Showing posts with label அகதி. Show all posts
Showing posts with label அகதி. Show all posts

Saturday, July 11, 2009

தமிழர்கள் இன்னும் உணர்வை இழக்கவில்லை – பருத்தியன்.

தமிழர்கள் இன்னும் உணர்வை இழக்கவில்லை    - பருத்தியன்

தூக்கமில்லாத இரவுகளுடன் கரைகின்றன தமிழர்கள் பெரும்பாலோரினது இரவுப் பொழுதுகள். தோல்வியை ஜீரணிக்க முடியாமல் , இழப்புக்களை தாங்கிக்கொள்ள இயலாமல் விம்மிவெதும்பும் கனத்த இதயங்களுடன், விழியோரத்தில் கண்ணீருடன் கேள்விக் குறிகளாய் எதிர்காலத்தின் எதிர்பார்ப்புக்கள்.

    இறுதியாக நடந்துமுடிந்த போரில் தமிழினம் அனுபவித்த வலிகளை வார்த்தைகளினால் விபரிக்க முடியாது. சர்வதேசம் முழுவதினாலும் முற்றுமுழுதாக கைவிடப்பட்ட நிலையில், சிங்கள கொலைவெறி அரசினாலும் பல வல்லாதிக்க வல்லரசுகளின் சுயநலத் தேவைகளுக்கான அவற்றின் கூட்டுதவியினாலும் ஈழத்தமிழினம் அழித்து சின்னாபின்னமாக்கப்பட்டது. யாருமற்ற நிலையில் அநாதரவாய் அந்தரித்து நின்றது ஈழம்.

    முப்பது வருட காலமாய் தனியே  நின்று போராடிய தமிழர்படையை வெல்ல முடியாமல் திணறிய சிங்களம் இப்போது பல வல்லரசுகளின் பூரண ஆதரவோடு ஒரு இன அழிப்பு யுத்தத்தை நடத்தி முடித்துவிட்டு புலிகளை முற்றாக அழித்தொழித்துவிட்டோம் என எக்காளமிடுகிறது.

சர்வதேசங்களின் ஆசீர்வாதத்தோடு சிங்கள அரசு தமிழர் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்பு மற்றும் இனவழிப்பு நடவடிக்கைகளில் ஈழத் தமிழினம் இழந்தவை கொஞ்ச நஞ்சமல்ல.

    வீடிழந்து, நிலமிழந்து, சேர்த்துவைத்த செல்வங்கள் அனைத்தையும் இழந்து உயிரைத்தன்னும் காப்பாற்றிக் கொள்ளலாமென எண்ணி ஏதிலிகளாய் அகதிகளாய் உணவின்றி, நீரின்றி அலைந்துதிரிந்து... கடைசியில் உயிரையும் உறவுகளையும் பறிகொடுத்து கைகால்களை இழந்து ஊனமாகி இன்னும் கொலைக்கூடாரங்களுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும் பேரவலத்துடன் இன்றும் தமிழினம்.

    தமது சுய உரிமைக்காகப் போராடிய தமிழினம் திட்டமிட்டு சிதைக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை சிதைத்து அதை இல்லாமற் செய்வதற்கு எத்தனை நாடுகள் போட்டி போட்டு முண்டியடித்தன என்பதை கண்முன்னே கண்டோம். முப்பது வருடத்துக்கும் மேலாக எத்தனையோ சோதனைகளையும் தடைகளையும் தாண்டி வளர்ச்சிபெற்று வந்த தமிழர் போராட்டத்தினை எப்படியாயினும் சிதைத்து விட வேண்டுமென்பதில்  சிங்களத்தினைவிட சர்வதேசமே அதீத அக்கறை காட்டியதையும் காண முடிந்தது.

    பொதுவாக உலகின் விடுதலைப் போராட்டங்களை பார்க்கும் கோணத்திலிருந்து விலகி ஈழத்தமிழரின் நியாயமான விடுதலைப் போராட்டத்தினை "பயங்கரவாதம்" எனப் பொய்முத்திரை குத்திச் சிறுமைப்படுத்தியது சர்வதேசம்.

இதற்கு சரியான உதாரணமாக, 2002ற்கு பிற்பாடான சமாதான பேச்சுவார்த்தைக் காலத்தில் புலிகளின் மீதான தடை இலங்கையில் அகற்றப்பட்டிருந்த போதும் , சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளை ஐரோப்பிய நாடுகள்சில தடைசெய்ததனைக் குறிப்பிடலாம்.

    இவைமட்டுமல்லாமல்  ஈழவிடுதலைப் போராட்டத்திற்கெதிராக வெளிப்படையாகவும், திரைமறைவிலும் பற்பல காலகட்டங்களில் சர்வதேசம் செய்த பாதகச் செயல்கள் பலவுண்டு.  இன்றுவரைக்கும், ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவான குரல் கொடுத்ததாக எந்தவொரு சர்வதேச நாடுமே இல்லையென்பது ஈழத்தமிழரின் துர்ப்பாக்கியமே.

    ஈழ விடுதலைப் போராட்டமானது தமிழர்களின் தன்மான உணர்வு, விடுதலையுணர்வு, தியாக உணர்வு, மனோபலமிக்க போராட்ட உணர்வு என அவர்களின் உன்னத உணர்வுகளினாலேயே எல்லாவிதமான சோதனைகளையும் ,சவால்களையும் சமாளித்துத் தாண்டி வந்திருந்தது. சோதனைகளையும் சாதனைகளாக மாற்றினர். சவால்களை எதிரிக்கே திருப்பிக் கொடுத்தனர். ஆனால் இன்று ஒரு இக்கட்டான நிலைமையை ஈழப் போராட்டம் எதிர்கொண்டிருக்கும் நிலைமையில் அனைத்துத் தமிழர்கள் மத்தியிலும் ஒரு குழப்பமான மனநிலையைக் காணக் கூடியதாகவுள்ளது.

    "எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் , இனிமேல் என்ன?" என்பது தமிழர்கள் எல்லோர் மன ஆழத்திலும் எழும் கேள்வி.

உண்மைதான் ... நிறையவே இழந்து விட்டோம். ஆனால் எல்லாவற்றையும் அல்ல.எங்கள் உணர்வுகளை நாங்கள் இன்னும் இழக்கவில்லை. உங்களை நீங்களே ஆத்மார்த்தமாக கேட்டுப் பாருங்கள்!  "நாம் எமது தன்மான உணர்வையோ, விடுதலையுணர்வையோ, இன உணர்வையோ அல்லது போராட்ட உணர்வையோ சிறிதளவேனும் இழந்து விட்டோமா?"

பதில் என்ன.....?

இழப்புக்களின் வலிகள் உங்கள் உணர்வுகளை அதிகமாக்கியிருக்கும். முன்பைவிட பலமடங்கு அதிகமாக உங்கள் உணர்வு தற்பொழுது உருப்பெற்றிருக்கும். நமது போராட்டத்தின் கடந்த கால வரலாறுகளில் எங்கெல்லாம் நாம் விழுந்தோமோ , அங்கெல்லாம் வீறு கொண்டெழுந்திருந்தோம்.

