”இப்போதுதான் புலிகளின் தொடர்பாளர் சா.பத்மநாபன் தொடர்பு கொண்டார். பிரபாகரன் கொல்லப்படவில்லை… நலமாக இருக்கிறார். வதந்திகளை நம்பவேண்டாம். கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு செஞ்சிலுவை
சங்கத்தின் உதவி கிடைப்பதற்கு வேண்டிய பிரசாரத்தைச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்…” என்று ஒரு எஸ்.எம்.எஸ். செய்தி தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் தீயாகப் பரவிய போதும், திங்களன்று இரவு வரை வட இந்திய சேனல்கள் மூலம் பரவிய தகவலே பலமாக ஓங்கி நின்றது.
”பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தகவல் பரப்புவதன் பின்னணியே அந்த தினத்தில் சிங்கள ராணுவம் கெமிக்கல் குண்டுகளைப் போட்டு கொன்று குவித்த நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களின் படுகொலையை திசை திருப்புவதற்காகத்தான்” என்ற தகவலையும் ஏற்பதா தள்ளுவதா என்று புரியாமல் குழம்பினார்கள் தமிழ் உணர்வுள்ள மக்கள்.
”பிரபாகரன் கொல்லப்படவில்லை! அதே சமயம் அவர் இலங்கையில் இருந்து தப்பிச்செல்வதற்கு இலங்கை அரசாங்கமே ஏதோ ஒரு வகையில் ஒப்பந்தம் போட்டு வழி விட்டிருக்கிறது. ஆனால், அவர் கொல்லப்பட்டதாக தகவல் பரப்பி வெற்றியடைய நினைக்கிறது. எப்படியோ இப்போதைக்கு போர்ச்செய்தி ஓய்ந்தது!” என்று சற்றும் ஜீரணிக்க முடியாத செய்திகளும் இதன் நடுவே உலாவர… உண்மை எது என்று தெரியாமலே திங்கள் இரவு கழிந்தது.
செவ்வாயன்று காலை இலங்கை மக்களவையில் அதிபர் ராஜபக்ஷே அசைக்க முடியாத ஆதாரங்களுடன் பிரபாகரன் மறைவை உறுதி செய்வார் என இலங்கை வட்டாரம் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் எழுதப்படும் ரிப்போர்ட் இதோ…
ஆங்கில சேனல்கள், 17-ம் தேதி மதியத்திலிருந்து பரப்பிய ‘பிரபாகரன் இறந்துவிட்டார்’ என்ற செய்தியை மையமாக வைத்து, உணர்ச்சிக் கொந்தளிப்பான விவாதங்கள் உலகத் தமிழர்களை உலுக்கின.
”களத்தில் நிற்கும் பிரபாகரனை நெருக்கி சிறிய வட்டத்துக்குள் கொண்டுவந்து விட்டது ராணுவம். தமிழகத்தில் தேர்தல் முடிவதற்காகத்தான் ஒரு ‘புரிந்து கொள்ளுத’லோடு காத்திருக்கிறார்கள். தேர்தல் முடிந்த கணமே மிகப் பெரிய அதிர்ச்சிச் செய்தி ஈழத்தில் இருந்து வரக்கூடும்!” - கடந்த 17.05.09-ம் தேதியிட்ட ஜூ.வி-யில் ‘தேர்தலுக்குப் பிறகு பிரபாகரன் நிலை… இலங்கை அரசின் இறுதித் திட்டம்’ என்ற தலைப்பில் நாம் எழுதியிருந்த கட்டுரையில் இடம் பெற்றிருந்த வரிகள்தான் இவை.
அதை நிஜமாக்கும் வகையில், அடுத்தடுத்து அதிர்ச்சிச் செய்திகளைக் கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறது சிங்களத் தரப்பு. புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரன், அவருடைய மகனான சார்லஸ் ஆண்டனி, அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், கடற்புலித் தலைவர் சூசை உள்ளிட்ட பலரும் பேரபாயத்தில் சிக்கிக் கொண்டதாகவும், அவர்களில் பலர் கொல்லப்பட்டு விட்டதாகவும் வருகிற செய்திகள், தமிழகத்தையே பதற்றத்தில் ஆழ்த்தி இருக்கின்றன.
பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி ஆகியோ ரைக் கொன்று விட்டதாகக் கூறி, இறந்து போன அவர்களின் படங்கள் எனவும் சிலவற்றை வெளியிட்டிருக்கிறது சிங்கள அரசு. மேலும், ஆங்கிலச் சேனல்கள் வாயிலாக ‘புலிகளைப் பூண்டோடு அழித்து விட்டோம்’ என்றும் சிங்கள அரசு தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டன.
உண்மையில் ஈழத்தின் நிஜமான நிலை என்ன?
புலிகளின் தகவல் தொடர்பில் தொடர்ந்து இருக்கும் வெளிநாடுவாழ் தமிழர்கள் சிலரிடம் பேசினோம்.
”இரண்டரை சதுர கிலோமீட்டர் பரப்புக்குள் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்களை முடக்கி விட்டது ராணுவம். தண்ணீருக்கும் உணவுக்கும் வழியற்றுக் கிடந்த மக்கள் மீது அடுத்தடுத்த தாக்குதலை நடத்திய ராணுவம், கடந்த 16-ம் தேதி பாஸ்பரஸ் குண்டுகளை வீசத் தொடங்கி விட்டது. ‘முள்ளிவாய்க்கால் வடக்குப் பகுதியில் பிரபாகரன் தங்கி இருக்கிறார்’ என தகவல் கிடைத்ததை அடுத்து, அந்தப் பகுதியில் பெருமளவு ரசாயன குண்டுகளை சரமாரியாக வீசியது ராணுவம்.
அதில் முப்பதாயிரத்துக்கும் மேலான மக்கள் தங்கி இருந்த அந்தப் பகுதியே பஸ்பமாகிப் போனது. ஏற்கெனவே ராணுவம் வீசிய ரசாயன குண்டுக்கு கடாபி, தீபன், துர்கா, விதுஷா ஆகிய முக்கியத் தளபதிகளைப் பறிகொடுத்திருந்த புலிகள், அடுத்து வீசப்பட்ட குண்டுகளுக்கு முக்கியப் போராளிகளை இழந்து விட்டனர். இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்து கிடப்பதாகச் சொன்ன கடற்புலி தளபதி சூசை, ‘உலகத்தின் கவனம் இப்போதாவது எங்கள் பக்கம் திரும்ப வேண்டும்!’ என கோரிக்கை வைத்தார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே புலிகள் தங்களின் ஆயுதங்களைக் கீழே போடுவதாகவும் சொன்னார்கள். ஆனால், மறுபடியும் சிங்கள அரசு ஈவிரக்கமின்றி நடத்திய கொடூரத் தாக்குதல், மக்களையும் புலிகள் அமைப்பின் முக்கியப் புள்ளிகளையும் வீழ்த்தி விட்டது. உலக நாடுகளை நம்பி சமாதானத்துக்கு முனைந்த நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட நான்கு முக்கியப் புள்ளிகளை ராணுவத்தினர் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக கடைசி நிமிடம் வரை அவர்களுடனேயே இருந்த பிரபாகரனின் மகன் சார்லஸ், ‘பத்திரமான இடத்துக்குத் தப்பி விட்டாரா… இல்லை, மக்களோடு மக்களாக மாட்டிக் கொண்டாரா’ என்பது இப்போது வரை தெரியவில்லை!
