Showing posts with label முஸ்லீம். Show all posts
Showing posts with label முஸ்லீம். Show all posts

Saturday, July 4, 2009

வாழத்துடிக்கும் பெண்ணினம்! வாழ்க்கை மறுக்கும் சமூகம்!!

penmai
மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம். சமையலறையிலும், குழந்தைப் பேறுவளர்ப்பிலும், பாலியல் இச்சைக்காகப் படுக்கையறையிலும் காலங்காலமாகக் கட்டிப் போடப்பட்ட பெண்கள், மனித குல வரலாற்றில் தங்களுக்கும் சரிபாதிப் பங்குண்டு என வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டு செந்நீர் சிந்தி, சில உயிர்களைப் பலிதானமிட்டு உணர்ந்த நாள் மார்ச் 8. ஆனால் 21 ஆம் நூற்றாண்டில் மனித சமூகம் அடியெடுத்து வைத்திருக்கும் இக்காலத்திலும், நவீன வாழ்க்கையின் அடையாளமாக எத்தனையோ வசதிகள் சகஜமாகிவிட்ட இச்சூழ்நிலையிலும் பெண்கள் தங்கள் தளைகளை அறுக்க முடியாமல் அடிமைகளாக நீடித்திருக்கும் நிலையே தொடர்கின்றது.
முக்கியமாக ஒரு பெண் தன் காதலை, திருமணத்தை, குடும்பத்தை, வேலையை, மொத்தத்தில் வாழ்வை தான் விரும்பியபடி தெரிவு செய்யும் சுதந்திரம் இல்லை. வேலைக்குச் சென்று தனது பொருளாதார சுயேச்சை நிலையை அடைந்திருக்கும் பெண்ணுக்குக் கூட முழுச் சுதந்திரத்தை இந்தச் சமூகம் கொடுத்து விடுவதில்லை. சமூகம் மரபாகப் பின்பற்றி வரும் எல்லாப் பிற்போக்குத்தனங்களுக்கும் பெண்தான் முதல் பலிகடாவாகின்றாள். சாதி, மத, இனங்களின் கவுரவமே ஒரு பெண்ணின் ‘தூய்மையை’ வைத்தே அளவிடப்படுகின்றது. கீழ்க்கண்ட இரண்டு உண்மைச் சம்பவங்களைப் பார்த்துவிட்டு இந்த விமரிசனத்தை மேற்கொண்டு பரிசீலிக்கலாம்.
···
ஈரோடு மாவட்டம், குன்னத்தூரைச் சேர்ந்தவர் சங்கீதா. வெண்ணெய்க்குப் பிரபலமான ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் சதாசிவம். சொந்த மண்ணில் வாழ வழியில்லாதவர்களுக்கு சற்றே சிரமமென்றாலும், ஒரு குறைந்தபட்ச வாழ்வை உத்திரவாதம் செய்யும் திருப்பூருக்கு இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பதற்கு வந்தனர். தமிழகத்தின் தெற்கு, கிழக்கு, மேற்கு என எல்லாப் பகுதிகளிலுமிருந்தும் இலட்சக்கணக்கான தொழிலாளிகள் திருப்பூரில் குவிந்துள்ளனர். பனியன் தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கில் ஆண்களும், பெண்களும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இருப்பதால் மற்ற ஊர்களில் சிரமப்படும் காதல் வாழ்க்கை இங்கே ஒப்பீட்டுரீதியில் சற்றே சுலபமானது எனலாம்.
அப்படித்தான் சதாசிவமும், சங்கீதாவும் காதலித்தனர். பிழைப்பதற்கு வந்த ஊர் காதலுக்கு வழியேற்படுத்தினாலும், அவர்களின் பிறந்த ஊர்கள் இந்தக் காதலை அடியோடு நிராகரித்தன. இந்த உண்மைக்கதையை வெளியிட்டிருக்கும் ஜூனியர் விகடனில் (28.01.09) அவர்களின் சாதி குறித்த விவரமில்லை. இருப்பினும் இருவரும் ஓரே தகுதி கொண்ட வெவ்வேறான சாதிகளாகவோ, அல்லது இருவரில் ஒருவர் சற்றே ஆதிக்கசாதியாகவோ இருக்கலாம். எப்படியும் இருவரின் குடும்பத்தாரும் இவர்களின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டவில்லை என்பதோடு உறவை அறுத்துக்கொண்டு தலைமுழுகினர். வேறுவழியின்றி இந்த ஜோடிகள் திருப்பூர் கோவிலொன்றில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகாவது தன் குடும்பம் தன்னை எற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் தந்தைக்கு தொலைபேசியில் பேசினார் சங்கீதா. தந்தையோ “உன் குடும்பத்தில் பிள்ளை பிறந்தாலும் எங்களுக்குச் சொல்லாதே! இழவு விழுந்தாலும் எங்கிட்ட வராதே” என வெட்டு ஒன்று துண்டு இரண்டென பேசி முடித்துக் கொண்டார். சதாசிவம் வீட்டிலும் இதே கதைதான் என்பதால், இந்தப் புதுமணத் தம்பதியினர் திருப்பூரில் தங்கள் குடும்ப வாழ்க்கையைத் துவங்கினர். சொந்த பந்தங்களின் ஆதரவின்றி ஒருவருக்கொருவர் ஆறுதலாக அந்த வாழ்க்கை நகர்ந்தது.
முதல் வருடத்திலேயே சங்கீதாவுக்கு ஒரு குழந்தை மூளை வளர்ச்சியின்றி இறந்தே பிறந்தது. தலைப்பிரசவத்துக்கு ஒரு பெண் தயாராகும்போது சுற்றமும் உற்றமும் புடைசூழ பார்த்துக் கொள்ளும். ஆனால் சங்கீதாவுக்கு அவளது கணவனைத் தவிர யாரும் துணையில்லை, வந்து பார்க்கவுமில்லை. பேறுகாலச் சிரமங்களை மிகுந்த சிரமத்துடன் பொறுத்துக்கொண்ட சங்கீதா அதன் பின் நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் கர்ப்பமானார்.
உறவுகள் அற்றுப்போய் தனித்தீவுகளில் வாழ்வது போல தனிமைப்பட்டிருந்த அந்த ஏழைத் தம்பதியினருக்கு ஒரு குழந்தையின் மூலம் புதிய உறவு வரப்போகின்றது என அளவில்லாத மகிழ்ச்சி! தன் மனைவியை அவளது தாய் பார்ப்பது போல பராமரித்து வந்த சதாசிவம், சங்கீதா கர்ப்பமான ஒன்பதாவது மாதத்தில் அதிக இருமலும் சளியுமாக அவதிப்பட்டார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் காட்டிய போது அவருக்கு காசநோய் முற்றியிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார். ஏதோ ஒரு நோய், கோவை சென்றால் சரியாகிவிடும் என்று புரிந்து கொண்ட அந்தப் பெண் கணவனைக் கோவைக்கு அழைத்துச் சென்றாள்.