இப்போதும் வீறுகொண்டெழத் துடிக்கின்றோம். ஆனால் போராட்டக் களம் குழப்பங்களைத் தவிர மீதம் வெறுமையாகவே இருக்கின்றது. இதனால்தான் பலர் மனமொடிந்து இருக்கின்றார்கள் என்பதும் உண்மை. புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த தொடர் போராட்டங்களும் நிறைவுசெய்யப்பட்ட நிலையில், அடுத்தகட்டப் போராட்டங்களுக்காக காத்திருக்கின்றார்கள் வீறுகொண்ட உணர்வுகளோடு தன்மானத் தமிழர்கள்.

    இந்நிலையில் அவர்கள் கேட்பதெல்லாம் இனிவரும் களம், அது     அகிம்சை வழியோ... அரசியல் வழியோ... போராட்ட வழியோ... எதுவாக அமைந்தாலும் அதை அமைத்துக் கொடுப்பவர்கள் விலைபோகாத விடுதலையுணர்வுடன், இதயச்சுத்தியுடன் இருக்க வேண்டுமென்பதே.

மனரீதியில் குழப்பங்களை ஏற்படுத்தும் விடயங்களைத் தவிர்த்து காலத்திற்கேற்ப ஈழ உணர்வாளர்களின் போராட்ட உணர்வுகளுக்கு வழிசமைத்துக் கொடுக்கக் கூடியதாக அவர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதும், உணர்வுகளோடு காத்திருக்கும் மக்களின் எதிர்பார்ப்பு  என்ன என்பதனை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம்.

அத்தோடு எதிர்வரும் போராட்டக் களத்தில் இளையோரினதும், மாணவர்களினதும் பங்களிப்பும் பெறப்படவேண்டியதும் மிகமிக அவசியம்.ஏனெனில் இவர்களின் போராட்டங்கள் வீரியமிக்கவை. இயல்பாக எழும் உணர்வுகளோடு வேகமாய்ச் செயற்படும் வல்லமை மிக்கவர்கள் இந்த மாணவர்களும்,இளையோர்களும். இவ்வாறு செய்வதன் மூலம் நமது போராட்டத்தினை பன்முகப் படுத்தலாம்.

    தற்போதைய நிலைமையில் தமிழருக்கான போராட்டக்களம் எதுவாக அமைய வேண்டும் என்பதுவும் அப்போராட்டங்கள் எப்படியான முறைமைகளில் வழிநடத்தப்பட வேண்டும் என்பதனையும் பொறுத்தவரையில் மிகப்பெரியளவில் வாதவிவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், அவ்வாறான தளம்பல் நிலையிலிருந்து தெளிந்து கருத்து வேறுபாடுகளைக் களைந்து  ஓரணியில் தமிழர்கள் அனைவரும் திரளவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் நிற்கின்றோம் என்பதனை ஒவ்வொரு உணர்வுமிக்க தமிழனும் புரிந்து செயற்படவேண்டும்.

    தமிழர்களின் விடுதலையுணர்வை,எழுச்சியுணர்வை அடக்குவதிலேயே இப்போது சிங்களம் குறியாய் இருக்கின்றது. அதற்கான காய்நகர்த்தல்களில் அது இறங்கிவிட்டது. இலங்கையில் உள்ள தமிழர்களின் இன உணர்வுகளை அடக்குமுறைகளினால் அடக்கிவிடலாம் என நம்பும் சிங்களம், புலம்பெயர்தேச தமிழ்மக்களின் எழுச்சிகளை அடக்குவதற்கு பல்வேறு சதிவேலைகளை முடுக்கிவிட்டிருக்கின்றது. இந்த விடயத்தில் புலம்பெயர் உறவுகள் மிக அவதானமாக இருக்கவேண்டும். எதிரியின்  சதிகளை முறியடிப்போம். ஒருபோதும் நாம் நமது உணர்வுகளை எதற்காகவும்,எச்சந்தர்ப்பத்திலும் இழக்கப் போவதில்லை என்பதனை செயலில் காட்டுவோம்!

தமிழர்களின் விடுதலைப் போராட்ட உணர்வுகளை யாராலும் எவ்விதத்திலும் அழிக்க முடியாது என சிங்களத்துக்கும் அதனோடு துணைநின்ற சர்வதேசத்திற்கும் எடுத்தியம்புவோம்!

ஈழத்தமிழ் உணர்வுகளோடு... நம் மாவீரர்களின் கனவுகளைச் சுமந்தபடி... நமது தாயக விடியலுக்காகப் போராடுவோம்!

நம் உணர்வுகளால் உலகை உறுத்துவோம்!

அதனை நம் பக்கம் மாற்றுவோம்!

    ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் என்பது இந்த உலகத்தின் வரலாற்றுப் பதிவுகளில் ஒன்று. எழுதப்படப்போகும் அவ்வரலாற்றுப் பதிவுகளில் ஈழத்தமிழரின் நீண்டகால போராட்டம் வீணாகிப்போனது என்று பதியப்படாமல் வெற்றிபடைத்து தனிநாடு கண்டு சரித்திரம் படைத்தது என்றே பதியப்படவேண்டும்.

எமது எதிர்கால வரலாறு எமது உணர்வுகளில்.......

உரிமை இழந்தோம்.. உடைமையும் இழந்தோம்...!  - உணர்வை இழக்கலாமா???

உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா???

விடியலுக்கில்லை தூரம்... உன் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்???

உன் நெஞ்சம் முழுவதும் வீரம்... இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்???

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

-பருத்தியன்.

Friday, July 3, 2009

இனப் படுகொலையை மறைக்கும் ராஜ தந்திரம்.