ஆனால், கடைசியாக செஞ்சிலுவை சங்க ஊழியர்களிடம் புலிகளின் கலை பண்பாட்டுக்குழுத் தலைவரான கவிஞர் இரத்தினதுரை பேசி இருக்கிறார்… ‘திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலம்… ரத்தம் கசியும் ஒப்பாரி என கதறிக் கிடக்கிறோம் நாங்கள்… பிணங்களை பங்கருக்கு மேல் அடுக்கி, ஒட்டிக் கொண்டிருக்கும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எம்மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு சொட்டுத் தண்ணீரைக்கூட எங்களால் வழங்க முடியவில்லை. ராணுவத்தின் பாஸ்பரஸ் குண்டுகளின் வீச்சால், மக்கள் வசிக்கும் அனைத்துப் பகுதிகளுமே கொழுந்துவிட்டு எரிகின்றன. பிணத்தின் மேல் நடந்து போய் தப்ப வேண்டிய அவலத்துக்கு ஆளாகிக் கிடக்கிறோம். ரசாயன குண்டு வீச்சில் பலியான உயிர்கள் எவ்வளவு என்பதைக்கூட எங்களால் கணக்கிட்டுச் சொல்ல முடியவில்லை.
ஆனால், மரபுமீறி இப்படி வெறித்தனமாக நடக்கிற அத்தனை கொடூரங்களையும் உலகளாவிய சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தாய்த்தமிழகமும் உலகளாவிய தமிழர்களும் எங்கள் விடிவுக்கான பெருமுயற்சிகளை எடுப்பார்கள் என்று இப்போதும் நாங்கள் நம்புகிறோம். இப்போதைக்கு தலைவர் பிரபாகரன் மிக பத்திரமாக இருக்கிறார் என்பதை மட்டும் எங்களால் உறுதியாக நம்ப முடிகிறது. எங்களுக்கு இருக்கும் அளப் பரிய நம்பிக்கை இதுதான்!’ என சொல்லி இருக்கிறார்.
நாங்கள் விசாரித்த வரையில் பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அவர்களுடன் அறுபதுக்கும் மேற்பட்ட போராளிகளும் இருக்கிறார்கள். இதற்கிடையில், குவியல் குவியலாகக் கிடக்கும் பிணங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்க்கும் ராணுவம், அதில் புலிகள் சம்பந்தமான யாரும் இல்லாததால், பிணங்களின் மீதும் ரசாயன குண்டுகளை வீசி, கரிக்கட்டையாக்கி அழிக்கிறது. ஆயிரக்கணக்கில் குவிந்து கிடக்கும் பிணங்களை ஐ.சி.ஆர்.சி. உள்ளிட்ட உலகளாவிய நிறுவனங்கள் பார்த்துவிட்டால், போரியல் குற்றங்களாகி விடும் என்கிற பயத்தில்தான் ராணுவம் இப்படிச் செய்கிறது!” எனச் சொல்கிறார்கள், புலிகளுக்கு நெருக் கமான அந்தப் புள்ளிகள்.
இதற்கிடையில், பிரபாகரன் மற்றும் சார்லஸ் ஆண்டனியின் மரணத்தைத் தொடர்ந்து மீடியாக்களில் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கும் சிங்களத் தரப்பு, இந்திய வெளியுறவுத் துறைக்கும் அதே தகவலைப் பரப்பி விட்டிருக்கிறது. ‘இலங்கையின் எதிரி, ஈழத்தின் வீரன்’ என்றெல்லாம் இலங்கைத் தமிழர்களால் போற்றப்படும் பிரபாகரன், இந்தியாவைப் பொறுத்தமட்டில் தேடப்படுகிற குற்றவாளிதான்.
அதனால் பிரபாகரனின் மரணத்தை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இந்திய அரசுக்கு உண்டாகி இருக்கிறது. இதனால் பிரபாகரனின் டி.என்.ஏ. டெஸ்ட் ரிப்போர்ட்டை இலங்கையிடம் கேட்டிருக்கிறதாம் இந்திய அதிகாரிகள் தரப்பு.
