Showing posts with label ஜெகத் கஸ்பர். Show all posts
Showing posts with label ஜெகத் கஸ்பர். Show all posts

Wednesday, September 2, 2009

எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார் – ஜெகத் கஸ்பர்.

ltte leaderமே-17 வரை நந்திக் கடற்கரையில் நின்ற சிவரூபன் தொடர்கிறேன்…

எங்கும் பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத்தோடும், மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன்.

ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோமென்பது புரிந்தது. சுதந்திர வாழ்க்கை முடிந்து போய்விட்ட உணர்வு உடல் முழுதும் பரவியது. களைத்துப் போயிருந்த மனது மேலும் களைத்தது.

வட்டுவாகல் பாலம் பக்கமாய் நடந்தேன். பாலத்தின் இருபுறமுமாய் விரிந்து கிடந்த நீரேரியை பார்த்தேன். தண்ணீர் பரப்பு தெரியவில்லை. எங்கு பார்க்கினும் தமிழரின் பிணங்கள் மிதந்து கொண்டிருந்தன. அனைத்து உடல்களுமே ஆடையின்றிக் கிடந்தன. அநேகம்பேர் எம் குலப் பெண்கள். கொடுமை யை பதிவு செய்யக்கூட என் கண்களால் பார்க்க முடியவில்லை. எனினும் அந்த நீரில் மிதக்கும் பிணங்களூடே என் சொந்த உறவுகள் இருக்கக்கூடுமென்பதால் நின்று பார்த்தேன். பல உடல்களில் நகக்கீறல்களும், கடித்துக் குதறிய காயங்களும் தெரிந்தன.

ஆண்கள் பெரும்பாலோரது உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தன. சுடப்பட்டும், அடித்தும், வெட்டியும் கொல்லப் பட்டிருக்கிறார்களென்பது தெரிந்தது. கரையொதுங்கிய உடல்களில் பசித்த தெரு நாய்கள் பற்கள் பதித்த காட்சியை காணப் பொறுக்கவில்லை. பாலத்தைக் கடந்து அங்கிருந்து இராணுவ முகாம் வாயிலருகே நடந்தோம். “”புலி தனியா பிரிஞ்சு வாங்கோ… பொது மக்கள் தனியா பிரிஞ்சு போங்கோ…” என்று கொச்சைத் தமிழில் சிங்களன் அறிவித்துக் கொண்டிருந்தான். அச்சத்தின் மின்னல் பிடரியில் பாய்ந்தது.

அருகிலிருந்த மக்கள் விரக்தியோடு முணுமுணுத்தார்கள். “”இனி அவன் ஆட்சிதானே… இதுக்குப் பயந்துதானே புலியளோட ஓடி வந்தம்… பல நாட்கள் அணு அணுவாய் சாவதிலும் பார்க்க புலியளோட அங்க நின்டு கௌரவமா செத்திருக்கலாம்…” என்றெல்லாம் பேசிக் கொண்டே பிரிந்தார்கள். என் மனைவி, பிள்ளை உறவுகள் எப்படியேனும் உயிர் தப்பியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் நடந்து கொண்டிருந்தேன்.

இரண்டு பக்க கம்பி வேலிக்கு நடுவே மூன்று லட்சம் மக்கள் ஊர்ந்தோம். கம்பி வேலிக்கு மறுபுறத்தில் இருந்து நாக்கு நனைக்க ஒரு முடறு தண்ணீர் கொடுத் தார்கள். ஐம்பதாயிரம் பேருக்கு எனச் சொல்லப்பட்ட கம்பிவேலி முகாமுக்குள் அத்தனை பேரையும் அடைத் தார்கள். சுற்றிலும் சுடும் நிலையில் ராணுவத்தினர். ஒரு சிலர் தமிழ் கதைத்தார்கள். அவர்களில் ஒருவ னிடம் மெல்லச் சென்று கேட்டேன். “என் உறவுகளைக் காணவில்லை, தேடிப் பார்க்கலாமா?’ என்று.

“”கம்பி வேலிக்குள் மட்டும் தேடிப் பாருங்கள். வெளியே போற வங்களை சுடச் சொல்லி உத்தரவு” என்றான் அவன். தொடர்ந்து பேசிய அவன், “”இவ்வளவு பேரும் எங்க இருந்தீங்கள்… ஐம்பதாயிரம் பேர் என்றுதானே நினைத் தோம்” என்று வியப்பாகக் கேட்டான். நான் சொன்னேன், “”ஐம்பதாயிரம் பேர் வரை செத்துவிட்டார்கள். நாங்கள் பங்கரில் இருந்து தப்பி வாறம்” என்றேன். “பங்கருக்குள் இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள்?’ என்று மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது வேறொரு ராணுவக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள்.

இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட்டத்தினர் மீது கேவலச் சிரிப்புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள்.

தமிழரின் இயலாமை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோது, சில வயது போனவர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக்காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும், “பசிக்குது, ஒரு பார்சல் குடுங்கோ’ என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும், தண்ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந்தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள்.

வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக்குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட “புலிகள்’ என்று கை நீட்டிக் காட்ட ராணுவத் தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனை யோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார்.

ஒன்று,

“நேர்மையானவர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர்களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்” என்பது.

இன்னொன்று “”எதிரிகளைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள்” என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார்.

நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான்.

அந்த இடத்தில், அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள்.

உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரி சோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன். என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால், அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில், வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே-18 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது.

எங்கு கொண்டுபோகிறார்களோ, என்னவெல்லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக் கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத்தினர் சுடும் நிலையில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (Immigration) மற்றும் சுங்கம் (Customs)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது.

இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம் பித்தது. “”புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்”, “”ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்”, “”எல்லைப்படை பயிற்சி எடுத்தவர்களும் பதியவேண்டும்”, “”எங்களுக்கு எல்லாம் தெரியும், பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்” என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின. 1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.

இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து “சதுரங்கம் 1,2,3 (Operation Checkmate) என பெயரிட்டு நின்றபோது மணலாற்றுக் காட்டில் நிலை தடுமாறாது, அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. “உயிரற்ற என் உடலோ, சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது’ என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன்.

போர்க்களத்தில் தன்னையே கொடையாக்கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது.

முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார்.


Tuesday, June 30, 2009

காங்கிரஸ்காரர்களே...! -ஜெகத் கஸ்பர்.