vanni makkal
ஈழத் தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை நசுக்க, எந்தக் கரிசனமும் இன்றி ஒரு மாபெரும் இனப் படுகொலையை நடத்தி முடித்த சிறிலங்க இன வெறி அரசை, தன்னாட்டு மக்களை பாதுகாக்கும் கடமையை (Responsibility to Protect – R2P) கைதுறந்த காரணத்திற்காக உலக நாடுகள் தண்டிக்க வேண்டும் என்று கோரிவரும் நேரத்தில், அது கடைபிடித்த அரச பயங்கரவாத வழிமுறைகளை நியாயப்படுத்தி, காப்பாற்றிடும் ராஜ தந்திர முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன
ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணும் பாதையை தன்னிச்சையாக முறித்துவிட்டு, இராணுவ ரீதியாக தீர்வு காணும் முடிவுடன், தெற்காசிய நாடுகளின் முழுமையான ஒத்துழைப்புடன் அது நடத்தி முடித்த இனப் படுகொலை, இன்று உலகின் கண்களை தாமதமாகத் திறந்ததினால் உருவான சர்வதேசச் சட்டச் சிக்கலில் இருந்து தன்னை காத்துக் கொள்ளும் முயற்சியில் சிறிலங்க அரசு இறங்கியுள்ளது. அதன் சீரிய முயற்சிகளின் ஒரு அங்கம்தான் சமீபத்தில் ‘பாரம்பரியமிக்க’ ஆங்கில நாளிதழ் ஒன்றில் சிலி நாட்டின் தூதராக இலங்கையில் பணியாற்றிய ஜார்ஜ் ஹீன் என்பவரின் ‘ஆழமான’ கட்டுரையாகும்.
“தங்கள் நாட்டை (சிறிலங்கா) கடந்த 25 ஆண்டுகளாக நாசப்படுத்திவந்த பயங்கரவாதத்தை போரின் மூலம் முடிவிற்கு கொண்டு வந்த சிறிலங்க அரசை பாராட்டுவதற்குப் பதிலாக, அதன் மீது தனது நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பை கைவிட்டதாக குற்றம் சாற்றுவது முறையான செயல் அல்ல” என்று சிறிலங்க அரசை சர்வதேச சட்டங்களின் கீ்ழ் தண்டிக்க முயன்றுவரும் ஐரோப்பிய நாடுகளை குறை கூறியுள்ளார் ஜார்ஜ் ஹீன்.
இனப் படுகொலையை மறைக்க…
இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போரின் (சிறிலங்க அரசு குறிப்பிடும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பதையும் பயன்படுத்துகிறார்) இறுதிகட்டத்தில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் சிறிலங்க‌ப் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது அங்கு சென்று வந்த ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கீ மூன், அவருடைய அலுவலகத் தலைமை அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோராலும், அநதப் படுகொலை நிகழ்த்தப்பட்ட இடத்தை செயற்கைக் கோள் எடுத்த படங்களின் வாயிலாகவும் உறுதி செய்துகொண்ட நிலையிலேயே, தன்னாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை கைவிட்ட குற்றத்தை சிறிலங்க அரசின் மீது உலக நாடுகள் சுமத்தி வருகின்றன.
இதனை தவறென்று வாதாட முற்பட்டு, ராஜபக்ச ஆதரவு ஆங்கில நாளேட்டில் எழுதியுள்ள ஜார்ஜ் ஹீன் (Jorge Hein), தன்னாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பை (Responsibility to Protect) சிறிலங்க அரசு தட்டிக் கழிக்கவில்லை என்று கூறி தனது வாதத்தை துவக்கியிருக்க வேண்டும் அல்லது போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவது தவறு என்றோ அல்லது உறுதிச் செய்யப்படாதது என்றோ கூறி துவக்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் அவர் துவக்கவில்லை. சந்திரிகா குமாரதுங்கா சிறிலங்க பிரதமராக இருந்தபோது அந்நாட்டு அயலுறவு அமைச்சராக இருந்த லக்ஷ்மண் கதிர்காமரின் திறமைகளையெல்லாம் பட்டியலிட்டுவிட்டு, அவர் படுகொலை செய்யப்பட்டதையும், அவ்வளவு துல்லியமாக அவரை படுகொலை செய்யும் திறன் இதுவரை காணாத பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளால் மட்டுமே முடியும் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்படும் விடயம் என்று கூறி ஆரம்பித்து பிரச்சனைக்கு வருகிறார்.
எந்தப் பிரச்சனைக்கு வருகிறார் என்றால், இறுதி கட்ட இனப் படுகொலை நடந்ததா இல்லையா என்பது பற்றியல்ல, மாறாக எப்படிப்பட்டது விடுதலைப் புலிகள் இயக்கம் என்பதை விவரிக்கத் துவங்குகிறார். சிறிலங்க அரசு திட்டமிட்டு, தெற்காசிய நாடுகளின் உதவியுடன் நடத்தி முடித்த இனப் படுகொலையை மறைக்க முற்படும் ஜார்ஜ் ஹீன், உண்மையில் இப்படிப்பட்ட ‘உள்நாட்டுப் போருக்கு’ காரணமான இனப் பிரச்சனையை விவரமாக விளக்கிவிட்டு, அதற்கு அரசியல் ரீதியான தீர்வு காண சிறிலங்க அரசு ‘எடுத்த’ முயற்சிகளையெல்லாம் பட்டியலிட்டுவிட்டு, பிறகு அதிபர் ராஜபக்ச மேற்கொண்ட இராணுவ ரீதியிலான தீர்வுத் திட்டத்தை ஆதரித்து எழுதியிருப்பாரேயானால், அங்கு பணியாற்றிய ராஜ தந்திரியின் கருத்தாக அதனை கருதியிருக்கலாம்.
அவ்வாறு செய்யாமல், ராஜபக்ச அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்கு உதவிய இந்தியா, சீனா, பாகிஸ்தான், இரஷ்யா ஆகிய நாடுகள் என்ன காரணத்தை கூறினவோ அதனையே இவரும் கூறி – பயங்கரவாதத்திற்கு எதிரான போர் – தமிழர்களுக்கு எதிரான போரை நியாயப்படுத்துகிறார்! ஏனெனில் அங்கு விடுதலைக்காக போராடியவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரையிட்டால்தான், அவர்களுக்கு ஆதரவளித்த மக்களையும் ஒட்டுமொத்தமாக துடைத்தொழிப்பதற்கு நியாயம் கற்பிக்க முடியும். இந்த வித்தையை ராஜபக்ச அரசு – குறிப்பாக அந்நாட்டு அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்பய ராஜபக்ச கையாண்டுள்ளார். அதனால்தான், பாதுகாப்பு வலயத்திலிருந்த மருத்துவமனையை இராணுவ இலக்குதான் (legitimate military target) என்று கூறி அதன் மீது சிறிலங்க இராணுவம் குண்டு வீசியதை நியாயப்படுத்தினார்!