இது குறித்துப் பேசும் சிங்களத் தரப்பு அதிகாரிகள், ”பிரபாகரனின் மகனான சார்லஸ் ஆண்டனியின் படத்தை ஆதாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறோம். பிரபாகரன் தப்பிச் சென்றபோது, சுடப்பட்டதால் அவருடைய சடலம் சிதைந்த நிலையில் கிடைத்திருக்கிறது. அந்த உடலை வைத்து நடத்தப்பட்ட டி.என்.ஏ. டெஸ்ட்டையும், மகன் சார்லஸின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட திசுக்களை வைத்து நடத்தப்பட்ட
டி.என்.ஏ. டெஸ்ட்டையும் ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்திருக்கிறோம். இந்த ரிசல்ட்டை இந்திய அரசுக்கு அனுப்பி வைப்போம். உலக மீடியாக்களிடமும் இந்த ஆதாரங்களை வெளியிடுவோம். பிரபாகரன் அவருடைய மகன் சார்லஸ் ஆண்டனி உட்பட புலிகளின் தளபதிகளை நாங்கள் களத்தில் வீழ்த்தும் காட்சி வீடியோ பதிவெடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சிப் பதிவுகளிலிருந்து சில காட்சிகள் புகைப்படங்களாக்கப்படுகிறது. அதையெல்லாம் விரைவில் பத்திரிகைகளுக்குக் கொடுத்து - பிரபாகரன், சார்லஸ் மரணத்தை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிப்போம்…” என்கிறார்கள்.
இது குறித்து இலங்கையில் அம்பாறை மாவட்ட தமிழ் எம்.பி-யான சந்திரகாந்தாவை தொடர்பு கொண்டு கேட்டோம். ”சார்லஸ் ஆண்டனியைக் கொன்றுவிட்டதாக ராணுவம் திட்டமிட்டு அவதூறு பரப்புகிறது. கொல்லப்பட்ட சார்லஸின் படம் எனச் சொல்லி, தொடர்ந்து அதை தொலைக்காட்சிகளில் காட்டி வருகிறார்கள்.
அந்தப் படத்தில் இருப்பது சார்லஸ் அல்ல! அப்பட்டமான ஜோடிப்பு! சார்லசுக்கு 24 வயதுதான். ஆனால், படத்தில் காட்டப்படுபவருக்கு 45 வயதுக்கு மேல் இருக்கலாம். பிரபாகரனையோ வேறு முக்கியத் தளபதிகளையோ ராணுவம் நிச்சயமாக நெருங்கியிருக்கவே முடியாது! ஆனால், ராணுவத்தின் பொய்ப் பிரசாரத்தை நம்பி, கொழும்பில் உள்ள சிங்கள மக்கள் வெடி வெடித்துக் கொண்டாடு கிறார்கள். புலிகளின் சர்வபலமும் குறைந்தாலும், அவர்களின் போராட்டங்கள் பல ரூபங்களிலும் தொடரத்தான் செய்யும். அவர்களை ஒரேயடியாக முடக்குவது கனவிலும் நடக்காத காரியம்.
ஆனால், புலிகளை அழிக்கிறோம் என்கிற பெயரில், ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை நச்சுக் குண்டுகளின் மூலமாக பூண்டோடு அழித்து விட்டது ராணுவம்…” என வேதனை மேலிடச் சொன்னார் சந்திரகாந்தா.
புலிகள் தரப்புக்கு மிக நெருக்கமான சிலரோ, ”சார்லஸ் ஆண்டனி மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்காலில் மாட்டிக் கொண்டார். கடைசி கணத்தில்கூட மக்களைவிட்டு அவர் வெளியேறி இருக்கலாம். ஆனால், அதை விரும்பாமல் மக்களுடனேயே தங்கி விட்டார். அதில் அவர் கொல்லப்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ராணுவம் வெளியிட்டிருப்பது சார்லஸின் படமே இல்லை.
ஆனால், ஏதாவது ஜோடனை வேலைகளைச் செய்து போலியான டி.என்.ஏ. ரிசல்ட்டை சிங்கள ராணுவம் வெளியிடக்கூடும். அப்படி வெளியிட்டால், அதனைப் பொய் என நிரூபிக்கும் வகையில் பிரபாகரனின் மரபணு குறித்த ஆதாரங்களை அவருடைய வாரிசுகள் மூலமாக நாங்கள் வெளியிடச் செய்வோம். ஆனால், பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாகத் தவறான தகவல்களைப் பரப்பி அவரின் இருப்பிடத்தை அறியப் பார்க்கிறது ராணுவம். அதே போல, இலங்கை மக்களை குஷிப்படுத்தி, அங்கு நடக்கும் தேர்தலிலும் வெற்றி பெறப் பார்க்கிறார் ராஜபக்ஷே.
