Showing posts with label ஆராய்ச்சிகள். Show all posts
Showing posts with label ஆராய்ச்சிகள். Show all posts

Sunday, September 6, 2009

குருட்டு நம்பிக்கைகளை வளர்ப்பதே மதம்! – தந்தை பெரியார்.

image

மனித வர்க்கம் விலங்குகளைப்போல் தனித்தனியே காடுகளில் வாசஞ்செய்து வந்த நிலைமை மாறி, குடிசை கட்டிக் கூடிக் குலவி வாழ ஆரம்பித்த போதே அவற்றிற்குச் சில கொள்கைகள் தேவையாகிவிட்டது. எப்படி எனில், எப்படி தனியே இருக்கும் மக்கள் ஏதாவது ஒரு பொது நன்மையை உத்தேசித்து தங்களுக்கென்று ஒரு சங்கத்தை நிறுவினால் உடனே அதற்குக் கொள்கைகள் நிர்ணயிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகின்றதோ, அதேபோல் மனிதர்களின் கூட்டு வாழ்க்கைக்கு கொள்கைகளை நிர்ணயிக்க வேண்டியதாகி விட்டது.

அக்கொள்கைகள் தான் இப்போது மதம் எனப்படுவதாக இருக்கிறது. அம்மாதிரியான கொள்கை நிர்ணயங்களை மீறக் கூடாது என்பதற்கு நிபந்தனைகள் ஏற்படுத்தி, அந்நிபந்தனைகளை மீறி நடப்பவர்களைத் தண்டிக்க முடியாத நிலையிலோ, அல்லது தண்டிக்க வேண்டாம் என்று தோன்றிய சமயத்திலோ, அல்லது சிலரின் சுயநலத்திற்காகவோ, வேறு விதத்தில் ஏமாற்றிப் பிழைப்பதற்காகவோ வேண்டி, அக்கொள்கைகள் கடவுள் என்பதுடன் சம்பந்தப்படுவதனால் தான் மக்கள் ஏமாறுவார்கள் என்கின்ற எண்ணம் கொண்டு அவற்றை “கடவுள் உண்டாக்கினார்” என்றும், அவற்றிற்கு மீறி நடந்தால், “கடவுள் தண்டிப்பார்” என்றும் சொல்ல வேண்டியதாய் விட்டது. (இந்த இடந்தான் முதல் முதலாக மனிதன் தவறு செய்த இடமாகும்.)

ஆனால், இக்கொள்கைகள் நிர்ணயம் செய்யப்பட்டது எப்படி? எந்த ஆதாரங்களைக் கொண்டு? என்று பார்ப்போமேயானால், அது அந்தக்காலத்திய நிலைமை, சீதோஷ்ண ஸ்திதி, மக்களின் அறிவு நிலை, அதாவது பாமர மக்களின் அறிவீனம், சிலரின் சூழ்ச்சித் திறம் முதலாகிய நிலையில் அதாவது, காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்ப செய்யப்பட்டவைகள் என்றே சொல்ல வேண்டும்.

மேலும், ஒரு குறிப்பிட்ட கொள்கை பிற்கால தேச வர்த்தமானத்திற்கோ, சிலரின் சுயநலத்திற்கோ ஏற்றதாயில்லாவிட்டால் யாராவது அறிஞர் அல்லது தந்திரக்காரர் அதை மாற்ற நினைக்கும்போது, பாமர மக்கள் மூடநம்பிக்கையின் பலனாய் தாங்கள் பிடிவாதங்காட்டி மாற்ற சம்மதிக்காத காலத்தில் பிரிந்துபோய் புதிய கொள்கைகள் வகுத்து அதாவது, முன்னையதை திருத்தியோ, அல்லது சில மாற்றியோ, அல்லது சில புதியதுகளைச் சேர்த்தோ செய்ய நேரிடும் போது அது ஒரு புதிய மதமாக ஏற்பட்டு விடுகின்றது உண்டு.

இதனால், பாமர மக்கள் அதாவது குருட்டுப் பிடிவாத முள்ளவர்கள் “என் மதம் பெரிது,” “உன் மதம் சிறிது” என்கின்ற மதச் சண்டைக்கு ஆளாகி விடவும் நேரிட்டு விடுகின்றது. இந்தச் சண்டையில்லாமல் திருத்துப்பாடு செய்யலாமா என்று நினைத்த பெரியவர்கள், கொள்கைகளை மாற்றாமல் பழைய கொள்கைகளுக்கே புதிய வியாக்கியானங்களைச் செய்து திருப்தி செய்ய முயற்சித்தும் இருக்கின்றார்கள். ஆயினும், அம்முயற்சிகளின் பலனும் முடிவில் உட்சமயங்களாகவும், சார்புச் சமயமாகவும் மாறிற்றேயொழிய, கொள்கைகளின் முக்கியங்களை அறியமுடியாமலேயே போய் விட்டது.

இப்படியேதான் மதங்கள் வெகு காலமாய் மாறி மாறியும், திரிந்து திரிந்தும், பெருகிக் கொண்டும் வந்ததினாலேயே மதங்களின் உண்மைத் தத்துவமும், அவசியமும் அறிவதற்கில்லாமற் போனதோடு அதை ஒரு சடங்காகவே கொள்ள வேண்டியதாகி விட்டது.

இன்றைய தினம் எந்த மதக்காரனையாவது கண்டு உன் மதம் என்ன? அதன் தத்துவம் என்ன? என்றால், சில சடங்கையும், குறிகளையும் மாத்திரம்தான் சொல்லுவானே ஒழிய, அதன் உண்மைத் தத்துவம், அதாவது எந்தக் கருத்தைக் கொண்டு ஆதியில் மதத்தை உண்டாக்கினார்களோ அந்தக் கருத்து சற்றும் அறிந்திருக்கமாட்டான். அதோடு, அதற்கு நேர் விரோதமாக அறியாமையும், ஒழுக்கயீனங்களும் ஏற்பட்டுவிட்டது. அன்றியும், சிலர் இவற்றைத் தங்கள் சுயநலத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளவும் கருவியாய் விட்டது.

