Showing posts with label சீர்திருத்தம். Show all posts
Showing posts with label சீர்திருத்தம். Show all posts

Wednesday, September 16, 2009

கிராமங்களில் ஜாதித் திமிரை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்? – பெரியார்.

image

சாதி ஒழிப்புத் தொடக்கம் - நடப்பு அதை ஒழிக்க வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் அம்பேத்கர் அவர்கள் நல்லவண்ணம் எழுதியிருக்கிறார்கள். முன்பு வடநாட்டின் பஞ்சாபில் சாதி ஒழிக்க ஓர் இயக்கம் ஏற்பாடு செய்தார்கள். அதைச் சாதி ஒழிக்கும் ஸ்தாபனம் என்று சொன்னார்கள். நன்கு வேலை செய்தார்கள். நம் பத்திரிகைகளை வாங்கி மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். நல்ல பகுத்தறிவுடன் கூடிய கார்ட்டூன்களைப் போட்டார்கள்; அதிலே என்னையும் உபதலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். நன்றாக நடந்து கொண்டிருந்தது. பிறகு பணக்காரர்கள் அதை விலைக்கு வாங்கி விட்டார்கள். அதற்கு உதவி செய்வதாகச் சொல்லி வந்தார்கள், விலைக்கு வாங்கினார்கள். இருந்தாலும், அதன் மூலம் சாதி ஒழிப்பு மாநாடு என்று கூட்டி, தலைமை வகிக்க அம்பேத்கரைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் சம்மதித்தார்கள்.

அவர்கள் அந்த மாநாட்டில் பேச சொற்பொழிவை எழுதினார்கள். அதைக் கண்டதும் ரொம்பத் திடுக்கிட்டு விட்டார்கள். மதம், சாஸ்திரம் ஒழிந்தால்தான் சாதி ஒழியும்; அதிலே ஒன்று இருந்தால் கூட சாதி ஒழியாது என்று சொல்லி இருக்கிறார். “மநு நீதி, சுருதி, மதம் இவற்றை முதலில் நீங்கள் ஒழித்தாக வேண்டும். அதைச் செய்யாமல் சாதியை ஒழிக்க முடியாது; இதுவே எனது உறுதியான அபிப்பிராயம்’ என்று எழுதியிருக்கிறார்கள். இதைப் பார்த்த உடனே அங்கே சாதியை ஒழிக்க வேண்டுமென்ற ஸ்தாபனத்தை ஏற்படுத்தியவர்கள், மத விரோதமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு அவரை அணுகியபோது, அவரும் “என்னைத் தலைமை தாங்கப் போடுவதால் என் கருத்தைச் சொன்னேன்’ என்றார். இந்தக் கருத்தை ஜீரணிக்க முடியாது என்று மாநாட்டினர் சொல்ல, “நீங்கள் வேண்டுமென்றால் இது தப்பு என்று தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளுங்கள்; உங்கள் மாநாட்டிற்குத் தலைமைப் பதவிக்காக என் கருத்துக்கு விரோதமாகப் பேச முடியாது’ என்று சொல்லிவிட்டார். அவர்கள் கெஞ்சியும் முடியவில்லை. அதனால் அவர்கள் அந்த மாநாட்டையே நிறுத்தி விட்டார்கள்.

கிராமங்களில் சாதி ஒழிய வேண்டுமென்றால் கணக்குப் பிள்ளை வேலையைப் பறையனுக்கு கொடுக்க வேண்டும்; மணியம் வேலையைப் பள்ளர், சக்கிலி ஆகியவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கணக்குப் பிள்ளையாகப் பார்ப்பானும் முதலியும், மணியமாகப் பிள்ளையும், கவுண்டனும் இருப்பதால் தான் அங்கே இருந்து சாதி உரிமை தோன்றுகிறது. ஆனதனாலே ஒரு திட்டம் போட வேண்டும். கணக்குப் பிள்ளை, மணியம் வேலைகளை அப்படி ஒதுக்கி வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் எப்படிச் சாதி உணர்ச்சி இருக்கும்? அதேமாதி கான்ஸ்டேபிள், எட்கான்ஸ்டேபிள், சப்இன்ஸ்பெக்டர் வேலைகளையும் பறையனுக்கு, பள்ளனுக்கு, சக்கிலிக்கு கொடுக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால், சமுதாயத்தில் சாதித் திமிர் ஒழிந்துவிடும்.