எனவே போரில் பாதிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்லது அவர்களுக்கு துணை போனவர்கள் என்று கூறிவிட்டால், அதன்பிறகு ‘உள்நாட்டுப் போரில்’ கொல்லப்பட்டவர்களைப் பற்றி எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாது அல்லவா? அப்படித்தானே இராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும் அமெரிக்காவும் அதன் நேச நாட்டுப் படைகளும் செய்தன! இல்லாவிட்டால் ஈராக்கில் மட்டும் 11,50,000 பேர் கொல்லப்பட்டதற்கு என்ன நியாயம் கூற முடியும்? எனவே அந்த ‘சட்டபூர்வமான’ வழிமுறையை கொண்டு பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதை மறைக்க முயன்றுள்ளார் ஜார்ஜ் ஹீன். நல்ல ராஜ தந்திரி.
கால் நூற்றாண்டிற்கு மேலாக அங்கு நிலவிவருவது அந்நாட்டின் பூர்வீக‌க் குடிகளின் சம உரிமைப் போராட்டத்தின் அடுத்தக் கட்ட வளர்ச்சியான விடுதலைப் போராட்டம் என்பதையும், அதற்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பதற்கு அடுத்தடுத்து வந்த சிறிலங்க அரசுகள் தவறிவிட்டன என்பதையும் மிகச் சாதுர்யமாக மறைத்துள்ளார் ஜார்ஜ் ஹீன்.
தீர்வுத் திட்டத்தை தூக்கி எறிந்த சிறிலங்கா
2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை சிலி நாட்டின் தூதராக ஜார்ஜ் ஹீன் கொழும்புவில் பணியாற்றியுள்ளார்.
இந்த காலகட்டத்தி்ல்தான் இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் பேச்சுவார்த்தைகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், சிறிலங்க அரசிற்கும் இடையே நார்வேயின் அனுசரணையுடன் நடந்துவந்து, அதன் உச்சக் கட்டமாக நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்கு வகை செய்யும் நோக்கில் இடைக்கால சுய நிர்வாக அதிகார அமைப்பை (Interim Self Governing Authority _ ISGA) நிறுவுவதற்கான திட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்க அரசிற்கு அளிக்கிறார்கள்.
தாங்கள் அளித்த தீர்வுத் திட்டத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று புலிகள் வற்புறுத்தவில்லை. மாறாக, இதனை ஒரு அடிப்படையாக்கி இறுதியான அரசியல் தீர்வை உருவாக்க பேச்சுவார்த்தையின் மூலம் முயற்சிப்போம் என்று அறிக்கையும் விடுகிறார்கள்.
இலங்கைத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண தயார் என்று கூறிவந்த சிறிலங்க அரசு, இத்தீர்வு திட்டத்தை ஆராய்ந்து பார்க்கிறோம் என்று கூட சொல்லாமல் கிடப்பில் போட்டது. அமைதிக்கான முன்னெடுப்புகளை ஓரளவிற்கு மேற்கொண்டு வந்த, அப்போது பிரதமராக இருந்த ரனில் விக்கிரசிங்கே அரசின் அதிகாரத்தை பறித்தார் அதிபராக இருந்த சந்திரிகா. இவர் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக அமைதித் தீர்வு காண்பேன் என்று கூறி (1995இல்) தமிழர்களின் பேராதரவுடன் ஆட்சிக்கு வந்தவர். இரண்டு முறை அதிபராக இருந்தார், அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதை விட, அதற்குத் தயாராக இருந்த விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பதற்கான முயற்சிகளை சர்வதேச ரீதியில் மேற்கொண்டார். அதற்குத்தான் இவருக்கு ‘தமிழரான’ லக்ஷ்மண் கதிர்காமர் பெரிதும் உதவினார்.
அவருடைய ராஜ தந்திர திறனைத்தான் ஜார்ஜ் ஹீன் வெகுவாகப் புகழ்ந்து புளங்காகிதம் அடைகிறார். விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று சித்தரிக்க எத்தனையோ காரணங்களை அடுக்கும் ஜார்ஜ் ஹீன், ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லட்டும். உலகில் எந்த பயங்கரவாத இயக்கம் ஒரு விரிவான அரசியல் திட்டத்தை – சர்வதேச சட்ட விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட – திட்டத்தை முன்வைத்தது?
ஒரு மூன்றாம் நாட்டின் அனுசரணையுடன் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில், தங்களை இன ரீதியாக ஒடுக்கிவரும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய பயங்கரவாத இயக்கம் எது?
விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக ஒழித்துக்கட்டுவதே தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு தரும் என்று கூறி கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை கொன்று குவித்ததே சிறிலங்க இராணுவம், அதற்கு எதிராக போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம் பதிலடி கொடுத்து பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரை கொன்றது, காயப்படுத்தியது. ஆனால், அவர்களால் கொல்லப்பட்ட சிப்பாய் அல்லாத சிங்களவர் யாராவது உண்டா? அப்படி ஒரு செய்தியை இப்படிபட்ட ராஜ தந்திர புலிகளால் காட்ட முடியுமா? ஒரு சிங்களப் பெண் கற்பழிக்கப்பட்டார் என்று கூற முடியுமா?