ஜூன் 21, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்க்டிக் பனிக்கண்டத்தில் தமிழ் ஈழ மக்களுக்கு நம்பிக்கை தரும் அரசியல் நிகழ்வொன்று நடந்தது. 300 ஆண்டுகளாய் டென்மார்க் நாட்டின் காலனியாதிக் கத்திலிருந்து விடுதலைபெறப் போராடி வரும் கிரீன்லாந்து தன்னாட்சி உரிமை கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டது. வெகுவிரைவில் முழு விடுதலை சாத்தியப்படும் என்பதும் தெரிகிறது. 22 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கிரீன்லாந்து நாட்டின் மொத்த மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 57,000 பேர். ஒரு லட்சம் குடிமக்கள் கூட இல்லாத கிரீன்லாந்து தனிநாடாக மாறமுடியுமென்றால் தமிழ் ஈழம் எப்படி மலராமல் போய்விடும்?! நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும், நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்.
நாடிழந்து நாடோடிகளாய் ஆன யூதர்கள் 1948-ல் தமக்கென ஓர் தாயகம் அமைக்க ஈராயிரம் ஆண்டுகள் ஆயிற்று. தன்னுரிமை இழந்த அயர்லாந்து இனத்தவர் மீண்டும் தமக்கான குடியரசை 1920-ல் அமைக்க 700 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. தென் அமெரிக்கா வின் அனைத்து நாடுகளுமே தன்னிச்சையாகச் சுதந்திரப் பிரகடனம் செய்துகொண்டு உருவான நாடுகள்தான். பின்லாந்து, எஸ்தோனியா, இந்தோனேஷியா என தன்னிச்சையாகச் சுதந்திரப் பிரகடனம் செய்து உருவான நாடுகள் உலக வரைபடத்தில் பல உண்டு.
உலக வரைபடம் அடித்தல், திருத்தல், புதிய உரு வாக்கல்களுக்கு உள்ளாக்கப்பட முடியாத இறுக்கம் கொண்டதல்ல. கடந்த 50 ஆண்டுகளில் மட்டுமே நாற்பதுக்கும் மேலான புதிய நாடுகள் இப் பூமிப் பந்தில் உருவாகியுள்ளன. தேசிய இனங்களுக்கு அரசியல் சுயநிர்ணய உரிமை உண்டு என்பது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிலைபெற்று நிற்கும் அரசியல் ஒழுங்கு, தேசிய இனமாக இருக்கத் தகுதியுடையோர் யார்? ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில், நீண்ட காலம் பொதுமொழி, பொதுப் பண்பாடு, பொது வாழ்க்கை முறை, பொது வரலாறு ஆகியவற்றைக் கொண்டு வாழும் எந்த ஒரு இனமும் "அரசியல் சுய நிர்ணய உரிமை கொண்ட தேசிய இனம்' என்பதே கோட்பாடு. அந்த அடிப்படையில் தான் ஈழத்தமிழ் மக்களும் ஓர் தனித்துவமான தேசிய இனம், அவர்களுக்கு பிரிந்து போகும் உரிமை உண்டு என வாதிடுகிறோம்.
தேசிய இனங்களின் அரசியல் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டால் இந்தியா பல் வேறு நாடுகளாக சிதறுண்டு போகாதா என்ற கேள்வியை சிலர் கேட்கலாம். உண்மை என்ன வென்றால் ஓர் ஜனநாயகக் கூட்டாட்சியாக, எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும், இந்தியாவின் பயணம் நாம் பெருமை கொள்ளத் தக்கதாவே இருந்து வருகிறது. ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், அழகிரி, ஆ.ராசா இவர்களெல் லாம் வேஷ்டி கட்டிக் கெண்டு கேபினட் அமைச் சர்களாக பாராளுமன்றத்திற்குள் வரும்போது தமிழகமும் இந்திய ஆட்சி அமைப்பில் பங்கேற்கிறது என்ற உணர்வு உண்மையாகவே ஏற்படுகிறது. பணம் படைத்தவர்கள், சில ஜாதிகள், சில மொழி பேசுகிறவர்களின் மேலாதிக்கம் பல்துறைகளிலும் நிலவுகிற போதும் கூட சமூக நீதிக்கான அரசியற் சக்திகள் உறுதியாக இயங்குகின்ற சமூக அரசியற் களத்தினை இந்திய ஜனநாயகம் உறுதி செய்துள் ளது. மாநில சுயாட்சி என்ற கோரிக்கையினை முன்வைக்கிற உரிமையினையும், அதனை அடைவதற்கான வன்முறையற்ற ஜனநாயக வழியிலான நடைமுறைகளையும் இந்திய ஆட்சி அமைப்பு அனுமதித்துள்ளது.