அப்படிக்கு இல்லாமல் சாதியே ஒழிய வேண்டுமென்று சொல்லும் வார்த்தையில் அர்த்தமில்லை. அவர்களுக்கு இன்று ஜட்ஜ் வேலை கொடுக்க வில்லையா? ஜில்லா கலெக்டர் வேலை கொடுக்க வில்லையா? மந்திரி வேலை கொடுக்கவில்லையா? அதில் எல்லாம் என்ன ஓட்டை கண்டார்கள்? ஏதோ பொறுக்கித் தின்கிற வேலையாக இருந்தாலும், அவர்கள் பொறுக்குவதை இவர்கள் பொறுக்கித் தின்றுவிட்டுப் போகிறார்கள். இதில் என்ன அதிகத் தவறு? சாதி ஒழிய வேண்டுமென்றால் அரசாங்கம் என்ன செய்தால் ஒழியுமோ, அதைத் துணிச்சலோடு செய்ய வேண்டும். கோயில் பூசாரி வேலையைக்கூட பறையனுக்கே கொடுக்க வேண்டும்; எவனாவது சாமி கும்பிட மாட்டேன் என்றால் கும்பிடாமல் போகட்டுமே.

நம் வளர்ச்சியைப் பெருக்க எது வந்தால் ஆகுமோ அதை எடுத்துக் கொள்ள வேண்டும். நம் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் ஒரு மொழி இருக்க வேண்டும். கடவுள் பேசும் மொழி என்று சொன்னால், அதைக் கேட்டு முட்டாளாகவே இருக்கிறானே! இதற்கு என்ன சமாதானம்? நம் உயர்ந்த மேதாவி - புலவன் எல்லாம் இலக்கியப் புராணங்களைப் படித்து முட்டாள்களாகத்தானே இருக்கிறார்கள். ராமாயணப் பிரச்சாரம் செய்கிறார்கள். புலவர்களுக்கு மானம், வெட்கம் கிடையாது. தங்கள் மணிபர்சு நிரம்ப வேண்டும் என்பதுதான். சாதி இருப்புக்குப் புலவர்களே காரணம்.

எந்த இலக்கியத்தை எடுத்துக் கொண்டாலும், கந்தன், ராமன், கிருஷ்ணன் முதலிய கதைகளை எடுத்துக் கொண்டாலும் எதில் சாதி ஒழிந்திருக்கிறது? நாயன்மார்கள், ஆழ்வார்கள், பரமஹம்சர்கள், மகாத்மாக்கள், வெங்காயம் இவர்கள் எல்லாம் இருந்தார்களே! எந்த ஆழ்வார், எந்த நாயன்மார், எந்த மகரிஷி சாதி ஒழிய வேண்டுமென்று சொன்னார்கள்? சாதி ஒழிய வேண்டும் என்று எழுதியதெல்லாம் குப்பைக்குப் போய் விட்டது. சாதி வேண்டும் என்பதெல்லாம் வெளியே தெரிகிறது; பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஆகவே, பகுத்தறிவு பலமடைய வேண்டும். ஆராய்ச்சி, அறிவு என்ன சொல்கிறது? அதற்கு என்ன அவசியம்? இந்தத் தலைமுறைக்கு முற்போக்கு அடைவோமா என்று சிந்தித்துப் பார்த்தால், தானாகவே வந்துவிடும். நான் சொன்னதையெல்லாம் நம்பி விடாதீர்கள். இதெல்லாம் ஒரு மனிதனின் கருத்து. இதையெல்லாம் நீங்கள் சிந்திக்க வேண்டும். அறிவுக்குத் தடையில்லாமல் சிந்திக்க வேண்டும். ஏதோ தோன்றியதெல்லாம் சரி என்று சொல்லவில்லை. இதை நீங்கள் சிந்தித்து விஷயங்களை அறிந்து நான் சொல்லியதில் எது சரி? எது தப்பு? என்று ஆராய்ந்து, எது சரியென்று படுகிறதோ அதைப் பற்றிச் சிந்தியுங்கள். அந்த உணர்ச்சி வந்தால்தான் எடுக்கும் காரியம் வெற்றி பெறும்.

வில்லிவாக்கத்தில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் 11.4.1964ல் ஆற்றிய உரை.