இரண்டரை ஆண்டுகளாக நடந்த இந்தப் போரில் சிறிலங்க இராணுவ இலக்குகளை குறிவைத்து 6 முறை விமான தாக்குதல் நடத்தினார்களே விடுதலைப் புலிகள், அதில் ஒன்றாவது சிங்கள மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்டதா?
ஆனால், பாதுகாப்பு வலயம் என்று அறிவித்து அங்கு அப்பாவி மக்களை வரவழைத்து, அவர்கள் அங்கு தஞ்சமடைந்த பிறகு, அங்கிருக்கும் மருத்துவமனை, சிறுவர்கள் கூடம் என்று குறிவைத்து தாக்குதல் நடத்தியதே சிறிலங்க இராணுவம்? அது அரச பயங்கரவாதமல்லாவா? சொந்த நாட்டு மக்களை பாதுகாத்திட வேண்டும் என்ற கடமையில் இருந்த வழுவிய குற்றமாகதா இது? இது சிறிலங்க அரசின் அரச பயங்கரவாத நடவடிக்கையா இல்லையா?
சிறுவர்களை தங்கள் படைகளில் சேர்த்த குற்றங்களைச் செய்த பயங்கரவாத இயக்கம் என்கிறார். தமிழ் சிறுவர்களையும், சிறுமிகளையும் சிறிலங்க இராணுவத்தினர் உச்சி மோந்து அன்பு காட்டினரோ? இப்பொழுது கூட, சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் இளம் வயதினர் ஒவ்வொரு நாளும் கடத்தி பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகின்றனரே? சிறுவர்கள் கடத்திச் செல்லப்படுகின்றனரே? படிக்கச் சென்ற சிறுவர்கள், சிறுமிகள் மீது இப்படிப்பட்ட அரச பயங்கரவாதம்தானே 1974 முதல் சிறிலங்க அரச படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்டது? மறுக்க முடியுமா? புகைப்படங்களும், ‌வீடியோ காட்சிகளும் இந்தக் கதைகளைத் தானே இன்றுவரை பேசுகின்றன.
கொழும்பு நகரில் சிறிலங்க நாடாளுமன்றத்திற்கு முன்னால் சம உரிமை கேட்டு சாத்வீக வழியில் போராடிய தமிழர் தலைவர் செல்வநாயகம் உள்ளிட்டோர் மீது சிறிலங்க காவலர்களும், காடையர்களும் தாக்குதல் நடத்தவில்லையா? அமைதியாக கூடி தமிழ் மாநாடு நடத்திய மக்கள் மீது காவல் துறையினரே வன்முறை செய்து 9 பேரைக் கொல்லவில்லையா?
இதையெல்லாம் பார்த்தப் பிறகுதானே உருவானது ஆயுதப் போராட்டம்? சும்மாவா சுட்டார்கள் ஆல்பிரட் துரையப்பாவை? இந்த வரலாற்றையெல்லாம் கவனமாக மறைத்துவிட்டு (மூன்றாண்டுக் காலம் கொழும்புவில் பணியாற்றியவருக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்), தனது நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக எழுந்த பிரிவினைப் போராட்டத்தை ஒடுக்க அந்நாட்டு அரசிற்கு சட்டப்பூர்வமான சுய காப்பு உரிமை உள்ளது என்று கூறுகிறார் ஜார்ஜ் ஹீன்! தனது எழுத்தோவியத்தை முடிக்கும் போது தமிழர்களின் சட்டப்பூர்வமான குறைகளை நிறைவேற்ற சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்றும் கூறுகிறார்! என்னே முர‌ண்பாடு! Legitimate Grievances of the minority Tamils என்பதை ஒப்புக் கொள்ளும் இந்த ராஜ தந்திரி, அது என்ன? எவ்வாறு உருவானது? அதற்கான தோற்றவாய் எது? உருவான காலம் எது? எப்படி பெரிதானது? அது ஆயுதப் போராட்டமாக உருவெடுக்கக் காரணம் என்ன? என்பதை நியாயமாக ஆராய்ந்திருப்பாரெனில் யார் பயங்கரவாதி என்பதும், அரச பயங்கரவாதம் எது என்பதும் தெளிவாகியிருக்கும் இவர் எழுத்தை படிப்பவர்க்கு.
தங்களை தனது முழு சக்தியையும் கொண்டு ஒடுக்கும் வலிமை வாய்ந்த எதிரியை வீழத்த ஆயுத வலிமையை ஏற்பதும், தங்கள் இன்னுயிரை ஈந்து தம்மக்களை அப்படிப்பட்ட கொடுமையிலிருந்தும் காப்பதுதான் தற்கொலைத் தாக்குதல். கொடுமையான எதிரியை ஒழித்துவிட்டு, அவனின் படையிடம் சிக்காமல் தங்களையே அழித்துக் கொள்வதும், தங்களையே கருவியாக்கி, தமது இனத்தை அழிக்கும் எதிரிகளை அழிப்பதும் நாகரீக மானுடத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட போராட்ட வழிமுறைகள்தான். இது தவறென்றால் நாம் வாஞ்சிநாதனையும், உத்தம் சிங்கையும் கொண்டாட முடியாது. பகத் சிங்கை நமது நாட்டின் பெருமையாக கருதி சிறப்பு தபால் தலையையும் வெளியிட முடியாது. ஒரு இனத்தின் மீட்சிக்காக தங்களையே தியாகம் செய்வோரை எப்படி அழைப்பது என்பது அந்த இனத்தின் உரிமை. அதே நேரத்தில் அரச பயங்கரவாதத்தை சகித்துக் கொண்டு, ஏதோ ஒரு அரசியல் தீர்வை ஏற்றுக் கொண்டு, அமைதி காத்து வாழ் என்று கூறுவதற்கு உலகிற்கு உரிமை கிடையாது.
ஈழத் தமிழினத்தின் போராட்டத்திற்கான அடிப்படையை விளங்கிக் கொள்ள வேண்டும், அதன் மீது தீர்வை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் தங்களுடைய போராட்டத்திற்கான தீர்வு எது என்பதை இறுதியாக தீர்மானிக்கும் பொறுப்பு அந்த மக்களுக்கு மட்டுமே உரியது.
இதனை உணர்ந்து கொண்டவர்கள் மனிதாபிமானிகள் – அவர்கள் ராஜ தந்திரிகளாக இருந்தாலும் – சிறிலங்க அரசு நடத்தி முடித்த போரில் பல பத்தாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் உயிர்களுக்காக அந்நாட்டு அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறுவார்கள். த‌ங்களுடைய ராஜ ‌வி‌சுவாச‌த்தை‌க் கா‌ட்ட ‌விரு‌ம்புவோ‌ர் எழு‌தினா‌ல் மட்டுமே உண்மையையும், நியாயத்தையும் மறைத்து ராஜ தந்திர நியாயம் கற்பிக்க முடியும்.
- இணைய உலகம்.
நன்றி: http://www.nerudal.com