ஆனால் ஸ்ரீலங்கா அவ்வாறானது அல்ல. அது ஒற்றையாட்சி அமைப்பு. தேசிய இனங் களின் கூட்டாட்சிக்கான ஏற்பாடு அரசியல் சட்ட அடிப்படையில் இல்லை. அந்நாட்டின் அரசு மதம் பௌத்தம். இந்து, கிறிஸ்தவ, இஸ் லாமிய மதங்களுக்கு இரண்டாம், மூன்றாம் இடங்கள்தான். அந்நாட்டின் அரசு மொழி சிங்களம். இன்று அந்நாட்டின் ராணுவத்தில் 100% பேர் சிங்களர்கள். தமிழ் மக்களை பல் லாயிரக்கணக்கில் கொன்றழித்து, தமிழீழ தாயக நிலப்பரப் பினை ஆக்கிரமித்து நிற்பது பெயருக்கு ஸ்ரீலங்கா ராணு வம் என்றாலும் உண் மையில் அது சிங்கள ராணுவம். ஸ்ரீலங்கா காவல்துறையில் 96% பேர் சிங்களர்கள். அப்படியானதொரு நாட்டை எப்படி எல்லா மக்களுக்குமான நாடு என்று நாம் கருதமுடியும்?
யாவிற்கும் மேலாய் கடந்த ஜனவரி முதல் மே-18 வரை ஸ்ரீலங்கா சுமார் 4 லட்சம் தமிழ் மக்களை ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் விரட்டிக் கூட்டி முற்றுகையிட்டு நடத்திய கொலைவெறி தாக்குதலும், கடைசி மூன்று நாட்களில் மட்டுமே சுமார் 30,000 தமிழர்களை கொன்றழித்த கொடுமையும், இன்று மூன்று லட்சத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்களை மரண முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் அராஜகமும்- தமிழ் மக்களின் பிரிந்து போகும் உரிமையை அனைத்துலக சட்டங்கள், அரசியற் தார்மீகம், மானுட ஒழுக்கம் என சகல அடிப்படைகளில் நின்றும் உறுதி செய்கிறது.
வவுனியாவிலிருந்து வந்திருக்கிற செய்தி களின்படி அகதி முகாம்களில் இருக்கும் சுமார் 24,000 பேருக்கு அம்மை நோய் கண்டிருக்கிறதாம், 4,000 பேர் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள் ளார்களாம். அடையாளம் தெரியாமல் வாரத்திற்கு சராசரி 60 பிணங்கள் முகாம்களுக்கு வெளியே அழுகிக் கிடக்க நாய்களால் இழுக்கப்படுகிறதாம். மாதத்திற்கு சராசரி நூறு இளம் தமிழ் பெண்கள் அனுராதபுர ராணுவத்தினரின் பாலியல் தேவைகளுக்காக கொண்டு செல்லப்படுகிறார் களாம். நாம் இப்போதும் நம்ப வேண்டுமாம்- விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தின் பிடியிலிருந்து தமிழ்மக்களை விடுவித்து சுபிட்சம் தருவதற்குத்தான் இந்த யுத்தத்தை ஸ்ரீலங்கா நடத்தியதென்று.
இன அழித்தல் யுத்தத்துக்கு ஸ்ரீலங்கா கொடுத்த முழக்கம்: அதாவது மனித குல வரலாற்றி லேயே மிகப்பெரும் எண்ணிக்கையில் கடத்தி வைக்கப்பட்டி ருந்த மக்களை மீட் கும் நடவடிக்கை. இந்தியாவின் சஉபய, பஒஙஊநசஞர, ஈசசலிஒஇச உள்ளிட்ட அத்தனை ஆங்கில ஊடகங்களும் இந்த மோசடி முழக்கத்தை இரவு பகலாய் இந்திய மக்களுக்கு கூவிக் கூவி விற்றன. இவர்கள் மீட்டு வந்த மக்கள் இன்று வதை முகாம் களில் என்ன பாடுபடுகிறார்களென்பதை சென்று எட்டிப் பார்த்து வரச் சொல்லுவோம். ஆனால் அவர்கள் இதனை தெரியாமலொன்றும் செய்யவில்லை என்பதே உண்மை. தெரிந்தே செய்தார்கள். மேற்குறிப்பிட்ட ஆங்கில ஊடகங்கள் இந்தியாவில் எழுந்து வரும் புதியதொரு மேலாதிக்க பாசிசத்தின் முகங்களாகவே பார்க்கப்பட வேண் டும். பர்காதத், ராஜ்தீப், அர்னாப் எல்லோரும் அழகாக ஆங் கிலம் பேசலாம்- ஆனால் அவர்கள் ஆபத்தான அரசியல் வியா பாரிகளும் கூட என்பதை தமிழ் மக்களின் தேசிய உரிமைச் சிக்கலை பயங்கரவாதமாய் விற்ற யுக்திகளில் கண்டோம்.
பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் சஉபய நடத்திய இண்ஞ் எண்ஞ்ட்ற் நிகழ்ச்சி பற்றி நான் முன்பு எழுதியிருந்தேன். அந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பங்கேற்றவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்தி நடராஜன். விவாதத்தின் ஊடே ஒரு கேள்விக்கு அவர் சொன்ன பதில் அவர் மீதான என் தனிப்பட்ட மதிப்பை உயர்த்தியது. நிகழ்ச்சியை நெறி செய்த விக்ரம், ""ஸ்ரீலங்காவில் நடப்பது தமிழ் இன அழித்தல் என்ற குற்றச்சாட்டினை ஒத்துக் கொள் கிறீர்களா?'' என்று கேட்டபோது, ""ஆம், அங்கு நடப் பது இன அழித்தல்தான்'' என்று ஒத்துக் கொண்டார்.