சிறப்பாக, இப்போதைய முக்கிய மதங்கள் என்று சொல்லப்படுபவைகள் எல்லாம் பாமர மக்களை ஏமாற்றி கொடுமைப்படுத்தி பணம் பறித்து புரோகிதக் கூட்டமும், அரசாங்கமும், செல்வந்தனும் பிழைக்க மார்க்கங்களாக இருக்கின்றனவேயன்றி, பொதுவாக மனித வர்க்கத்திற்கு எவ்வித பலனும் இல்லாமற் போய்விட்டது. மற்றும், மதத்தினால் ஏற்பட்டு வரும் கெடுதிகள் என்னவென்று பார்ப்போமானால், முதலாவாது, மதம் மனிதனின் அறிவையே அடியோடு கெடுத்துவிடுகின்றது.

எப்படியெனில், ஒவ்வொரு மதக்காரனும் தனது மதப்படி ஒரு கடவுள் உண்டு என்று நினைப்பதோடு, தனது மதத்தையும் கடவுள் உண்டாக்கினார் என்று நம்புவதாகக் காணப்பட்டாலும், மற்றொரு மதக்காரனும் அப்படித்தானே சொல்லுகிறான். ஆதலால், அவர்களுக்கு வேறு மதத்தையும், நமக்கு வேறு மதத்தையுமாகக் கடவுள் செய்திருப்பார் என்று சிறிதாவது யோசிக்கவோ, அல்லது நம் மதத்தை வையும்படியோ, அன்றி ஏற்காதபடியோ அவர் மற்றொரு மதத்தை உண்டாக்கி இருப்பாரோ? அப்படியானால், இது ஒன்றுக்கொன்று முரண்பாடல்லவா? என்று எவருமே நினைப்பதில்லை. எவருமே என்றால் மத ஆச்சாரியார்கள், மத அபிமானிகள் என்பவர்கள் முதலாக எவருமே கருதுவதில்லை.

இந்த ஒரு காரணத்தாலேயே, மதம் மக்களின் அறிவை எவ்வளவு தூரம் கெடுத்திருக்கின்றது என்பது விளங்கும். இரண்டாவது, மனிதர்களின் ஒற்றுமைக்குப் பதிலாக மனிதனை மனிதன் பிரித்துக் காட்டவே மதம் உதவுகின்றது. மூன்றாவது, மதமானது மனிதனை வேடத்திலேயே திருப்தியடையச் செய்கின்றதே ஒழிய, ஒழுக்கத்தில் சிறிதும் இடமில்லை. ஏனென்றால், எவ்வளவு நல்ல மதமானாலும் முதலில் ஏதாவதொன்றையாவது நமது புத்திக்கும், அறிவிற்கும், கண்ணுக்கும் படாததைக் குருட்டுத்தனமாய் நம்பித்தானாக வேண்டுமென்று சொல்லாமலிருப்பதில்லை. அப்படியானால், அம்முறையில் ஒன்றை நம்பிவிட்டு அதேபோன்ற மற்றொன்றை நம்பாமலிருப்பதற்குக் காரணமும் இல்லை.

அய்ந்தாவது, மதமானது கடவுளுக்கும் நமக்குமிடையில் தரகர்களின் நடவடிக்கையையும், வார்த்தையையும் அது எவ்வளவு அசம்பாவிதமானாலும் நமது சொந்த அறிவைவிட, பிரத்தியட்ச அனுபவத்தை விட மேலானதாக நினைக்கின்றது. அன்றியும், மதமானது பணம் செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும், பாவ மன்னிப்பும் இருப்பதாகவும், எவ்வித அக்கிரமங்களுக்கும் வணக்கத்தின் மூலம் மன்னிப்பு இருப்பதாகவும் நம்பச் செய்வதால் மனிதனை அக்கிரமம் செய்யுவும், செய்தவன் மூலம் பணம் சம்பாதிக்கவும் தூண்டுகிறது. சோம்பேறிப் பிழைப்புக்குத் தாராளமாய் மதம் இடம் கொடுக்கின்றது.

மதம் மக்களைக் கோழைகளாக்குகின்றது. மதத்தினால் இவ்வளவு அநீதிகள் ஏற்பட்டும் உலக சம்பவங்களின் உண்மைக் காரண காரியங்கள் உணருவதற்கில்லாமல் நிர்ப்பந்தமாய் மக்கள் மதத்தினால் தடுக்கப்படுகின்றார்கள். இவ்வளவும் தவிர, ஒருவனுடைய உழைப்பில் மற்றும் ஒருவனை சாப்பிடச் செய்கின்றது. நிற்க, உண்மைச் சைவன் என்பவன் ஒருவன் எவ்வளவு அயோக்கியனானாலும், ஒரு துளி சாம்பல் அவன் மேலே பட்டு விட்டால் உடனே அவனுடைய சகல பாவமும் தீர்ந்து நேரே “கைலயங்கிரிக்கு”ப் போய்விடலாம் என்கின்றான்.

சுருக்கமாகச் சொன்னால், வக்கீல் தொழில் செய்பவனும், பொய்ப் புராணப் பிரசங்கம் செய்பவனும் விபூதி பூசிக் கொள்ளுகிற காரணத்தாலேயே தன்னை ஒரு சைவன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். பிறரும் அப்படியே எண்ண வேண்டுமென்று ஆசைப்படுகின்றான் என்றால், சைவனின் யோக்கியத்திற்கும், சைவ சமயத்தின் பெருமைக்கும் வேறு சாட்சியம் தேவையா?

அதுபோலவே, ஒரு உண்மை வைணவன் என்பவனும் ஒரு தடவை ‘ராமா’ என்று சொல்லிவிட்டால் சகல பாபமும் தீர்ந்துவிட்டது என்கின்றான். ராமனைவிட உலகில் வேறு தெய்வமில்லை என்கின்றான். அதுபோலவே, ஒரு உண்மை கிறிஸ்தவன் என்கின்றவனும் ஏசுவை அடைந்தால் சகல பாபமும் தீர்ந்துவிடும் என்கின்றான். அன்றியும், ஏசுவின் மூலம் அல்லாமல் பாவ மன்னிப்பு என்பது கிடையவே கிடையாதென்கின்றான்.