Sunday, June 28, 2009

முள்வேலிக்குள் மூச்சுவிட மட்டுமே சுதந்திரம் : மெனிக் முகாம் சொல்லும் கதை

camp_vavuniyajpg refugecamp
விடுதலைப் புலிகளுடனான இறுதி மோதலின்போது முல்லைத்தீவுப் பிரதேசத்திலிருந்து வெளியேறிய மூன்று இலட்சம் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மெனிக் முகாமுக்கு தனது உறவினரைப் பார்ப்பதற்காகச் சென்ற ஒரு வயதானவர்தான் அங்கு கண்டவற்றை இங்கு விவரிக்கிறார். வவுனியாவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் மெனிக் முகாம் அமைந்துள்ளது. இராணுவத்தால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய முகாம் இது. 160000 ற்கு மேற்பட்ட இடம் பெயர்ந்த மக்கள் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கடும் எறிகணைத் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இறுதி நேரத்தில் வெளியேறிய மக்கள் இவர்கள்.Image
மெனிக் முகாமுக்குள் செல்லும் ஒருவர் பல்வேறு இராணுவ சோதனைச் சாவடிகளுள் மேற்கொள்ளப்படும் சோதனைகள், கெடுபிடிகள் விசாரணைகளைத் தாண்டியே செல்ல முடியும். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், காயமடைந்தோர் என அனைவரையும் கொண்ட ஒரு திறந்த வெளிச்சிறைச்சாலையாகவே இது உள்ளதை உள்ளே செல்லும் ஒருவர் காண முடியும். இம் முகாமைச் சுற்றி கடும் பாதுகாப்புடைய முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, ஆயுதம் தாங்கிய படையினரும் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீண்ட வரிசையாக சிறிய ரென்ட்லீல் ஆன அறைகள் அலுமினியத் தகடுகள் கொண்டு பிரிக்கப்பட்டு, இம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடிப்படைத் தேவைக்கான தண்ணீரும் சுகாதார வசதிகளும் மிகவும் பற்றாக்குறையாகவே உள்ளன.
ஒரு அறைக்குள் அல்லது ஒரு தரப்பாளுக்குள் ஆகக் குறைந்தது இரண்டு குடும்பங்கள் வாழ்கின்றன. காற்றடிக்கும் போதோ அல்லது வாகனம் ஒன்று செல்லும் போதோ ஏற்படும் புழுதியால் அவற்றில் உள்ள மக்கள் குளிப்பாட்டப்படுகிறார்கள். இந்த மெனிக் முகாமுக்குள் இராமநாதன் முகாம், கதிர்காமர் முகாம், அருணாச்சலம் முகாம், ஆனந்தக்குமாரசாமி முகாம் ஆகிய நான்கு முகாம்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நாற்பதாயிரம் மக்களைக் கொண்டுள்ளது. முகாம் பகுதியில் இராணுவ வாகனங்கள் எந்நேரமும் சுற்றிக்கொண்டே இருக்கும். ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு நடந்து செல்ல மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் அதற்கு ஓட்டோக்களையே பயன்படுத்த வேண்டும். அதற்கு நூறிலிருந்து நூற்றைம்பது ரூபாய்வரை அறவிடப்படுகிறது.
முகாமுக்கு அருகில் உள்ள இரண்டு புறமும் முட்கம்பிகளால் ஆன சிறிய வழி ஒன்றினூடாகவே முகாமுக்குச் செல்பவர் நடந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். முகாமிலுள்ளவரைச் சந்திப்பதற்காகச் சிறிய குடில் ஒன்றில் காத்திருக்கவேண்டும். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தமது அன்புக்குரிய உறவினர்களைச் சந்திக்கக் காத்திருக்க அக்குடில் போதுமானதாக இல்லை. இதனால் அவர்கள் குடிலுக்கு வெளியே எரிக்கும் வெய்யிலில் காத்திருக்க நேர்கிறது. அங்கு மலசலகூடவசதிகளோ எவையும் இல்லை. ஒவ்வொரு குடிலுக்கும் ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பரல் வைக்கப்பட்டுள்ளது. வெளியேயுள்ள சிறிய கடைகளில் தேநீரும், சில குளிர்பானங்களும் கிடைக்கின்றன.
பொலிஸ் அதிகாரிகள் காலை ஒன்பது மணிக்குப் பின்பே வருகை தருகிறார்கள். அவர்கள் உங்களது விபரங்களையும், நீங்கள் சந்திக்கவுள்ள உறவினருடைய யுனிட் இலக்கம், புளொக் இலக்கம் என்பவற்றையும் உள்ளடக்கிய விபரங்களையும் பதிந்து கொள்கிறார்கள். கைத்தொலைபேசிகளும், கமெராக்களும் உள்ளே கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றை அங்குள்ள கடைகளில் ஒன்றில் கொடுத்துவிட்டே உள்ளே செல்ல வேண்டும். சில கடைக்காரர்கள் ஒரு கைத்தொலைபேசியை வைத்திருந்து தருவதற்கு ஐம்பது ரூபாய் வரை அறவிடுகிறார்கள்.
என்னுடைய பல உறவினர்கள் மெனிக் முகாமிலிருந்தார்கள். நான் முதலில் இராமநாதன் முகாமிலிருந்த எனது சகோதரியையும் அவருடைய மகன்களையும் பார்க்கச் சென்றேன். தமிழ் பேசும் ஒருவர் சிவில் உடையில் வந்து நாங்கள் ஒவ்வொருவரும் யார் யாரைச் சந்திக்கவுள்ளோம் என்ற விபரங்களை எல்லாம் எடுத்துச் சென்றார். நான் என்னுடைய விபரங்களை அவரிடம் கொடுத்தேன். அவர் கடும் தொனியில் சொன்னார் நான் இன்று எனது உறவினர்களைச் சந்திக்க முடியாதென்று. ஒவ்வொரு முகாமுக்கும் அவர்கள் வௌ;வேறு நாட்களை ஒதுக்கியுள்ளார்கள்.
எனினும் நான் இதற்காகவே கொழும்பிலிருந்து வந்ததாகத் தர்க்கித்தேன். அவர் சொன்னார் அதனாலென்ன அதற்கும் கூட ஒன்றும் செய்வதற்கில்லை என. அவருடைய சிரேஸ்ட அதிகாரிகளைச் சந்தித்து முறையிடுவதற்குக் கூட அவர் அனுமதிக்கவில்லை. அம் முகாமிலிருந்த எனது உறவினரைப் பார்க்க முடியாதவாறு நான் தடுக்கப்பட்டேன். பின்னர் நான் கதிர்காமர் முகாமுக்குச் சென்று முன்னரைப் போல எனது விபரங்களையும் நான் சந்திக்க வேண்டியவர்களின் விபரங்களையும் கொடுத்தேன்.
அவர்கள் எனது சகோதரரை அழைத்தனர். ஆனால் அவர் முட்கம்பி வேலிக்கு அப்புறத்தில் நின்றார். அவர் என்னைக் கண்டதும் அழுதார். தங்களுடைய உறவினரைக் கண்டதும் அங்கிருந்த பலர் அழுததை நான் கண்ணுற்றேன். சிலர் தங்களுடைய பெற்றாரிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்தனர். இன்னும் சிலர் தங்களுடைய கணவன் அல்லது மனைவியிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர். உறவினருடன் பேசுதல் என்பது ஒரு சிறைக் கைதியுடன் பேசுவதைப் போன்றதாகும். உங்களுக்கு 15 அல்லது 30 நிமிடங்கள் வழங்கப்படும். அங்கு காவலிருக்கும் பொலிசார் வந்து உங்களுடைய நேரம் முடிவடைந்து விட்டது எனத் தெரிவிப்பார்கள். எவருக்கும் மேலதிக நேரம் வழங்கப்பட மாட்டாது. நீங்கள் உணவு அல்லது உடுதுணியை மட்டுமே அவர்களுக்குக் கொடுக்க முடியும். அதனையும் அங்குள்ள பொலிசார் முழுவதும் பரிசோதித்து விட்டே கொடுப்பார்கள். நீங்கள் கதைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் அங்கிருக்கும் பொலிசார் உங்களை அவதானித்துக்கொண்டே இருப்பர்.
