இனப் படு கொலைக்கு தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள்.

உலகின் பல பகுதிகளில் நிலவி வரும் இத்தகைய இனப் படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காகவும் குற்ற வாளிகளைத் தண்டிப்பதற்காகவும் சர்வ தேச நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 1945-ஆம் ஆண்டு அய்.நா இதை அமைத்தது. அய்.நா-வின் பட்டயத்தில் இந்த அமைப்புக் குறித்தும், அதன் அதிகார வரம்புக் குறித்தும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அய். நா பேரவையும் பாதுகாப்புக் குழுவும் கூடி சர்வதேச நீதிமன்றத்திற்குரிய 15 நீதிபதி களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அய். நா-வில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இவர்கள் இருக்க வேண்டும். ஒரே நாட்டைச் சேர்ந்த இருவர் இதில் இடம் பெற முடியாது. இந்த நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹெக் நகரில் இயங்கும்.

1990-ஆம் ஆண்டில் போஸ்னி யாவின் கிழக்குப் பகுதியில் வாழும் சுமார் 40,000-க்கு மேற்பட்ட போஸ்னிய முஸ்லிம்களை போஸ்னியா-செர்பிய இராணுவம் திட்டமிட்ட இனப்படுகொலைச் செய்தது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. யூகோசிலேவியா, செர்பியா ஆகியவற்றின் முன்னாள் அதிபரான சுலோ போடன் மிலோசெவிக் மற்றும் முக்கியமான 30 பேர்கள் மீது இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த இடைக்காலத்தில் மிலோசெவிக் இயற்கையாக மரணம் அடைந்தார்.

2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி சர்வதேச நீதிமன்றம் போஸ்னிய இனப்படுகொலை வழக்கில் திட்டமிட்ட இனப்படுகொலை நடை பெற்றிருக்கிறது எனத் தீர்ப்பு அளித்தது. மேலும் இவ்வழக்கில் பலர் தண்டிக்கப் பட்டனர். சிலர் விடுதலையாயினர்.

1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி அய்.நா பேரவை நிறைவேற்றிய தீர்மானம் எண் 47/121-இன் படி இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையும் இனப் படுகொலையேயாகும். இந்த தீர்மானத்தின்படி போஸ்னியாவில் செர்பி யர்கள் நடத்திய இனப் படுகொலைக் கண்டிக்கப்பட்டது.

2005-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 27-ஆம் தேதி அமெரிக்கப் பிரதிநிதிகள் அவை போஸ்னியாவில் நடெைபற்ற இனப் படுகொலையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.

எனவே அய்.நா பேரவை, அமெ ரிக்க பிரதிநிதிகள் அவை, சர்வதேச நீதிமன்றம் போன்ற அமைப்புகள் இனப் படுகொலையை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளன. அதன் அடிப்படையில் தமிழகச் சட்டமன்றமும் இத்தகைய தீர் மானத்தை நிறைவேற்றுவது இன்றியமை யாததாகும். உற்றார் உறவினர் பெற்றோர் பிள்ளைகள் எல்லோரையும் இழந்து சாவின் விளிம்பில் நின்று தத்தளித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு இத்தகைய தீர்மானம் நம்பிக்கைக் கீற்றாக விளங்கியிருக்கும்.

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களைப் படுகொலைச் செய்த கொலைக்காரக் கும்பலை தமிழகம் ஒரு போதும் மன்னிக்காது. அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்க முயலும் என்பதை நிலை நிறுத்த ஒரே வழி தமிழகச் சட்டமன்றத்தில் இத்த கையத் தீர்மானத்தை நிறைவேற்றுவ தேயாகும். ஆனால் எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலின் விளைவாக பெறும் விவா தம் மட்டும் நடத்தி பிரச்சனையத் திசை திருப்பியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

தி.மு.க தமிழ்நாட்டில் ஆளுங் கட்சி மட்டுமல்ல. மத்திய அரசை ஆளும் காங்கிரசுக் கூட்டணியில் தி.மு.க-வும் இணைப்பிரிக்க முடியாத அங்கமாக விளங்கி வருகிறது. அப்படி இருந்தும் ஒரு இலட்சம் தமிழர்களைக் காப்பாற்ற தி.மு.க தவறிவிட்டது. இதற்கு கழுவாய் தேடும் வகையிலாவது போர்க் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்க வேண்டும். அதையும் செய்ய தி.மு.க. தவறியது வரலாற்றில் என்றும் அழியாத கறையாகும்.

நன்றி: www.thenseide.com