அதுபோலவே, ஒரு முகமதியனும் ‘குரான்’ வாக்கெல்லாம் கடவுள் வாக்கு, அது எந்த தேசத்திற்கும், எந்தக் காலத்திற்கும் பொருந்தியது, அதில் உள்ள ஒரு சிறு கோடாவது மாறினால் இஸ்லாம் மதமே போய்விட்டது என்கின்றான். இப்படியே ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொரு பெருமையும். அதுவேதான் உண்மையான மதம், முறையே கடவுள் அவதாரம், கடவுள் குமாரன், கடவுள் தூதன் ஆகியவர்களால் ஏற்பட்டது என்றும் சொல்லுகின்றார்கள்.

- (11-8-1929 “குடி அரசு” இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கத்தின் ஒரு பகுதி.


ஒழுக்கங்கெட்டத் தனத்திற்கு ஒருதலைக் கற்பே காரணமாகும் – தந்தை பெரியார்.

image

இந்து மதம் என்றும் இந்துக்கள் என்றும் நம்மைச் சொல்லிக் கொண்டு, இந்து மதம் சாஸ்திர புராண சம்பந்தமான விஷயங்களைத் தமிழர் தலையில் சுமத்துவதும், தமிழர்கள் அதற்குக் கட்டுப்படுவதும் நியாயமா? இந்து மதப் புராணங்களில் ‘கற்பு'க்கு லட்சணம் ஒரு பெண் (நளாயினி), தனது புருஷன் குஷ்டரோகியாய் இருந்து கொண்டு தாசி வீட்டுக்குப் போக வேண்டுமென்று சொன்னாலும், அவனைக் கழுவி எடுத்துக் கூடையில் வைத்துத் தலையில் தூக்கிக் கொண்டு போய் தாசி வீட்டில் வைத்து, விடிந்த பிறகு மறுபடியும் தாசி வீட்டிலிருந்து தன் வீட்டிற்குத் தூக்கிவர வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்து மதத்தை வலியுறுத்துகிற ஒருவன், தன் மகளுக்கு இப்படிப்பட்ட புருஷன் அமைந்து அவன் தன் பெண்ஜாதியை இப்படிச் செய்ய வேண்டுமென்று சொல்லுவானானால், ஒப்புக்கொள்ளுவானா?...

ஆண், பெண் கூட்டு வாழ்க்கையில் இப்போது வழங்கி வரும் கருத்தமைந்த ‘கற்பு' என்னும் வார்த்தையே அவசியமற்றது என்றும், அது வாழ்க்கை இன்பத்திற்குக் கேடு பயக்கின்றதே ஒழிய, அதனால் நன்மை இல்லை என்றும் சொல்லுவேன். இன்று வழங்கும் ‘கற்பு' பெண்களுக்கு மாத்திரமே ஒழிய ஆண்களுக்கு இல்லை. அது, பெண்களை நிர்ப்பந்திப்பது போல் ஆண்களை நிர்ப்பந்திப்பதில்லை. சமுதாயத்தில் ஒழுக்க ஈனம் ஏற்பட்டதற்குக் காரணம், இந்த ஒருதலைக் கற்பேயாகும். பெண்கள் அடிமையாக்கப்பட்டதற்கும் இந்த ஒரு தலைக் கற்பே காரணமாகும். இந்த ஒரு தலைக்கற்பு உள்ளவரை, சமுதாயம் சீர்படப் போவதில்லை என்பதே எனது உறுதி.

ஆண்களின் ஒழுக்க ஈனமான நடத்தைகளை இந்துமதக் கடவுள், சமயம், சாத்திரம், புராணம் ஆகியவை ஒப்புக் கொள்ளுகின்றனவா இல்லையா என்று கேட்கிறேன். இவை கூடாது என்று சொல்லுகிற ஒரு தமிழன், தன்னை இந்து மதத்தைச் சார்ந்தவன் என்று சொல்லிக் கொள்ள முடியுமா? இப்படிச் சொல்லுவதன் மூலம் ஆண்களைப் போலவே பெண்களும் ஒழுக்க ஈனமாக இருக்க வேண்டுமென்று போதிப்பதாகக் கொள்ளக்கூடாது. பெண்களைப் போலவே ஆண்களும், ஒழுக்கமாக இருக்கச் செய்வதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் சட்டமோ, சமுதாயமோ செய்ய வேண்டும். செய்யாவிட்டால், சில பெண்களாவது முன் வந்து அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்யத் துணிவதாகவாவது காட்ட வேண்டும். உரிமையில்தான் சுதந்திர உணர்ச்சி இருக்கிறது. அது இல்லாத இடத்தில் அடிமை உணர்ச்சிதான் இருக்கிறது. அதனாலேயே நமது பெண்கள் அடிமைகளானார்கள். அப்பெண்களின் வயிற்றில் பிறந்த நாம் அடிமை வாழ்வு வாழ்கிறோம்...

அநேகம் பேர்களுக்குச் சேர்க்கையால்தான் பிள்ளைப் பேறு கர்ப்பம் உண்டாகின்றது என்பதுகூடத் தெரியாது. ‘ஏதோ கடவுள் கொடுக்கிறார். கடவுள் வயிற்றில் கொண்டு விடுகிறார். கடவுளே வளர்க்கிறார். கடவுளே பெற்ற பின்பும் நோய் உண்டாக்குகிறார். கடவுளே சாகடிக்கிறார்' என்று கருதிக் கொண்டு, இது விஷயங்களில் மிருகங்களைவிட கேவலமாய் நடந்து கொள்ளுகிறார்கள். சேர்க்கை விஷயம் அது சம்பந்தமான உடல்கூறு ஆகியவைகளைப் பற்றித் தெரிவது, வெகு கேவலமாக இங்கு பேசப்படுகிறது. கதைகளில், புராணங்களில் நாடகத்தில் பச்சை பச்சையாய்க் கேட்கிறபோதும், பார்க்கிறபோதும் ஆனந்தக் கூத்தாடுகிறோம்.