பிரபாகரனும் பொட்டு அம்மான் உள்ளிட்ட முக்கியத் தளபதிகளும் முல்லைத்தீவுக்கு அருகே இருக்கும் கஞ்சிகுடிச்சாறு காட்டுக்குள் தப்பிச் சென்றுவிட்டார்கள். சிங்கள ராணுவத்துக்கு ஈழத்தின் பல பகுதிகள் எப்படி இருக்குமென்றே தெரியாது. கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியை இது நாள் வரை சிங்கள ராணுவம் பார்த்ததே கிடையாது.
ராணுவம் நெருங்க முடியாதபடி சகலவிதமான பாதுகாப்புகளுடன் புலிகள் தங்குவதற்கான ஏற்பாட்டை கர்ணல் ராம் தலைமையிலான போராளிகள் ஏற்கெனவே செய்திருக்கிறார்கள்.
இதற்கிடையில், தனக்கு முடிவு ஏற்பட்டாலும் சுதந்திரத்துக்கான முயற்சிகள் கொஞ்சமும் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக முல்லைத்தீவு பிடிபட்டபோதே, நானூறு பேர் அடங்கிய பல குழுக்களைப் பிரித்து இலங்கையின் பல பகுதிகளிலும் ஊடுருவச் செய்திருக்கிறார் தலைவர் பிரபாகரன். புலிகளின் பலம் பொருந்திய சிறுத்தைப் படையணியைச் சேர்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள், இப்போது வரைக்கும் கெரில்லா போரில் குதிக்கவில்லை. அதனால் ஈழத்துக்கான போராட்டங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் வடிந்து போய் விடாது!” எனச் சொல்கிறார்கள்.
நேதாஜியும் பிரபாகரனும்…
விடுதலைப் புலிகள் அமைப்பு தொடங்கப்பட்டபோது, பிரபாகரனுக்கு உறுதுணையாக இருந்த உலகத் தமிழர் பேரவைத் தலைவரான இரா.சனார்த்தனத்திடம் தற்போதைய சர்சைகள் குறித்துப் பேசினோம்.
”பிரபாகரனை எத்தனையோ தடவை இலங்கை அரசும் மீடியாக்களும் கொலை செய்திருக்கின்றன. ஆனால், அந்த செய்திகளை பிரபாகரன் ஒருபோதும் மறுத்தது கிடையாது. பிரபாகரன் மிக பத்திரமான இடத்தில் இருப்பதாகத்தான் எனக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. நேதாஜியின் வழிநடக்கும் போராளி பிரபாகரன்.
நேதாஜியின் படத்துக்கு மாலை போட்டு கும்பிட்டுத்தான் என் வீட்டில் புலிகள் அமைப்பை அவர் துவக்கினார். நேதாஜியின் பாதையைத்தான் அவர் பின்பற்றவும் செய்கிறார். இக்கட்டான சூழலில் அவர் நேதாஜியின் வரலாற்றைத்தான் படிப்பார். அதனால் அவருடைய மரணம் நேதாஜியின் மரணத்தைப் போன்றதாகத்தான் அமையும்.
முடிவு காலத்திலும் பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்பதை யாராலும் அறிய முடியாத நிலைதான் வரும். ஆனால், அவர் ஆம்புலன்ஸில் தப்பி ஓடியதாகவும், அப்போது சுட்டதாகவும் சிங்கள ராணுவம் சொல்வது, தமிழ்நாடு போலீஸின் என்கவுன்ட்டர் கற்பனைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போலிருக்கிறது!” என்கிறார் இரா.சனார்த்தனம்.
என்ன நடக்க வேண்டும், இலங்கையில்?