இரு வாரங்களுக்கு முன் கூடிய நடப்பு பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் உரையாற்றிய போது கூட ஜெயந்தி நடராஜன் அவர்கள் அகதி முகாம்களில் வாடும் தமிழ்மக்கள் மீள் குடியமர்வு செய்யப்பட வேண்டிய அவசரத்தையும், நீதியான அரசியற்தீர்வுக்கான தேவையையும் வலியுறுத்தினார். இதனை இங்கு குறிப்பிடக் காரணம் ஈழத் தமிழ் மக்களுக்கு நேர்ந்த இன அழித்தலின் இரத்தப் பழியிலிருந்து காங்கிரஸ் கட்சி தப்பித்துவிட முடியாது. அதேவேளை ஒட்டுமொத்த அழிவி னின்று எஞ்சியிருக்கிற மக்களையேனும் காப்பாற்றி, அவர்களது சுயநிர்ணய உரிமையை உறுதி செய்து, விரும்பினால் அவர்களுக்கு தனிஈழம் அமைத்து தரும் வல்லமையோடு இன்று இருக்கிற ஒரே கட்சியும் காங்கிரஸ் கட்சிதான்.
நாம் யாவரும் நேசித்த ஒரு முன்னாள் பிரதம ரின் இழப்பிற்குப் பழிதீர்க்க வேண்டி இத்துணை கொடுமையான இன அழித்தலுக்குத் துணை நின்றது நியாயமா என்ற தீர்ப்பினை வரலாறு எழுதி விட்டுப் போகட்டும். அதே வேளை எனது அனுபவத்தில் தமி ழகத்தின் காங்கிரஸ் கட்சியினர் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அடிமட்ட தொண்டர்கள் தனி ஈழம் அமைவதையே விரும்புகின்றார்கள். யுத்த நிறுத்தம் கேட்டு தீக்குளித்த தமிழர்களில் காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்தவரும் ஒருவர். கடந்த ஜனவரி மாதம் யுத்த நிறுத்தம் கொணர வேண்டுமென தமிழக காங்கிரஸ் பெரியவர் ஒருவர் எடுத்த நேர்மையான முயற்சிகளையும், அம்முயற்சி வெற்றிபெறாமல் தடுத்த உணர்வாளர்களையும் அறி வேன். வேண்டுதல் என்ன வெனில் இன்றிருக்கும் நிலையில் ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான சில கோரிக்கைகளை தமிழக காங்கிரஸ் வலுவாக தமது தலைமைக்கு வைக்க வேண்டும் என்பதுதான். இலங்கைக்கு இந்தியா வழங்கிய 500 கோடி நிதி உதவியை செயற்படுத்த 20 பேர் கொண்ட குழுவினை ராஜபக்சே அமைத்துள்ளார். அதில் 19 பேர் சிங்களர்கள்- ஒருவர் இஸ்லாமியர். குறைந்தபட்சம் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரைக் கூடவா சேர்த்துக் கொள்ளக் கூடாது? இப்படியான குறைந்தபட்ச கேள்விகளைக் கூட நாம் எழுப்பவில்லை யே என்றுதான் அங்கலாய்ப்பாக இருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் 7-ம் நாள் இலங்கை ராணு வத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் ராஜபக்சே சகோதரர்களின் நெருங்கிய நண்பரான ஜெயசூரியா என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
""அதிகாரப் பகிர்வின் மூலம் இனப் பிரச்சனை உருவாக காரணமாக இருந்த அம்சங்களை இலங்கை அகற்ற வேண்டுமென எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். நான் கேட்கிறேன், எஸ்.எம்.கிருஷ்ணாவே... இறை யாண்மை கொண்ட ஒரு தேசமாகிய எங்களுக்கு அறிவுரை சொல்ல நீ யார்? உனது வேலையை மட்டும் நீ பார். அல்லது ஐ.நா. மனித உரிமை குழுவில் நவிபிள்ளை சூடு பட்டது போல் நீயும் சுருக்கிக் கொள்ள வேண்டிவரும். இந்தியாவே நன்றாகக் கேட்டுக்கொள். எவ்விதமான அதிகாரப் பரவலும் தமிழர்களுக்கு நாங்கள் தரப் போவ தில்லை. அதுமட்டுமல்ல இந்திய மேலாதிக்கத்தின் கடைசி எச்சமான இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத் தையும் தூக்கித் தூர வீசி எங்கள் தேசத்தை உங்கள் மேலாதிக்கத்திலிருந்து தூய்மை செய்வதுதான் எங்கள் இலக்கு. எங்கள் நாட்டை இந்தியாவுடன் இணைக்க வேண்டித்தான் விடுதலைப்புலிகளை நீங்கள் உருவாக்கி னீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அகற்றினோம். எங்கள் நாட்டை கைப்பற்றுவதை விட சந்திரனை உங்கள் நாட்டோடு இணைப்பது எளிதாக இருக்கும்''.
இக்கட்டுரை வெளிவந்தது இலங்கை ராணுவத் தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எழுதியது ராஜபக்சே சகோதரர்களின் நெருங்கிய நண்பர். இவை யெல்லாம் ஏன் அதிகாரத்தில் இருப்போரின் கண்களுக் குப் படவில்லை. இத்துணை கொடுமைகளுக்குப் பின்ன ரும் கூட என்றானாலும் தமிழர்கள்தான் இந்தியா வின் நண்பர்கள் என்பதை இந்தியா உணரும் காலம் ஒருநாள் வரும்.
(நினைவுகள் சுழலும்)