அந்தக் கலைகளை நமது ஆண் - பெண் இருபாலருமே ஓர் அளவுக்காவது தெரிந்து இருக்க வேண்டும். அது தெரிந்து கொள்ளாமல் வெறும் மிருகப் பிராயமாய் இருப்பதாலேயே அநேக நோய், சாவு, ஊனம், மனச்சஞ்சலம், பொருந்தா வாழ்வு ஆகியவை பெருகுகின்றன. குழந்தைகள் பெறுவதில் கர்ப்ப காலத்தில் எப்படி இருக்க வேண்டும், குழந்தை பிறந்த பிறகு எப்படி இருக்க வேண்டும், எத்தனை நாள் பொறுத்து மறுபடியும் கர்ப்பம் தரிக்க இடம் கொடுக்க வேண்டும் என்பவைகளையாவது ஒவ்வொரு பெண்ணும் தெரிந்திருக்க வேண்டும்.

சேர்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பது தெரியாமல் நடந்து கொண்டு நோய் வந்தால், அதற்குப் ‘பொம்பளை நோவு' என்று சொல்லிவிடுகிறார்கள். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், பெண்களுக்கு அது சம்பந்தமான நோய் வந்தாலும், பெண்கள் அதையும் ‘பொம்பளை வியாதி' என்றுதான் சொல்லுகிறார்கள். இது, பெண்கள் சமூகத்திற்கே இழிவான காரியமாகும்.

ஆண் - பெண் தன்மை, உடல்கூறு, சேர்க்கை விளக்கம், கர்ப்பம், பிள்ளைப்பேறு ஆகியவைகளைப் பற்றிச் சர்க்கார், அத்தருணம் நெருங்கிய பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அல்லது மேல் வகுப்புக்குப் பாடமாகவாவது வைக்க வேண்டும். இவை நன்றாக மக்கள் அறிந்தால், இக்காரியங்களில் ஒழுக்கத் தவறுதல்கூட ஏற்படாது என்பது எனது அபிப்பிராயம். சின்ன தவறுதல் கூட ஏற்படாது என்பது எனது அபிப்பிராயம். இன்ன இன்ன பதார்த்தம் சாப்பிட்டால், உடலுக்கு ஒத்துக்கொள்ளாது, நோய்வரும் என்று கருதினால், எப்படிச் சாப்பிடாமல் விட்டுவிடுகிறானோ, அதுபோல் இன்ன மாதிரி நடந்தால் கேடுவரும் என்று தெரிந்தால், அதைச் செய்யாமல் தப்பித்துக் கொள்வான். அப்படிக்கில்லாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று தெரியாமல், இஷ்டப்படி நடந்து கொண்டு வந்த வினையைக் கடவுள் செயல் என்று சொன்னால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன வித்தியாசம்?

(காஞ்சிபுரத்தில் 16.6.1940 அன்று நடைபெற்ற திருமண விழாவில் ஆற்றிய உரை)


Friday, September 4, 2009

பன்றிக் காய்ச்சல் – விவரங்கள், அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு முறைகள்.

 

    உலக நாடுகள் எல்லாமே ஒன்றுசேர்ந்து பன்றிக் காய்ச்சலுக்கு எதிராய்ப் போராடிக்கொண்டு இருக்கின்றன. April 2009 இல் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த நோய் உலக அளவில் பல உயிர்களைப் பலிவாங்கியது போதாதென்று இன்னமும் இதன் அட்டகாசம் தொடர்கிறது. அரசாங்கத்தின் முயற்சிகள் ஒருபுறம் இருக்க, அதில் குறைகளைச் சொல்வதே சிலரின் வாடிக்கை. நாமும் இப்படி இருக்க வேண்டியதில்லையே.. சரியான விவரங்களைத் தெரிந்துகொண்டு பீதியடையாமல் இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே.

    பன்றிக் காய்ச்சலுக்குக் காரணமாய் இருக்கும் H1N1A Virus:

    swine-flu-transferமனிதனுக்கு சளி - ஜுரம் வருவதுபோல் பறவைகளுக்கும், பன்றிகளுக்கும் வருவதுண்டு. அவைகள் முறையாக Human Infuenza, Avian Influenza, & Swine Influenza  என்று சொல்லப்படுகிறது. ( Influenza  என்றால் சளி – ஜுரம் – காய்ச்சல், இதனை வரச்செய்யும் கிருமியை Influenza Virus  என்று குறிப்பிடப்படுகிறது). சாதாரண நிலையில் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லை. ஆனால், பன்றியின் உடலுக்குள் Human Infuenza Virus  & Avian Infuenza Virus  ஒரே நேரத்தில் இருந்தால், இவ்விரண்டு கிருமிகளுக்கிடையே மாற்றங்கள் ஏற்படும். H1N1A Virus என்பது இதன் விளைவாக உருவாக்கப்படும் புதியவகைக் கிருமி. இந்த H1N1A Virus  பன்றியிலிருந்து மனிதனுக்குள் சேர்வதால் வரும் நோய்தான் பன்றிக்காய்ச்சல். இந்தப் புதிய வகைக் கிருமி முதல்முறை சேர்வதால், இதற்கான நோய்த் தடுப்புச் சக்தி நமது உடலில் இருப்பதில்லை. இயற்கையாகவே நல்ல நோய் தடுப்புத்திறன் உள்ளவர்கள் பாக்கியசாலிகள்.

    பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் (In Increased Order of Intensity)

    SwinFlu3_Symptoms

  1. 5 நாட்களுக்குமேல் சளி , காய்ச்சல், மூக்கொழுகல்

  2. வழக்கத்திற்கும் அதிகமான வாந்தி – பேதி ( கர்ப்பவதிகள் கவனத்திற்கு)

  3. தொண்டை வலி, உடல் வலி

  4. இதயத்துடிப்பு வேகமாய் இருப்பது

  5. தோல் நீலமாகவோ சாம்பல் நிறத்திலோ காணப்பட்டால்

  6. அதிகப்படியான சோர்வு, எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருப்பது, கைக்குழந்தை என்றால் அம்மா மடியை விட்டு வராமல் இருப்பது

  7. மூச்சுத்திணறல் , நியூமோனியா என்றால் உயிருக்கே ஆபத்து

    பன்றிக் காய்ச்சலுக்கான பாதுகாப்பு முறைகள்:

  1. அலுவலகம், பள்ளிக்கூடம், நண்பர்களுடன் விளையாட்டு என்று வெளியே போய்வந்ததும் கை-கால் கழுவுதோடு இல்லாமல், இன்னொரு முறை குளிப்பது உசிதம். குழந்தைகள் , வயதானவர்கள் என்றால் நீரில் டெட்டால் சேர்த்து 2 – 3 முறை கை-கால் கழுவினால் போதுமானது.

  2. முடியுமென்றால் அடுத்த சில வாரங்களுக்கு ஜனக்கூட்டம் அதிகம் புழங்கும் இடங்களுக்கு ( சினிமா , கடற்கரை ,  Malls , Club, சுற்றுலா) செல்வதை தவிர்க்கவும்.

  3. வேலை நிமித்தம் என்றாலோ அல்லது தனிப்பட்ட முறையில் தவிர்க்க முடியாத காரணங்கள் என்றால் மட்டுமே பயணம் செய்யுங்கள். உள்நாட்டுப் பயணம் – வெளிநாட்டுப் பயணம் இரண்டுமே இப்பொழுது நிலவும் காலகட்டத்தில் தவிர்க்கவேண்டியவையே.

  4. பயணத்தில் போவதற்கு முன்னே அருகில் உள்ள மருத்துவரை அணுகி தற்காப்புக்கான மருந்துகளையும் முறைகளையும் தெரிந்துகொள்ளுங்கள். ( நீங்கள் போகும் ஊரை / நாட்டைப் பொறுத்து இது மாறுபட வாய்ப்பு உள்ளது). மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கவும்

  5. வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்தாரையோ நண்பர்களையோ உடனே சென்று பார்ப்பதைத் தவிர்க்கவும். அவர்களும் படித்தவர்கள் தான், நிலமையைப் புரிந்து கொள்வார்கள்

  6. பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க N-95  என்று குறிப்பிட்டுள்ள பிரத்தியேக முகமூடியைப் பயன்படுத்தவேண்டும் என்று WHO ( World Health Organisation – உலகச் சுகாதாரக் கழகம்) அறிவித்துள்ளது. சாதாரணமாய் இதன் விலை 50 – 80 இந்திய ரூபாய்கள் மட்டுமே. ஆனால் சில சமூகவிரோதிகள் இதனைக் கள்ளச் சந்தையில் 200 – 250 ரூபாய்கள் என்று விற்கிறார்கள்.

  7. வீட்டில் யாராவது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டால், அவரது நோய் அறிகுறிகளைக் கூர்ந்து கவனியுங்கள். சாதாரண காய்ச்சல் தான் என்று மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து சாப்பிடாதீர்கள்.

  8. எப்பொழுதும் கைக்குட்டை வைத்திருங்கள். இருமல் , தும்மல் வரும்போது வாய் – மூக்கை மூடிக்கொள்ளுங்கள். சற்று நிதானித்த பிறகு வென்னீரில் வாய், முகம், கையைக் கழுவுங்கள்.

  9. விரல்/கால் நகங்களைச் சீராக வெட்டிக்கொள்ளுங்கள். பிள்ளைகளுக்கும் செய்யுங்கள்.

  10. சத்தான உணவைச் சாப்பிடுங்கள். நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை இயற்கை முறையில் அதிகரிக்க இதுவே சிறந்தது.

    பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து உருவாக்க ஆராய்ச்சி முயற்சிகள்:

    சில நூற்றாண்டுகளுக்கு முன்னே போலியோ , தொண்டையடைப்பான், அம்மை (Small pox)  போன்ற நோயினால் பாதிக்கப்பட்டால் அதனை "கர்ம வினை" என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், இப்பொழுதோ இதற்கான தடுப்பு மருந்துகளைப் பிள்ளைகளுக்கு முறையே கொடுத்தால் இம்மாதிரியான கொடுமையிலிருந்து காப்பாற்றலாம் என்று நாம் தெரிந்து கொண்டுள்ளோம்.

    இதே போல், பன்றிக் காய்ச்சல் வரச்செய்யும் H1N1A கிருமி மிக சமீபத்தில்தான் கண்டறியப்பட்டுள்ளது. இதன் ஆட்கொல்லி வீரியம் எல்லாரையும் பதறச்செய்கிறது. உலக நாடுகள் அனைத்தும் இதற்கான தடுப்பு மருந்தை உருவாக்குவதில் மிகத் தீவிரமாக செயல்படுகின்றன.. ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த Novartis, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த CSL மற்றும் இந்தியாவில் ஹைதிராபாதைச் சேர்ந்த Bharat Biotech, தில்லியைச் சேர்ந்த Panacea மற்றும் பூனேவில் உள்ள  Serum Institute மிக தீவிரமாக உள்ளார்கள். இவர்களின் முயற்சி நல்ல முறையில் முன்னேற்றங்களை அடைந்து வருவதாகத்தெரிகிறது. உயிர்களைப் பலி வாங்கும் இந்த நோயிடமிருந்து நமக்கெல்லாம் விரைவில் விடுதலை கிடைக்கும் என்று நம்புவோம்

    --தீபா கோவிந்த்


Thursday, September 3, 2009

சத்தமின்றி நடைபெறும் பொருளாதார யுத்தம் - சி.இதயச்சந்திரன்.

image

வன்னியில் யுத்தம் தீவிரமடைந்திருந்த இறுதி காலகட்டத்தில் "சுடர் ஒளி' ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டாரா இல்லையேல் கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டாராவென பெரும் விவாதங்கள் நிகழ்ந்தன.

