Showing posts with label அரசியல்வாதிகள். Show all posts
Showing posts with label அரசியல்வாதிகள். Show all posts

Wednesday, September 16, 2009

கிராமங்களில் ஜாதித் திமிரை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்? – பெரியார்.

image

சாதி ஒழிப்புத் தொடக்கம் - நடப்பு அதை ஒழிக்க வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் அம்பேத்கர் அவர்கள் நல்லவண்ணம் எழுதியிருக்கிறார்கள். முன்பு வடநாட்டின் பஞ்சாபில் சாதி ஒழிக்க ஓர் இயக்கம் ஏற்பாடு செய்தார்கள். அதைச் சாதி ஒழிக்கும் ஸ்தாபனம் என்று சொன்னார்கள். நன்கு வேலை செய்தார்கள். நம் பத்திரிகைகளை வாங்கி மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். நல்ல பகுத்தறிவுடன் கூடிய கார்ட்டூன்களைப் போட்டார்கள்; அதிலே என்னையும் உபதலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். நன்றாக நடந்து கொண்டிருந்தது. பிறகு பணக்காரர்கள் அதை விலைக்கு வாங்கி விட்டார்கள். அதற்கு உதவி செய்வதாகச் சொல்லி வந்தார்கள், விலைக்கு வாங்கினார்கள். இருந்தாலும், அதன் மூலம் சாதி ஒழிப்பு மாநாடு என்று கூட்டி, தலைமை வகிக்க அம்பேத்கரைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் சம்மதித்தார்கள்.

அவர்கள் அந்த மாநாட்டில் பேச சொற்பொழிவை எழுதினார்கள். அதைக் கண்டதும் ரொம்பத் திடுக்கிட்டு விட்டார்கள். மதம், சாஸ்திரம் ஒழிந்தால்தான் சாதி ஒழியும்; அதிலே ஒன்று இருந்தால் கூட சாதி ஒழியாது என்று சொல்லி இருக்கிறார். “மநு நீதி, சுருதி, மதம் இவற்றை முதலில் நீங்கள் ஒழித்தாக வேண்டும். அதைச் செய்யாமல் சாதியை ஒழிக்க முடியாது; இதுவே எனது உறுதியான அபிப்பிராயம்’ என்று எழுதியிருக்கிறார்கள். இதைப் பார்த்த உடனே அங்கே சாதியை ஒழிக்க வேண்டுமென்ற ஸ்தாபனத்தை ஏற்படுத்தியவர்கள், மத விரோதமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு அவரை அணுகியபோது, அவரும் “என்னைத் தலைமை தாங்கப் போடுவதால் என் கருத்தைச் சொன்னேன்’ என்றார். இந்தக் கருத்தை ஜீரணிக்க முடியாது என்று மாநாட்டினர் சொல்ல, “நீங்கள் வேண்டுமென்றால் இது தப்பு என்று தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளுங்கள்; உங்கள் மாநாட்டிற்குத் தலைமைப் பதவிக்காக என் கருத்துக்கு விரோதமாகப் பேச முடியாது’ என்று சொல்லிவிட்டார். அவர்கள் கெஞ்சியும் முடியவில்லை. அதனால் அவர்கள் அந்த மாநாட்டையே நிறுத்தி விட்டார்கள்.

கிராமங்களில் சாதி ஒழிய வேண்டுமென்றால் கணக்குப் பிள்ளை வேலையைப் பறையனுக்கு கொடுக்க வேண்டும்; மணியம் வேலையைப் பள்ளர், சக்கிலி ஆகியவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கணக்குப் பிள்ளையாகப் பார்ப்பானும் முதலியும், மணியமாகப் பிள்ளையும், கவுண்டனும் இருப்பதால் தான் அங்கே இருந்து சாதி உரிமை தோன்றுகிறது. ஆனதனாலே ஒரு திட்டம் போட வேண்டும். கணக்குப் பிள்ளை, மணியம் வேலைகளை அப்படி ஒதுக்கி வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் எப்படிச் சாதி உணர்ச்சி இருக்கும்? அதேமாதி கான்ஸ்டேபிள், எட்கான்ஸ்டேபிள், சப்இன்ஸ்பெக்டர் வேலைகளையும் பறையனுக்கு, பள்ளனுக்கு, சக்கிலிக்கு கொடுக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால், சமுதாயத்தில் சாதித் திமிர் ஒழிந்துவிடும்.

அப்படிக்கு இல்லாமல் சாதியே ஒழிய வேண்டுமென்று சொல்லும் வார்த்தையில் அர்த்தமில்லை. அவர்களுக்கு இன்று ஜட்ஜ் வேலை கொடுக்க வில்லையா? ஜில்லா கலெக்டர் வேலை கொடுக்க வில்லையா? மந்திரி வேலை கொடுக்கவில்லையா? அதில் எல்லாம் என்ன ஓட்டை கண்டார்கள்? ஏதோ பொறுக்கித் தின்கிற வேலையாக இருந்தாலும், அவர்கள் பொறுக்குவதை இவர்கள் பொறுக்கித் தின்றுவிட்டுப் போகிறார்கள். இதில் என்ன அதிகத் தவறு? சாதி ஒழிய வேண்டுமென்றால் அரசாங்கம் என்ன செய்தால் ஒழியுமோ, அதைத் துணிச்சலோடு செய்ய வேண்டும். கோயில் பூசாரி வேலையைக்கூட பறையனுக்கே கொடுக்க வேண்டும்; எவனாவது சாமி கும்பிட மாட்டேன் என்றால் கும்பிடாமல் போகட்டுமே.

நம் வளர்ச்சியைப் பெருக்க எது வந்தால் ஆகுமோ அதை எடுத்துக் கொள்ள வேண்டும். நம் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் ஒரு மொழி இருக்க வேண்டும். கடவுள் பேசும் மொழி என்று சொன்னால், அதைக் கேட்டு முட்டாளாகவே இருக்கிறானே! இதற்கு என்ன சமாதானம்? நம் உயர்ந்த மேதாவி - புலவன் எல்லாம் இலக்கியப் புராணங்களைப் படித்து முட்டாள்களாகத்தானே இருக்கிறார்கள். ராமாயணப் பிரச்சாரம் செய்கிறார்கள். புலவர்களுக்கு மானம், வெட்கம் கிடையாது. தங்கள் மணிபர்சு நிரம்ப வேண்டும் என்பதுதான். சாதி இருப்புக்குப் புலவர்களே காரணம்.

எந்த இலக்கியத்தை எடுத்துக் கொண்டாலும், கந்தன், ராமன், கிருஷ்ணன் முதலிய கதைகளை எடுத்துக் கொண்டாலும் எதில் சாதி ஒழிந்திருக்கிறது? நாயன்மார்கள், ஆழ்வார்கள், பரமஹம்சர்கள், மகாத்மாக்கள், வெங்காயம் இவர்கள் எல்லாம் இருந்தார்களே! எந்த ஆழ்வார், எந்த நாயன்மார், எந்த மகரிஷி சாதி ஒழிய வேண்டுமென்று சொன்னார்கள்? சாதி ஒழிய வேண்டும் என்று எழுதியதெல்லாம் குப்பைக்குப் போய் விட்டது. சாதி வேண்டும் என்பதெல்லாம் வெளியே தெரிகிறது; பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஆகவே, பகுத்தறிவு பலமடைய வேண்டும். ஆராய்ச்சி, அறிவு என்ன சொல்கிறது? அதற்கு என்ன அவசியம்? இந்தத் தலைமுறைக்கு முற்போக்கு அடைவோமா என்று சிந்தித்துப் பார்த்தால், தானாகவே வந்துவிடும். நான் சொன்னதையெல்லாம் நம்பி விடாதீர்கள். இதெல்லாம் ஒரு மனிதனின் கருத்து. இதையெல்லாம் நீங்கள் சிந்திக்க வேண்டும். அறிவுக்குத் தடையில்லாமல் சிந்திக்க வேண்டும். ஏதோ தோன்றியதெல்லாம் சரி என்று சொல்லவில்லை. இதை நீங்கள் சிந்தித்து விஷயங்களை அறிந்து நான் சொல்லியதில் எது சரி? எது தப்பு? என்று ஆராய்ந்து, எது சரியென்று படுகிறதோ அதைப் பற்றிச் சிந்தியுங்கள். அந்த உணர்ச்சி வந்தால்தான் எடுக்கும் காரியம் வெற்றி பெறும்.

வில்லிவாக்கத்தில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் 11.4.1964ல் ஆற்றிய உரை.


Sunday, September 6, 2009

இழிவைத் துடைத்தெறியும் அரசியல் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை!:பெரியார்.

image இன்று அரசியல் துறையில் நமக்கு என்ன குறை உள்ளது? எழுதப் படிக்கத் தெரியாத, 21 வயது வந்த, தற்குறிகளுக்கு எல்லாம் ஓட்டு அளிக்கப்பட்டு இருக்கின்றது. இவன்கள் எல்லாரும் தமிழ் நாட்டில் மந்திரியாகவும், சட்டசபை மெம்பராக வரவும் உரிமை அளிக்கப்பட்டு இருக்கின்றது. இது மட்டும் அல்ல, இன்று பறையர், சக்கிலிகள் என்று இழிவுபடுத்தப்பட்டவர் எல்லாரும்கூட கலெக்டராக, ஜட்ஜாக, மந்திரியாக வர வாய்ப்பு ஏற்பட்டு இருக்கின்றது. பெண்கள் எல்லாரும் சட்டசபை மெம்பராகலாம், மந்திரியாகலாம். இதைவிட வேறு என்ன வேண்டும்? இவ்வளவு உரிமைகள் இருந்தாலும்கூட, நாம் இவற்றால் எந்தவித நன்மையும் அடையாததோடு தொல்லைகள்தானே அடைந்து வருகிறோம்?

தோழர்களே! 100க்கு 97 நபர்கள் நாம். நாம்தான் இழிமக்களாக, சூத்திரர்களாக, பெரிய உத்தியோகம் பார்க்காதவர்களாக ஆக்கப்பட்டு இருக்கின்றோம். உழுவது, சிரைப்பது, வெளுப்பது, நெய்வது, கக்கூஸ் எடுப்பது முதலிய எல்லா அத்தியாவசியமான தொழிலும் செய்வது நாம்தான். இப்படிப்பட்ட நாம் இழிமக்களாக ஆக்கப்பட்டு இருக்கின்றோம். இந்த நிலை ஏன்? என்னையா! இன்றைய அரசியல் உரிமையைவிட இந்தக் கட்சிக்காரர்கள் வேறு என்ன வேண்டும் என்கின்றார்கள்? கழுதைக்கு, மாட்டுக்கு, குதிரைக்கு ஓட்டு அளிக்க வேண்டும் என்கின்றார்களா?

இந்த நாட்டில் அரசியல் என்பதாக ஒன்று என்றுமே இருந்ததில்லை. புராண காலம் தொட்டு நான் கூறுகின்றேன். எவன், என்ன கொள்கைப் பேரில் மக்களுக்கு நன்மை ஏற்படும் முறையில் ஆட்சி செய்தான் என்று கூற முடியுமா? எல்லாம், அசுரன் ஆள்வதா? தேவர் (பார்ப்பான்) ஆள்வதா? என்ற போட்டிதானே இருந்தது?

அடுத்து, சேரன், சோழன், பாண்டியன், வெங்காயம் என்பவர்கள் ஆண்டதாகக் கூறப்படுகின்றதே! இந்தப் பசங்களாவது மக்களுக்கு என்று ஏதாவது நன்மை ஏற்படும்படி ஆண்டு இருக்கிறார்களா? இந்தப் பசங்கள் வெளிநாட்டுக்குப் போய் வென்றார்கள், அது பண்ணினார்கள், இது பண்ணினார்கள் என்று பெருமை அடித்துக் கொள்கிறார்களே! இந்த ராஜாக்களில் எவனாவது மக்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்று ஒரு பள்ளிக்கூடம் கட்டினார்கள் என்று கூற முடியுமா? இந்த முட்டாள் பசங்கள், பார்ப்பான் படிக்க வேத பாடசாலை, சமஸ்கிருதப் பள்ளிகள் ஏற்படுத்தி, ஓசிச் சோறும் போட ஏற்பாடு செய்து இருப்பார்களே ஒழிய, நமது சமுதாயத்திற்காக என்று எந்த காதொடிந்த ஊசி அளவாவது நன்மை செய்தார்களா?

நான் ஒன்றும் விளையாட்டுக்கு ஆகவோ, இவர்களைத் திட்ட வேண்டும் என்பதற்காவோ இப்படிக் கூறவில்லை. தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர் என்ற ஊர்க் கோயிலில் போய்ப் பார்த்தால் தெரியும். வரகுண பாண்டியன் என்ற ராஜா, தன் மனைவியை, தான் மோட்சம் அடைவதற்காகப் பார்ப்பானுக்கு விட்டுக் கொடுத்தது சித்திரமாக கோயில் சுவரிலேயே தீட்டப்பட்டு இருக்கின்றது! இவனது சிவ பக்தியின் மேலீட்டைப் பற்றிப் பட்டினத்தார் பாடியுள்ள பாடலிலேயே - வரகுண மகாராஜன் தன் மனைவியினைப் பார்ப்பானுக்குக் கொடுத்ததைப் புகழ்ந்து பாடியுள்ளார். இந்தப் பாண்டியன், சேர, சோழர்களை எல்லாம் வென்ற பராக்கிரமசாலி என்று சரித்திரம் கூறுகின்றது. இப்படிப்பட்டவன்தான் இப்படிக் கேவலமாக மானமற்று நடந்து கொண்டான்.

இந்த அரசர்கள் எல்லாரும் பார்ப்பான் சுகவாழ்வு வாழவும், நாம் என்றென்றைக்கும் இழி மக்களாக இருக்கவுமே, மனு (அநீதி) முறைப்படி ஆட்சி செலுத்தி இருக்கின்றனர். இவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது எல்லாம் ‘இவன் மனு முறை தவறாது ஆண்டவன்' என்றும் புகழ்ந்து கூறப்படுகின்றது! அடுத்து நாயக்கனோ, மராட்டியனோ, முஸ்லிமோ ஆட்சி செலுத்தினார்கள் என்றாலும், இவர்களும் மக்களுடைய குறைபாடுகள் மற்றும் தேவைகள் என்ன என்று ஆய்ந்து அதற்காகப் பரிகாரம் தேடியவர்கள் அல்ல. நமது தற்குறி நிலைமையைப் போக்கவும், நம் இழிவுகள் போக்கவும் பாடுபடவே இல்லை. அடுத்து வெள்ளைக்காரன் ஆண்டான். இவனாவது நமது இழி நிலையினைப் போக்கவும், நமது தற்குறித் தன்மையினையும் போக்க வேண்டும் என்ற கருத்தை வைத்து ஆண்டார்களா? இல்லையே!

அடுத்து சுதந்திரம் - வெங்காயம் வந்தது என்று கூறிக் கொண்டார்களே - நடந்ததா? காமராசர் முதலமைச்சர் பதவிக்கு வரும்வரை 10, 12 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்ததே, இவர்களாவது நமது தற்குறித் தன்மையினைப் போக்க முயன்றார்களா? இல்லையே! ஆனால், பார்ப்பான் மட்டும் எந்தக் காலத்திலும் 100க்கு 100 படித்தவர்களாகவே ஆதிக்கக்காரர்களாகவே இருந்து இருக்கின்றனர். எனவே, இந்த நாட்டு மக்களின் குறைபாடுகளைப் போக்க வேண்டும்; இழிவினைத் துடைக்க வேண்டும் என்ற கொள்கையின் பேரில் எந்தக் காலத்திலும் அரசியல் நடைபெறவே இல்லை.

(வட ஆற்காடு மாவட்டம் பேரணாம்பட்டில் 7.4.1961 அன்று ஆற்றிய உரை)


Sunday, July 19, 2009

காக்கத் தவறினோம்! கழுவாய் தேடுவோம்!! - பழ. நெடுமாறன்.

Nedumaran

உலகெங்கும் வாழும் சுமார் பத்துக் கோடி தமிழர்களில் ஏறத்தாழ ஆறரைக் கோடி தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ் கிறார்கள். எனவே உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தங்களுக்கு இடர் சூழும் போதெல்லாம் அதிலிருந்து மீள தமிழகத்தையே எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய கடமை தமிழகத்திற்கு உண்டு.

மியான்மர் முதல் பிலிப்பைன்ஸ் வரை உள்ள தென்கிழக்கு ஆசிய நாடு கள் எல்லாவற்றிலும் சீனர்கள் பெருந் தொகையாக வாழ்கிறார்கள். அவர்களின் நலனில் செஞ்சீனம் மிகுந்த அக்கறைக் கொண்டிருக்கிறது. எனவே இந்நாடுகளில் அவர்களுக்கு எதிராக சுண்டு விரலை அசைப்பதற்கு கூட மற்ற இனத்தவர்கள் அஞ்சுகிறார்கள்.

உலகத் தமிழர்களுக்கு தான் ஆற்ற வேண்டிய கடமையைத் தமிழகம் செவ்வனே செய்திருக்கிறதா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்வது நல்லது.