கடந்த டிசம்பரிலிருந்து ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு எவ்வாறு தாங்கள் இடம் பெயர்ந்து சென்றதாக எனது சகோதரர் எனக்கு விளக்கினார். இறுதியாக முல்லைத்தீவிலுள்ள மாத்தளனை அடைந்ததாக அவர் தெரிவித்தார். அங்கு ஏற்கெனவே ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சேர்ந்திருந்தனர். அவர்களுக்கு உணவு போதுமானதாக இருக்கவில்லை. உடுத்த உடையுடனேயே அவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். கடும் எறிகணைவீச்சுக் காரணமாக அவர்கள் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஓடிக்கொண்டிருந்தனர். பலர் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.
இறுதியாக ஏப்ரலில் அங்கிருந்து வெளியேறுவதென அவர்கள் முடிவு செய்தார்கள். அவர்கள் 8 கிலோ மீற்றர்கள் கால்நடையாக நடந்தார்கள். இராணுவத்தினர் முதலில் அவர்களைச் சுட முயன்றார்கள். பின்னர் அவர்கள் அங்கு பல மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டார்கள். பின்னர் இறுதியாக அவர்கள் மெனிக் முகாமுக்கு அழைத்து வரப்பட்டார்கள். முதலில் இரண்டு வாரங்களுக்கு அவர்களுக்குச் சமைத்த உணவு வழங்கப்பட்டது. இப்போது அவர்களுக்குச் சில பாத்திரங்களும் கரண்டிகளும் வழங்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் மாதமொன்றுக்கு 3 கிலோ மாவும், 300 கிராம் சீனியும், கொஞ்சம் பருப்பும் வழங்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினர் சில கடைகளைத் திறந்து மரக்கறி வகைகளையும் சில உணவுப் பொருட்களையும் விற்பனை செய்கிறார்கள். பணம் இல்லாத காரணத்தால் பெரும்பான்மையான மக்களுக்கு எவற்றையும் வாங்க முடியவில்லை. அவர்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களைக் கொண்டு அவர்கள் எவ்வாறு உயிர்வாழ்கிறார்கள் என்று கற்பனை பண்ணவே முடியவில்லை.
லொறிகளில் குடிதண்ணீர் கொண்டு வந்து வழங்கப்படுகிறது. ஆனால் அது போதுமானதாக இல்லை. அப்பகுதியிலுள்ள சிறிய குளம் ஒன்றில் குறைந்தளவு தண்ணீரே குளிப்பதற்கு இருக்கிறது. அவர்களுக்கு குளிப்பதற்கு சோப் எதுவும் இல்லை. மலசலகூடங்களின் கூரைகள் பொலித்தீனினால் அல்லது அலுமினியத்தகடுகளால் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் மலசலகூடங்கள் போதுமானதாக இல்லை.
சிவில் உடையிலுள்ள பொலிசாரும் இராணுவத்தினரும் அங்கு சுற்றிக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் மலசலகூடங்களைக் கூடப் பரிசோதிக்கின்றனர். குடில்களுக்கு வெளியே எவரும் நிற்க அனுமதிக்கப்படுவதில்லை. இளம் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் இரவில் நித்திரை கொள்வதில்லை. தங்களுடைய மகனோ மகளோ கடத்தப்பட்டு விடுவார்கள் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.
இளைஞர்கள் யுவதிகளுடைய பெயர்கள் ஒலிபெருக்கியில் அழைக்கப்பட்டு அவர்கள் முகாமுக்கு வருமாறு அழைக்கப்படுகிறார்கள். அந்த இளைஞர்கள் விசாரணைக்குள்ளாக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலர் மீளத் திரும்பி வருகிறார்கள், பலர் திரும்புவதேயில்லை. பெற்றாருக்குக் கூட அவர்கள் எங்கே கொண்டு செல்லப்படுகிறார்கள், ஏன் கொண்டு செல்லப்படுகிறார்கள், எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று அறிவிக்கப்படுவதில்லை.
சோதனைச் சாவடிகளுள் மேற்கொள்ளப்படும் சோதனைகள், கெடுபிடிகள் விசாரணைகளைத் தாண்டியே செல்ல முடியும். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், காயமடைந்தோர் என அனைவரையும் கொண்ட ஒரு திறந்த வெளிச்சிறைச்சாலையாகவே இது உள்ளதை உள்ளே செல்லும் ஒருவர் காண முடியும். இம் முகாமைச் சுற்றி கடும் பாதுகாப்புடைய முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, ஆயுதம் தாங்கிய படையினரும் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நீண்ட வரிசையாக சிறிய ரென்ட்லீல் ஆன அறைகள் அலுமினியத் தகடுகள் கொண்டு பிரிக்கப்பட்டு, இம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடிப்படைத் தேவைக்கான தண்ணீரும் சுகாதார வசதிகளும் மிகவும் பற்றாக்குறையாகவே உள்ளன. ஒரு அறைக்குள் அல்லது ஒரு தரப்பாளுக்குள் ஆகக் குறைந்தது இரண்டு குடும்பங்கள் வாழ்கின்றன. காற்றடிக்கும் போதோ அல்லது வாகனம் ஒன்று செல்லும் போதோ ஏற்படும் புழுதியால் அவற்றில் உள்ள மக்கள் குளிப்பாட்டப்படுகிறார்கள். இந்த மெனிக் முகாமுக்குள் இராமநாதன் முகாம், கதிர்காமர் முகாம், அருணாச்சலம் முகாம், ஆனந்தக்குமாரசாமி முகாம் ஆகிய நான்கு முகாம்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நாற்பதாயிரம் மக்களைக் கொண்டுள்ளது. முகாம் பகுதியில் இராணுவ வாகனங்கள் எந்நேரமும் சுற்றிக்கொண்டே இருக்கும். ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு நடந்து செல்ல மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் அதற்கு ஓட்டோக்களையே பயன்படுத்த வேண்டும். அதற்கு நூறிலிருந்து நூற்றைம்பது ரூபாய்வரை அறவிடப்படுகிறது.
முகாமுக்கு அருகில் உள்ள இரண்டு புறமும் முட்கம்பிகளால் ஆன சிறிய வழி ஒன்றினூடாகவே முகாமுக்குச் செல்பவர் நடந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். முகாமிலுள்ளவரைச் சந்திப்பதற்காகச் சிறிய குடில் ஒன்றில் காத்திருக்கவேண்டும். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தமது அன்புக்குரிய உறவினர்களைச் சந்திக்கக் காத்திருக்க அக்குடில் போதுமானதாக இல்லை. இதனால் அவர்கள் குடிலுக்கு வெளியே எரிக்கும் வெய்யிலில் காத்திருக்க நேர்கிறது. அங்கு மலசலகூடவசதிகளோ எவையும் இல்லை. ஒவ்வொரு குடிலுக்கும் ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பரல் வைக்கப்பட்டுள்ளது. வெளியேயுள்ள சிறிய கடைகளில் தேநீரும், சில குளிர்பானங்களும் கிடைக்கின்றன.