திருப்பூரின் சாயப்பட்டறைகளினால் நொய்யல் ஆறு ரசாயன ஆறாக மாறி உயர்நீதி மன்றம் அதற்கு பல உத்திரவுகளைப் பிறப்பித்து சரி செய்வதற்கு முயன்ற விசயம் வாசகர்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் பனியன் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகள் பலருக்கு பஞ்சுத் தூசியினால் ஆஸ்துமாவும், காசநோயும், தோல் வியாதிகளும் இருக்கின்றது என்ற விசயம் அரசால் கூட கவனிக்கப் படவில்லை. திருப்பூர் மருந்துக் கடைகளில் இந்த நோய்களுக்கான மருந்துகள்தான் அதிகம் விற்பனையாகின்றது என்றால் இதன் பரிமாணத்தைப் புரிந்து கொள்ளலாம். அமெரிக்காவின் வால்மார்ட்டுக்காக ஆர்டர்கள் எடுத்திருக்கும் திருப்பூரின் முதலாளிகள் இப்படி தொழிலாளர்களின் நுரையீரலையும், எலும்புகளையும் சிதைத்துத்தான் ஆயத்த ஆடைகளைத் தயாரிக்கின்றனர் என்பது யாரும் கவலைப்படாத ஒன்று.
சங்கீதா நிறைமாதக் கர்ப்பிணியாய் தனக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்பது தெரியாமல் கணவனைக் கருத்தாகப் பார்த்துக் கொண்டாலும், கோவை அரசு மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றாலும் காசநோய் முற்றிய சதாசிவம் ஒரு சில நாட்களில் இறந்து போகின்றார். இந்த உலகில் தனக்கென இருந்த ஒரே உறவையும் தொலைத்து விட்ட அந்தப் பெண் அழுது புரண்டாள். பிறகு கணவனின் பிணத்தை எரிப்பதற்கு பணமில்லாமலும், தூக்குவதற்கு ஆளில்லாமலும் தவித்த அந்த அபலைப்பெண் பைத்தியமாய்ச் சுற்றியிருக்கின்றாள். சவக்கிடங்கில் இருக்கும் கணவனின் பிணத்தைத் தொட்டு அழுவதற்குக் கூட வாய்ப்பில்லாமல் தனது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் உதவுமாறு கேட்டிருக்கின்றாள் சங்கீதா.
எந்தச் சனியன் எக்கேடு கெட்டாலும் எங்களுக்கென்ன என குடும்பத்தினர் இரக்கமின்றி முறித்துக் கொண்டனர். பிறகு தோழமை அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தைக் கேள்விப்பட்டு அவர்களின் உதவியை நாடியிருக்கின்றாள் சங்கீதா. இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் கணவனது இறுதிச் சடங்கை முடித்த சங்கீதாவுக்கு தற்போது குழந்தை பிறந்திருக்கும். இருந்த ஒரே துணையையும் இழந்தவருக்கு ஆறுதலாக யாருமில்லை என்பதால் கைக்குழந்தையுடன் அவதிப்படப்போகும் சங்கீதாவின் எதிர்காலம் எப்படி நகரும்?
···
புது தில்லியில் இருக்கும் ஜவஹர்லால் நேரு மேல்நிலைக் கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சியளராகப் பணிபுரியும் மீரா நந்தா அவரது சொந்த ஊரான சண்டீகரில் அவர் கண் முன்னே ஒரு இளம் பெண் கடத்தப்படுவதைப் பார்த்துவிட்டு அந்த அனுபவத்தை ‘தி ஹிந்து’தினசரியின் ஞாயிறு மலரில் (01.03.09 ) எழுதியிருக்கின்றார்.
பிப்ரவரி மாதத்தின் துவக்கத்தில் சண்டீகருக்கு வந்த மீரா நந்தா ஒரு பகல் பொழுதில் தனது வீட்டிலிருந்து அருகாமையில் இருக்கும் நீதிமன்ற வளாகத்தைக் கடந்து கடைத்தெருவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைக் கடந்து ஒரு இளம்பெண் வேகமாகச் சென்று கொண்டிருந்தாள். திடீரென வந்த ஒரு வெள்ளை வேனில் இருந்து இறங்கிய நான்கைந்து இளைஞர்கள், அவர்களைப் பார்த்துப் பதறி ஓடிய அந்தப் பெண்ணை விரட்டுகின்றார்கள். கணப்பொழுதில் அவளைப் பிடித்து தரதரவென இழுத்து அடித்து வேனில் ஏற்றிச் செல்கின்றார்கள்.
அதிர்ச்சியில் உறைந்திருந்த மீரா நந்தா அந்த வண்டியின் எண்ணைக் குறித்துக் கொண்டிருந்தபோது, நீதிமன்றத்தில் இருந்த மக்கள் கூட்டம் இச்சம்பவத்தைப் பார்த்து கூடுகின்றது. அந்தப் பெண் கடத்தப்பட்டதைப் போலீசிடம் புகார் கொடுக்கலாம் என்று அவர்கள் பேசியபோது கூட்டத்தில் நடுத்தர வயதிலிருக்கும் ஒரு சீக்கியர் குறுக்கிடுகின்றார். அந்த பெண்ணுக்கு ஒன்றும் ஆபத்தில்லை எனவும், தான் அவளது தந்தை, வேனில் பிடித்துச் சென்றது அவளது சகோதரர்கள்தான் என்றும் அவர் நிதானமாகத் தெரிவிக்கின்றார்.
உடனே மீரா நந்தா பெற்ற மகளையே இப்படி அடித்துக் கடத்துகின்றீர்களே! நீங்களெல்லாம் ஒரு தந்தையா, உங்களுக்கு வெட்கமில்லையா என்று கோபத்துடன் கேட்கிறார். தனது மகள் பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு புத்திசாலிப் பெண்ணென்றும், அவளை ஒரு முசுலீம் இளைஞன் காதலிப்பதன் மூலம் அவளது வாழ்க்கை பாழாகக் கூடும் என்பதால் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருந்த அந்தக் காதலர்களைப் பிரிப்பதற்கு தான் எடுத்த நடவடிக்கை சரியானது என்றும் அந்தச் சீக்கியர் வாதிடுகின்றார்.