இலங்கையில் மிக அண்மையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர் கள் சிங்கள இராணுவ வெறியர்களினால் கொல்லப்பட்டார்கள். அதைத் தடுப்ப தற்குக் குரல் கொடுக்க வேண்டிய தமி ழகம் அந்த கடமையை முழுமையாகச் செய்யவில்லை. இந்த இரங்கத்தக்க நிலை இன்னமும் தொடர்கிறது. கடந்த 26-06-2009 அன்று தமிழகச் சட்ட மன்றத்தில் அ.தி.மு.க மற்றும் ம.தி.மு.க., பா.ம.க. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் சார்பில் கீழ்க்கண்ட தீர்மானம் முன் மொழியப்பட்டது. ‘சர்வதேசச் சட்டம் மற்றும் ஜெனிவா உடன்பாட்டில் உள்ள போர் விதிமுறைகள் ஆகியவற்றை முற்றிலுமாக மீறி அய்ம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர் களை கொன்று குவித்து ஓர் இனப் படு கொலையை இலங்கை அரசு நடத்தி யுள்ளது. இது மனித உரிமையை மீறிய செயலாகும். எனவே இலங்கை அரசின் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டி மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டும்.’

இத்தீர்மானம் எக்கட்சியின் நலன் சார்ந்த தீர்மானமும் அல்ல. ஈழத் தமிழர் நலன் பற்றிய தீர்மானமாகும். கட்சி எல் லைக் கோடுகளுக்கு அப்பால் அனைத் துக் கட்சிகளும் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் சட்டமன்றப் பேரவையின் தலைவர் இத்தீர்மானத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதைத் தள்ளிப் போட் டார். உடனடியாக எடுக்க வேண்டிய இத்தீர்மானத்தை ஒத்தி வைத்ததற்குப் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்பது வெளிப்படையாகும்.

இலட்சக்கணக்கானத் தமிழர் களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்த இலங்கை அரசை சர்வ தேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்த வேண்டியது தமிழனாகப் பிறந்த ஒவ் வொருவரின் கடமையாகும். ஆனால் அந்தக் கடமையை மறந்தும் துறந்தும் செயலாற்றுவது தமிழினத்திற்கு இழைக்கப்படுகிற துரோகமாகும்.

திட்டமிட்ட இனப் படு கொலையை சர்வதேச சமுதாயம் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளது. இரண் டாம் உலகப் போரில் ஏற்பட்ட அத் தனை அழிவுகளுக்கும் காரணமான ஜெர்மானியத் தலைவர்களைப் போர்க் குற்றவாளியாக்கி விசாரணை செய்ய நூரம்பர்க் எனும் நகரில் விசாரணை நீதிமன்றமும் ஜப்பானியப் போர்க் குற்ற வாளிகளை விசாரிக்க டோக்கியோவில் விசாரணை நீதிமன்றமும் அமைக்கப் பட்டன. இந்த நீதிமன்றங்கள் வகுத்த வரைமுறைகளிலும் அய்.நா பேரவை நிறைவேற்றியத் தீர்மானங்களிலும் 1948-ஆம் ஆண்டு இனப் படு கொலையைத் தடுப்பதற்கும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குமான மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர் மானங்களும் இன்று வரையிலும் இப் பிரச்னையில் உலக நாடுகளுக்கு வழி காட்டி வருகின்றன.

இரண்டாம் உலகப் போரின் போது கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ ஒரு கோடியே இருபது இலட்சம் சிலேவிய, யூத இனங்களைச் சேர்ந்த மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவில் வெள்ளை யர் ஆட்சியின் போது கருப்பினத்தைச் சேர்ந்த நீக்ரோ மக்களும் இந்திய மக்களும் இனப் படுகொலைக்கு ஆளானார்கள்.

இஸ்ரேல் ஆக்கிரமித்தப் பகுதி களில் இருந்த எண்ணற்ற அராபிய மக் கள் இனப் படுகொலைக்கு ஆளாயினர்.

வியட்நாமில் அமெரிக்கப் படை யினர் வியட்நாம் மக்களை இனப் படுகொலை செய்தனர்.

சீனா திபெத்திய மக்களைக் கொன்று குவித்தது.

பாகிஸ்தான் கிழக்குப் பாகிஸ் தானைச் சேர்ந்த வங்க இன மக்களை இனப் படுகொலைக்கு ஆளாக்கிற்று.

அதைப் போல இலங்கையில் தமிழ் மக்கள் சிங்கள இராணுவ வெறி யர்களால் திட்டமிட்ட இனப் படு கொலைக்கு தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள்.

உலகின் பல பகுதிகளில் நிலவி வரும் இத்தகைய இனப் படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காகவும் குற்ற வாளிகளைத் தண்டிப்பதற்காகவும் சர்வ தேச நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 1945-ஆம் ஆண்டு அய்.நா இதை அமைத்தது. அய்.நா-வின் பட்டயத்தில் இந்த அமைப்புக் குறித்தும், அதன் அதிகார வரம்புக் குறித்தும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அய். நா பேரவையும் பாதுகாப்புக் குழுவும் கூடி சர்வதேச நீதிமன்றத்திற்குரிய 15 நீதிபதி களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அய். நா-வில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இவர்கள் இருக்க வேண்டும். ஒரே நாட்டைச் சேர்ந்த இருவர் இதில் இடம் பெற முடியாது. இந்த நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹெக் நகரில் இயங்கும்.

1990-ஆம் ஆண்டில் போஸ்னி யாவின் கிழக்குப் பகுதியில் வாழும் சுமார் 40,000-க்கு மேற்பட்ட போஸ்னிய முஸ்லிம்களை போஸ்னியா-செர்பிய இராணுவம் திட்டமிட்ட இனப்படுகொலைச் செய்தது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. யூகோசிலேவியா, செர்பியா ஆகியவற்றின் முன்னாள் அதிபரான சுலோ போடன் மிலோசெவிக் மற்றும் முக்கியமான 30 பேர்கள் மீது இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த இடைக்காலத்தில் மிலோசெவிக் இயற்கையாக மரணம் அடைந்தார்.

2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி சர்வதேச நீதிமன்றம் போஸ்னிய இனப்படுகொலை வழக்கில் திட்டமிட்ட இனப்படுகொலை நடை பெற்றிருக்கிறது எனத் தீர்ப்பு அளித்தது. மேலும் இவ்வழக்கில் பலர் தண்டிக்கப் பட்டனர். சிலர் விடுதலையாயினர்.

1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி அய்.நா பேரவை நிறைவேற்றிய தீர்மானம் எண் 47/121-இன் படி இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையும் இனப் படுகொலையேயாகும். இந்த தீர்மானத்தின்படி போஸ்னியாவில் செர்பி யர்கள் நடத்திய இனப் படுகொலைக் கண்டிக்கப்பட்டது.

2005-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 27-ஆம் தேதி அமெரிக்கப் பிரதிநிதிகள் அவை போஸ்னியாவில் நடெைபற்ற இனப் படுகொலையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.

எனவே அய்.நா பேரவை, அமெ ரிக்க பிரதிநிதிகள் அவை, சர்வதேச நீதிமன்றம் போன்ற அமைப்புகள் இனப் படுகொலையை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளன. அதன் அடிப்படையில் தமிழகச் சட்டமன்றமும் இத்தகைய தீர் மானத்தை நிறைவேற்றுவது இன்றியமை யாததாகும். உற்றார் உறவினர் பெற்றோர் பிள்ளைகள் எல்லோரையும் இழந்து சாவின் விளிம்பில் நின்று தத்தளித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு இத்தகைய தீர்மானம் நம்பிக்கைக் கீற்றாக விளங்கியிருக்கும்.

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களைப் படுகொலைச் செய்த கொலைக்காரக் கும்பலை தமிழகம் ஒரு போதும் மன்னிக்காது. அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்க முயலும் என்பதை நிலை நிறுத்த ஒரே வழி தமிழகச் சட்டமன்றத்தில் இத்த கையத் தீர்மானத்தை நிறைவேற்றுவ தேயாகும். ஆனால் எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலின் விளைவாக பெறும் விவா தம் மட்டும் நடத்தி பிரச்சனையத் திசை திருப்பியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

தி.மு.க தமிழ்நாட்டில் ஆளுங் கட்சி மட்டுமல்ல. மத்திய அரசை ஆளும் காங்கிரசுக் கூட்டணியில் தி.மு.க-வும் இணைப்பிரிக்க முடியாத அங்கமாக விளங்கி வருகிறது. அப்படி இருந்தும் ஒரு இலட்சம் தமிழர்களைக் காப்பாற்ற தி.மு.க தவறிவிட்டது. இதற்கு கழுவாய் தேடும் வகையிலாவது போர்க் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்க வேண்டும். அதையும் செய்ய தி.மு.க. தவறியது வரலாற்றில் என்றும் அழியாத கறையாகும்.

நன்றி: www.thenseide.com


Saturday, July 11, 2009

இந்து ராம் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்?

image

சொந்த மண்ணில் அகதிகளாக உறவுகள் இருந்தும் அநாதைகளாக உரிமைகள் இருந்தும் அடிமைகளாக கம்பி வேலிகளாலும் கழுகுப் பார்வை பார்க்கும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களாலும் ஆட்டுமந்தையைப்போல இலங்கையிலுள்ள முகாம்களில் அடைபட்டு அல்லல்படும் ஏறத்தாழ மூன்று லட்சம் பேர்களின் பரிதாப நிலைக்காக நாம் ரத்தக் கண்ணீர் வடிப்பது அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல அவர்களும் மனிதர்கள் என்பதால்தான்.

எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு இனத்திற்கும் இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் அவர்களுக்காகக் குரலெழுப்பவும் அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கவும் நமக்குக் கற்றுத் தந்தவர்கள் அன்னிய நாட்டுப் போராளிகளோ மேதாவிகளோ அல்ல. நமது தேசப்பிதா மகாத்மா காந்தி!

அங்கே அடுத்த வேளைச் சாப்பாடு கிடக்கட்டும் வறண்டுபோன தொண்டையின் தாகம் தீர்க்கத் தண்ணீர்கூடக் கிடைக்காமல் இயற்கையின் அழைப்பை எதிர்கொள்ள இடமில்லாமல் ரணத்தின் வேதனையிலிருந்து நிவாரணம் பெற வைத்திய வசதி பெற முடியாமல் தவிக்கும் மூன்று லட்சம் பேர்களும் ஆறு அகதிகள் முகாமில் அடைந்து கிடக்கிறார்கள். அவர்களது நிலைக்குப் பரிதாபப்படாமல் இந்தியாவிலுள்ள அகதிகள் முகாம்களைவிட நேர்த்தியாகவும் வசதியாகவும் இலங்கை அரசு அந்த முகாம்களை நிர்வகிக்கிறது என்று நற்சான்றிதழ் வழங்கத் தமிழக ஊடகங்களே தயாராகிறதே அதுதான் விசித்திரமாக இருக்கிறது.

மூன்று லட்சம் பேர். ஆறு முகாம்களில் – சுமார் 85000 குடும்பங்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து கையறு நிலையில். இவர்களை செல்வச் செழிப்பான அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளால்கூட வசதியாகப் பராமரிக்க முடியாதே அப்படி இருக்கும்போது இந்த அகதிகளுக்கு உண்ண உணவும் நோய்க்கு மருந்தும் கொடுக்க வழியில்லாமல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் கையேந்தும் இலங்கை அரசு மகிழ்ச்சியாகவும் நேர்த்தியாகவும் முகாம்களில் சகல வசதிகளுடன் பராமரிக்கிறது என்று நற்சான்றிதழ் கொடுப்பவர்கள் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்கள்? யாருக்குத் தூதுவர்களாகச் செயல்படுகிறார்கள்?

பிரபல பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று அவர்கள் மூலம் தனது கபட நாடகங்களுக்கு உலக அரங்கில் அங்கீகாரம் தேடும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதும் அதற்கு நம்மவர்கள் சிலரேகூடத் துணை போகிறார்கள் என்பதும் ஒருபுறம் இருக்கட்டும். அங்கே தமிழ் ஈழ அகதிகள் முகாம்களின் உண்மை நிலைதான் என்ன?

வட இலங்கையில் வவுனியா பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு ஆறு முகாம்களில் கம்பி வேலிகளுக்குள்ளே இந்த அகதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சுற்றிலும் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர் இவர்கள் வெளியில் சென்றுவிடாமல் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 10000-க்கும் அதிகமான தாற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் அதில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள

முறையான கழிப்பறை வசதிகள் கிடையாது. குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் வசதி கிடையாது. வயிறு நிறைய உண்ண உணவு கிடையாது. மருத்துவ வசதியும் முழுமையாகக் கிடையாது. 13000 அகதிகள் இருக்கும் முகாமில் எட்டு மருத்துவர்களும் நான்கு செவிலியர்களும் போராட்ட பூமியிலிருந்து காயங்களுடன் கதறித் துடிக்கும் அகதிகளுக்கு என்னதான் மருத்துவ உதவி அளித்துவிட முடியும்?

உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் என்று ஐக்கிய நாடுகள் சபையால் வர்ணிக்கப்படும் செடிக்குளம் முகாமின் நிலைமை அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறுவது நாமல்ல சரத்நந்த சில்வா என்கிற இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. அவர் மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் சபை செயலர் பான்கி-மூன் இதையே வருத்தப்பட்டுத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை ராணுவத்தைவிடக் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இந்திய ராணுவம் திறமை வாய்ந்தது. இந்திய ராணுவத்தின் உதவியுடன் அடுத்த ஒரே மாதத்தில் கண்ணி வெடிகளை அகற்றவும் அகதிகள் முகாம்களைப் பராமரிக்கவும் இலங்கை அரசு முன்வர வேண்டும். அதற்கு இந்திய அரசு வற்புறுத்தவும் வேண்டும்.

முகாம்களில் அடைந்து கிடப்பவர்கள் அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பாதவரை நாளும் பொழுதும் செத்து மடியும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம்தான் இருக்கும். ராணுவம் முற்றிலுமாக அகன்று பொது நிர்வாகம் செயல்பட்டால்தான் சகஜ வாழ்க்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் திரும்பப் போகிறது. அதற்குப் பிறகுதான் ஈழத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு என்ன என்பதையும் அரசியல் தீர்வு எப்படி அமைய வேண்டும் என்பதையும் யோசிக்க முடியும். இதுதான் யதார்த்த உண்மை.

நீங்கள் நிதி உதவியும் பொருள் உதவியும் தாருங்கள். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்கிற இலங்கை அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு அவதிப்படும் அகதிகளுக்கு உதவ இந்திய அரசு முன்வந்தால் மட்டுமே அவர்கள் வாழ்வில் நம்பிக்கை மலரப் போகிறது. இனியும் நாம் வாளாவிருந்தால் நியாயமல்ல!

நம்மை வழி நடத்துவது “காந்தி’தானே? மகாத்மா காந்திதானே?

- நன்றி தினமணி-


Saturday, July 4, 2009

தமிழனை நசுக்கிய ராஜபக்சே காலுக்கு முத்தமிடச் சொல்லும் கருணாநிதி! - பழ நெடுமாறன்.

neduழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமேயானால் சிங்கள அரசின் மூலமாகதான் அதனைச் செய்ய முடியும். எனவே நம்முடையப் பேச்சால், நம்முடைய நடவடிக்கையால் சிங்களவர்களுடைய கோபத்தை அதிகரிக்கும் வகையில் எதுவும் செய்துவிடக் கூடாது” என முதல்வர் கருணாநிதி தமிழகச் சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார்.

ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை ஈவு இரக்கம் இல்லாமல் படுகொலை செய்த ராஜபக்சவுக்கும் அவருடைய கூட்டத்திற்கும் ஆத்திரமூட்டும் எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடாமல் நடந்து கொள்ள வேண்டும் என தமிழர்களுக்கு கருணாநிதி அறிவுரை வழங்கியிருக்கிறார். அதாவது உதைக்கிற காலுக்கு முத்தமிட வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்.

கன்னடர்களுக்கு கோபமூட்டாமல் காவிரிப் பிரச்னையிலும், மலையாளிகளுக்கு கோபமூட்டாமல் முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் நீக்குப் போக்குடன் கருணாநிதி நடந்து கொண்டதினால்தான் அப்பிரச்சினைகளில் தமிழகம் மிகப்பெரிய இழப்புகளுக்கு ஆளாக நேரிட்டது.

ஈழத் தமிழர் பிரச்சினையிலும் காங்கிரஸ் கட்சிக்கு கோபமூட்டி அதன் விளைவாக தேர்தல் உறவு பாதிக்கப்பட்டு விடக்கூடாதே என்பதற்காக இவர் கையாண்ட அணுகுமுறையின் விளைவாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அது மட்டுமல்ல, “தமிழீழத் தனிநாடு இனி சாத்தியமானது அல்ல.சம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு வேண்டி சிங்களவரிடம் மண்டியிட வேண்டும்” என்றும் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

“கொள்கையைக் கைவிடுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும்.திராவிட நாடு கொள்கையை தி.மு..க. கைவிட்டதற்கு காரணம் கட்சியை ஒழிப்பதற்கு சட்டம் வந்தபோது திராவிட நாடா அல்லது கட்சியா என்ற கேள்வி எழுந்தது.எனவே முதலில் கட்சிதான் வேண்டும் என்று முடிவு எடுத்ததாக”வும் முற்றிலும் உண்மைக்கு மாறான தகவலை கூறியிருக்கிறார்.

பிரிவினை கேட்கும் கட்சிகள் தடை செய்யப்படும் என்ற சட்டம் கொண்டு வரப்படவில்லை.பிரிவினை கேட்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றுதான் சட்டம் கொண்டு வரப்பட்டது.தேர்தலில் போட்டியிட்டு பதவி சுகம் அனுபவிப்பதற்கு இச்சட்டம் தடையாக இருக்கும் என்று கருதியதால்தான் திராவிட நாடு கோரிக்கை குழிதோண்டி புதைக்கப்பட்டது.வரலாற்றுப் பூர்வமான இந்த உண்மையைத் திரித்து பேசுகிறார் கருணாநிதி.