மே மாதம் 18 ஆம் திகதிக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கொல்லப்பட்டாரா அல்லது உயிருடன் உள்ளாராவென்கிற அலசல்களும் ஆய்வுகளும் ஊடகப் பரப்பை ஆக்கிரமித்திருந்தன. இன்னமும் இந்த விவாதம் முற்றுப் பெறாமல் நீடிக்கையில் புதிய சர்ச்சையொன்றும் இம்மாத ஆரம்பத்தில் வெளிக்கிளம்பியுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலராக பிரகடனப்படுத்தப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதனின் கைது குறித்து வெளிவரும் ஊகங்களும் வதந்திகளும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் முக்கியமான பேசுபொருளாகவுள்ளன.

ஏற்கனவே உராய்வு நிலையில் இருக்கும் இணையத்தள மின்னஞ்சல் மோதல்கள், கே.பியின் கைது, கடத்தலுக்குப் பின்னர் தீவிரமாகியுள்ளதென்றே கருத வேண்டும்.

கே.பியை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களின் பட்டியலில், ஊடகவியலாளர்களின் பெயர்களையும் இணைத்து வெளிவந்த ஆங்கிலக் கட்டுரையொன்று, தமிழாக்கமும் செய்யப்பட்டது.

இத்தகைய ஆரவாரங்களில் தமது ஐம்புலன்களையும் செலுத்தி மக்கள் சக்தியினை மழுங்கடிக்கும் காரியங்களில் காலத்தை செலவிடும் அதேவேளை, தாயகத்தில் நடைபெறும் திட்டமிட்ட அவலங்களை இனங்காண இச்சக்திகள் மறுப்பதாக உணரப்படுகிறது.

நிலத்தை இழந்து, வெளிச்சத்தை உள்வாங்கிக் கொள்ளும், கண்ணை விற்று சித்திரம் பெறும் நிலையினை திருமலையில் காணக் கூடியதாகவிருக்கிறது.

இம்மாத இறுதிக்குள் இந்திய  இலங்கை கூட்டு முதலீட்டு ஒப்பந்தமொன்று, சம்பூர் அனல் மின் நிலையத்திற்கும் கடலடி மின் கம்பி இணைப்பிற்கும் ஆக  கைச்சாத்திடப்படப் போவதாக உறுதியான தகவல்கள் வெளிவருகின்றன.

யுத்தம் முடிவடையும் வரை, "பொறுத்திருந்து பார்த்த' இந்திய தந்திரோபாய நகர்வு, இப்போது இயங்க ஆரம்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் காங்கேசன்துறை துறைமுகம் மீள்கட்டுமான மற்றும் நிர்வாகப் பொறுப்பினை இந்தியா கையேற்கவிருப்பதாகவும் அதன் முதல் நகர்வாக, பலாலி விமான ஓடு பாதை புனரமைப்பிற்கு 117 மில்லியன் ரூபாய்களை இந்திய தூதுவராலயம் இலங்கைக்கு அண்மையில் வழங்கிய விவகாரமும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை இந்தியக் கம்பனியிடம் தாரை வார்க்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

தொழிற்சாலையில் உற்பத்தியாகும் சீமெந்தினை ஏ9 பாதையூடாகவும் (புகையிரதம் மூலம்) அல்லது துறைமுகம் ஊடாகவும் வெளியே கொண்டு வரலாம்.

ஆனாலும் சீமெந்து தொழிற்சாலை மற்றும் அனல் மின் நிலையத்திற்கு தேவையான எரிபொருட்களை (நிலக்கரி உட்பட) இறக்குவதற்கு துறைமுகங்களின் அவசியம் உணரப்படுகிறது.

இதனடிப்படையில் காங்கேசன்துறை துறைமுகத்தின் நிர்வாகப் பொறுப்பினை இந்தியா கையேற்பதும், இயற்கைத் துறைமுகமான திருகோணமலையில் அனல் மின் நிலையம் அமைப்பதும் வழங்கல் பாதையை இலகுவாக்கும்.

சீனன் குடாவில் பிரித்தானியரால் இரண்டாம் உலக யுத்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு, 2003ஆம் ஆண்டு இந்தியன் எரிசக்தி கூட்டுத்தாபனத்தால் சுவீகரிக்கப்பட்ட 99 நிலத்தடி எண்ணெய் சேமிப்புக் கிணறுகளை பராமரிப்பதற்கும் இந்த திருமலைத் துறைமுகம் மிகவும் அத்தியாவசியமானதொன்றுதான்.

திருமலையில் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டம், மே 2002 இல் இந்தியாவால் முன்வைக்கப்பட்டது. இதற்கான இடத்தெரிவு, சீனன்குடா விமான நிலையத்திற்கு அருகிலும், உயர் பாதுகாப்பு வலயத்தின் உள்ளேயும் அமைந்திருந்தது.

ஆனாலும் நிலக்கரி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த அனல் மின் நிலையத்தின் புகைக்கூடு (இடடிட்ணஞுதூ) மிக உயரமாக அமைவதால் சீனன் குடா தளத்தில் ஏறி இறங்கும் விமானங்களுக்கு இப் புகைக்கூடு இடையூறாக அமையுமென்பதை வலியுறுத்தி, அந்த இடத்தெரிவு அரசால் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிராகரிப்பிற்கான உள் நோக்கம், பேரினவாதச் சிந்தனையின் அடிப்படையைக் கொண்டிருப்பதாக பல அரசியல் விமர்சகர்கள் அன்று தமது கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதாவது சீனன்குடாவின் தென்மேற்கில் அமைந்துள்ள சிங்களவர்கள் அதிகமாக வாழும் கந்தளாய் பிரதேசம், இவ் அனல்மின் நிலையம் வெளித் தள்ளும் கரிப்புகை மற்றும் நச்சுத் துகள்களாய் மாசு படுத்தப்படும் அபாயத்தை உணர் ந்தே இந்த இடம் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

செப்டெம்பர் 2006 இல் யுத்தத்தினால் சம்பூர் பிரதேசத்தை ஒட்டிய 30 கிராமங்களில் வாழ்ந்த 30,000 தமிழ் மக்கள் வாகரையை நோக்கி விரட்டப்பட்டதால், அனல்மின் நிலையம் அமைப்பதற்கு உகந்த இடமாக சம்பூரை அரசு தெரிவு செய்தது.