இதைக் கேட்டவுடன் கூட்டம் சமாதனத்துடன் கலைந்து செல்கின்றது. மீராவுடன் நான்கைந்து இளைஞர்கள் மட்டும் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கலாம் என முடிவு செய்கின்றார்கள். காவல் நிலையத்தில் பொறுப்பிலிருந்த அதிகாரி சீக்கியரின் விளக்கத்தைக் கேட்டவுடன் திருப்தி அடைகின்றார். இப்போது மீராவுடன் ஒரு இளைஞர் மட்டுமே இருக்கின்றார். அந்த இளம்பெண் ஒரு மேஜர் என்பதால் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு அவளுக்கு முழு உரிமை உண்டென மீரா அதிகாரியிடம் வாதிடுகின்றார். உங்கள் மகளுக்கு இப்படி நடந்திருந்தால் என்ன செய்வீர்கள் என அந்த அதிகாரி மீராவின் பதிலுக்குக்கூட காத்திராமல் அந்தத் தந்தையின் செயலை நியாயப்படுத்துகின்றார். அந்தச் சீக்கியரோ தான் குறுகிய எண்ணம் கொண்டவனல்ல, தனது மகள் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரனைக் காதலித்திருந்தால் கூட அதை ஏற்றுக் கொள்வாரெனவும், ஆனால் ஒரு முசுலீமைத் தனது மகள் காதலிப்பதை ஏற்க முடியாது என்றும் வாதிடுகின்றார்.
இறுதியில் மீரா போலீசு இதில் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தான் இந்தப் பிரச்சினையை ஊடகங்களுக்குக் கொண்டு செல்வதாக மிரட்டியதும் அந்த அதிகாரி இதைப் பற்றிக் கண்டிப்பாக விசாரிப்பதாக உறுதியளிக்கின்றார். அவரது செல்பேசி எண்ணை வாங்கிவிட்டு மீரா திரும்புகின்றார். அன்று மாலையே அந்த இன்ஸ்பெக்டர் மீராவுக்கு தொலைபேசியில் பேசுகின்றார், அதன்படி அந்தப் பெண்ணைச் சந்தித்து விட்டதாகவும், அவள் தனது சொந்த விருப்பத்தில் குடும்பத்துடன் சேர்ந்து இருக்க விரும்புவதாகவும் கூறிவிட்டு அந்தப் பெண்ணையே பேச வைக்கின்றார். அந்தப் பெண்ணும் ஏதோ கடமைக்குப் பேசுவது போல தனக்கு ஒரு பிரச்சினையுமில்லை எனவும் சுரத்தில்லாமல் கூற, எந்தப் பிரச்சினை என்றாலும் தனது செல்பேசி எண்ணுக்கு அழைக்குமாறு கூறிவிட்டு மீரா இந்த சம்பவத்தை அசை போடுகின்றார். துயரம் தோய்ந்த அந்தப் பெண்ணின் முகம் அவரைத் தொந்திரவு செய்கின்றது.
···
சங்கீதா செய்த ‘குற்றம்’ சாதி மாறித் திருமணம் செய்தது, சண்டீகர் பெண் செய்த ‘குற்றம்’ மதம் மாறிக் காதலித்தது. சங்கீதாவின் பெற்றோரும், உறவினரும் அவளைப் புறக்கணித்து எந்த உதவியும் செய்யாமல் இருந்ததன் மூலம் அவளைத் தண்டித்தார்கள். சண்டீகர் பெண்ணின் குடும்பமோ அவளை வன்முறையின் மூலம் மிரட்டி அவளது காதலை நசுக்கித் தண்டிக்கின்றார்கள். தாங்கள் விரும்பியபடி மணவாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயன்ற அந்தப் பெண்களுக்கு இந்தச் சமூகம் ஒப்புதல் தரவில்லை.
சாதிவெறியும், மதவெறியும் பெண்ணின் இரத்தக் கலப்பில்லாத தூய்மையை வைத்ததே தத்தமது கவுரவத்தைக் காப்பாற்ற நினைக்கின்றன. ஆனால் இந்தப் புனிதக்கடமை ஆண்களுக்கில்லை. ஆதிக்கசாதி ஆண்கள் ஊருக்கு வெளியே இருக்கும் தலித் பெண்களைப் பாலியல் வன்முறை செய்வது இந்தியா முழுவதும் நடக்கும் விசயம். இதை மட்டும் சாதியின் கவுரவக் குறைச்சலாகக் கருதாமல், ஆதிக்கசாதி ஆண்களின் கம்பீரமாக இந்தச் சமூகம் பார்க்கின்றது. மேலும் தன்மானத்துடன் வாழ நினைக்கும் தலித் மக்களைக் கேவலப்படுத்துவதற்கும் அடக்குவதற்கும் ஆதிக்கசாதி வெறியர்கள் செய்யும் முதல் விசயம் தலித் பெண்களைப் பாலியல் வன்முறை செய்வதுதான். ஒரு ஆதிக்கசாதிப் பெண் ஒரு தலித் ஆணைக் காதலித்து திருமணம் செய்தால் ஊரே பற்றி எரியும். இந்தக் காதலை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத சூழலே இந்தியாவெங்கும் இருக்கின்றது.
வட இந்தியாவில் ஒரு ஆதிக்கசாதி அல்லது பிற்படுத்தப்பட்ட பெண் ஒரு முசுலீமைக் காதலித்தால் மேற்கண்ட வெறியால் இன்னும் தீவிரமாக எதிர்க்கப்படும். இதைத் தடுப்பதற்கென்றே இந்தி பேசும் மாநிலங்களில் இந்து மதவெறியர்கள் தனி இயக்கமே நடத்துகின்றார்கள். சண்டீகர் பெண்ணின் தந்தை கூறியதைப் பாருங்கள், இந்துமதத்தில் இருக்கும் தலித் ஆணைக் கூட ஏற்றுக் கொள்வாராம், ஆனால் ஒரு முசுலீமை ஏற்றுக்கொள்ள மாட்டாராம். உண்மையில் அப்படி ஒரு தலித்தை அந்த சீக்கியப் பெண் காதலித்தாலும் இதுதான் நடக்கும். என்றாலும், முசுலீம் என்றால் அந்தக் கவுரவ வெறி சில மடங்கு அதிகமாக இருக்கின்றது.
உலகெங்கும் முசுலீம்களைப் பற்றிய வெறுப்பும், தவறான கற்பிதங்களும் திட்டமிட்டே பரப்பப்படுகின்றன. இதில் இந்தியாவைப் பொறுத்தவரை பிரிவினை காலந்தொட்டு நடந்துவரும்,இந்துமதவெறியர்களால் இயக்கப்படும் இந்து முசுலீம் கலவரங்கள் அந்த வெறுப்பைப் பிரச்சாரம் ஏதுமின்றி ஒரு இந்துவின் மனதில் ஏற்படுத்தி விடுகின்றன. எனவேதான் இந்தி பேசும் மாநிலங்களில் இதற்காக அதாவது இந்து மற்றும் ஆதிக்கசாதியின் கவுரவத்தைக் காப்பாற்றும் விதமாக யாரெல்லாம் அந்த எல்லையை மீறுகின்றார்களோ அவர்களெல்லாம் கொல்லப்படுவது சகஜமாக இருக்கின்றது. இந்தக் கவுரவக் கொலைகளில் பத்து சதவீதம் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் நடக்கின்றது. முக்கியமாக இந்தக் கொலைகளுக்கு ஆளாவதில் பெரும்பான்மையினர் பெண்கள்தான்.
···