30 ஆண்டு காலம் அறவழியில் சம உரிமைக் கேட்டு ஈழத் தமிழர்கள் போராடினார்கள். எதுவுமே கிடைக்காத காலகட்டத்தில் ஆயுதம் தாங்கிய போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். 15 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் அயல்நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தார்கள்.

தமிழீழப் பகுதி முழுவதிலும் பாதிக்கப்படாத தமிழர் குடும்பமே இல்லை.இவ்வளவு தியாகங்களை ஈழத் தமிழர்கள் செய்த பிறகு அந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தவும் பின்னோக்கித் தள்ளவும் கருணாநிதி முயற்சி செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உலகத்தின் பல நாடுகள் ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்களை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்யும் கட்டத்தில் அவருக்கு வெண்சாமரம் வீசும் வேளையில் தமிழக முதலமைச்சர் ஈடுபட்டிருப்பது வெட்கக் கேடானதாகும். இதன் மூலம் உலக நாடுகள் நடுவில் ஈழத் தமிழர் போராட்டம் குறித்து ஒரு தவறானக் கண்ணோட்டத்தை ஏற்படுத்த அவர் செய்யும் முயற்சி வெற்றி பெறப் போவதில்ல. ஈழத் தமிழரின் மன உறுதி ஒரு போதும் தளரப் போவதில்லை.அவர்களுக்கு ஆதரவாக உலகத் தமிழர்களின் போரட்டங்களும் ஓயப் போவதில்லை, என்று கூறியுள்ளார் நெடுமாறன்.


Friday, July 3, 2009

இனப் படுகொலையை மறைக்கும் ராஜ தந்திரம்.

vanni makkal
ஈழத் தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை நசுக்க, எந்தக் கரிசனமும் இன்றி ஒரு மாபெரும் இனப் படுகொலையை நடத்தி முடித்த சிறிலங்க இன வெறி அரசை, தன்னாட்டு மக்களை பாதுகாக்கும் கடமையை (Responsibility to Protect – R2P) கைதுறந்த காரணத்திற்காக உலக நாடுகள் தண்டிக்க வேண்டும் என்று கோரிவரும் நேரத்தில், அது கடைபிடித்த அரச பயங்கரவாத வழிமுறைகளை நியாயப்படுத்தி, காப்பாற்றிடும் ராஜ தந்திர முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன
ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணும் பாதையை தன்னிச்சையாக முறித்துவிட்டு, இராணுவ ரீதியாக தீர்வு காணும் முடிவுடன், தெற்காசிய நாடுகளின் முழுமையான ஒத்துழைப்புடன் அது நடத்தி முடித்த இனப் படுகொலை, இன்று உலகின் கண்களை தாமதமாகத் திறந்ததினால் உருவான சர்வதேசச் சட்டச் சிக்கலில் இருந்து தன்னை காத்துக் கொள்ளும் முயற்சியில் சிறிலங்க அரசு இறங்கியுள்ளது. அதன் சீரிய முயற்சிகளின் ஒரு அங்கம்தான் சமீபத்தில் ‘பாரம்பரியமிக்க’ ஆங்கில நாளிதழ் ஒன்றில் சிலி நாட்டின் தூதராக இலங்கையில் பணியாற்றிய ஜார்ஜ் ஹீன் என்பவரின் ‘ஆழமான’ கட்டுரையாகும்.
“தங்கள் நாட்டை (சிறிலங்கா) கடந்த 25 ஆண்டுகளாக நாசப்படுத்திவந்த பயங்கரவாதத்தை போரின் மூலம் முடிவிற்கு கொண்டு வந்த சிறிலங்க அரசை பாராட்டுவதற்குப் பதிலாக, அதன் மீது தனது நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பை கைவிட்டதாக குற்றம் சாற்றுவது முறையான செயல் அல்ல” என்று சிறிலங்க அரசை சர்வதேச சட்டங்களின் கீ்ழ் தண்டிக்க முயன்றுவரும் ஐரோப்பிய நாடுகளை குறை கூறியுள்ளார் ஜார்ஜ் ஹீன்.
இனப் படுகொலையை மறைக்க…
இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போரின் (சிறிலங்க அரசு குறிப்பிடும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பதையும் பயன்படுத்துகிறார்) இறுதிகட்டத்தில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் சிறிலங்க‌ப் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது அங்கு சென்று வந்த ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கீ மூன், அவருடைய அலுவலகத் தலைமை அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோராலும், அநதப் படுகொலை நிகழ்த்தப்பட்ட இடத்தை செயற்கைக் கோள் எடுத்த படங்களின் வாயிலாகவும் உறுதி செய்துகொண்ட நிலையிலேயே, தன்னாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை கைவிட்ட குற்றத்தை சிறிலங்க அரசின் மீது உலக நாடுகள் சுமத்தி வருகின்றன.
இதனை தவறென்று வாதாட முற்பட்டு, ராஜபக்ச ஆதரவு ஆங்கில நாளேட்டில் எழுதியுள்ள ஜார்ஜ் ஹீன் (Jorge Hein), தன்னாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பை (Responsibility to Protect) சிறிலங்க அரசு தட்டிக் கழிக்கவில்லை என்று கூறி தனது வாதத்தை துவக்கியிருக்க வேண்டும் அல்லது போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவது தவறு என்றோ அல்லது உறுதிச் செய்யப்படாதது என்றோ கூறி துவக்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் அவர் துவக்கவில்லை. சந்திரிகா குமாரதுங்கா சிறிலங்க பிரதமராக இருந்தபோது அந்நாட்டு அயலுறவு அமைச்சராக இருந்த லக்ஷ்மண் கதிர்காமரின் திறமைகளையெல்லாம் பட்டியலிட்டுவிட்டு, அவர் படுகொலை செய்யப்பட்டதையும், அவ்வளவு துல்லியமாக அவரை படுகொலை செய்யும் திறன் இதுவரை காணாத பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளால் மட்டுமே முடியும் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்படும் விடயம் என்று கூறி ஆரம்பித்து பிரச்சனைக்கு வருகிறார்.
எந்தப் பிரச்சனைக்கு வருகிறார் என்றால், இறுதி கட்ட இனப் படுகொலை நடந்ததா இல்லையா என்பது பற்றியல்ல, மாறாக எப்படிப்பட்டது விடுதலைப் புலிகள் இயக்கம் என்பதை விவரிக்கத் துவங்குகிறார். சிறிலங்க அரசு திட்டமிட்டு, தெற்காசிய நாடுகளின் உதவியுடன் நடத்தி முடித்த இனப் படுகொலையை மறைக்க முற்படும் ஜார்ஜ் ஹீன், உண்மையில் இப்படிப்பட்ட ‘உள்நாட்டுப் போருக்கு’ காரணமான இனப் பிரச்சனையை விவரமாக விளக்கிவிட்டு, அதற்கு அரசியல் ரீதியான தீர்வு காண சிறிலங்க அரசு ‘எடுத்த’ முயற்சிகளையெல்லாம் பட்டியலிட்டுவிட்டு, பிறகு அதிபர் ராஜபக்ச மேற்கொண்ட இராணுவ ரீதியிலான தீர்வுத் திட்டத்தை ஆதரித்து எழுதியிருப்பாரேயானால், அங்கு பணியாற்றிய ராஜ தந்திரியின் கருத்தாக அதனை கருதியிருக்கலாம்.
அவ்வாறு செய்யாமல், ராஜபக்ச அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்கு உதவிய இந்தியா, சீனா, பாகிஸ்தான், இரஷ்யா ஆகிய நாடுகள் என்ன காரணத்தை கூறினவோ அதனையே இவரும் கூறி – பயங்கரவாதத்திற்கு எதிரான போர் – தமிழர்களுக்கு எதிரான போரை நியாயப்படுத்துகிறார்! ஏனெனில் அங்கு விடுதலைக்காக போராடியவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரையிட்டால்தான், அவர்களுக்கு ஆதரவளித்த மக்களையும் ஒட்டுமொத்தமாக துடைத்தொழிப்பதற்கு நியாயம் கற்பிக்க முடியும். இந்த வித்தையை ராஜபக்ச அரசு – குறிப்பாக அந்நாட்டு அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்பய ராஜபக்ச கையாண்டுள்ளார். அதனால்தான், பாதுகாப்பு வலயத்திலிருந்த மருத்துவமனையை இராணுவ இலக்குதான் (legitimate military target) என்று கூறி அதன் மீது சிறிலங்க இராணுவம் குண்டு வீசியதை நியாயப்படுத்தினார்!
எனவே போரில் பாதிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்லது அவர்களுக்கு துணை போனவர்கள் என்று கூறிவிட்டால், அதன்பிறகு ‘உள்நாட்டுப் போரில்’ கொல்லப்பட்டவர்களைப் பற்றி எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாது அல்லவா? அப்படித்தானே இராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும் அமெரிக்காவும் அதன் நேச நாட்டுப் படைகளும் செய்தன! இல்லாவிட்டால் ஈராக்கில் மட்டும் 11,50,000 பேர் கொல்லப்பட்டதற்கு என்ன நியாயம் கூற முடியும்? எனவே அந்த ‘சட்டபூர்வமான’ வழிமுறையை கொண்டு பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதை மறைக்க முயன்றுள்ளார் ஜார்ஜ் ஹீன். நல்ல ராஜ தந்திரி.
கால் நூற்றாண்டிற்கு மேலாக அங்கு நிலவிவருவது அந்நாட்டின் பூர்வீக‌க் குடிகளின் சம உரிமைப் போராட்டத்தின் அடுத்தக் கட்ட வளர்ச்சியான விடுதலைப் போராட்டம் என்பதையும், அதற்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பதற்கு அடுத்தடுத்து வந்த சிறிலங்க அரசுகள் தவறிவிட்டன என்பதையும் மிகச் சாதுர்யமாக மறைத்துள்ளார் ஜார்ஜ் ஹீன்.
தீர்வுத் திட்டத்தை தூக்கி எறிந்த சிறிலங்கா
2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை சிலி நாட்டின் தூதராக ஜார்ஜ் ஹீன் கொழும்புவில் பணியாற்றியுள்ளார்.
இந்த காலகட்டத்தி்ல்தான் இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் பேச்சுவார்த்தைகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், சிறிலங்க அரசிற்கும் இடையே நார்வேயின் அனுசரணையுடன் நடந்துவந்து, அதன் உச்சக் கட்டமாக நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்கு வகை செய்யும் நோக்கில் இடைக்கால சுய நிர்வாக அதிகார அமைப்பை (Interim Self Governing Authority _ ISGA) நிறுவுவதற்கான திட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்க அரசிற்கு அளிக்கிறார்கள்.
தாங்கள் அளித்த தீர்வுத் திட்டத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று புலிகள் வற்புறுத்தவில்லை. மாறாக, இதனை ஒரு அடிப்படையாக்கி இறுதியான அரசியல் தீர்வை உருவாக்க பேச்சுவார்த்தையின் மூலம் முயற்சிப்போம் என்று அறிக்கையும் விடுகிறார்கள்.
இலங்கைத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண தயார் என்று கூறிவந்த சிறிலங்க அரசு, இத்தீர்வு திட்டத்தை ஆராய்ந்து பார்க்கிறோம் என்று கூட சொல்லாமல் கிடப்பில் போட்டது. அமைதிக்கான முன்னெடுப்புகளை ஓரளவிற்கு மேற்கொண்டு வந்த, அப்போது பிரதமராக இருந்த ரனில் விக்கிரசிங்கே அரசின் அதிகாரத்தை பறித்தார் அதிபராக இருந்த சந்திரிகா. இவர் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக அமைதித் தீர்வு காண்பேன் என்று கூறி (1995இல்) தமிழர்களின் பேராதரவுடன் ஆட்சிக்கு வந்தவர். இரண்டு முறை அதிபராக இருந்தார், அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதை விட, அதற்குத் தயாராக இருந்த விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பதற்கான முயற்சிகளை சர்வதேச ரீதியில் மேற்கொண்டார். அதற்குத்தான் இவருக்கு ‘தமிழரான’ லக்ஷ்மண் கதிர்காமர் பெரிதும் உதவினார்.
அவருடைய ராஜ தந்திர திறனைத்தான் ஜார்ஜ் ஹீன் வெகுவாகப் புகழ்ந்து புளங்காகிதம் அடைகிறார். விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று சித்தரிக்க எத்தனையோ காரணங்களை அடுக்கும் ஜார்ஜ் ஹீன், ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லட்டும். உலகில் எந்த பயங்கரவாத இயக்கம் ஒரு விரிவான அரசியல் திட்டத்தை – சர்வதேச சட்ட விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட – திட்டத்தை முன்வைத்தது?
ஒரு மூன்றாம் நாட்டின் அனுசரணையுடன் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில், தங்களை இன ரீதியாக ஒடுக்கிவரும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய பயங்கரவாத இயக்கம் எது?
விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக ஒழித்துக்கட்டுவதே தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு தரும் என்று கூறி கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை கொன்று குவித்ததே சிறிலங்க இராணுவம், அதற்கு எதிராக போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம் பதிலடி கொடுத்து பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரை கொன்றது, காயப்படுத்தியது. ஆனால், அவர்களால் கொல்லப்பட்ட சிப்பாய் அல்லாத சிங்களவர் யாராவது உண்டா? அப்படி ஒரு செய்தியை இப்படிபட்ட ராஜ தந்திர புலிகளால் காட்ட முடியுமா? ஒரு சிங்களப் பெண் கற்பழிக்கப்பட்டார் என்று கூற முடியுமா?
இரண்டரை ஆண்டுகளாக நடந்த இந்தப் போரில் சிறிலங்க இராணுவ இலக்குகளை குறிவைத்து 6 முறை விமான தாக்குதல் நடத்தினார்களே விடுதலைப் புலிகள், அதில் ஒன்றாவது சிங்கள மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்டதா?
ஆனால், பாதுகாப்பு வலயம் என்று அறிவித்து அங்கு அப்பாவி மக்களை வரவழைத்து, அவர்கள் அங்கு தஞ்சமடைந்த பிறகு, அங்கிருக்கும் மருத்துவமனை, சிறுவர்கள் கூடம் என்று குறிவைத்து தாக்குதல் நடத்தியதே சிறிலங்க இராணுவம்? அது அரச பயங்கரவாதமல்லாவா? சொந்த நாட்டு மக்களை பாதுகாத்திட வேண்டும் என்ற கடமையில் இருந்த வழுவிய குற்றமாகதா இது? இது சிறிலங்க அரசின் அரச பயங்கரவாத நடவடிக்கையா இல்லையா?
சிறுவர்களை தங்கள் படைகளில் சேர்த்த குற்றங்களைச் செய்த பயங்கரவாத இயக்கம் என்கிறார். தமிழ் சிறுவர்களையும், சிறுமிகளையும் சிறிலங்க இராணுவத்தினர் உச்சி மோந்து அன்பு காட்டினரோ? இப்பொழுது கூட, சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் இளம் வயதினர் ஒவ்வொரு நாளும் கடத்தி பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகின்றனரே? சிறுவர்கள் கடத்திச் செல்லப்படுகின்றனரே? படிக்கச் சென்ற சிறுவர்கள், சிறுமிகள் மீது இப்படிப்பட்ட அரச பயங்கரவாதம்தானே 1974 முதல் சிறிலங்க அரச படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்டது? மறுக்க முடியுமா? புகைப்படங்களும், ‌வீடியோ காட்சிகளும் இந்தக் கதைகளைத் தானே இன்றுவரை பேசுகின்றன.
கொழும்பு நகரில் சிறிலங்க நாடாளுமன்றத்திற்கு முன்னால் சம உரிமை கேட்டு சாத்வீக வழியில் போராடிய தமிழர் தலைவர் செல்வநாயகம் உள்ளிட்டோர் மீது சிறிலங்க காவலர்களும், காடையர்களும் தாக்குதல் நடத்தவில்லையா? அமைதியாக கூடி தமிழ் மாநாடு நடத்திய மக்கள் மீது காவல் துறையினரே வன்முறை செய்து 9 பேரைக் கொல்லவில்லையா?
இதையெல்லாம் பார்த்தப் பிறகுதானே உருவானது ஆயுதப் போராட்டம்? சும்மாவா சுட்டார்கள் ஆல்பிரட் துரையப்பாவை? இந்த வரலாற்றையெல்லாம் கவனமாக மறைத்துவிட்டு (மூன்றாண்டுக் காலம் கொழும்புவில் பணியாற்றியவருக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்), தனது நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக எழுந்த பிரிவினைப் போராட்டத்தை ஒடுக்க அந்நாட்டு அரசிற்கு சட்டப்பூர்வமான சுய காப்பு உரிமை உள்ளது என்று கூறுகிறார் ஜார்ஜ் ஹீன்! தனது எழுத்தோவியத்தை முடிக்கும் போது தமிழர்களின் சட்டப்பூர்வமான குறைகளை நிறைவேற்ற சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்றும் கூறுகிறார்! என்னே முர‌ண்பாடு! Legitimate Grievances of the minority Tamils என்பதை ஒப்புக் கொள்ளும் இந்த ராஜ தந்திரி, அது என்ன? எவ்வாறு உருவானது? அதற்கான தோற்றவாய் எது? உருவான காலம் எது? எப்படி பெரிதானது? அது ஆயுதப் போராட்டமாக உருவெடுக்கக் காரணம் என்ன? என்பதை நியாயமாக ஆராய்ந்திருப்பாரெனில் யார் பயங்கரவாதி என்பதும், அரச பயங்கரவாதம் எது என்பதும் தெளிவாகியிருக்கும் இவர் எழுத்தை படிப்பவர்க்கு.
தங்களை தனது முழு சக்தியையும் கொண்டு ஒடுக்கும் வலிமை வாய்ந்த எதிரியை வீழத்த ஆயுத வலிமையை ஏற்பதும், தங்கள் இன்னுயிரை ஈந்து தம்மக்களை அப்படிப்பட்ட கொடுமையிலிருந்தும் காப்பதுதான் தற்கொலைத் தாக்குதல். கொடுமையான எதிரியை ஒழித்துவிட்டு, அவனின் படையிடம் சிக்காமல் தங்களையே அழித்துக் கொள்வதும், தங்களையே கருவியாக்கி, தமது இனத்தை அழிக்கும் எதிரிகளை அழிப்பதும் நாகரீக மானுடத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட போராட்ட வழிமுறைகள்தான். இது தவறென்றால் நாம் வாஞ்சிநாதனையும், உத்தம் சிங்கையும் கொண்டாட முடியாது. பகத் சிங்கை நமது நாட்டின் பெருமையாக கருதி சிறப்பு தபால் தலையையும் வெளியிட முடியாது. ஒரு இனத்தின் மீட்சிக்காக தங்களையே தியாகம் செய்வோரை எப்படி அழைப்பது என்பது அந்த இனத்தின் உரிமை. அதே நேரத்தில் அரச பயங்கரவாதத்தை சகித்துக் கொண்டு, ஏதோ ஒரு அரசியல் தீர்வை ஏற்றுக் கொண்டு, அமைதி காத்து வாழ் என்று கூறுவதற்கு உலகிற்கு உரிமை கிடையாது.
ஈழத் தமிழினத்தின் போராட்டத்திற்கான அடிப்படையை விளங்கிக் கொள்ள வேண்டும், அதன் மீது தீர்வை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் தங்களுடைய போராட்டத்திற்கான தீர்வு எது என்பதை இறுதியாக தீர்மானிக்கும் பொறுப்பு அந்த மக்களுக்கு மட்டுமே உரியது.
இதனை உணர்ந்து கொண்டவர்கள் மனிதாபிமானிகள் – அவர்கள் ராஜ தந்திரிகளாக இருந்தாலும் – சிறிலங்க அரசு நடத்தி முடித்த போரில் பல பத்தாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் உயிர்களுக்காக அந்நாட்டு அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறுவார்கள். த‌ங்களுடைய ராஜ ‌வி‌சுவாச‌த்தை‌க் கா‌ட்ட ‌விரு‌ம்புவோ‌ர் எழு‌தினா‌ல் மட்டுமே உண்மையையும், நியாயத்தையும் மறைத்து ராஜ தந்திர நியாயம் கற்பிக்க முடியும்.
- இணைய உலகம்.
நன்றி: http://www.nerudal.com


தமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்கள தேசியம் – தொல்காப்பியன்.

 

NILAVARAMஇராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே – வடக்கும் கிழக்கும் தமிழரின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் ஒரு தேசிய இனம், தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை உள்ளது ஆகிய விடயங்கள் தான்.
தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைத்து, அவர்களின் தனித்துவமான தேசிய அடையாளங்களை அழிப்பதன் மூலம் தன்னாட்சி உரிமைக்கான எழுச்சியையும் கோரிக்கையையும் பலவீனப்படுத்துவது தான் சிங்களத்தின் நாசகாரத் திட்டம். தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் சிதைத்துள்ள நிலையில் – எதிர்காலத்தில் புலிகளின் எச்சங்களே நாட்டில் இருக்காத வகையில் – சிங்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அடுத்த கட்டமாக ‘ஈழம்’ என்ற வார்த்தையையே இல்லாமல் செய்வதற்கு சிங்கள அரசாங்கம் குறிவைத்தி;ருக்கிறது. ஈழம், தமிழ், முஸ்லிம் போன்ற வார்த்தைகளை கொண்ட கட்சிகளின் பெயர்களைத் தடைசெய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
இது எதிர்காலத்தில் ‘ஈழம்’ என்ற பெயரிலோ, அல்லது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தனித்துவமான கட்சிகள் – அமைப்புகள் இயங்குவதை, தோன்றுவதை முழுமையாகத் தடைசெய்ய எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.
தேர்தல் திணைக்களத்தின் ஊடாக அரசியல் கட்சிகளின் பெயர்களை மாற்றியமைக்கக் கொடுக்கப் படுகின்ற நிர்ப்பந்தமானது – தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கு சிங்களத்தின் மீது அரசாங்கம் கொண்டிருக்கின்ற கரிசனையையே பிரதிபலிக்கின்றது. இதைச் செய்து விட்டால் நாட்டில் ஒருமைப்பாடு வந்து விடும், பிரிவினை ஏற்படாது என்று கருதுகிறது இலங்கை அரசு.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் தற்போது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகள் எதுவுமே இப்போதைய பெயர்களில் இயங்க முடியாது. இனம் ஒன்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் அல்லது பிரதேசம் ஒன்றின் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் செயற்படக் கூடாதென்று அரசாங்கம் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம் எந்தவகையிலும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி விடமுடியாது.
கட்டாயமாக – நிர்ப்பந்தத்தின் பேரில் செய்யப்படும் இத்தகைய எந்த நடவடிக்கையுமே சிறுபான்மை மக்களிடத்தில் இன்னும் அதிகமான வெறுப்பையும் பிரிந்து போகும் எண்ணத்தையுமே ஏற்படுத்தும். சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது எத்தகைய நிலையை ஏற்படுத்தியது என்பதை இலங்கை அரசு இன்னமும் புரிந்து கொள்ளவில்லைப் போலும். ஆனால், சிங்கள அரசின் நோக்கம் பிரிவினையைத் தடுப்பதோ ஒருமைப்பாட்டைப் பேணுவதோ அல்ல.
அதன் ஒரே நோக்கம் சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து இனங்களையும், அனைத்து மொழி பேசும் மக்களையும் உள்வாங்கிக் கொள்வது தான். பயங்கரவாதம் என்ற போர்வையில் தமிழர்களின் காப்பரணான விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட பின்னர் நடத்திய விழாவில் பேசிய மகிந்த ராஜபக்ஸ – இனிமேல் நாட்டில் சிறுபான்மை இனங்கள் என்று எதுவுமில்லை என்று கூறியிருந்ததை மறந்து விடக்கூடாது.
அதாவது அனைத்து இனங்களையும் சிங்களத்துக்குள் உள்வாங்கி;க் கொள்வது தான் அவரது திட்டம். இது சாத்தியமானால் – தமிழ்த் தேசியமே இல்லாமல் போய், அனைவரும் சிங்களத் தேசியத்துக்குள் சிக்கிக் கொள்ள நேரிடும். இப்படியான நிலையில் இருந்து தனித்துவமான வகையில் தமிழ்த் தேசிய இனத்தால் போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படும்.
இலங்கைத் தேசியம் அல்லது சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து மக்களையும் உள்வாங்கிக் கொண்டு தமி;ழ்த் தேசியத்தையும் முஸ்லிம் தேசியத்தையும் இல்லாது அழித்து விடுவதே அவர்களின் நோக்கம்.
இது வெறுமனே  மகிந்தவின் கனவு மட்டுமல்ல. ஐ.தே.க.வின் எண்ணமும் கூட. போர் முடிந்த சில நாட்களின் பின்னர் ஐ.தே.க.வின் தரப்பில் இருந்து இதுபோன்றதொரு கருத்து முன்வைக்கப் பட்டிருந்ததை மறந்து விட முடியாது. ஈழம் என்பது அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கப் படவில்லை. இன்னமும் ஈழம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் இயங்குகின்றன. அனைத்;துத் தமிழ்க் கட்சிகளினது பெயர்களிலும் ஈழம் என்பது இருக்கிறது. எனவே, ஈழம் என்பதை அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்க வேண்டும் என்று கூறியிருந்தது ஐ.தே.க.
இது, இலங்கையின் இரு பெரும் சிங்களக் கட்சிகளினதும் பேரினவாதச் சிந்தனைகள் ஒன்றுபட்டிருப்பதை வெளிப்படுத்தும் விடயமாகும். தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து சிங்களத் தேசியத்துக்குள் தமிழ் மக்களின் வாழ்வை அடிமைப்படுத்துவதே சிங்களத்தின் திட்டம்.
புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை உருவாக்கினார். ஆனால், பின்னர் கருணாவைத் தனித்து இயங்க சிங்களத் தேசியம் விடவில்லை. வளைத்துப் போட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்கிக் கொண்டது. பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பெயரை மாற்றும்படி மகிந்தவும் அவரது சகோதரர்களும் கருணாவும் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்தனர்.
ஆனால், அது சாத்தியமற்றதாகிப் போக, அந்தக் கட்சியையே இல்லாதொழிக்கும் வகையில் ஒவ்வொருவராக சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்குள் கொண்டு வரும் இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தில் பிள்ளையானும் சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்கப்படுவார். இது தான் சிங்களத் தேசியத்தின் சதி.
கிழக்கில் மோசடிகளின் மூலமும், கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொண்ட கட்சிகளின் முதுகில் சவாரி செய்தும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. வெற்றிலையின் கீழ் பிராந்தியக் கட்சிகளைப் போட்டியிட வைத்து கிழக்கில் வெற்றி பெற்றது போன்று – வடக்கிலும் அழுத்தங்களைக் கொடுத்து தமிழ்க் கட்சிகளை அதேபோன்று போட்டியிட வைத்திருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ.
அரசாங்கத்தின் நிர்ப்பந்தங்களால், வடக்கில் ஈ.பி.டி.பி., சிறி ரெலோ, ஈரோஸ் போன்ற கட்சிகள் வெற்றிலைச் சின்னத்துக்குள் உள்வாங்கப் பட்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றிலையை வெற்றி பெறவைத்து தமிழ்த் தேசியம் சிதைக்கப்பட்டு விட்டது – சிங்களத் தேசியமே வடக்கிலும் கிழக்கிலும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை சிங்கள மக்களுக்கும், வெளியுலகுக்கும் பிரகடனம் செய்வது தான் மகிந்தவின் திட்டம்.
வடக்கே பருத்தித்துறை தொடக்கம் தெற்கே தெய்வேந்திர முனை வரைக்கும் ஒரே கொடி -சிங்கக்கொடி தான் பறக்கிறது என்று கூறிப் பெருமைப்பட்ட சிங்களத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையே இது.
வடக்கில் யாழப்பாணத்தில் இருந்து தெற்கே தங்காலை வரைக்கும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி தான் ஆட்சி செய்கிறது என்ற சிங்களத் தேசியத்தை உசுப்பிவிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மகிந்தவின் அரசு. சிங்களத் தேசியத்தின் இந்த இரகசியச் சதிக்கு தமிழ் அரசியல் சக்திகள், ஊடகங்கள் பலவும் பலியாகிக் கொண்டிருப்பது தான் வேதனையான விடயம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகப் பலமமாக இருக்கும் வரைக்கும் அவர்களோடு இருந்து – அவர்களின் பின்னணியில் இயங்கிய இந்தச் சக்திகள் இப்போது சிங்களத் தேசியத்துக்கு வால் பிடிக்க முற்படுவது தான் வேடிக்கை.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவசரகாலச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். காரணம் கேட்டால், இடம்பெயர்ந்த வன்னி மக்களை குடியமர்த்த அரசின் உதவி தேவையாம். அதற்காகவே எதிர்க்கவில்லை என்று சப்பை நியாயம் சொல்கிறார்.
அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தித் தான் இலங்கை அரசு மூன்று இலட்சம் மக்களையும் ஆடு, மாடுகளைப் பட்டியில் அடைப்பது போன்று – முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கிறது என்பது அவருக்குத் தெரியாதா என்ன?
இதே அவசரகாலச் சட்டம் தான் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வுக்குத் தடையாக இருக்கிறதென்று புரியாதா என்ன?
ஆனாலும் இப்படியொரு நியாயத்தைச் சொல்லித் தப்பிக்க முனைகிறார் என்றால் தமிழ்த் தேசியம் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா அவர்?
அதைவிட மோசமானது – தந்தை செல்வாவும், பிரபாகரனும் தமிழ்த் தேசியத்துக்காகப் போராடி தோற்றுப் போனவர்களாம் – இனியும் தமிழ்த் தேசியம் பேசிப் பயனில்லை என்று கொச்சைப் படுத்துகிறார்.
அரசுக்குக் கால் பிடிப்பதும் வால் பிடிப்பதும் தான் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் என்று புதிய வழிகாட்ட முனையும் இவர்களெல்லாம் எப்படித் தலையெடுத்தார்கள் என்று ஒருமுறை திரும்பிப் பார்க்கட்டும்.
அதைவிட தமிழ்த் தேசியத்துக்காகப் போராடி மடிந்தவர்கள் எல்லாம் மடையர்கள் போன்று குறிப்பிடும் அவர் ஒரு முறை சிங்களத் தேசியத்துக்கு கால் பிடித்து விட்டவர்களால் என்னத்தைக் கிழிக்க முடிந்ததென்று ஒரு கணம் நினைத்துப் பார்க்கட்டும்.
சிங்களத்துக்குக் கால் பிடிப்பவர்களால் – ஒரே ஒரு நிமிடம் மட்டும்,  அகதி முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் மக்களை வெளியே கொண்டு வந்து விட முடியுமா?
அதையே செய்ய முடியாதவர்கள் – தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப் படுத்திக் கொண்டு –அரசுக்குப் பின்னால் நிற்கப் போகிறார்களாம். கூரையில் ஏறியே கோழி பிடிக்க முடியாதவர்கள் வானத்தில் ஏறி வைகுண்டம் போகப் போகிறார்களாம். இவர்களையெல்லாம் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்ததற்காக யாரை நோக முடியும்?
சிங்களத் தேசியத்துக்குள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கி;க் கொண்டு தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கின்ற சதி இப்போது உச்சகட்டமாக நடந்து கொண்டிருக்கிறது.
வடக்கில் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கைகள் தெற்கில் வலுப்பெறுகின்றன. கலப்புக் கிராமங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் சிங்களத்தின் காவலர்கள்.
வடக்கில் மீள்குடியமர்வுக்கு முன்னதாக அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை கண்டறியும் புதைபொருள் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார்கள். இவையெல்லாம் வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களின் மரபுவழித் தாயகம் அல்ல என்று காண்பிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளே.
முப்பதாண்டுப் போரின் பின்பாதிக் காலத்தில் தமிழ் மக்களின் பலம்மிக்க தலைமைச் சக்தியாக விளங்கும் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் தமிழ்த் தேசியத்தை வரலாற்று ரீதியாக அழிக்கின்ற முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை.
இந்த இடைவெளியை நிரப்பி சிங்களத் தேசியமே இலங்கைத்தீவு முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது என்று உறுதி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியம் சற்று உறங்கிப் போனாலும் அதை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டு போய்விடும் சிங்களம்.
இதனைத் தடுப்பதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒரே குரலாக ஒலிப்பது அவசியம். எம்மிடையே உள்ள வேறுபாடுகள் பலவீனங்களைக் களைந்து ஒரே குரலாக ஒலிப்பது தான் தமிழ்த் தேசியத்தை காப்பாற்ற தமிழீழத் தேசியத்துக்காகப் போராடிய, களமாடிய மாவீர்களின் கனவுக்கு கொடுக்கும் மரியாதையாக அமையும்.
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில்  எறிவதுண்டோ …..?
நன்றி: http://www.nerudal.com/


ஈழத் தமிழர்கள் போராட்டத்தினை கொச்சைப்படுத்துகிறார் தமிழ்நாடு முதல்வர்: பழ.நெடுமாறன்.