மூதூர் கிழக்கிலுள்ள சம்பூர், சேனையூர், கடற்கரைச்சேனை, இலக்கந்தை, சூடைக்குடா, கூனித்தீவு, பாட்டாளிபுரம் ஆகியவை உயர் பாதுகாப்பு வலயமாக பின்னர் அரசால் அறிவிக்கப்பட்ட நிகழ்விற்கும் அனல்மின் நிலைய இடத் தெரிவிற்கும் பலத்த தொடர்பு உண்டென்பதை இன்று காணக் கூடியதாகவிருக்கின்றது.

அதேவேளை இந்த அலை மின் நிலைய நிர்மாணிப்பினால் சம்பூரை அண்டிய கொட்டியாரக் கடற்கரையெங்கும் நிலக்கரியை சேமித்து வைக்கும் தளங்களும் உருவாக்கப்படும். இத்திட்டத்திற்கு ஏறத்தாழ 500 ஏக்கர் மக்கள் குடியிருப்பு நிலங்கள் சுவீகரிக்கப்படலாம். அத்தோடு சம்பூரிலும் சிறிய இறங்குதுறையொன்று கட்டப்படும்.

திட்டமிட்ட குடியேற்றங்களிலிருந்து தப்பி, இற்றைவரை தமது பூர்வீக நிலங்களில் வாழ்ந்து வரும் தமிழ்மக்கள், இந்த அனல்மின் நிலையம் வெளியே கக்கும் நிலக்கரித் துகள்களாலும் நச்சு வாயுக்களாலும் பாதிப்படைவார்கள்.

இதற்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டங்களையும் அரசு செவிமடுக்கவில்லை. ஏற்கனவே இதே போன்று மக்களின் எதிர்ப்புணர்வுகளையும் பொருட்படுத்தாது, சீன உதவியில் புத்தளம் நுரைச்சோலையில் அனல் மின் நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தால் சூழலை மாசுபடுத்தி, வெளியேறும் கழிவுகள் கடல்வளத்தை அழித்து, காபனீரொட்சைட் வாயுவினை காற்று வெளியெங்கும் பரப்பி, ஓசோனில் ஓட்டையும் போடப்படலாம்.

பணம் படைத்தோர் அணுமின் நிலையத்தையும், வசதி குறைந்தோர் அனல் மின் நிலையத்தை ஏற்றுக் கொள்ளும் ஏகாதிபத்திய நிர்ப்பந்தங்கள், சந்தைப் பொருளாதாரத்தால் தீர்மானிக்கப்படுகின்றன.

உலகளவில் நிலக்கரியின் பயன்பாடு குறைவடைந்து வரும் நிலையில் வறிய நாடுகளின் தலையில் பொருளாதார உதவி என்கிற போர்வையில் இவ் எரிசக்தி மூலப் பொருட்களை கட்டிவிடும் நாடகங்களையே நாம் இப்போது பார்க்கிறோம்.

இம் மின்நிலையங்களின், பயன்பாட்டு ஆயுட்காலம் ஏறத்தாழ 60 வருடங்களே. அதற்கு முன்பாக முதலீட்டுப் பணத்தினையும் இலாபத்தினையும் இப்பன்னாட்டு கம்பனிகள் சுரண்டி விடுவார்கள். மக்களிடம் எஞ்சியிருக் கப்போவது அழிவுற்ற நிலமும், அசுத்தமான காற்றலைகளுமே.

இந்த இந்திய நிறுவனமானது, உலக சக்தி உற்பத்தியில் ஆறாவது இடத்தை வகிக்கிறது. சந்தை முதலீட்டுத் திரட்சி ஏறத்தாழ 25 பில்லியன் அமெரிக்க டொலராக கணிப்பிடப்படுகிறது. இன்னமும் 60 வருடங்களில் இது நான்கு மடங்காக வளர்ச்சியுறும்.

இதன் பெறுமதியானது அண்மையில் சர்வதேச நாணய சபை இலங்கைக்கு வழங்கிய கடனைப் போன்று பத்து மடங்கானது.

நன்றி - வீரகேசரி வாரவெளியீடு


Friday, July 3, 2009

மாத்திரையின் மூலம் ஆண்களுக்கு கருத்தடை சாதனம் கண்டுபிடிப்பு.