விஜய் டி.வியில் நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில் காதலைத் தீர்மானிப்பது அப்பியரன்சா,அப்ரோச்சா என ஒருமுறை விவாதிக்கும் போது எப்படி கடலை போடுவது, எதிர்பாலைக் கவருவது அல்லது கவிழ்த்துவது, இன்ன பிற அயிட்டங்களையெல்லாம் பயங்கரமாக அலசினார்கள். ஆனால் கலப்பு மணம் செய்தால் அதைத் தீர்மானிப்பது அரிவாள்தான் என்பதை அங்கிருக்கும் நடுத்தர வர்க்க அறிவாளிகள் எவரும் மருந்துக்குக் கூட தொட்டுப் பேசவில்லை.
இந்த விவாதம் நடந்து சில மாதங்கள் இருக்கலாம். இதே காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜிராவ் எனும் தலித் இளைஞரும், லட்சுமி எனும் கள்ளர் சாதிப் பெண்ணும் காதலிக்கின்றார்கள். கள்ளர் சாதி கோலோச்சும் இம்மாவட்டத்தில் இருக்கும் அபாயத்தைக் காதலர்கள் உணர்ந்திருந்ததால் யாருக்கும் தெரியாமல் திண்டுக்கல் சென்று ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றார்கள். இதை எப்படியோ மோப்பம் பிடித்த லட்சுமியின் மூன்று அண்ணன்கள் ஒரு டாடா சுமோவில் சில ரவுடிகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் சென்று லட்சுமி கதறக் கதற அவளது கணவனை அடித்து வண்டியில் எற்றுகிறார்கள். சில நாட்கள் கழித்து அந்த தலித் இளைஞன் கொடைக்கானல் சாலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கின்றான்.
தனது அண்ணன்கள் கொலை செய்யுமளவு துணிய மாட்டார்கள் என நம்பிய அந்தப் பெண் இன்றும் அழுது கொண்டிருக்கின்றாள். சில ஆண்டுகளுக்கு முன் விருத்தாச்சலம் அருகே ஒரு தலித் ஆணும் வன்னிய சாதிப் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள அந்தப் பெண்ணின் ஊர்க்காரர்கள் அதாவது வன்னியர்கள் முன்னிலையில் அந்தக் காதல் ஜோடி உயிரோடு எரித்துக் கொளுத்தப்பட்டது. வழக்கு இன்றும் நடக்கின்றது என்றாலும் மொத்த ஊரே இதில் சம்பந்தப்பட்டிருக்கும் போது யாரைத் தண்டிப்பது?
ஸ்ரீராம் சேனா என்ற இந்து மதவெறி இயக்கத்தினர் மங்களூர் பஃப்புகளில் இருந்த மேல்தட்டுப் பெண்களைத் தாக்கியதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். இதே போல காதலர் தினத்தில் சங்க பரிவாரங்கள் இந்தியா முழுவதும் செய்த அராஜகங்களையும் அறிவோம். ஆணாதிக்கத்தினோடு இந்து மதவெறியும் சேரும்போது அதனுடைய வெறி தீவிரமாகத்தான் இருக்கின்றது. இங்கும் கூட கவனியுங்கள் பெண்தான் குறிவைக்கப்படுகின்றாள். ஆண்கள் டாஸ்மாக் தொட்டு நட்சத்திர விடுதி மதுவறைகள் வரை குடித்து விட்டு ஆடலாம். ஆனால் இதை இயல்பு எனக் கருதும் இந்து மனம் பெண்கள் குடிப்பதை மாபெரும் கவுரவக் குறைச்சலாக நினைக்கின்றது. ஸ்ரீராம் சேனாவின் அத்துமீறலைக் கண்டித்து பல பெண்கள் அமைப்புக்கள் அந்த சேனாவின் தலைவருக்கு பிங்க் நிற ஜட்டிகள் அனுப்பித் தங்களது எதிர்ப்பைக் காண்பித்தன.
ஒரு பெண்ணுக்கு பஃப்புக்கு செல்வதற்கு சுதந்திரம் தேவை எனப் போராடுவதை விட சங்கீதாவும், சண்டீகரின் சீக்கியப் பெண்ணும் நடத்தும் போராட்டம் மிகவும் கடினமானது. மதுவறைகளுக்கு மேல்தட்டு பெண்கள் செல்வதை போலீசு உதவியுடன் கூட செய்து விடலாம். ஆனால் சங்கீதாவுக்கும், லட்சுமிக்கும் கறுப்புப் பூனைகள் போட்டாலும் பாதுகாக்க முடியாது. ஏனெனில் இங்கே முழுச் சமூகமுமே அந்த அபலைகளை எதிர்த்து நிற்கின்றது.
மேலும் மாநகரங்களைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களிடத்தில் இவர்களில் ஐ.டி துறையில் பணிபுரியும் இளைஞர்களும் உண்டு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் படி 75% பேர் பெற்றோர் நிச்சயம் செய்யும் திருமணத்தைத்தான் செய்யப் போவதாகத் தெரிவித்திருந்தார்கள். படித்து, சற்றே வசதியுடன் வாழும் இந்த வர்க்கத்துக்கே இதுதான் கதியென்றால் அந்த ஏழைப் பெண் சங்கீதா என்ன செய்ய முடியும்?
ஆகவே பெண்ணுக்கு உரிமை என்பது தனிநபர் உரிமையாக சுருக்கிப் பார்த்தால், பஃப்புக்கு செல்வது, மானாட மயிலாட அல்லது ஜோடி ஒன்று நிகழ்ச்சியில் பங்கேற்பது, பார்வையாளராகச் செல்வது, தனியாக ஸ்கூட்டரிலோ, காரிலோ ஓட்டிச் செல்வது, வேலைகளில் ஏற்றத்தாழ்வின்றி எல்லா வகை வேலைகளுக்கும் செல்வது… இப்படித்தான் பலரும் புரிந்து கொள்கின்றனர். ஆனால் இத்தகைய தனிநபர் உரிமைகளைப் பெற்றுள்ள பெண்கள் தமது மணவாழ்க்கையைச் சுயேச்சையாக முடிவெடுக்க முடியாது. அப்படி மீறி எடுத்தால் கொலைவெறியைச் சந்திக்க வேண்டும் எனும் போது இங்கே எது பெண்ணுரிமை? ஏது பெண்ணுரிமை?
இந்தக் கட்டுரை எழுதும் சமயத்தில் சங்கீதாவுக்கு குழந்தை பிறந்திருக்கலாம், சண்டீகர் பெண்ணுக்கு வேறு மணம் கூட நடந்திருக்கலாம். ஆனால் அந்தப் பெண்கள் தனிமையில் கதறி அழுதவாறு இந்த வாழ்க்கையை எப்படி ஓட்டப் போகின்றோம் என விரக்தியில் உறைந்திருப்பார்கள். ஒருவேளை தற்கொலைக்குக் கூட முயற்சிக்கலாம். பரவாயில்லை,விரும்பியபடி வாழ்வதற்கு கதியில்லாத போது உயிரை முடித்துக் கொள்வது ஒன்றும் மோசமானதல்ல.