Nedumaranதமிழீழப் பகுதி முழுவதிலும் பாதிக்கப்படாத தமிழர் குடும்பமே இல்லை. இவ்வளவு தியாகங்களை ஈழத் தமிழர்கள் செய்த பிறகு அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் பின்னோக்கித் தள்ளவும் கருணாநிதி முயற்சி செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
“ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமேயானால் சிங்கள அரசின் மூலமாகதான் அதனைச் செய்ய முடியும். எனவே நம்முடையப் பேச்சால், நம்முடைய நடவடிக்கையால் சிங்களவர்களுடைய கோபத்தை அதிகரிக்கும் வகையில் எதுவும் செய்துவிடக் கூடாது.” என முதல்வர் கருணாநிதி தமிழகச் சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார்.
ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை ஈவு இரக்கம் இல்லாமல் படுகொலை செய்த ராஜபக்சவுக்கும் அவருடைய கூட்டத்திற்கும் ஆத்திரமூட்டும் எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடாமல் நடந்து கொள்ள வேண்டும் என தமிழர்களுக்கு கருணாநிதி அறிவுரை வழங்கியிருக்கிறார். அதாவது உதைக்கிற காலுக்கு முத்தமிட வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்.
கன்னடர்களுக்கு கோபமூட்டாமல் காவிரிப் பிரச்னையிலும், மலையாளிகளுக்கு கோபமூட்டாமல் முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் நீக்குப் போக்குடன் கருணாநிதி நடந்து கொண்டதினால்தான் அப்பிரச்சினைகளில் தமிழகம் மிகப்பெரிய இழப்புகளுக்கு ஆளாக நேரிட்டது.
ஈழத் தமிழர் பிரச்சினையிலும் காங்கிரஸ் கட்சிக்கு கோபமூட்டி அதன் விளைவாக தேர்தல் உறவு பாதிக்கப்பட்டு விடக்கூடாதே என்பதற்காக இவர் கையாண்ட அணுகுமுறையின் விளைவாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
அது மட்டுமல்ல, “தமிழீழத் தனிநாடு இனி சாத்தியமானது அல்ல. சம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு வேண்டி சிங்களவரிடம் மண்டியிட வேண்டும்” என்றும் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
“கொள்கையைக் கைவிடுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். திராவிட நாடு கொள்கையை தி.மு..க. கைவிட்டதற்கு காரணம் கட்சியை ஒழிப்பதற்கு சட்டம் வந்தபோது திராவிட நாடா அல்லது கட்சியா என்ற கேள்வி எழுந்தது. எனவே முதலில் கட்சிதான் வேண்டும் என்று முடிவு எடுத்ததாக”வும் முற்றிலும் உண்மைக்கு மாறான தகவலை கூறியிருக்கிறார்.
பிரிவினை கேட்கும் கட்சிகள் தடை செய்யப்படும் என்ற சட்டம் கொண்டு வரப்படவில்லை. பிரிவினை கேட்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றுதான் சட்டம் கொண்டு வரப்பட்டது. தேர்தலில் போட்டியிட்டு பதவி சுகம் அனுபவிப்பதற்கு இச்சட்டம் தடையாக இருக்கும் என்று கருதியதால்தான் திராவிட நாடு கோரிக்கை குழிதோண்டி புதைக்கப்பட்டது. வரலாற்றுப் பூர்வமான இந்த உண்மையைத் திரித்து பேசுகிறார் கருணாநிதி.
30 ஆண்டு காலம் அறவழியில் சம உரிமைக் கேட்டு ஈழத் தமிழர்கள் போராடினார்கள். எதுவுமே கிடைக்காத காலகட்டத்தில் ஆயுதம் தாங்கிய போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். 15 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் அயல்நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தார்கள்.
தமிழீழப் பகுதி முழுவதிலும் பாதிக்கப்படாத தமிழர் குடும்பமே இல்லை. இவ்வளவு தியாகங்களை ஈழத் தமிழர்கள் செய்த பிறகு அந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தவும் பின்னோக்கித் தள்ளவும் கருணாநிதி முயற்சி செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உலகத்தின் பல நாடுகள் ராஜபக்ச அரசின் மனித உரிமை மீறல்களை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்யும் கட்டத்தில் அவருக்கு வெண்சாமரம் வீசும் வேளையில் தமிழக முதலமைச்சர் ஈடுபட்டிருப்பது வெட்கக் கேடானதாகும். இதன் மூலம் உலக நாடுகள் நடுவில் ஈழத் தமிழர் போராட்டம் குறித்து ஒரு தவறானக் கண்ணோட்டத்தை ஏற்படுத்த அவர் செய்யும் முயற்சி வெற்றி பெறப் போவதில்ல. ஈழத் தமிழரின் மன உறுதி ஒரு போதும் தளரப் போவதில்லை. அவர்களுக்கு ஆதரவாக உலகத் தமிழர்களின் போரட்டங்களும் ஓயப் போவதில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Thursday, July 2, 2009

இலங்கையில் ''தமிழர் அரசு'' நிச்சயம் அமையும்: சட்டசபையில் முதலமைச்சர் கருணாநிதி உரை.

தமிழர்களுக்கு சம உரிமை தமிழ்மொழிக்கு சமதகுதி தமிழர்களுக்கான அதிகாரபகிர்வு இதற்காக நாம் போராடும் நிலைதான் தற்போது உள்ளது. எனினும் இலங்கையில் நிச்சயம் தமிழர்கள் அரசு அமையும் என்று முதலமைச்சர் கருணாநிதி இன்று சட்டசபையில் கூறியுள்ளார்.
இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதற்கும் மத்திய அரசு மூலம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகு அங்குள்ள தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தரவும் மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் காங்கிரஸ் கட்சி கொறடா பீட்டர் அல்போன்ஸ் பாமக தலைவர் ஜி.கே.மணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராமசாமி ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்று பேசினார்கள்.
இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் திறந்தவெளி பகுதியில் ஆடு மாடுகளை போல் அடைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அவர்கள் அந்த மக்களுக்கு தேவையான உணவு மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் என்றும் அவர்களுடைய வாழ்விடங்களுக்கு சென்று பாதுகாப்பாக வாழ்வதற்கு இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றும் நிலை இருப்பதால் அதை தடுத்து நிறுத்தி ஏற்கனவே உள்ளது போல வடக்கு கிழக்கு பகுதிகளை மீட்டு தமிழர்கள் முழு உரிமை பெற்று சிங்களவர்களுக்கு இணையான சமவாழ்வு வாழ்வதற்கு இந்திய அரசு மூலம் தமிழக அரசு உடனடி முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
இதற்கு நீண்ட பதிலளித்து முதலமைச்சர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைய தினம் இலங்கை தமிழர் பிரச்சனையை அரசியல் பிரச்சனையாக ஆக்காமல் அனைத்து கட்சியினரும் ஒரே விதமான கருத்தை தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இலங்கையில் நடைபெறும் பிரச்சனை என்பது சிங்களவர்களுக்கும் தமிழ் இனத்திற்குமான போராட்டமாகும். 50 ஆண்டு காலமாக இலங்கை தமிழர் தலைவர் செல்வா அமிர்தலிங்கம் குட்டிமணி ஜெகன் காலம் முதல் போராட்டம் நடை பெறுகிறது.
இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். தமிழ் மொழி சீரழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக போராட்டம் நடைபெற்றது. இதற்காக தமிழீழம் அமைய வேண்டும் என்ற குரலும் எதிரொலித்தது.
இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளுக்கு இதில் பல்வேறு நிலைப்பாடு உண்டு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழீழம் என்கிற பிரிவினைக்கு ஆதரவு இல்லை. மாநில சுயாட்சி என்ற அளவில்தான் தீர்வு அமைய வேண்டும் என்பதுதான் அவர்களின் கொள்கையாக இருந்து வந்தது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்போது தமிழீழம்தான் தீர்வு என்று மாற்றிக் கொண்டனர்.
பாமக கூட தமிழீழம்தான் தீர்வு என்று பேசி வந்தது. ஆனால் இன்று மாநில சுயாட்சி போதும் என்ற அளவிற்கு பேசி இருக்கிறார்கள். அதுதான் இப்போது முடியும். தமிழர்களுக்கு சம உரிமை தமிழ்மொழிக்கு சமதகுதி தமிழர்களுக்கான அதிகாரபகிர்வு இதற்காக நாம் போராடும் நிலைதான் தற்போது உள்ளது.
மத்திய மாநில அரசுகள் ஒருவரை யொருவர் குறித்து செயல்பட்ட காரணத்தால்தான் இங்கு தமிழ்மொழிக்கு எப்படி அந்தஸ்தை பெற்றிருக்கிறோம். இதே போல அங்கு இலங்கையில் தமிழர்களை மதிக்கின்ற ஒரு அரசு அமைய வேண்டும்.
எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து ஒரு தமிழர் அரசை அமைக்கும் நிலை உருவாகலாம். ஒரு காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே அதிபராகலாம் என்று அமெரிக்காவில் இருந்த நிலை மாறி இப்போது கருப்பர் இனத்தை சேர்ந்த ஒபாமா அதிபராகி இருக்கிறார். இதே போல இலங்கையிலும் தமிழர்களின் அரசு அமைவதற்கு வெகு தூரம் இல்லை என்கிற நம்பிக்கையை நாம் பெற வேண்டும்.
தமிழர்களை காப்பாற்ற வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரம் வளமிக்கதாக ஆக்க வேண்டும் என்பது முக்கியமா? அல்லது ராஜபக்ஷேவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? என்பதை நாம் சிந்தித்து பேச வேண்டும்.
அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்றால் அது சிங்கள அரசின் மூலம்தான் முடியும். அதற்காக இந்தியாவை நாம் வற்புறுத்த செய்ய வேண்டும்.
நம்முடைய குரல் உயர்ந்த அளவிற்கு மத்திய அரசின் குரல் உயர்த்தப்படவில்லை என்ற கருத்தை இங்கு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் பேசியதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.
எனவே சிங்களவர்களுக்கு எதிராக பேசி அவர்களை கோபமடைய செய்யக் கூடாது. சிங்கள பௌத்த துறவிகள் கூட நம் மீது கோப அக்னியை வீசக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.
எனவேதான் இலங்கை தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நீக்குபோக்குடன் நம்முடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
இலங்கை பிரச்சனையை பொறுத்தவரை ஆதி முதல் அந்தம் வரை முழுமையாக தெரிந்தவன் நான். இதை "பண்டாரக வன்னியன்' என்ற நாவல் மூலம் நான் விரிவாக எழுதியிருக்கிறேன்.
இலங்கை தமிழர்களுக்கான நிவாரணப் பொருட்கள் அவர்களை சென்றடைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஏற்கனவே செஞ்சிலுவை சங்கம் மூலம் தமிழக அரசோ மத்திய அரசோ நிவாரண உதவிகளை அவர்களுக்கு வழங்கி இருக்கிறது.
தற்போது வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்களும் பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்றடைவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. நிச்சயம் தமிழர்களிடம் அந்த பொருட்களை கொண்டு சேர்க்கும்.
இலங்கை தமிழர்களுக்கு தற்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தொண்டைமான் மற்றும் அவருடைய மகன் ஆகியோர் என்னை வந்து சந்தித்திருக்கிறார்கள். ஒரு குழு வந்து இலங்கையில் பார்வையிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். மத்திய அரசின் அனுமதி பெற்று உரிய அதிகார அழைப்பின் பேரில்தான் அங்கு செல்ல முடியும் என்று நான் தெரிவித்திருக்கிறேன்.
தற்போது இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய வழிவகைகளை சிங்கள அரசு மூலம் நீங்கள் செய்யுங்கள். நாங்கள் துணை நிற்கிறோம். நிச்சயம் உரிய நல்ல பலன் கிடைக்கும் என்று அவர்களிடம் நானே பேசியிருக்கிறேன்.
இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அமைச்சர்கள் மூலமாகவும் தெரிவித்திருக்கிறேன். நானே தொலைபேசி மூலமாகவும் பேசியிருக்கிறேன். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். எப்போதும் இதே போல தமிழர்களாக ஒற்றுமையாக இருந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்போம். இவ்வாறு கருணாநிதி கூறினார்.
இதையடுத்து பேசிய ஜி.கே.மணி பாமகவை பொறுத்தவரை தமிழீழம்தான் இறுதி தீர்வு என்பதில் உறுதியாக இருக்கிறோம். இடைக்கால தீர்வாக தமிழர்களுக்கு மாநில சுயாட்சி கிடைக்க வேண்டும் என்றுதான் கூறினேன் என கூறினார்.