Sunday, September 6, 2009

குருட்டு நம்பிக்கைகளை வளர்ப்பதே மதம்! – தந்தை பெரியார்.

image

மனித வர்க்கம் விலங்குகளைப்போல் தனித்தனியே காடுகளில் வாசஞ்செய்து வந்த நிலைமை மாறி, குடிசை கட்டிக் கூடிக் குலவி வாழ ஆரம்பித்த போதே அவற்றிற்குச் சில கொள்கைகள் தேவையாகிவிட்டது. எப்படி எனில், எப்படி தனியே இருக்கும் மக்கள் ஏதாவது ஒரு பொது நன்மையை உத்தேசித்து தங்களுக்கென்று ஒரு சங்கத்தை நிறுவினால் உடனே அதற்குக் கொள்கைகள் நிர்ணயிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகின்றதோ, அதேபோல் மனிதர்களின் கூட்டு வாழ்க்கைக்கு கொள்கைகளை நிர்ணயிக்க வேண்டியதாகி விட்டது.

அக்கொள்கைகள் தான் இப்போது மதம் எனப்படுவதாக இருக்கிறது. அம்மாதிரியான கொள்கை நிர்ணயங்களை மீறக் கூடாது என்பதற்கு நிபந்தனைகள் ஏற்படுத்தி, அந்நிபந்தனைகளை மீறி நடப்பவர்களைத் தண்டிக்க முடியாத நிலையிலோ, அல்லது தண்டிக்க வேண்டாம் என்று தோன்றிய சமயத்திலோ, அல்லது சிலரின் சுயநலத்திற்காகவோ, வேறு விதத்தில் ஏமாற்றிப் பிழைப்பதற்காகவோ வேண்டி, அக்கொள்கைகள் கடவுள் என்பதுடன் சம்பந்தப்படுவதனால் தான் மக்கள் ஏமாறுவார்கள் என்கின்ற எண்ணம் கொண்டு அவற்றை “கடவுள் உண்டாக்கினார்” என்றும், அவற்றிற்கு மீறி நடந்தால், “கடவுள் தண்டிப்பார்” என்றும் சொல்ல வேண்டியதாய் விட்டது. (இந்த இடந்தான் முதல் முதலாக மனிதன் தவறு செய்த இடமாகும்.)

ஆனால், இக்கொள்கைகள் நிர்ணயம் செய்யப்பட்டது எப்படி? எந்த ஆதாரங்களைக் கொண்டு? என்று பார்ப்போமேயானால், அது அந்தக்காலத்திய நிலைமை, சீதோஷ்ண ஸ்திதி, மக்களின் அறிவு நிலை, அதாவது பாமர மக்களின் அறிவீனம், சிலரின் சூழ்ச்சித் திறம் முதலாகிய நிலையில் அதாவது, காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்ப செய்யப்பட்டவைகள் என்றே சொல்ல வேண்டும்.

மேலும், ஒரு குறிப்பிட்ட கொள்கை பிற்கால தேச வர்த்தமானத்திற்கோ, சிலரின் சுயநலத்திற்கோ ஏற்றதாயில்லாவிட்டால் யாராவது அறிஞர் அல்லது தந்திரக்காரர் அதை மாற்ற நினைக்கும்போது, பாமர மக்கள் மூடநம்பிக்கையின் பலனாய் தாங்கள் பிடிவாதங்காட்டி மாற்ற சம்மதிக்காத காலத்தில் பிரிந்துபோய் புதிய கொள்கைகள் வகுத்து அதாவது, முன்னையதை திருத்தியோ, அல்லது சில மாற்றியோ, அல்லது சில புதியதுகளைச் சேர்த்தோ செய்ய நேரிடும் போது அது ஒரு புதிய மதமாக ஏற்பட்டு விடுகின்றது உண்டு.

இதனால், பாமர மக்கள் அதாவது குருட்டுப் பிடிவாத முள்ளவர்கள் “என் மதம் பெரிது,” “உன் மதம் சிறிது” என்கின்ற மதச் சண்டைக்கு ஆளாகி விடவும் நேரிட்டு விடுகின்றது. இந்தச் சண்டையில்லாமல் திருத்துப்பாடு செய்யலாமா என்று நினைத்த பெரியவர்கள், கொள்கைகளை மாற்றாமல் பழைய கொள்கைகளுக்கே புதிய வியாக்கியானங்களைச் செய்து திருப்தி செய்ய முயற்சித்தும் இருக்கின்றார்கள். ஆயினும், அம்முயற்சிகளின் பலனும் முடிவில் உட்சமயங்களாகவும், சார்புச் சமயமாகவும் மாறிற்றேயொழிய, கொள்கைகளின் முக்கியங்களை அறியமுடியாமலேயே போய் விட்டது.