Monday, June 22, 2009

பயங்கரவாதிகளின் உண்மைக் கதை!

ஒரு முசுலீமின் வீட்டுக்கதவை போலீசோ அல்லது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களோ தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முசுலீம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக அப்பாவி முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது இசுலாமிய மக்களின் நிலைமை.

வீடு, வேலை, கல்வி அனைத்திலும் முசுலீம் என்பதற்காகவே வாய்ப்புகள் மறுக்கப்படும் அளவுக்கு அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அவ்வளவு ஏன் சென்னையில் இரண்டாம் காட்சி சினிமாவைப் பார்ப்பதற்குக்கூட ஒரு முசுலீமுக்கு சுதந்திரம் இல்லை.

ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் ஓராயிரம் முசுலீம் மக்களின் நிம்மதி குலைக்கப்படுகின்றது. குண்டு வைத்த தீவிரவாதிகளை உடனே கைதுசெய்து ரிசல்ட் காட்ட வேண்டுமென்ற இயல்பான பொது நிர்ப்பந்தம் காரணமாக எண்ணிறந்த முசுலீம் மக்கள் எந்தக் குற்றமுமிழைக்காமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடுகின்றார்கள். இது அப்படிப்பட்டவர்களின் கதை. தெகல்கா ஏடு இந்தியாவெங்கும் புலனாய்வு செய்து இந்த உண்மைகளை வெளியிட்டிருக்கின்றது. தொந்தரவில்லாமல் நிம்மதியாக வாழும் இந்து மனத்தை இந்த கண்ணீர்க்கதைகள் சற்று நேரமாவது குறுக்கீடு செய்யட்டும்.