மாறிவரும் உலகமும் நாடுகடந்த தேசிய அரசும் - சி.இதயச்சந்திரன்

manmohan
அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியோடு உருவான உலகளாவிய தாக்கங்கள், இன்னமும் பல வருடங்கள் நீடிக்குமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடந்த வருட பிற்பகுதியில் ஏற்பட்ட இம்மாற்றங்கள், உலக ஒழுங்கைப் பாதித்துள்ளதாகக் கூறப்படும் அதேவேளை ஏகாதிபத்தியங்களின் தலைமைப் பதவியை நீண்ட காலமாக தக்க வைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு புதிய சவால்கள் ஆசியாவிலிருந்து தோன்றுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏறத்தாழ இரண்டு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களை, தனது அந்நிய நாணய சேமிப்பாக வைத்திருக்கும் சீனாவின் அடுத்த நகர்வு, ஆசிய நாணய நிதி உருவாக்கமாக இருக்குமென நம்பப்பட்டது.
ஆனாலும் இதில் இணைந்து கொள்வதாக இருந்த ஜப்பான், இந்÷தானேசியா, தென்
கொரியா போன்ற நாடுகள், புதிய உலக ஒழுங்கு மாற்றங்களைப் புரிந்து இந்த நாணய நிதிய உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை.
இதன் எதிர்வினையாக பிரிக் (ஆகீஐஇ) எனப்படும் பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் அடங்கிய அமைப்பின் கூட்டறிக்கை பல புதிய விடயங்களை தெரிவிக்க முயற்சிக்கிறது.
உலக வர்த்தக அமைப்பு மற்றும் ஐ.நா. சபை மறுசீரமைக்கப்பட்டு, இந்தியா, பிரேஸிலின் வகிபாகம் அதிகரிக்கப்பட வேண்டுமென்கிற விடயம் இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
ஒருவகையில் மேற்குலகோடு, பொருளாதார மேம்பாட்டிற்கான உறவினை வலுப்படுத்த முனையும் பிரேஸில், இந்தியா போன்ற நாடுகளை, தமது அணிக்குள் இழுத்து, அமெரிக்காவைப் பலவீனப்படுத்தும் சீன ரஷ்யாவின் காய்நகர்த்தல்களாக "பிரிக்' மாநாட்டினைக் கருதலாம்.
ஆசியப் பிராந்தியத்திலிருந்து சற்று விலகி நிற்கும் ஈரான், ரஷ்யா போன்றவை இந்திய சீன நாடுகளின் இணைவோடு மேற்குலகமற்ற புதிய பொருளாதார அசைவினை இங்கு உருவாக்க முயற்சிக்கிறது.
பிராந்திய அரசியல் முரண்பாடுகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து, அமெரிக்காவின் பலவீனத்தை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி, அந்த அடித்தளத்திலிருந்து தன்னையொரு பிராந்திய மேலாதிக்க முதன்மை நாடாக மாற்ற, சீனா முன்னெடுக்கும் நகர்வுகளாக சமகால புதிய கூட்டணி செயற்பாடுகளை நோக்கலாம்.
ஆசிய, ஆபிரிக்க கனிமவள மூலதனச் சந்தையை முழுமையாகக் கையகப்படுத்தும் அதேவேளை எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கு நாடுகளையும் பொருளாதார வளமிக்க தென் அமெரிக்க நாடான பிரேஸிலையும் தமது அணிக்குள் இணைப்பதனூடாக அமெரிக்காவின் பொருளாதார நிமிர்வுக்கான முயற்சிகளை மட்டுப்படுத்தலாமென சீனா கருதுகிறது.
ஆகவே, ஒரு சாராரின் பலவீனத்திலிருந்து மறுதரப்பார் பலமாகும் பொதுவான இயங்கியல் போக்கு இங்கு இனங்காணப்படுகிறது. பொருண்மிய பலமும் படை வலுவுமே உலகின் அசைவியக்கத்தை தீர்மானிக்கும் முதன்மையான காரணிகளென்பதை உலக ஒழுங்கு வெளிப்படுத்துகிறது.
இதுவரை உலக மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டிருந்த அமெரிக்கா தலைமையிலான மேற்குலக கூட்டுக்கு எதிராக சீனா தலைமையிலான பிறிதொரு மேலாதிக்க அணி எவ்வாறு கருக்கொள்ளும் அதனூடாக அதன் இருப்பு நிலை எந்த வகையில் நிலை நிறுத்தப்படுமென்பதையும் பார்க்க வேண்டும்.
அரசுகளின் மிக முக்கியமான இலக்கானது, தமது இருப்பினை எவ்வாறு தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதை நோக்கியே நகர்கின்றது. அத்தோடு சர்வதேச இயங்கு நிலையின் அடிப்படைக் கட்டமைப்பானது, ஏனைய நாடுகளுடனான பாதுகாப்புப் போட்டி குறித்து கவனம் செலுத்துகிறது.
இங்கு சர்வதேச கட்டமைப்பில், மூன்று விதமான பண்புகள், தொழிற்படுவதாகக் கூறப்படுகின்றது. அதில் தமக்கும் மேலான நிறைவேற்று அதிகாரம் கொண்டவர்கள் அற்ற, ஆட்சியாளர்களால் ஆளப்படுதல் முதன்மையானது. அடுத்ததாக வலிந்த தாக்கு திறன் கொண்ட இராணுவத்தை இயக்கும் பலம் பொருந்திய சக்தியைக் கொண்ட நாடுகள். இறுதியாக, ஏனைய நாடுகளின் நிகழ்கால, எதிர்காலத் திட்டங்களை ஊகித்தறிய முடியாத நாடுகளென்று வகைப்படுத்தப்படுகிறது.
இதில் தமக்கும் மேலானவர்கள் இல்லாத கட்டமைப்பைப் பேணும் நாடுகள் குறித்தே அச்சம் ஏற்படுகிறது.
அதாவது, இந்நாடானது தனது ஏக மோக மேலாதிக்க இருப்பினை நிலை நாட்ட வேண்டுமாயின் எதிராளிகளை விட பன்மடங்கு பலம் பொருந்தியவராகத் திகழ வேண்டுமென நினைக்கிறது.
பலமிக்க சக்திகளின் கட்டமைப்பில், தனது ஏகபோகத்தை உறுதிப்படுத்துவதே அந் நாட்டின் குறிக்கோளாக இருக்கும்.
நவீன உலகின் முதன்மையான ஏகாதிபத்தியமாக விளங்க வேண்டுமென பல தசாப்தமாக முயன்று வெற்றி பெற்றிருக்கும் அமெரிக்கா, இதற்கு நல்ல உதாரணமாகும்.
இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால் பிராந்திய ஆதிக்கத்தினூடாக முழு உலகத்தையும் தனது மேலாதிக்கத்துள் கொண்டு வந்த அமெரிக்க நகர்வுகளே புதிய உலக ஒழுங்கைத் தீர்மானித்தது.
அதாவது, அமெரிக்கா பிரயோகித்த மூலோபாய நகர்வுகள் சற்று வித்தியாசமானது. ஐரோப்பாவுடன் இணைந்த பிராந்தியத்தில் தனது படைப்பல பொருளாதார ஆதிக்கத்தை நிறுவுவதன் ஊடாக முழு உலகையும் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
அதேவேளை, தன்னைப் போன்று இன்னுமொரு மேலõதிக்க சக்தி, ஐரோப்பா தவிர்ந்த வேறெந்த பிராந்தியத்திலும் உருவாகாமல் தடுத்தது.
கொரியப் போர், இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஜப்பான் மீதான அணுகுண்டு வீச்சு, வியட்நாம் யுத்தம், பின்னர் நிறுவப்பட்ட அமெரிக்கப் படைத் தளங்கள் யாவும் அப் பிராந்தியத்தில் தனக்குச் சமனான இன்னுமொரு பெரும் வல்லரசு உருவாகாமல் தடுக்க அமெரிக்கா மேற்கொண்ட நகர்வுகளைக் குறிக்கும்.
அதேபோன்று கிழக்கு ஐரோப்பாவிலுள்ள சோவியத் யூனியனை உடைத்து தனது ஆதிக்க எல்லைகளை விரித்துக் கொண்ட விவகாரத்தையும் கவனிக்க வேண்டும். அத்தோடு லத்தீன் அமெரிக்க நாடுகளில் அரசுக்கெதிரான எதிர்ப்புரட்சிவாதிகளை ஊக்குவித்து அங்குமொரு அரசியல் ஸ்திரமற்ற நிலையை அமெரிக்கா தோற்றுவித்தது.
எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கையும் அமெரிக்கா விட்டு வைக்கவில்லை. தனது படை வலுவைப் பிரயோகித்தே, அங்கு பலமடைய முயன்ற தேசிய அரசுகளை செயலிழக்கச் செய்தது. இஸ்ரேலினை மையமாகக் கொண்டு தொடர்ந்தும், அப் பிராந்தியத்தில் சுமுக நிலை ஏற்படாதவாறு தடுக்க முயல்வதாகக் கருதலாம்.
ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக அமெரிக்கா, மேற்கொண்ட கடும் முயற்சியின் பலனாக உருவாக்கப்பட்ட ஓருலக மேலாதிக்கம், ஆசியாவிற்கு நகர்ந்து செல்லாமல் தடுக்க, தற்போது மேற்கொள்ளும் ஜீ20 மாநாடுகள், பாலஸ்தீன பேச்சுவார்த்தைகள் உதவப் போவதில்லை.
சோவியத் யூனியனை உடைத்தது போன்று, சீனாவின் மீது, பிளவு உத்திகளை பிரயோகிக்க முடியாத கையறு நிலையில் அமெரிக்கா உள்ளது. பொருளாதார நிமிர்விற்கு சீனாவின் அனுசரணை அத்தியாவசியமானது என்பதே, அத்தகைய சோவியத் பாணி கடும் போக்கினை சீனா மீது மேற்கொள்ளாமல் தடுக்கிறது.
ஆனாலும் படை வலுவைப் பிரயோகிக்காமல் பிராந்திய ஆதிக்கத்தை வலுப்படுத்தும் சீனாவின் தந்திரோபாயத்தை அமெரிக்கா உணர்ந்து கொண்டாலும் அதனால் எதுவுமே செய்ய முடியாததொரு அவலம் நிகழ்கிறது.
வன்னிப் போர் இதற்கொரு காத்திரமான உதாரணம். ஆசியாவிலிருந்து மேற்குலகை வெளியேற்றும் முதற்படியாகவும் இதனை நோக்கலாம்.
கிழக்கு ஆசியாவின் கடற்பாதை கேந்திர முக்கியத்துவமிக்க தாய்வானை வைத்து அமெரிக்கா மேற்கொண்ட நகர்வுகள் பலனளிக்கவில்லை. புதிதாக பிரச்சினைகளை உருவாக்கி, சீன அணி நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கலாமென எண்ணி வட கொரியா மீது பாய்ந்தாலும் அந்நாடு திரும்பிப் பாய்வதற்கு தயாராக இருக்கிறது.
இந்நிலையில் சீனாவோடு அணி சேர்ந்திருக்கும் நாடுகளுக்கிடையே முரண்பாடுகள் இருந்தாலும் அமெரிக்க மேலாதிக்கத்தின் நீட்சி தொடருமாயின், தமது ஏகாதிபத்தியக் கனவினை நிறைவேற்ற முடியாமல் போகுமென்று ஒவ்வொரு நாடும் கணிப்பிடுகிறது.
ஒபாமாவின் புதிய நிர்வாகம், இந்திய ஆட்சியாளர்களுடன் நெருங்கிய உறவினை வளர்க்கவில்லையென்று காந்தி தேச கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றார்கள். வான் பாதுகாப்பு ஏவுகணைப் பொறிமுறையால் ரஷ்யாவும் தொதி நிலையில் உள்ளது. இலத்தீன் அமெரிக்க நாடுகளும் அமெரிக்க எதிர்ப்புணர்வு ஆட்சியாளர்களால் நிரம்பி வழிகிறது.
இத்தகைய இரு துருவ நிலையை ஊதிப் பெருப்பித்து, ஆசியாவின் தனித்துவ சக்தியாக சீனா வளர்வதை, அமெரிக்கா எவ்வாறு தடுக்கப் போகிறதென்பதை அதன் விரைவான பொருளாதார மீட்சியே தீர்மானிக்கும்.
இலங்கையின் கேந்திர நிலை குறித்து, சீனாவிற்கும் இந்தியாவிற்குமிடையே ஒருவித சமரசப் போக்கு தற்காலிகமாக உருவாகும் வாய்ப்புண்டு.
ஆனாலும் அமெரிக்காவின் பிராந்திய மேலாதிக்க தலைமைத்துவத்தை பிரித்தானியா ஏற்றுக் கொண்டது போன்று, சீனாவால் கட்டியெழுப்பப்படும் ஆசிய மேலாதிக்க சாம்ராஜ்யத்தை இந்தியா ஏற்றுக் கொள்ளுமாவென்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இரு நாடுகளின் இராஜதந்திர ஆடுகளமாகத் திகழும் இலங்கை அரசாங்கம், தனது முக்கியத்துவம் குறித்து மிகைப்படுத்தப்பட்ட கற்பனை உலகில் ஆழ்ந்துள்ளது போல் தெரிகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகப் பகுதியானது, சீனாவினது இடைத் தங்கல் நிலையமென்பதை இந்தியாவும் புரிந்து கொள்ளும்.
பாகிஸ்தானின் குவடார், இலங்கையின் அம்பாந்தோட்டை, பங்களாதேஷின் சிட்டகொங், மியன்மாரின் சிட்வே துறை முகங்கள் யாவும் சீனாவின் கடல் வணிகத்திற்கான மாகோ, முறிகண்டி தரிப்பிடங்கள் போன்றவைதான்.
போர்க் காலங்களிலேயே இவற்றிற்கான முக்கியத்துவம் உணரப்படும். ஆனாலும் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா மீதும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் துறை முகங்களிலும் ஆதிக்கம் நிலைநாட்டப்படாவிட்டால் சீனாவிற்கான கனிமவள, எண்ணெய் வளங்கல் தடைப்படும்.
ஈரானோடு, சீனா, ரஷ்யா ஒட்டிக் கொண்டிருக்கும் சூத்திரத்தின் பின்னணியும் அதுவேதான்.
ஆகவே, ஈழத் தமிழினத்தின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தைப்
பொறுத்தவரை, ஆசியாவில் ஏற்படும் இத்தகைய புதிய மேலாதிக்க உருவாக்கத்தினை உள்வாங்கிப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
ஐ.நா. பாதுகாப்புச் சபையிலும், மனித உரிமைகள் சபையிலும் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கெதிரான தீர்மானம் தோல்வியுற்றதற்கு மேலே விபரித்த புவிசார் அரசியல் மாற்றங்கள் பெரும் பங்கினை வகித்திருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது ஈழ விடுதலைப் போராட்டமானது மேற்குலகிற்குச் சார்பானதென்கிற தோற்றப்பாட்டினை இந்தியாவும் இலங்கையும் ஏற்öகனவே உலகப் பரப்பெங்கும் உருவாக்கி இருந்தது.
ஆகவே புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வாழும் தமிழ் மக்கள், தாங்கள் உருவாக்கப் போகும் "நாடு கடந்த தேசிய அரசு' என்பது, எவ்விதமான பார்வையினை, அமெரிக்க எதிர்ப்பு அணியினரிடையே உருவாக்கப்
போகிறதென்பதை அவதானிக்க வேண்டும்.
அதனைப் புரிந்து, சரியான நகர்வினை மேற்கொள்ளாவிட்டால் மேற்குலகிற்குள்ளே, தமிழ் அரசியல் போராட்டங்கள் முடங்கி விடும்.
-நன்றி வீரகேசரி வாரவெளியீடு -


Tuesday, June 30, 2009

பிரபாகரனை சாகடிக்க முயலும் பச்சோந்திகள்.

PIRABAKARAN_Page1
பிரபாகரன் இறந்ததை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, 3ஆம் கட்ட ஈழப் போராட்டத்தில் நாம் இணைந்து கொள்வோமென அடம் பிடிப்பவர்கள், அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.
மிகத் தெளிவாக, பல விடயங்கள் எமது அறிவுக்குத் தெரிகிறது. தேசியத் தலைவர் கொல்லப்பட்டார் என்கிற விடயத்தை நிரூபிப்பதற்கு, சிங்களம் பல முயற்சிகளை மேற்கொண்டது.
சூரன் போரில், தலையைத் திருப்புவது போன்று, முதலில் ஒரு நாடகத்தை பேரினவாதம் அரங்கேற்றியது.
சிங்களவர்களே அதை நம்பமறுத்தார்கள். பின்னர் நந்திக் கடலோரத்தில், பிரபாகரன் அவர்களின் உடலைக் கண்டு எடுத்தோமெனக் கூறும்போது, அதனையும் நம்பமறுப்பார்கள் என்பதற்காக, கருணாவையும் தயா மாஸ்டரையும் சாட்சிக்கு அழைத்தது சிங்களம்.
சாட்சிக்கு அழைத்துவரப்பட்ட ஓணான்கள், வேலிக்கு சாட்சியாக இருப்பார்கள் என்பது எமது சிற்றறிவிற்கு தெளிவாகத் தெரியும்.
காலநேரம் கரைந்துசெல்ல, திறந்திருந்த விழிகள், பாதியாக மூடத்தொடங்கியது. சவரம் செய்யப்பட்ட முகத்தில் வெண்ணிற மயிர்கள் முளைக்கத் தொடங்கின.
10 நாள் மரபணுப்பரிசோதனை ஒரே நாளில் முடிக்கப்பட்டு, எரிக்கப்பட்ட உடலத்தின் சாம்பல், கடலிலும் கரைக்கப்பட்டது.
உடலம் புதைக்கப்படவில்லை, எரிக்கப்பட்டது என்கிற விவகாரம், மீண்டும் தோண்டி எடுத்து பிண அரசியலை முன்னெடுத்து விடுவார்களோ என்கிற அச்சத்தால், அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது போல் தெரிகிறது.
தமது இன அழிப்புப் போரின் முழுமையான வெற்றியைப் பிரகடனம் செய்யவேண்டுமாயின், பிரபாகரன் அவர்கள் உயிருடன் இல்லையயன்பதை தெளிவு படுத்து வேண்டிய தேவை சிங்களத்திற்கு உண்டு.
தேசியத் தலைவர் இறந்த செய்தியை 53வது படையணித் தளபதி, சரத் பொன் சேக்காவிடம் தெரிவித்தபோது, அதனை உறுதி செய்யுமாறு கூறியதாக கொழும்புச் செய்திகள் வெளிப்படுத்தின.
ஆனாலும் இராணுவத் தளபதியோ அல்லது கோத்தபாய இராஜபக்சவோ அந்த உடலத்தைச் சென்று பார்க்க அக்கறை கொள்ளவில்லை.
19ஆம் திகதி பேசிய மனிதர், 17 ஆம் திகதி இறந்ததாக புதியகதையயான்றும் உலா வந்தது. அவர் இறந்துவிட்டாரென்று, வன்னியிலிருந்து யார் தகவல் கூறியது என்கிற விடயம் இன்னமும் எமது அறிவுக்குத் தெளிவாகவில்லை.
சற்றலைட் தொலைபேசியில் உரையாடியவர், தனது தொடர்பினை துண்டித்துக்கொண்டால், அவர் இறந்துவிட்டதாக ஏற்றுக்கொள்ளும் யதார்த்தத் தெளிவு, சிலருக்கு ஏற்படுகிறது.
இறுதியாக நடைபெற்ற ஆனந்தபுர பெரும் சமரில், வெடிகுண்டுகளை நெஞ்சில் கட்டி களமாடிய தேசியத் தலைவர், முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியேறுகையில், எதிரிகளிடம் அகப்படக்கூடிய வாய்ப்புக்களையும் அனுமானித்திருப்பார்.
பக்கத்திலிருந்து பார்த்தவர் போன்று, கட்டிய வெடி குண்டுகளை, பொட்டம்மான் அகற்றிவிட்டாரென புதிய விளக்கங்களும் தெரிவிக்கப்படுகின்றன.
சமரின் இறுதி நாட்களில், களத்தில் நின்ற பலர், முகாம்களுக்குள்ளும், சிலர் வெளியிலும் இருக்கின்றார்கள்.
அவர்கள் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில், மே 13 ஆம் திகதிக்கு முன்பாகவே தேசியத் தலைவர் முற்றுகைக்குள் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டாரெனத் தெரிகிறது.
அவர் அங்கிருந்தும் பேசலாம். பொதுவாகவே, அவர் சற்றலைட் தொலைபேசி ஊடாக பேசுவதில்லையயன்று உடனிருந்த பலர் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.
முகாமில் இருக்கும் மக்களுடன் வெளியுலகத் தொடர்பு ஏற்பட அனுமதித்தால், பல திடுக்கிடும் உண்மைகள் கசியலாமென்பதால், எவரையும் உள்நுழைய விடாமல் தடுக்க முனைகிறது சிங்களம்.
ஆனாலும் அதனையும் மீறி, இறுதி நாட்களில், பேரினவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு கோரத்தாண்டவம் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.
வீழ்ந்து கிடந்த உடலங்களை ஏறி மிதித்து, வெளியே தப்பி ஓடி வந்த கொடூரச் சம்பவங்களை, 18ஆம் திகதியன்று முற்றுகைக்குள் இருந்து வந்த மக்கள் தெரிவித்தார்கள்.
சிங்களப்படைகள் மீது ஏராளமான கரும்புலித்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு, குறுகிய நிலப்பரப்பெங்கும் புகை மண்டலங்களால் நிரம்பி வழிந்தது.
இதேபோன்று நந்திக் கடல் ஊடறுப்புச் சமரில், மேற்குக்கரையோரம் கடற்கரும்புலிகளால் கைப்பற்றப்பட்டதோடு, முற்றுகையை உடைத்து வெளியேறிய முதல் அணியினர் ஒட்டிசுட்டான் காட்டுப் பிரதேசத்தை நோக்கித் தப்பிச் சென்றதாக, கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே ரைம்சின் இராணுவ ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.
இந்த முற்றுகையிலிருந்து வெளியேறிச் சென்றவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள், இன்னமும் மர்மமாகவே இருக்கிறது.
33 வருடகால தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது, மூன்று நாட்களில் முடிந்து விட்டதென சிங்களமும், இந்திய புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொள்ளும் பரப்புரைகளில், பல அரசியல் சூத்திரங்கள் ஒளிந்திருக்கின்றன.
தேசியத் தலைவருக்கு அஞ்சலி செலுத்தாதோர் வரலாற்றுத் துரோகிகள் என்று நம்மில் சிலர் அவசர அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.
வருடந்தோறும், விதைக்கப்பட்ட மாவீரர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கவர்கள் தமிழ் மக்கள்.
பிரிகேடியர் தமிழ் செல்வனும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களும், பல அரசியல் வரலாற்றுத் தவறுகளைப் புரிந்ததாகவும் இவர்கள் நிறுவ முற்படுகிறார்கள்.
பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு, தாயகம் திரும்பிய தமிழ்ச்செல்வன், உலகநாடுகளின் உண்மையான நிலைப்பாட்டினை, தலைவருக்குத் தெளிவுபடுத்தாமல் தவிர்த்து விட்டாரென்னும், புதியதொரு குற்றச்சாட்டினை முன்வைக்கிறார்கள்.
பேச்சுவார்த்தை மூலம், ஒரு மண்ணும் நடைபெறாதென, தலைவருக்கு மட்டுமல்ல முழுத் தமிழினத்திற்கே தெரியும்.
சர்வதேச அளவில், எமது போராட்ட நியாயப்பாட்டினைக் கொண்டு செல்லும் தளமாகவே, இப்பேச்சுவார்த்தை மேடை பயன்படுத்தப்பட்டது.
திம்புவில் முன்வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத சிங்களம், ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் பரிசீலனைக்காக மேசையில் போடப்பட்ட, உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையும் ஏற்றுக்கொள்ளாதென்பதை தேசியத் தலைவர் புரிந்துகொள்வார்.
ஏதோ, இப்பூவுலகின் புதிய ஒழுங்கினைப் புரியாமல், பிரபாகரன் போராட்டம் நடாத்தினார் என்பது போன்று சித்தரிக்க முனைபவர்கள், இனி என்னசெய்யலாம் என்பதைக் கூறவேண்டும்.
பூகோள அரசியலானது, உலகப் பொருளாதாரச் சீரழிவோடு புதியதொரு ஒழுங்கினை நோக்கிக் காலடி வைக்கிறது. அதில் சீனாவின் வகிபாகம் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
ஆயுதப் போராட்ட, இன அழிப்புச் சூத்திரதாரிகளின் பங்கு, தென்னாசியாவில் எவ்வகையில் பிரயோகிக்கப் படுகிறதென்பதை, விடுதலைப்புலிகள் புரிந்து கொள்ளவில்லையயன்று எண்ணுவதும் தவறான பார்வையாகும்.
ஆனாலும் இவர்கள் நிறுவ முற்படும் 3ஆம் கட்ட ஈழப்போராட்டத்தில், இந்திய வகிபாகம் தவிர்க்கப்படமுடியாத சக்தியாக இருக்கப் போகிறதென்று இனி இவர்கள் கூறப் போகிறார்கள்.
கொழும்பு, தமிழ்நாடு, புதுடெல்லி என்கிற அச்சினுள், மறுபடியும் எமது ஈழப்போராட்டத்தை இழுத்துச் செல்லும் காய்நகர்த்தல்களின், பங்குதாரர்களாக இவர்கள் மாறுவார்கள்.
தலைவர் இல்லையயன்பதை அழுத்திக் கூறுவதன் ஊடாகவே, இத்தகைய இந்திய உள்நுழைவு சாத்தியமாகுமென்பது இந்த அறிவியலாளர்களின் கணிப்பு.
மகிந்த இராஜபக்ச, என்ன முடிவெடுத்தாலும், அதனை இந்தியா உறுதியாக ஆதரிக்குமென்று சிவசங்கர் மேனன் தெரிவிக்கும் கருத்தினை உன்னிப்பாக அவதானித்தால், இந்தியா இல்லாமல் ஈழப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாதென அடம்பிடிக்கும் புலம்பெயர்ந்த தமிழ் அறிஞர்களின் உள்நோக்க நிகழ்ச்சி நிரலைப் புரிந்துகொள்ளலாம்.
இனப்படுகொலை, யுத்தக்குற்றம் போன்றவற்றிலிருந்து தப்பிச் செல்லும்வரைதான், இந்தியாவின் உதவி மகிந்தருக்குத் தேவை.
அதற்கு முன்பாக, சிறீலங்காவைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் வகையில், இந்திய - சிறீலங்கா பாதுகாப்பு ஒப்பந்தமொன்றினை உரு
வாக்க, மேனன் முயற்சிகளை மேற்கொள்கிறார்.
ஆகவே தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, இந்தியா உறுதுணையாக நிற்கும் என்கிற கற்பனை அரசியலில் காலத்தை கடத்தாமல், சிங்களத்தின் இன அழிப்பு நடவடிக்கைகளை அம்பலமாக்கும் செயற்பாடுகளில், புலம்பெயர்ந்த ஈழத் தமிழினம் முழு மூச்சாக ஈடுபடவேண்டும்.
- இருக்கிறாரா? இல்லையா?- என்கிற உளவியல் அறிக்கைப் போர்களில் காலத்தைச் செலவிட்டால், சிங்களம் செய்த இனப்படுகொலைகளும், செய்து கொண்டிருக்கும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் மூடி மறைக்கப்படும். இரத்தக்கறை படிந்த கைகளோடு, புதிய புத்தர்களும் உருவாகிவிடுவார்கள்.
பிரபாகரன் இறந்ததை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, 3ஆம் கட்ட ஈழப் போராட்டத்தில் நாம் இணைந்து கொள்வோமென அடம் பிடிப்பவர்கள், அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.
மக்களைத் துரோகிகளாகச் சித்தரிப்பவர்கள், மக்களிடமிருந்து அந்நியமாகிச் சென்ற வரலாறுகளை, முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
மக்களால் உருவாக்கப்படும் தலைவர்கள் அழிவதில்லை, சராசரி மானிட வயதெல்லை, 100 ஐயும் தாண்டி, அவர்கள் மக்கள் மனங்களில் நீடித்து நிலைப்பார்கள்.ஆகவே, புதிய தலைமுறை மாணவ, இளைஞர்கள், இதுவரை முன்னெடுத்த போராட்டங்களைத் தொடர்ந்து நடாத்தவேண்டும். 2008ஆம் ஆண்டு மாவீரர்தினச் செய்தியும் அதுதான்.
-இதயச்சந்திரன்
நன்றி:ஈழமுரசு