பொலிஸ் அதிகாரிகள் காலை ஒன்பது மணிக்குப் பின்பே வருகை தருகிறார்கள். அவர்கள் உங்களது விபரங்களையும், நீங்கள் சந்திக்கவுள்ள உறவினருடைய யுனிட் இலக்கம், புளொக் இலக்கம் என்பவற்றையும் உள்ளடக்கிய விபரங்களையும் பதிந்து கொள்கிறார்கள். கைத்தொலைபேசிகளும், கமெராக்களும் உள்ளே கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றை அங்குள்ள கடைகளில் ஒன்றில் கொடுத்துவிட்டே உள்ளே செல்ல வேண்டும். சில கடைக்காரர்கள் ஒரு கைத்தொலைபேசியை வைத்திருந்து தருவதற்கு ஐம்பது ரூபாய் வரை அறவிடுகிறார்கள்.
என்னுடைய பல உறவினர்கள் மெனிக் முகாமிலிருந்தார்கள். நான் முதலில் இராமநாதன் முகாமிலிருந்த எனது சகோதரியையும் அவருடைய மகன்களையும் பார்க்கச் சென்றேன். தமிழ் பேசும் ஒருவர் சிவில் உடையில் வந்து நாங்கள் ஒவ்வொருவரும் யார் யாரைச் சந்திக்கவுள்ளோம் என்ற விபரங்களை எல்லாம் எடுத்துச் சென்றார். நான் என்னுடைய விபரங்களை அவரிடம் கொடுத்தேன். அவர் கடும் தொனியில் சொன்னார் நான் இன்று எனது உறவினர்களைச் சந்திக்க முடியாதென்று. ஒவ்வொரு முகாமுக்கும் அவர்கள் வௌ;வேறு நாட்களை ஒதுக்கியுள்ளார்கள்.
எனினும் நான் இதற்காகவே கொழும்பிலிருந்து வந்ததாகத் தர்க்கித்தேன். அவர் சொன்னார் அதனாலென்ன அதற்கும் கூட ஒன்றும் செய்வதற்கில்லை என. அவருடைய சிரேஸ்ட அதிகாரிகளைச் சந்தித்து முறையிடுவதற்குக் கூட அவர் அனுமதிக்கவில்லை. அம் முகாமிலிருந்த எனது உறவினரைப் பார்க்க முடியாதவாறு நான் தடுக்கப்பட்டேன். பின்னர் நான் கதிர்காமர் முகாமுக்குச் சென்று முன்னரைப் போல எனது விபரங்களையும் நான் சந்திக்க வேண்டியவர்களின் விபரங்களையும் கொடுத்தேன்.
அவர்கள் எனது சகோதரரை அழைத்தனர். ஆனால் அவர் முட்கம்பி வேலிக்கு அப்புறத்தில் நின்றார். அவர் என்னைக் கண்டதும் அழுதார். தங்களுடைய உறவினரைக் கண்டதும் அங்கிருந்த பலர் அழுததை நான் கண்ணுற்றேன். சிலர் தங்களுடைய பெற்றாரிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்தனர். இன்னும் சிலர் தங்களுடைய கணவன் அல்லது மனைவியிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர். உறவினருடன் பேசுதல் என்பது ஒரு சிறைக் கைதியுடன் பேசுவதைப் போன்றதாகும். உங்களுக்கு 15 அல்லது 30 நிமிடங்கள் வழங்கப்படும். அங்கு காவலிருக்கும் பொலிசார் வந்து உங்களுடைய நேரம் முடிவடைந்து விட்டது எனத் தெரிவிப்பார்கள். எவருக்கும் மேலதிக நேரம் வழங்கப்பட மாட்டாது. நீங்கள் உணவு அல்லது உடுதுணியை மட்டுமே அவர்களுக்குக் கொடுக்க முடியும். அதனையும் அங்குள்ள பொலிசார் முழுவதும் பரிசோதித்து விட்டே கொடுப்பார்கள். நீங்கள் கதைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் அங்கிருக்கும் பொலிசார் உங்களை அவதானித்துக்கொண்டே இருப்பர்.
கடந்த டிசம்பரிலிருந்து ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு எவ்வாறு தாங்கள் இடம் பெயர்ந்து சென்றதாக எனது சகோதரர் எனக்கு விளக்கினார். இறுதியாக முல்லைத்தீவிலுள்ள மாத்தளனை அடைந்ததாக அவர் தெரிவித்தார். அங்கு ஏற்கெனவே ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சேர்ந்திருந்தனர். அவர்களுக்கு உணவு போதுமானதாக இருக்கவில்லை. உடுத்த உடையுடனேயே அவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். கடும் எறிகணைவீச்சுக் காரணமாக அவர்கள் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஓடிக்கொண்டிருந்தனர். பலர் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.
இறுதியாக ஏப்ரலில் அங்கிருந்து வெளியேறுவதென அவர்கள் முடிவு செய்தார்கள். அவர்கள் 8 கிலோ மீற்றர்கள் கால்நடையாக நடந்தார்கள். இராணுவத்தினர் முதலில் அவர்களைச் சுட முயன்றார்கள். பின்னர் அவர்கள் அங்கு பல மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டார்கள். பின்னர் இறுதியாக அவர்கள் மெனிக் முகாமுக்கு அழைத்து வரப்பட்டார்கள். முதலில் இரண்டு வாரங்களுக்கு அவர்களுக்குச் சமைத்த உணவு வழங்கப்பட்டது. இப்போது அவர்களுக்குச் சில பாத்திரங்களும் கரண்டிகளும் வழங்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் மாதமொன்றுக்கு 3 கிலோ மாவும், 300 கிராம் சீனியும், கொஞ்சம் பருப்பும் வழங்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினர் சில கடைகளைத் திறந்து மரக்கறி வகைகளையும் சில உணவுப் பொருட்களையும் விற்பனை செய்கிறார்கள். பணம் இல்லாத காரணத்தால் பெரும்பான்மையான மக்களுக்கு எவற்றையும் வாங்க முடியவில்லை. அவர்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களைக் கொண்டு அவர்கள் எவ்வாறு உயிர்வாழ்கிறார்கள் என்று கற்பனை பண்ணவே முடியவில்லை.
லொறிகளில் குடிதண்ணீர் கொண்டு வந்து வழங்கப்படுகிறது. ஆனால் அது போதுமானதாக இல்லை. அப்பகுதியிலுள்ள சிறிய குளம் ஒன்றில் குறைந்தளவு தண்ணீரே குளிப்பதற்கு இருக்கிறது. அவர்களுக்கு குளிப்பதற்கு சோப் எதுவும் இல்லை. மலசலகூடங்களின் கூரைகள் பொலித்தீனினால் அல்லது அலுமினியத்தகடுகளால் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் மலசலகூடங்கள் போதுமானதாக இல்லை.
சிவில் உடையிலுள்ள பொலிசாரும் இராணுவத்தினரும் அங்கு சுற்றிக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் மலசலகூடங்களைக் கூடப் பரிசோதிக்கின்றனர். குடில்களுக்கு வெளியே எவரும் நிற்க அனுமதிக்கப்படுவதில்லை. இளம் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் இரவில் நித்திரை கொள்வதில்லை. தங்களுடைய மகனோ மகளோ கடத்தப்பட்டு விடுவார்கள் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.
இளைஞர்கள் யுவதிகளுடைய பெயர்கள் ஒலிபெருக்கியில் அழைக்கப்பட்டு அவர்கள் முகாமுக்கு வருமாறு அழைக்கப்படுகிறார்கள். அந்த இளைஞர்கள் விசாரணைக்குள்ளாக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலர் மீளத் திரும்பி வருகிறார்கள், பலர் திரும்புவதேயில்லை. பெற்றாருக்குக் கூட அவர்கள் எங்கே கொண்டு செல்லப்படுகிறார்கள், ஏன் கொண்டு செல்லப்படுகிறார்கள், எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று அறிவிக்கப்படுவதில்லை.

நன்றி: http://www.paristamil.com/