அகமதாபாத் பள்ளிவாசல் ஒன்றில் ஜூமா நமாஸில் நிதானமாக அமைதியாக ஜூலை 25, 2008, வெள்ளியன்று தொழுகை நடத்தி "இந்துக்களோடு பரஸ்பரம் நேசமான வாழ்க்கை வாழவேண்டும்; அடுத்தவன் பசியோடு இருக்க நாம் மட்டும் வயிறுமுட்டச் சாப்படுவது அநீதி'' என்று போதித்த ஒல்லியான இசுலாமியக் கல்விமான் அப்துல் அலீம் — அடுத்தநாள் ஜூலை 26 அகமதாபாத் குண்டுவெடிப்புக்குப் பிறகு சில நிமிசங்களுக்குள்ளாகவே போலீசால் கைது செய்யப்பட்டார். வீட்டில், தெருவில் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, தடதடவென வீட்டுக்குள்ளிருந்து அலீம் இழுத்துச் செல்லப்பட்டார்.

ஞாயிறு ஜூலை 27 அன்று டி.வி., செய்தித்தாள்களில் அப்துல் அலீம் புழுதிவாரித் தூற்றப்படுகின்றார். ரகசிய சதிவேலை செய்த தீவிரவாதி என்று வர்ணிக்கப்பட்ட அலீம் நெரிசல்மிக்க சந்தடிமிகுந்த முசுலீம் பகுதிகளில் மக்களால் மதிக்கப்பட்டவர்தான். இரண்டு மாதங்களுக்கு முன்புகூட உள்ளூர் இன்ஸ்பெக்டர் அலீமின் அமைப்பான "அஹ்பே ஹதீஸ்' இசுலாமியப் பிரிவின் டிரஸ்டுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்; அவரது உறுப்பினர்கள் பட்டியல் தனக்கு உடனே வேண்டும் எனக் கோரியிருந்தார். அப்போதுகூட, போலீசாரின் தகவலின்படி, அலீம் ஒரு முகவரியில் டிரஸ்டு நடத்துபவர்தான்; தவிர, அலீம் சட்ட விரோதமானவரோ, ரகசிய நபரோ அல்ல.

2006 இல் அலீமின் அமைப்பு புதுடெல்லியில் நடத்திய தேசியக் கருத்தரங்கத்திற்குத் தலைமை விருந்தினராக வந்தவர் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் என்பது குறிப்பிடப்பட வேண்டிய சிறப்புச்செய்தி. குஜராத் இனப்படுகொலைக்குப் பிறகு, அலீம் ஏராளமான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். அப்போது, நிராதரவாக விடப்பட்ட 34 முசுலீம் குழந்தைகளுக்கு குவைத்தில் வசிக்கும் ஒரு பணக்காரரிடம் உதவி கோரினார். ஆனால் திட்டம் நிறைவேறவில்லை, கைவிடப்பட்டது. குழந்தைகளும் அந்தப் பணக்காரரிடம் அனுப்பப்படவில்லை. இதையெல்லாம் காரணம் காட்டி அலீமின் மீது தீவிரவாதக் குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டது. தீவிரவாதப்பயிற்சி எடுப்பதற்காக அகமதாபாத்திலிருந்து இளைஞர்களை உ.பி.க்கு அனுப்பினார்; 2002லிருந்து தலைமறைவாகி விட்டார்'' என்றெல்லாம் ஜோடித்து, அவரைப் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்ததாகச் சித்தரித்து குற்றவாளியாக்கினார்கள்.

சட்டத்துக்கு உட்பட்ட குடிமகனாய் வலம்வந்த ஒரு இசுலாமிய மதநம்பிக்கையாளரான அலீமை சட்டவிரோதமாகத் தீவிரவாதியாய்க் காட்டி இப்போது 2008 இல் கைதுசெய்து உள்ளே தள்ளிவிட்டது போலீசு. நமக்கு எழும் கேள்வி: முன்பு அலீமின் டெல்லி கருத்தரங்கில் கலந்து கொண்ட சிவராஜ் பாட்டீலை விசாரித்து விட்டார்களா?

நம்முள் எழும் வேதனை: அலீம் சிறையில் வாடுகின்றார்; அலீமின் குடும்பமோ அடுத்தவேளைச் சோற்றுக்கே பரிதவிக்கின்றது. அலீம் இருந்த வரை கடைச்சிறுவன் உதவியோடு பழைய இரும்புக் கடை ஒன்றை நடத்தி வந்தார்; இப்போது சிறுவன் மட்டுமே கடையைக் கவனிக்கின்றான்; அதிக வருவாயில்லை. ஒவ்வொரு மாதமும் வீட்டுவாடகைக்கு அலீமின் மனைவி ரூ. 2500 தேற்ற வேண்டும்; 5 குழந்தைகளுக்குச் சோறு போட்டுக் காப்பாற்ற வேண்டும்.

ஐதராபாத்தில் மவுலானா மொகம்மது நசீருதீன் மற்றும் அவரது இரு மகன்களான யாசிர், நசீர் ஆகிய மூவரையும் "தீவிரவாதிகளின் குடும்பம்' என்று போலீஸ் அழைத்தது. நசீருதீன் முப்பதாண்டுகளுக்கு முன்னால் தெருவோரக் கடைகளில் தான் கற்ற மோட்டார்பைக் ரிப்பேர், வேலைத்திறன், நண்பர்களிடம் வாங்கிய கடன் இவற்றை வைத்து என்ஜினீயரிங் ஒர்க்ஷாப் வைத்திருந்தார்.