இப்படியேதான் மதங்கள் வெகு காலமாய் மாறி மாறியும், திரிந்து திரிந்தும், பெருகிக் கொண்டும் வந்ததினாலேயே மதங்களின் உண்மைத் தத்துவமும், அவசியமும் அறிவதற்கில்லாமற் போனதோடு அதை ஒரு சடங்காகவே கொள்ள வேண்டியதாகி விட்டது.

இன்றைய தினம் எந்த மதக்காரனையாவது கண்டு உன் மதம் என்ன? அதன் தத்துவம் என்ன? என்றால், சில சடங்கையும், குறிகளையும் மாத்திரம்தான் சொல்லுவானே ஒழிய, அதன் உண்மைத் தத்துவம், அதாவது எந்தக் கருத்தைக் கொண்டு ஆதியில் மதத்தை உண்டாக்கினார்களோ அந்தக் கருத்து சற்றும் அறிந்திருக்கமாட்டான். அதோடு, அதற்கு நேர் விரோதமாக அறியாமையும், ஒழுக்கயீனங்களும் ஏற்பட்டுவிட்டது. அன்றியும், சிலர் இவற்றைத் தங்கள் சுயநலத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளவும் கருவியாய் விட்டது.

சிறப்பாக, இப்போதைய முக்கிய மதங்கள் என்று சொல்லப்படுபவைகள் எல்லாம் பாமர மக்களை ஏமாற்றி கொடுமைப்படுத்தி பணம் பறித்து புரோகிதக் கூட்டமும், அரசாங்கமும், செல்வந்தனும் பிழைக்க மார்க்கங்களாக இருக்கின்றனவேயன்றி, பொதுவாக மனித வர்க்கத்திற்கு எவ்வித பலனும் இல்லாமற் போய்விட்டது. மற்றும், மதத்தினால் ஏற்பட்டு வரும் கெடுதிகள் என்னவென்று பார்ப்போமானால், முதலாவாது, மதம் மனிதனின் அறிவையே அடியோடு கெடுத்துவிடுகின்றது.

எப்படியெனில், ஒவ்வொரு மதக்காரனும் தனது மதப்படி ஒரு கடவுள் உண்டு என்று நினைப்பதோடு, தனது மதத்தையும் கடவுள் உண்டாக்கினார் என்று நம்புவதாகக் காணப்பட்டாலும், மற்றொரு மதக்காரனும் அப்படித்தானே சொல்லுகிறான். ஆதலால், அவர்களுக்கு வேறு மதத்தையும், நமக்கு வேறு மதத்தையுமாகக் கடவுள் செய்திருப்பார் என்று சிறிதாவது யோசிக்கவோ, அல்லது நம் மதத்தை வையும்படியோ, அன்றி ஏற்காதபடியோ அவர் மற்றொரு மதத்தை உண்டாக்கி இருப்பாரோ? அப்படியானால், இது ஒன்றுக்கொன்று முரண்பாடல்லவா? என்று எவருமே நினைப்பதில்லை. எவருமே என்றால் மத ஆச்சாரியார்கள், மத அபிமானிகள் என்பவர்கள் முதலாக எவருமே கருதுவதில்லை.

இந்த ஒரு காரணத்தாலேயே, மதம் மக்களின் அறிவை எவ்வளவு தூரம் கெடுத்திருக்கின்றது என்பது விளங்கும். இரண்டாவது, மனிதர்களின் ஒற்றுமைக்குப் பதிலாக மனிதனை மனிதன் பிரித்துக் காட்டவே மதம் உதவுகின்றது. மூன்றாவது, மதமானது மனிதனை வேடத்திலேயே திருப்தியடையச் செய்கின்றதே ஒழிய, ஒழுக்கத்தில் சிறிதும் இடமில்லை. ஏனென்றால், எவ்வளவு நல்ல மதமானாலும் முதலில் ஏதாவதொன்றையாவது நமது புத்திக்கும், அறிவிற்கும், கண்ணுக்கும் படாததைக் குருட்டுத்தனமாய் நம்பித்தானாக வேண்டுமென்று சொல்லாமலிருப்பதில்லை. அப்படியானால், அம்முறையில் ஒன்றை நம்பிவிட்டு அதேபோன்ற மற்றொன்றை நம்பாமலிருப்பதற்குக் காரணமும் இல்லை.