மாத்திரை வடிவில் ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை சாதனம் கண்டுபிடிப்பு- இளையான்குடி பேராசிரியர் ஆபிதீனுக்கு டாக்டர் பட்டம் : இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் க‌ல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ஆபிதீன் தனது ஆராய்சிப் படிப்பை முடித்து. மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.Image
கடலியல் தாவரங்களைப் பயன்படுத்தி ஆண்களுக்கான கருத்தடை சாதனம் மாத்திரை வடிவில்; தயாரிப்பதற்கான முயற்சியில் மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்திற்குட்பட்ட நாகர்கோவில், இராஜாக்கமங்களம் கடலியலியல் ஆராய்சி மையத்தில் பகுதிநேர மாணவராக பதிவுசெய்து கொண்டு ஆராய்சியை STUDIES ON THE IN VITRO HUMAN SPERM MOTILITY INHIBITING ACTIVITY OF MARINE HALOPHYTES AND IN VIVO TOXICOLOGICAL EVALUTION IN ALBINO MICE  - என்ற தலைப்பில் தொடங்கினார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக செய்து வந்த ஆராய்சிகட்டுரை சமர்ப்பிக்கப்பட்டு சமீபத்தில் இதற்கான வைவா நாகர்கோவில் கடலியல் ஆராய்சி மையத்தில்; நடைபெற்றது. சுமார் 350 பல்கலைகழக ஆராய்சி மாணவர்கள் முன்னிலையில், 3 மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த வைவா தேர்வின். இறுதியில் மதுரை காமராஜர் பல்கலைகழக பேராசிரியர் டாக்டர் சாமுவேல் பால்ராஜ் பேராசிரியர் ஆபிதீனுக்கு டாக்டர் பட்டம் முறைப்படி அறிவித்தார்.
மேலும் இது குறித்து டாக்டர் பால்ராஜ் சாமுவேல் கூறும் போது, டாக்டர் ஆபிதீன் முடித்துள்ள இந்த ஆராய்சி இன்றைய காலகட்டத்தில் மிகவும் பயனள்ள ஓன்று. காரணம், இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவில் பிரச்சினையாக உருவெடுத்துள்ள மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்த பயன்தரும் வகையில் இவருடைய ஆராய்சி வெற்றிபெற்றிருக்கிறது. ஆபிதீனுடைய ஆராய்சி குறித்து அவர் மேலும் கூறும் போது, தற்காலிக கருத்தடை சாதனங்களைப் பொறுத்தவரை பெண்கள் மாத்திரமே அதிகம் உபயோகித்து வருகிறார்கள். இதுவரை ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை சாதனம் என்பது காண்டம் ஒன்றுதான். இந்த நிலையில் பெண்கள் உபயோகப்படுத்தும் மாத்திரை வடிவிலான பொருள்களை போல், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத வகையில் ஆண்களுக்கும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறேன் என்று குறிப்பிடுகிறார்.
இந்த ஆராய்ச்சி பற்றி பேராசிரியர் ஆபிதீன் கூறுகையில், பொதுவாக பூமியில் காணப்படும் மருத்துவ குணமுடைய தாவரங்களை உபயோகித்து மருத்துவம் செய்யும்முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. அதே வேளையில் கடல்களில் காணப்படும் தாவரங்களைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது, பொதுவாக பூமியில் காணப்படும் தாவரங்களில் இரண்டு மூன்று தாவரங்களை ஒன்று சேர்த்து ஓரு நோய்க்கு மருந்நதாக கொடுப்பார்கள். ஆனால் கடலில் காணப்படும் ஒரே தாவரம் கூட பல நோய்களுக்கு மருந்தாக பயன்படும் ஆற்றல் உள்ளது என்ற உண்மை பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை என்றார்.
தனது ஆராய்ச்சிபற்றி பேராசிரியர் விவரிக்கையில், ஆண்களின் விந்தனுக்கள் வெளியேற்றப்பட்டு அது கருத்தரிக்கும்முன், வெளியேற்றப்பட்ட விந்தனுக்களின் இயக்கங்களை தடைசெய்வதன் மூலம் அது கருத்தரிக்கப்படுவதை தடுக்க முடியும். அதாவது அந்த நேரங்களில் வெளியேற்றப்படும் விந்தனுக்களின் செயல்பாட்டினை தற்காலிகமாக பக்கவிளைவுகள் இல்லாமல் தடுக்க வேண்டியதுதான் ஆராய்சி என்கிறார்.  இதற்காக தமிழகத்தின் பல்வேறு கடற்கரை பிரதேசங்களிலிருந்து சுமார் என்பது வகையான பல்வேறுபட்ட கடல்வாழ் தாவரங்கள் சேகரிக்கப்பட்டு அறிவியல் முறைப்படி பதப்படுத்தி அவைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை தன்னார்வ தொண்டர்கள் மூலம் பெறப்பட்ட விந்தனுக்களில் சோதனை (invitro test) செய்யப்படடது. இந்த சோதனை இந்திய அரசு சார்பாக மும்பையில் நடத்தப்படும் Indian Institute of Reproduction என்ற ஆராய்சி மையத்தில் முறைப்படி செய்யப்பட்டது. இந்த சோதனையின் முடிவில், தேர்ந்தெடுக்கப்பட்ட என்பது தாவரங்களில் ஆறுவகையான கடல்தாவரங்கள் மட்டும் விந்தனுக்களின் செயல்பாட்டை பெருமளவு தடைசெய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு வகைதாவரங்களை எலிகளைக் கொண்டு உள் உடலினுள் (invivo) பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில், ஆறு வகைதாவரங்களில் ஓரு வகைதாவரம் மட்டும் அற்புதமான வகையில் விந்தனுக்களின் இயக்கத்தை பெரிதும் தடைசெய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இறுதியாக இந்த வகை மருந்துகளை உபயோகிப்பதால் ஏற்படும் மனதியல் மற்றும் உடலியல் ரீதியான பக்கவிளைவுகள் குறித்து மதுரையில் உள்ள ஒரு பிரபல மருந்தியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பக்கவிளைவுகள் ஏதும் இல்லை என உறுதிசெய்யப்பட்ட பின்னர் இந்த தாவரத்தை ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை சாதனமாக மாத்திரை வடிவில் தயாரிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுப்பணியின் முடிவில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைக்கு பி.எச்.டி. என்னும் டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. என்றார்.
மேலும் அடுத்த கட்டமாக, கண்டுபிடிக்கப்பட்ட இந்த தாவரத்தின் செயல்பாடு குறித்து விளக்கி அவை மாத்திரை வடிவிலான, ஆண்களுக்கான தற்காலிக கருத்தடைப் மாத்திரையாகத் தயாரிக்கப் மருந்தியல் கம்பெனிகளுக்குப் பரிந்துரை செய்யப்படும். அதற்கு முன்பாக இந்த தாவரத்தினை பேட்டர்ன் பண்ணுவதற்கான முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும் கூறுகிறார் ஆபிதீன். இந்த ஒட்டு மொத்த ஆய்வுப்பணியும் மணோன்மனிய பல்கலைக்கழக கடலியல் விஞ்ஞானி டாக்டர் ரவிக்குமார் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடலியல் தாவரங்களிலிருந்து கரையான்களை கட்டுப்படுத்தும் ஆய்வு சம்மந்தமான கட்டுரையை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மலேசிய நாட்டில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் மாநாட்டில் ஆபிதீன் கலந்து கொண்டு சமர்பித்ததும் குறிப்பிடத்தக்கது.
- முதுவை ஹிதாயத்