நசீருதீன் இசுலாமியக் கல்விமான். பாபர் மசூதி இடிப்பு, குஜராத் 2002 முசுலீம் படுகொலைகள் இரண்டிலும் அரசை வெட்டவெளிச்சமாக விமரிசித்தவர்; "குஜராத்தில் கலவரம் செய்தார்; 2003 மார்ச்சில் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பான்டியாவைக் கொலை செய்த சதியில் ஈடுபட்டார்'' என்ற சொல்லி 4 ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டார்.

செப் 2001ல் "சிமி' தடை செய்யப்பட்ட சமயத்தில் யாசிர் இதில் உறுப்பினர். பிறகு பல பொய்வழக்குகளில் அவர் சேர்க்கப்பட்டபோதும் "சிமி' உறுப்பினர் என்பதிலிருந்து தொடங்கியே வழக்கு சோடித்தது போலீசு. முதலில் 2001இல் "சிமி' தடைசெய்யப்பட்டபோது கைது; கைதான மறுநாளே பிணை கிடைத்தது; ஆனால் "அரசை எதிர்த்துப் பேசினார்' என்று அடுத்தநாளே மறுபடியும் கைது, 29 நாள் சிறை. இப்போது ஏழாண்டுகளாகி விட்டன. ஆனாலும் எந்த வழக்குமே நடக்கவில்லை.

அண்மையில் ஜூலை 15, 2008 இல் மறுபடி கைது பெங்களூருவைக் குலுக்கிய குண்டு வெடிப்புக்கள் ஜூலை 25இல் நடந்தபோது, குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளைக் கர்நாடகாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தவர் என்று பின்னால் வந்த வழக்குடன் பிணைக்கப்பட்டார். ஆதாரம் விசாரணையில் யாசிரே கொடுத்த வாக்குமூலம் என்றார் கமிஷனர் பிரசன்னராவ். போலீசு சொன்னது பொய் என்று தனது தாய் உதாய் பாத்திமா மூலம் வெளி உலகுக்குத் தெரிவித்தார் யாசிர். தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்துச் சித்திரவதை செய்து கையெழுத்து வாங்கிவிட்டார்கள் என்று அதனது குரூரத்தை அம்பலமாக்கினார் பாத்திமா.

யாசிரின் தம்பி நசீர் இருபதே வயது நிரம்பியவர். ஜனவரி 11, 2008 இல் கர்நாடகாவில் நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது மறித்து நிறுத்திக் கைதுசெய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளைத் திருடி ஓட்டுவதாகவும், இருவரும் கைவசம் சிறுகத்தி வைத்திருப்பதாகவும், "அரசுக்கெதிராகப் போர்செய்ய இருப்பதாகவும்', தாங்கள் "சிமி' உறுப்பினர்கள் என வாக்குமூலம் கொடுத்ததாகவும் போலீசு கூறியது. ஆனால் 90 நாட்களுக்குப் பிறகும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால், நசீரின் வழக்குரைஞர் பிணை பெற்றார். ஆனால் உடனே அவர் மீது சதிவழக்கொன்றைப் போட்டு சிறையிலிருந்து வெளியே வராதவாறு போலீசு செய்து விட்டது.

அக், 2004 இல் மவுலானா நசீருதீன் கைது செய்யப்பட்டபோது அதை எதிர்த்து மக்கள் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஐதராபாத் வந்திருந்த குஜராத் போலீசு அதிகாரி நரேந்திர அமீன் தனது துப்பாக்கியால் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைச் சுட்டுக் கொன்றுவிட்டார். இறந்தவர் உடலை வைத்துக்கொண்டு, அமீன் மீது வழக்குப் போட்டால்தான் நகருவோம் என்று மக்கள் உறுதியாக அங்கேயே மறியல் செய்தனர். போலீசு மக்கள் மீது ஒரு வழக்கும் அமீன் மீது ஒரு வழக்குமாகப் பதிவுசெய்தது. அமீன் கைது செய்யப்படவில்லை. பிறகு அமீன் மீதான வழக்கு ஒர் அங்குலம் கூட நகரவில்லை. அன்று மவுலானாவுடன் அமீன் அகமதாபாத்துக்குப் பறந்தான்; அவனுடைய உடையில் சிறு கசங்கல் கூட இல்லை. அவனுக்கு எதிரான வழக்கு எப்போதோ செத்துப் போய் விட்டது.

மவுலானா நசீருதீன் மற்றும் இரு மகன்களும் கொடுஞ்சிறையில். அந்த மகன்களைப்பெற்ற தாய் கதறுகின்றாள்: "எங்கள் குடும்பத்திலிருந்து மூன்று பேர் மீது பொய்வழக்கு. என்னையும் சேர்த்துச் சிறையில் தள்ளட்டும். பிறகு, எங்களை ஒன்றாகவே சேர்த்து சுட்டுக் கொன்று விடட்டும், வசதியாக இருக்கும்.''

அப்துல் முபீன், உத்திரப் பிரதேச மாநிலம் பக்வா கிராமம். இவர் மீது ஒன்றன் பின் ஒன்றாகப் பொய்யாக 4 கிரிமினல் தீவிரவாத வழக்குகள். முதல் வழக்கு செப் 2000 இல் போடப்பட்டது. பிறகு அடுத்தடுத்து வழக்குகள். ஒவ்வொரு வழக்கையும் அது பொய் என்று நிரூபிக்க இரண்டு, மூன்று ஆண்டுகள் எடுத்தன. நான்காவது வழக்கு மட்டுமே எட்டு நீண்ட ஆண்டுகளாக நடந்தது. முதல் இரு வழக்குகளிலுமே அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது. ஆகஸ்டு 6, 2008 இல்தான் முபீன் விடுதலை ஆனார்.