தமிழீழ விடுதலைப் போராட்டம் கிட்டத்தட்ட முடிவுறும் நிலையில் இருப்பதாகத்தான் இலங்கையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இலங்கையில் வாழும் பூர்வகுடி தமிழர்களுக்கான மறுவாழ்வு மற்றும் அரசு தரப்பு வழங்க வேண்டிய உரிமைகள் குறித்தெல்லாம் பரவலாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
சர்வதேச தீவிரவாதம் குறித்து டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் கீதா மாதவனிடம் கேட்டபோது, ”புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது என்கிற தகவல்கள்தான் இலங்கையிலிருந்து வருகிறது. புலிகளின் பிடியில் இருந்த இலங்கையின் வடக்குப் பகுதியில் வாழும் மக்களின் நம்பிக்கையை இனியாவது ராஜபக்ஷே அரசு பெற்றாக வேண்டும்.
அந்தப் பகுதிகள் இப்போது ராணுவத்தின் கட்டுப் பாட்டில் இருக்கின்றன. போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அங்கிருந்து தப்பியோடத்தான் நினைப்பார்கள். அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, இயல்பாக வாழக்கூடிய சூழலை அரசுத் தரப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். அதற்கு மிகப் பெரிய அளவில் கட்டுமானப் பணிகளை உடனடியாக அந்தப் பகுதிகளில் துவக்கியாக வேண்டும். அதற்கு இந்திய அரசு உதவிட வேண்டும்.
போரால் மனநிலையில் மாற்றம் விரும்பும் தமிழர்களை கொஞ்ச காலத்துக்கு வேறு பகுதிக்கு கொண்டு சென்று குடியமர்த்தலாம். அவர்கள் பழைய மனநிலைக்குத் திரும்பியதும், மீண்டும் அவர்கள் விரும்பும் பகுதிக்கே அழைத்துச் செல்லலாம். அடுத்து அந்த மக்களுக்குத் தர வேண்டிய அதிகாரப் பகிர்வு குறித்து அரசுத் தரப்பு உடனடியாக யோசிக்க வேண்டும்.
அதற்காகத்தான் அந்த மக்கள் முப்பதாண்டுகளாகப் போராடி வந்திருக்கிறார்கள். இந்த அதிகாரப் பங்கீட்டில் எந்தவிதமான பாரபட்சமும் காட்டப்படக் கூடாது. அப்போதுதான் சிங்கள அரசு மீது தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு, இரண்டு சமூகமும் ஒன்றாக கலந்து வாழக்கூடிய சூழல் உருவாகும்…” என்றார்.
இந்திய ராணுவத்தில் கர்னலாக இருந்து ஓய்வு பெற்ற ஹரிஹரன் பேசும்போது, ”இந்த நேரத்தில் சிங்கள அரசு செய்ய வேண்டியதெல்லாம் இதுதான் - புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள், இயல்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். இதனை இந்தியா வற்புறுத்த வேண்டும். இதுநாள் வரையில் சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது விதித்திருந்த கெடுபிடிகளைத் தளர்த்தி, தொண்டு நிறுவனங்களையும் உறவு வகையிலானவர்களையும் அனைத்துப் பகுதிகளுக்கும் அனுமதிக்க வேண்டும்.
போர் நடந்த பகுதிகளில் மக்களுக்கான வாழ்வாதாரங்களை உடனடியாக அரசு தரப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். இப்போதும்கூட தமிழ் மக்கள் சிங்கள அரசின் மீது பயம் கலந்த பீதியோடுதான் இருப்பார்கள். மக்களை பீதிக்குள்ளாக்கும் ‘வெள்ளை வேன்’ போன்ற நடவடிக்கைகளை சிங்கள அரசு முற்றாக நிறுத்த வேண்டும். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு உண்மையான சுதந்திர உணர்வை ஏற்படுத்தி, அதனை அனுபவிக்கச் செய்ய வேண்டும். இதை சர்வதேச நாடுகளும் இந்தியாவும் இலங்கையிடம் வற்புறுத்தி, உடனடியாக அதனை செயல்படுத்த வேண்டும்…” என்றார்.
நன்றி: http://www.nankooram.com/
0 comments:
Post a Comment