காங்கிரஸ்காரர்களே...! -ஜெகத் கஸ்பர்.

ஜூன் 21, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்க்டிக் பனிக்கண்டத்தில் தமிழ் ஈழ மக்களுக்கு நம்பிக்கை தரும் அரசியல் நிகழ்வொன்று நடந்தது. 300 ஆண்டுகளாய் டென்மார்க் நாட்டின் காலனியாதிக் கத்திலிருந்து விடுதலைபெறப் போராடி வரும் கிரீன்லாந்து தன்னாட்சி உரிமை கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டது. வெகுவிரைவில் முழு விடுதலை சாத்தியப்படும் என்பதும் தெரிகிறது. 22 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கிரீன்லாந்து நாட்டின் மொத்த மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 57,000 பேர். ஒரு லட்சம் குடிமக்கள் கூட இல்லாத கிரீன்லாந்து தனிநாடாக மாறமுடியுமென்றால் தமிழ் ஈழம் எப்படி மலராமல் போய்விடும்?! நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும், நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்.
நாடிழந்து நாடோடிகளாய் ஆன யூதர்கள் 1948-ல் தமக்கென ஓர் தாயகம் அமைக்க ஈராயிரம் ஆண்டுகள் ஆயிற்று. தன்னுரிமை இழந்த அயர்லாந்து இனத்தவர் மீண்டும் தமக்கான குடியரசை 1920-ல் அமைக்க 700 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. தென் அமெரிக்கா வின் அனைத்து நாடுகளுமே தன்னிச்சையாகச் சுதந்திரப் பிரகடனம் செய்துகொண்டு உருவான நாடுகள்தான். பின்லாந்து, எஸ்தோனியா, இந்தோனேஷியா என தன்னிச்சையாகச் சுதந்திரப் பிரகடனம் செய்து உருவான நாடுகள் உலக வரைபடத்தில் பல உண்டு.
உலக வரைபடம் அடித்தல், திருத்தல், புதிய உரு வாக்கல்களுக்கு உள்ளாக்கப்பட முடியாத இறுக்கம் கொண்டதல்ல. கடந்த 50 ஆண்டுகளில் மட்டுமே நாற்பதுக்கும் மேலான புதிய நாடுகள் இப் பூமிப் பந்தில் உருவாகியுள்ளன. தேசிய இனங்களுக்கு அரசியல் சுயநிர்ணய உரிமை உண்டு என்பது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிலைபெற்று நிற்கும் அரசியல் ஒழுங்கு, தேசிய இனமாக இருக்கத் தகுதியுடையோர் யார்? ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில், நீண்ட காலம் பொதுமொழி, பொதுப் பண்பாடு, பொது வாழ்க்கை முறை, பொது வரலாறு ஆகியவற்றைக் கொண்டு வாழும் எந்த ஒரு இனமும் "அரசியல் சுய நிர்ணய உரிமை கொண்ட தேசிய இனம்' என்பதே கோட்பாடு. அந்த அடிப்படையில் தான் ஈழத்தமிழ் மக்களும் ஓர் தனித்துவமான தேசிய இனம், அவர்களுக்கு பிரிந்து போகும் உரிமை உண்டு என வாதிடுகிறோம்.
தேசிய இனங்களின் அரசியல் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டால் இந்தியா பல் வேறு நாடுகளாக சிதறுண்டு போகாதா என்ற கேள்வியை சிலர் கேட்கலாம். உண்மை என்ன வென்றால் ஓர் ஜனநாயகக் கூட்டாட்சியாக, எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும், இந்தியாவின் பயணம் நாம் பெருமை கொள்ளத் தக்கதாவே இருந்து வருகிறது. ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், அழகிரி, ஆ.ராசா இவர்களெல் லாம் வேஷ்டி கட்டிக் கெண்டு கேபினட் அமைச் சர்களாக பாராளுமன்றத்திற்குள் வரும்போது தமிழகமும் இந்திய ஆட்சி அமைப்பில் பங்கேற்கிறது என்ற உணர்வு உண்மையாகவே ஏற்படுகிறது. பணம் படைத்தவர்கள், சில ஜாதிகள், சில மொழி பேசுகிறவர்களின் மேலாதிக்கம் பல்துறைகளிலும் நிலவுகிற போதும் கூட சமூக நீதிக்கான அரசியற் சக்திகள் உறுதியாக இயங்குகின்ற சமூக அரசியற் களத்தினை இந்திய ஜனநாயகம் உறுதி செய்துள் ளது. மாநில சுயாட்சி என்ற கோரிக்கையினை முன்வைக்கிற உரிமையினையும், அதனை அடைவதற்கான வன்முறையற்ற ஜனநாயக வழியிலான நடைமுறைகளையும் இந்திய ஆட்சி அமைப்பு அனுமதித்துள்ளது.
ஆனால் ஸ்ரீலங்கா அவ்வாறானது அல்ல. அது ஒற்றையாட்சி அமைப்பு. தேசிய இனங் களின் கூட்டாட்சிக்கான ஏற்பாடு அரசியல் சட்ட அடிப்படையில் இல்லை. அந்நாட்டின் அரசு மதம் பௌத்தம். இந்து, கிறிஸ்தவ, இஸ் லாமிய மதங்களுக்கு இரண்டாம், மூன்றாம் இடங்கள்தான். அந்நாட்டின் அரசு மொழி சிங்களம். இன்று அந்நாட்டின் ராணுவத்தில் 100% பேர் சிங்களர்கள். தமிழ் மக்களை பல் லாயிரக்கணக்கில் கொன்றழித்து, தமிழீழ தாயக நிலப்பரப் பினை ஆக்கிரமித்து நிற்பது பெயருக்கு ஸ்ரீலங்கா ராணு வம் என்றாலும் உண் மையில் அது சிங்கள ராணுவம். ஸ்ரீலங்கா காவல்துறையில் 96% பேர் சிங்களர்கள். அப்படியானதொரு நாட்டை எப்படி எல்லா மக்களுக்குமான நாடு என்று நாம் கருதமுடியும்?
யாவிற்கும் மேலாய் கடந்த ஜனவரி முதல் மே-18 வரை ஸ்ரீலங்கா சுமார் 4 லட்சம் தமிழ் மக்களை ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் விரட்டிக் கூட்டி முற்றுகையிட்டு நடத்திய கொலைவெறி தாக்குதலும், கடைசி மூன்று நாட்களில் மட்டுமே சுமார் 30,000 தமிழர்களை கொன்றழித்த கொடுமையும், இன்று மூன்று லட்சத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்களை மரண முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் அராஜகமும்- தமிழ் மக்களின் பிரிந்து போகும் உரிமையை அனைத்துலக சட்டங்கள், அரசியற் தார்மீகம், மானுட ஒழுக்கம் என சகல அடிப்படைகளில் நின்றும் உறுதி செய்கிறது.
வவுனியாவிலிருந்து வந்திருக்கிற செய்தி களின்படி அகதி முகாம்களில் இருக்கும் சுமார் 24,000 பேருக்கு அம்மை நோய் கண்டிருக்கிறதாம், 4,000 பேர் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள் ளார்களாம். அடையாளம் தெரியாமல் வாரத்திற்கு சராசரி 60 பிணங்கள் முகாம்களுக்கு வெளியே அழுகிக் கிடக்க நாய்களால் இழுக்கப்படுகிறதாம். மாதத்திற்கு சராசரி நூறு இளம் தமிழ் பெண்கள் அனுராதபுர ராணுவத்தினரின் பாலியல் தேவைகளுக்காக கொண்டு செல்லப்படுகிறார் களாம். நாம் இப்போதும் நம்ப வேண்டுமாம்- விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தின் பிடியிலிருந்து தமிழ்மக்களை விடுவித்து சுபிட்சம் தருவதற்குத்தான் இந்த யுத்தத்தை ஸ்ரீலங்கா நடத்தியதென்று.
இன அழித்தல் யுத்தத்துக்கு ஸ்ரீலங்கா கொடுத்த முழக்கம்: அதாவது மனித குல வரலாற்றி லேயே மிகப்பெரும் எண்ணிக்கையில் கடத்தி வைக்கப்பட்டி ருந்த மக்களை மீட் கும் நடவடிக்கை. இந்தியாவின் சஉபய, பஒஙஊநசஞர, ஈசசலிஒஇச உள்ளிட்ட அத்தனை ஆங்கில ஊடகங்களும் இந்த மோசடி முழக்கத்தை இரவு பகலாய் இந்திய மக்களுக்கு கூவிக் கூவி விற்றன. இவர்கள் மீட்டு வந்த மக்கள் இன்று வதை முகாம் களில் என்ன பாடுபடுகிறார்களென்பதை சென்று எட்டிப் பார்த்து வரச் சொல்லுவோம். ஆனால் அவர்கள் இதனை தெரியாமலொன்றும் செய்யவில்லை என்பதே உண்மை. தெரிந்தே செய்தார்கள். மேற்குறிப்பிட்ட ஆங்கில ஊடகங்கள் இந்தியாவில் எழுந்து வரும் புதியதொரு மேலாதிக்க பாசிசத்தின் முகங்களாகவே பார்க்கப்பட வேண் டும். பர்காதத், ராஜ்தீப், அர்னாப் எல்லோரும் அழகாக ஆங் கிலம் பேசலாம்- ஆனால் அவர்கள் ஆபத்தான அரசியல் வியா பாரிகளும் கூட என்பதை தமிழ் மக்களின் தேசிய உரிமைச் சிக்கலை பயங்கரவாதமாய் விற்ற யுக்திகளில் கண்டோம்.
பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் சஉபய நடத்திய இண்ஞ் எண்ஞ்ட்ற் நிகழ்ச்சி பற்றி நான் முன்பு எழுதியிருந்தேன். அந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பங்கேற்றவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்தி நடராஜன். விவாதத்தின் ஊடே ஒரு கேள்விக்கு அவர் சொன்ன பதில் அவர் மீதான என் தனிப்பட்ட மதிப்பை உயர்த்தியது. நிகழ்ச்சியை நெறி செய்த விக்ரம், ""ஸ்ரீலங்காவில் நடப்பது தமிழ் இன அழித்தல் என்ற குற்றச்சாட்டினை ஒத்துக் கொள் கிறீர்களா?'' என்று கேட்டபோது, ""ஆம், அங்கு நடப் பது இன அழித்தல்தான்'' என்று ஒத்துக் கொண்டார்.
இரு வாரங்களுக்கு முன் கூடிய நடப்பு பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் உரையாற்றிய போது கூட ஜெயந்தி நடராஜன் அவர்கள் அகதி முகாம்களில் வாடும் தமிழ்மக்கள் மீள் குடியமர்வு செய்யப்பட வேண்டிய அவசரத்தையும், நீதியான அரசியற்தீர்வுக்கான தேவையையும் வலியுறுத்தினார். இதனை இங்கு குறிப்பிடக் காரணம் ஈழத் தமிழ் மக்களுக்கு நேர்ந்த இன அழித்தலின் இரத்தப் பழியிலிருந்து காங்கிரஸ் கட்சி தப்பித்துவிட முடியாது. அதேவேளை ஒட்டுமொத்த அழிவி னின்று எஞ்சியிருக்கிற மக்களையேனும் காப்பாற்றி, அவர்களது சுயநிர்ணய உரிமையை உறுதி செய்து, விரும்பினால் அவர்களுக்கு தனிஈழம் அமைத்து தரும் வல்லமையோடு இன்று இருக்கிற ஒரே கட்சியும் காங்கிரஸ் கட்சிதான்.
நாம் யாவரும் நேசித்த ஒரு முன்னாள் பிரதம ரின் இழப்பிற்குப் பழிதீர்க்க வேண்டி இத்துணை கொடுமையான இன அழித்தலுக்குத் துணை நின்றது நியாயமா என்ற தீர்ப்பினை வரலாறு எழுதி விட்டுப் போகட்டும். அதே வேளை எனது அனுபவத்தில் தமி ழகத்தின் காங்கிரஸ் கட்சியினர் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அடிமட்ட தொண்டர்கள் தனி ஈழம் அமைவதையே விரும்புகின்றார்கள். யுத்த நிறுத்தம் கேட்டு தீக்குளித்த தமிழர்களில் காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்தவரும் ஒருவர். கடந்த ஜனவரி மாதம் யுத்த நிறுத்தம் கொணர வேண்டுமென தமிழக காங்கிரஸ் பெரியவர் ஒருவர் எடுத்த நேர்மையான முயற்சிகளையும், அம்முயற்சி வெற்றிபெறாமல் தடுத்த உணர்வாளர்களையும் அறி வேன். வேண்டுதல் என்ன வெனில் இன்றிருக்கும் நிலையில் ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான சில கோரிக்கைகளை தமிழக காங்கிரஸ் வலுவாக தமது தலைமைக்கு வைக்க வேண்டும் என்பதுதான். இலங்கைக்கு இந்தியா வழங்கிய 500 கோடி நிதி உதவியை செயற்படுத்த 20 பேர் கொண்ட குழுவினை ராஜபக்சே அமைத்துள்ளார். அதில் 19 பேர் சிங்களர்கள்- ஒருவர் இஸ்லாமியர். குறைந்தபட்சம் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரைக் கூடவா சேர்த்துக் கொள்ளக் கூடாது? இப்படியான குறைந்தபட்ச கேள்விகளைக் கூட நாம் எழுப்பவில்லை யே என்றுதான் அங்கலாய்ப்பாக இருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் 7-ம் நாள் இலங்கை ராணு வத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் ராஜபக்சே சகோதரர்களின் நெருங்கிய நண்பரான ஜெயசூரியா என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
""அதிகாரப் பகிர்வின் மூலம் இனப் பிரச்சனை உருவாக காரணமாக இருந்த அம்சங்களை இலங்கை அகற்ற வேண்டுமென எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். நான் கேட்கிறேன், எஸ்.எம்.கிருஷ்ணாவே... இறை யாண்மை கொண்ட ஒரு தேசமாகிய எங்களுக்கு அறிவுரை சொல்ல நீ யார்? உனது வேலையை மட்டும் நீ பார். அல்லது ஐ.நா. மனித உரிமை குழுவில் நவிபிள்ளை சூடு பட்டது போல் நீயும் சுருக்கிக் கொள்ள வேண்டிவரும். இந்தியாவே நன்றாகக் கேட்டுக்கொள். எவ்விதமான அதிகாரப் பரவலும் தமிழர்களுக்கு நாங்கள் தரப் போவ தில்லை. அதுமட்டுமல்ல இந்திய மேலாதிக்கத்தின் கடைசி எச்சமான இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத் தையும் தூக்கித் தூர வீசி எங்கள் தேசத்தை உங்கள் மேலாதிக்கத்திலிருந்து தூய்மை செய்வதுதான் எங்கள் இலக்கு. எங்கள் நாட்டை இந்தியாவுடன் இணைக்க வேண்டித்தான் விடுதலைப்புலிகளை நீங்கள் உருவாக்கி னீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அகற்றினோம். எங்கள் நாட்டை கைப்பற்றுவதை விட சந்திரனை உங்கள் நாட்டோடு இணைப்பது எளிதாக இருக்கும்''.
இக்கட்டுரை வெளிவந்தது இலங்கை ராணுவத் தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எழுதியது ராஜபக்சே சகோதரர்களின் நெருங்கிய நண்பர். இவை யெல்லாம் ஏன் அதிகாரத்தில் இருப்போரின் கண்களுக் குப் படவில்லை. இத்துணை கொடுமைகளுக்குப் பின்ன ரும் கூட என்றானாலும் தமிழர்கள்தான் இந்தியா வின் நண்பர்கள் என்பதை இந்தியா உணரும் காலம் ஒருநாள் வரும்.
(நினைவுகள் சுழலும்)