மேலே சொன்ன நான்கு வழக்குகளிலுமே "இவர் சிமி உறுப்பினர்' என்று பொய் சொல்லப்பட்டது எப்படியாவது "சிமி' யைத் தடைசெய்ய வேண்டும் என்பதற்காக. சாட்சி: அப்துல் முபீன் போலீசில் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட வாக்குமூலம்.

முதல் வழக்கில் முபீன் சிறை சென்றபோது அவரது கடைசிக் குழந்தையான மகள் ஜைனாவுக்கு வயது ஆறேமாதம். இப்போது 2008 இல் முபீன் விடுதலையாகி வந்து பார்க்கும்போது அவளுக்கு அப்பாவைப் பார்க்க ஒரே வெட்கம். இந்த முபீன் விடுதலையான நான்காம் நாள், "இந்துஸ்தான் டைம்ஸ்' நாளேடு ஆகஸ்டு 10, 2008 அன்று சிமியைப் பற்றி முழுப்பக்கக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. முபீன் சிமியின் முதல் தீவிரவாதி என்று எழுதியது; குற்றம் நிரூபிக்கப்படாத போதும் அவர்தான் முதல் தீவிரவாதி என்று எழுத இந்துஸ்தான் டைம்ஸ் வெட்கப்படவில்லை. முபீனுக்கும் "சிமி'க்கும் ஜனநாயக மறுப்பு, சித்திரவதைகள், பலப்பல பொய் வழக்குகள்; "இந்துஸ்தான் டைம்ஸூ'க்கோ பொய்களை இரைத்துக் கதைகள் விற்க வானளாவிய உரிமை.

அபுல் பஷார் குவாஸ்மி உ.பி.யைச் சேர்ந்த இசுலாமியக் கல்விமான். 23 வயதே நிரம்பிய இளைஞர். ஒராண்டுக்கு முன் தனது திருமணத்தை முடித்திருந்த குவாஸ்மி தம்பிக்கும் திருமணம் செய்து வைக்க அங்கங்கே சொல்லி வைத்திருந்தார். இதை மோப்பம் பிடித்த போலீசு தரப்பு கடந்த ஆகஸ்டில் பெண்வீட்டார் என்று சொல்லிக் கொண்டு குவாஸ்மியின் வீட்டுக்குள்ளே நுழைந்தது. வெளியே அவர்கள் மாருதி வேனை நிறுத்தியிருந்தார்கள். உள்ளே தடதடவென நுழைந்த இரண்டு போலீசோ குவாஸ்மியைத் தரதரவென்று இழுத்துச் சென்று மாருதி வேனில் திணித்துக் கொண்டு பறந்து போனார்கள்.

இரண்டு நாள் கழித்து, குஜராத் போலீசு அதிகாரி பி.சி. பாண்டே அகமதாபாத் குண்டு வெடிப்பைத் திட்டமிட்டவன் குவாஸ்மிதான் என்று அறிவித்தான். "பாண்டே' கேள்விப்பட்ட பெயராகத் தெரிகின்றதா? ஆமாம், குஜராத்தில் 2000 அப்பாவி முசுலீம்களின் படுகொலைகளில் ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங் தள் மூன்றோடும் தீவிரமாக இறங்கி நரவேட்டையாடியவன்தான் பாண்டே. இதற்காக அவன் பதவி உயர்வும் வாங்கிக் கொண்டான்.

ஆனால் குவாஸ்மி ஒரு அப்பாவி; கிழக்கு உ.பி.யிலுள்ள அசாம்கர் நகரத்தின் அருகே ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த கூச்ச சுபாவமுள்ள அப்பாவி. போலீசோ அவனைச் "சிமி'யின் தலைவன், குஜராத் படுகொலைகளுக்குப் பழிவாங்கத் துடித்த "புனிதப் போராளி' (ஜிகாதி) என்று விவரித்தது. ஊடகங்கள் தங்களது பங்குக்கு குவாஸ்மி இந்தியா முழுக்கப் பயணம்செய்து தீவிரவாத வலைப்பின்னலை உருவாக்கியவன் என்றும், கேரளத்தில் செயல் வீரர்களை வடிவமைத்தவன் என்றும் கலர்கலராகச் செய்திகளை விற்றன.

ஆகஸ்டு 14இல் குவாஸ்மியை இழுத்துச் சென்ற போலீசு இரண்டுநாள் கழித்து மறுபடியும் அவரது வீட்டுக்கு வந்தது. அவரது தந்தை, தம்பி, தங்கைகளை வெளியே பிடித்துத் தள்ளிவிட்டு வீட்டைச் சல்லடை போட்டுச் சலித்து சோதனை போட்டது. வீட்டிலிருந்த மூட்டைப் பூச்சி மருந்து மற்றும் ஒரு மெட்டல் கிளீனிங் பிரஷ்ஷைக் கவனமாகப் பொட்டலம் கட்டி எடுத்துச் சென்றது. அபு பக்கீர் பயத்தோடு கேட்டார்: "இவற்றை என் பையன் குண்டு தயாரிக்கத்தான் பயன்படுத்தினான் என்று போலீசு சொல்லி விடுவார்களோ?''

குவாஸ்மி "சிமி' உறுப்பினர் அல்ல; இசுலாமிய இறையியல் முடித்துள்ள, வழக்குகள் ஏதுமில்லாத எளிய இளைஞர். இவரைப் போலீசு கடத்திச் சென்றது என்று உள்ளூர் மக்கள் போலீசிடமே முறையிட்டார்கள். அக்குடும்பத்துக்கே இப்போது ஊரார்தான் சோறு போடுகின்றார்கள்.

தந்தை அபுபக்கீர் சொல்கிறார்: "நாங்கள் செய்த ஒரே தவறு முசுலீம்களாக இருப்பதுதான்.''

· குப்பண்ணன்.

நன்றி: http://www.tamilcircle.net/