அய்ந்தாவது, மதமானது கடவுளுக்கும் நமக்குமிடையில் தரகர்களின் நடவடிக்கையையும், வார்த்தையையும் அது எவ்வளவு அசம்பாவிதமானாலும் நமது சொந்த அறிவைவிட, பிரத்தியட்ச அனுபவத்தை விட மேலானதாக நினைக்கின்றது. அன்றியும், மதமானது பணம் செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும், பாவ மன்னிப்பும் இருப்பதாகவும், எவ்வித அக்கிரமங்களுக்கும் வணக்கத்தின் மூலம் மன்னிப்பு இருப்பதாகவும் நம்பச் செய்வதால் மனிதனை அக்கிரமம் செய்யுவும், செய்தவன் மூலம் பணம் சம்பாதிக்கவும் தூண்டுகிறது. சோம்பேறிப் பிழைப்புக்குத் தாராளமாய் மதம் இடம் கொடுக்கின்றது.

மதம் மக்களைக் கோழைகளாக்குகின்றது. மதத்தினால் இவ்வளவு அநீதிகள் ஏற்பட்டும் உலக சம்பவங்களின் உண்மைக் காரண காரியங்கள் உணருவதற்கில்லாமல் நிர்ப்பந்தமாய் மக்கள் மதத்தினால் தடுக்கப்படுகின்றார்கள். இவ்வளவும் தவிர, ஒருவனுடைய உழைப்பில் மற்றும் ஒருவனை சாப்பிடச் செய்கின்றது. நிற்க, உண்மைச் சைவன் என்பவன் ஒருவன் எவ்வளவு அயோக்கியனானாலும், ஒரு துளி சாம்பல் அவன் மேலே பட்டு விட்டால் உடனே அவனுடைய சகல பாவமும் தீர்ந்து நேரே “கைலயங்கிரிக்கு”ப் போய்விடலாம் என்கின்றான்.

சுருக்கமாகச் சொன்னால், வக்கீல் தொழில் செய்பவனும், பொய்ப் புராணப் பிரசங்கம் செய்பவனும் விபூதி பூசிக் கொள்ளுகிற காரணத்தாலேயே தன்னை ஒரு சைவன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். பிறரும் அப்படியே எண்ண வேண்டுமென்று ஆசைப்படுகின்றான் என்றால், சைவனின் யோக்கியத்திற்கும், சைவ சமயத்தின் பெருமைக்கும் வேறு சாட்சியம் தேவையா?

அதுபோலவே, ஒரு உண்மை வைணவன் என்பவனும் ஒரு தடவை ‘ராமா’ என்று சொல்லிவிட்டால் சகல பாபமும் தீர்ந்துவிட்டது என்கின்றான். ராமனைவிட உலகில் வேறு தெய்வமில்லை என்கின்றான். அதுபோலவே, ஒரு உண்மை கிறிஸ்தவன் என்கின்றவனும் ஏசுவை அடைந்தால் சகல பாபமும் தீர்ந்துவிடும் என்கின்றான். அன்றியும், ஏசுவின் மூலம் அல்லாமல் பாவ மன்னிப்பு என்பது கிடையவே கிடையாதென்கின்றான்.

அதுபோலவே, ஒரு முகமதியனும் ‘குரான்’ வாக்கெல்லாம் கடவுள் வாக்கு, அது எந்த தேசத்திற்கும், எந்தக் காலத்திற்கும் பொருந்தியது, அதில் உள்ள ஒரு சிறு கோடாவது மாறினால் இஸ்லாம் மதமே போய்விட்டது என்கின்றான். இப்படியே ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொரு பெருமையும். அதுவேதான் உண்மையான மதம், முறையே கடவுள் அவதாரம், கடவுள் குமாரன், கடவுள் தூதன் ஆகியவர்களால் ஏற்பட்டது என்றும் சொல்லுகின்றார்கள்.

- (11-8-1929 “குடி அரசு” இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கத்தின் ஒரு பகுதி.