Saturday, June 27, 2009

நீங்களும் ஒரு தேசத்துரோகிதான்….

ஒரு துப்பறியும் மர்ம நாவலைப் படித்ததைப் போலிருக்கிறது. ஆனால் இதில் வரும் அத்தனை  வரிகளும் அப்பட்டமான நிஜம். அதுவும் இந்திய அரசியலின் மர்மமான முடிச்சுகளை அவிழ்க்கும் புத்தகம்தான் : “சீனாவின் முற்றுகையில் இந்தியா”. ஈழத்தின்  இன்றைய இனப்படுகொலைகளுக்கு அன்றைக்கே அச்சாரம் போட்ட அரசியல் சதிகளை அங்குலம் அங்குலமாக அலசுகிறது இந்தப் புத்தகம்.

1994 ஆம் ஆண்டு ஜனாதிபதியான சந்திரிகா இனப்படுகொலையை தங்கு தடையின்றி நடத்தவும்… போராளிகளை ஒடுக்கவும் நேரடி யுத்தம் இன்றி வேறு ஏதேனும் வழிகள் இருக்கின்றனவா என சிந்திக்கிறார். அப்போது அவரது மனக்கண் முன்னே வந்து நிற்கிறார் முந்தைய ஜனாதிபதியான ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா. 240px-J_R_Jayewardene‘தமிழன் தொடைக்கறி இங்கே கிடைக்கும்’ என எண்பதுகளில் சிங்களர்கள் போர்டு போட்டு விற்பனை நடத்துவதற்கு வழியமைத்துக் கொடுத்த “பொற்கால ஆட்சி”க்கு சொந்தக்காரர்தான் இந்த ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா. ஆசாமியின் அந்தக் காலக் கணக்கு என்னவென்றால் மேற்குலக நாடுகளுக்கு இலங்கையின் சந்தையை திறந்து விடுவதன் மூலமாக ஏதேனும் அந்த நாடுகளில் இருந்து போராளிகளை ஒடுக்குவதற்கு ஆதரவு கிடைக்குமா என்பதுதான்.

அந்த அண்ணன் காட்டிய வழியில் தங்கை நடை போட தீர்மானித்ததன் விளைவுதான் 1998 இல் வாஜ்பாய் அரசுக்கும் சந்திரிகா அரசுக்கும் இடையில் கையெழுத்தான இந்திய இலங்கை சுதந்திர வியாபார ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின் விளைவால் ஓகோவென பயன் அடைந்த இந்திய

முதலாளிகளும் சிங்கள முதலாளிகளும் அடுத்த ஆர்டர் எப்படா வரும்? என காத்திருக்கத் துவங்கினர். சந்தடி சாக்கில் சத்தமில்லாமல் இலங்கையில் கடை விரித்தவர்கள் அசோக் லேலண்ட்….

டாடா டீ….ஏசியண் பெயிண்ட்ஸ்….chandrikaஐசிஐசிஐ…. ராஜபாளையத்தின் ராம்கோ….என ஏகப்பட்ட பேர். அப்படி இந்தியாவில் நுழைந்த இலங்கையின் நிறுவனங்களுள் தம்ரோ கட்டில் நாற்காலி நிறுவனம்…. மாலிபான் பிஸ்கெட் நிறுவனம்…. மாஸ் ஹோல்டிங்ஸ் ஆயத்த ஆடைகள் போன்றவைகளும் அடங்கும்.

“இதுல என்னங்க இருக்குது? இவன் அங்க பிசினெஸ் பண்றான்…. அவன் இங்க பிசினெஸ் பண்றான்….இதுல என்ன தப்பு இருக்கு?” என்கிற கேள்வி சாதாரணமாகவே எல்லோருக்கும் எழும். ஆனால் சந்திரிகா இந்தக் கணக்கை இப்படிப் போடவில்லை. இப்படி வரி விலக்கும்…. வரிச் சலுகையும் அடைந்த இந்திய முதாலாளிகளை வைத்து ஈழப் போராளிகளை ஒடுக்குவதற்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்க முடியுமா? என்பதுதான் சந்திரிகாவின் கணக்கு. அவர் போட்ட கணக்கு தப்பவில்லை என்பதற்கு பல ஆதாரங்களை அள்ளி வீசுகிறது இந்தப் புத்தகம்.

ஏனென்றால் எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வரவேண்டுமென்றாலும் தேர்தலின் போது பல்லை இளித்துக் கொண்டு நிற்க வேண்டியது இந்த முதலாளிகளிடம்தான். அப்படிக் காசு வாங்கி ஆட்சிக்கு வந்ததற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்றால்….அவர்கள் அடுத்த ஐந்து வருடங்களுக்கு எங்காவது படை எடு என்றால் எடுக்க வேண்டும்…. எவனுக்காவது ஆயுதம் கொடு என்றால் கொடுக்க வேண்டும்…. இதுதான் தங்கு தடையற்ற வர்த்தகத்தின் தாரக மந்திரம். மற்றபடிக்கு ஓட்டுப் போட்ட கேணையர்கள் எல்லாம் கரும்புள்ளி குத்திய கையையே அடுத்த தேர்தல் வரைக்கும் வெறிச்சு வெறிச்சு பார்த்தபடி குந்தியிருக்க வேண்டியதுதான். அப்படி அரங்கேறிய திரை மறைவு நாடகங்களில் சிலதுதான் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா கொடுத்த ராணுவ “உதவி”…. சிங்கள ராணுவத்திற்கு இவர்கள் கொடுத்த தொழிநுட்ப “உதவி”…. போன்ற இத்யாதிகள்.

ஆனால் சிங்களம் சரசமாடியது இந்தியாவிடம் மட்டும்தானா? சீனாவிடமும் சத்தம் போடாமல் வர்த்தக உறவுகளை வளர்த்துக் கொண்டது. தெற்கு இலங்கையில் உள்ள ஹம்பன் தோட்டா துறை முகத்தை விரிவுபடுத்த…..மேற்கு இலங்கையில் உள்ள நோராச்சோலை கடலோரக் கிராமத்தில் மின் நிலையம் அமைக்க….. என சீனாவுக்கும் அழைப்பு விடுத்தது.

இதிலும் என்ன தப்பு? என்று கேட்கலாம் சிலர். இந்தியாவோடு மட்டும் வர்த்தகம் அதன் மூலம் ஈழமக்கள் மீது யுத்தம் என்பதில் முழு நம்பிக்கையில்லை இலங்கைக்கு. காரணம் தப்பித் தவறி தமிழகம் கொந்தளித்தால் இந்திய அரசு அதற்கு பணிய வேண்டி வரலாம். எனவே இந்தியாவுக்கு ஆப்பு வைக்க வேண்டுமென்றால் சீனாவை அழைத்து வரவேண்டும். அதன் படியே அழைத்து வந்தது. அநேக திட்டங்களை அள்ளிக் கொடுத்தது. ஏற்கெனவே தென் மேற்கு இலங்கையில்  “நோரிங்கோ” நிறுவனத்தை நிறுவி அந்த ஆயுதக் கிடங்கில் இருந்து பலகோடிகளுக்கு ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தது சீனா.

என்ன தலை சுற்றுகிறதா…..? எனக்கும் அப்படித்தான் இருந்தது ஆரம்பத்தில். ஆனால் நாம் நேசிக்கும் மக்களது துயரத்திற்கான பின்னணிகளைப் புரிந்து கொள்வதற்கு நமக்கே கொஞ்சம் சலிப்பு வருகிறதென்றால் அப்புறம் நாம் அவர்களது விடுதலையைப் பற்றி யோசிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது? என்று என்னை நானே கேட்டுக் கொண்டு மீண்டும் புத்தகத்தினுள் மூழ்கிப் போனேன்.

மிக எளிமையான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூலை வெளியிட்டிருப்பது “முத்துக்குமார் நண்பர்கள் இயக்கம்” (ஈழத்தின் விடியலுக்காய் தன்னைத் தானே தீய்த்துக் கொண்ட நம்ம Bookமுத்துக்குமார்தான்)  எண்ணற்ற இளைஞர்களது  உழைப்பு இதில் ஒளிந்திருக்கிறது. இன்னும் இதில் ஒளிந்திருக்கும் உண்மைகளை நீங்கள் அறிந்தே தீர வேண்டுமென்றால்  எழுபத்தி ஐந்து ரூபாயை கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு ரூபாய் பூத்தில் ஏறி 044 24354142 நம்பருக்கு ஒரு போனைப் போடுங்கள். அல்லது உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணோடு எனக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பி வையுங்கள்

புத்தகம் உங்களைத் தேடி வரும்.

அட……போன் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. ஒருதொலைபேசி நிறுவனத்தால் நாளை இந்தியாவின் ரகசியங்கள் எப்படி கப்பல்…… விமானம் எல்லாம் ஏறப் போகிறது என்கிற அபாயம்.

இப்படி பலபக்கம்……பலபேருக்கு கதவைத் திறந்திவிட்டிருக்கும் இலங்கையால் இந்தியாவுக்கு ஒரு மாபெரும் ஆப்பு ஒன்று கண் விழித்துக் காத்திருக்கிறது. அதுவும் 2007 செப்டெம்பர் 15 ஆம் தேதி கையெழுத்தான ஒப்பந்தம் ஒன்றின் மூலம். இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் மர்ம நபரின் பெயர் :ஒலோப் ஹாக். ஐரோப்பியரான இந்த ஹாக்தான் தென் கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றியவர். இவரை இலங்கையின் குக் கிராமங்களுக்கெல்லாம் செல்போன் சேவையை கொண்டு போக வேண்டும் என்பதற்காக அணுகுகிறது ராஜபக்சேவின்  சிங்கள அரசு. (ஒருவேளை எங்கெங்கே மக்கள் பட்டினியில் செத்தார்கள்…… அல்லது பாஸ்பரஸ் குண்டுகளால் செத்தார்கள் என்கிற தகவல்களுக்காக இருக்கலாம்) அந்த ஆசாமி அழைத்துப் போன இடம் சிங்கப்பூரில் உள்ள சிங்டெல் நிறுவனம்.  சிங்கப்பூரின் சிங்டெல் நிறுவனத்தை அணுகி தாங்கள் ஆற்ற வேண்டிய தொலைபேசி சேவையை ராஜபக்சே  சொல்ல….. “இந்தியாவுக்கு ஏற்கெனவே நீங்கள் கொஞ்சம் அதிகmahindaமாக சீனாவோடு கொஞ்சுகிறீர்களோ என்கிற சந்தேகம் இருக்கிறது….இந்த நேரத்தில் எங்கள் சிங்டெல் நேரடியாக உங்கள் நாட்டுக்குள் வருவதைவிட எங்கள் இந்தியப் பங்காளி ஏர்டெல்லை அழைத்துக் கொள்ளுங்கள்.எங்களுக்கு அதில் 30% பங்கு இருக்கிறது. அதை வைத்து மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்கிறது சிங்டெல் நிறுவனம்.

“ஆனால்….. இதற்கான அடிப்படைத் தகவல் தொடர்பு கட்டுமானப் பணிகளையும்…..

நாடு முழுவதும் நிர்வகிக்கும் பணிகளையும்…..

நாங்கள் எங்கள் சகோதர நிறுவனமான ஹுவாவேய் நிறுவனத்தை வைத்துச் செய்து கொள்கிறோம்”. என்கிறது சிங்கப்பூரின் சிங் டெல்.

பிரச்னையே இங்குதான் கிளம்புகிறது.

1000 கோடி முதலீட்டில் தொலைபேசி  சேவையை தொடங்குவது இந்தியாவின் ஏர்டெல்.

கட்டுமான….நிர்வாகப் பணிகளோ சீனாவின் ஹுவாவேய்.

இந்த ஹுவாவேயின் உண்மையான உரிமையாளர் யார்? அதற்கும் சீனாவின் உளவு நிறுவனமான MSS க்கும் என்ன தொடர்பு என்பதெல்லாம் நம்மைக் காட்டிலும் இந்தியாவின் உளவு அமைப்புக்களான  IB  க்கும் RAW  க்கும் மிக நன்றாகவே தெரியும்.

இந்த ஹுவாவேய் நிறுவனம் தங்கள் நாட்டுக்குள் கால்வைக்கவே கூடாதென்று கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளியது ஆஸ்திரேலியா…..ஆளை விடுப்பா சாமி என்றது அமெரிக்கா……கதவை இழுத்துச் சாத்தியது கனடா.

ஏற்கெனவே இந்தியாவில் அதனது  பல திருவிளையாடல்களுக்காக பலமுறை எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இந்திய உளவு அமைப்புக்களின் எச்சரிக்கைகளையும் மீறி அதனோடு உறவு வைத்துக் கொண்ட இந்தியாவின் பெரு முதலாளிகள் எல்லாம் யார்….யார்…..?

சீனாவின் உளவு நிறுவனத்தோடு தொடர்புடைய ஹுவாவேய் Mkநிறுவனத்தின் பங்குகள் 49% இல் இருந்து 74% பங்குகள் ஆகSG உயர்த்தப்படும் போது தயாநிதி மாறன் மெளனம் காத்தது ஏன்?

பின்னர் வந்த ராசாவும் வாயைத் திறக்கவில்லையே என்ன காரணம்?

இலங்கையில் ஏர்டெல்லின் மூலம்  சீனாவின் உளவு நிறுவனம் மஞ்சக்குளிக்கும் இந்த செயல் இந்தியாவை நாளை பாதிக்குமா? பாதிக்காதா?

இது இந்தியாவின் வெளிஉறவுத் துறை ஆலோசகர்கள், பாதுகாப்புத்துறை ஆலோசகர்கள் என வலம் வரும் மும்மூர்த்திகள் எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், விஜய்சிங் போன்றோருக்கு உரைத்ததா இல்லையா? என்கிற இந்தியாவின் பாதுகாப்பு குறித்த ஓராயிரம் கேள்விகளை எழுப்புகிறது இச்சிறு நூல்.

இவற்றையெல்லாம் வாசிக்கும் போது உண்மையிலேயே தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கவனிக்கப்பட வேண்டியவர்கள் கொளத்தூர் மணி போன்ற மக்கள் நலத்தில் மாளாத அக்கறை கொண்டவர்களா?

அல்லது இந்தியாவின் பாதுகாப்பைப் பற்றி இம்மியளவும் கவலைப்படாது சீனாவின் உளவு நிறுவனத்தோடும்,  பாகிஸ்தானோடும் பகிரங்கமாகவே உறவு கொண்டிருக்கும் இலங்கையோடு கொஞ்சி குலவுகின்றவர்களா? என்கிற கேள்வியெல்லாம் உங்களுக்குள் எழுந்தால் சந்தேகமே வேண்டாம் நிச்சயம் நீங்களும் ஒரு தேசத்துரோகிதான்.

நன்றி:

http://pamaran.wordpress.com/