Tuesday, May 26, 2009

ஆப்பிரிக்காவின் உயர்ந்த மலைச் சிகரத்தில் கொடி நாட்டிய ஒரு ஈழத்தமிழன்…

ஈழத்தமிழ் இளைஞனாகிய கீரன் அரசரட்ணம் என்பவர் தமிழ் இனப்படுகொலையை உலகின் கண் நிலை நிறுத்துவதற்கான கவனஈர்ப்பு நடவடிக்கையாக ஆபிரிக்காவின் மிக உயர்ந்த மலையான கிளிமஞ்சாரோவின் சிகரத்தில் ஏறி நின்று ஈழத்தமிழர்களை காக்கும் படி உலகிற்கு அறைகூவல் விடுத்திருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் எதிர் நோக்கியிருக்கும் நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் வன்னியில் ஏற்பட்டிருக்கின்ற மிகப்பெரும் மனிதப் பேரவலத்தினை உலகின் கண்களுக்கு தெரியப் படுத்துவதற்காக உலகெங்கும் பரவி வாழ்கின்ற ஈழத்தமிழர்களில்

இளையதலை முறையினர் மேற்கொண்டுவரும் தொடர் வெகுஜனப் போராட்டங்களுக்கு மத்தியில் எழுச்சிகொண்ட ஓர் ஈழத்தமிழ் இளைஞனாகிய கீரன் அரசரட்ணம் என்பவர் தமிழ் இனப்படுகொலையை உலகின் கண் நிலை நிறுத்துவதற்கான கவனஈர்ப்பு நடவடிக்கையாக ஆபிரிக்காவின் மிக உயர்ந்த மலையான கிளிமஞ்சாரோவின் சிகரத்தில் ஏறி நின்று ஈழத்தமிழர்களை காக்கும் படி உலகிற்கு அறைகூவல் விடுத்திருக்கின்றார்.

மேற்படி கவனஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கீரன் அரசரட்ணம் மிகவும் ஆபத்துமிக்க மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான காரணங்களை ஆராய்ந்தபோது அவருடைய உள்ளக் குமுறல்களும், உணர்ச்சிப் பிரவாகமும், புலம்பெயர்வாழ் இளையோர்களின் ஒட்டுமொத்த உணர்வலைகளாகவே வெளிப்படுவதனைக் காணமுடிகிறது.

இவ் ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள கிளிமஞ்சாரோ மலை பற்றி சற்று நோக்குவோம்.

உலகிலுள்ள உயர்ந்த மலைகளில் இமயமலை, றொக்கிமலை, அற்லஸ் மலை, அந்தீஸ் மலை, ஆகியவை எல்லாம் மலைத்தொடர்களாக நீண்டு விரிந்து கிடக்கின்றன. ஆனால் தனித்த உயர்ந்த மலைச்சிகரம் ஆபிரிக்காவின் தன்சானியா என்னும் நாட்டில் உள்ள கிளிமஞ்சாரோ மலைதான்.

இது இற்றைக்கு இருபது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் எரிமலைக் குழம்பால் உருவான தீப்பாறையைக் கொண்ட மலையாகும். தற்போது இது ஓர் அவிந்த எரிமலையாக (இறந்த எரிமலை) பனிப்பாறைகளால் சூழப்பட்ட இதன் சிகரத்தின் அதிகூடிய உயரம் 5895 மீற்றர்கள். அதாவது 19,330 அடிகள்.

இம்மலை மூன்று சிகரங்களைக் கொண்டது. முறையே சாரா 4600 மீற்றர் (15,100 அடிகள்), மொபென்சி 5100 மீற்றர் (16,700 அடிகள்), கீபோ 5891.8 மீற்றர் (19,330 அடிகள்) கவனஈர்ப்புக்காக மலையேறும் நடவடிக்கைக்கு கிளிமஞ்சாரோ மலையைத் தெரிவு செய்ததற்கான காரணம் பற்றி கீரன் அரசட்ணம் அவர்களிடம் வினவிய போது

'கிளிமஞ்சாரோ மலை உள்ளிட்ட மிகப்பெரும் நிலப்பரப்பு முன்பு கென்யா நாட்டிற்குச் சொந்தமாக இருந்தது. அதனை மனித நேய நல்லெண்ண அடிப்படையில் கென்யா தன்சானியா நாட்டிற்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தது.

தற்போது இது தற்சானிய நாட்டிற்குரியது. எனவே மனிதநேயத்திற்கு உதாரணமான உயர்ந்த சிகரமாக விளங்குவது இந்த கிளிமஞ்சாரோதான். ஆகவே மனித நேயத்தின் அன்பளிப்பான கிளிமஞ்சாரோ மலையில் ஏறிநின்று தமிழர்கள் இழந்த இறைமையை மீண்டும் எம்மிடம் தரும்படி கேட்பதுதான் நியாயமானதும், பொருத்த மானதும் கூட.இதுவே உலகின் கண்ணை உறுத்தும்' என்கின்றார்.

மேற்படி கூற்றிலிருந்து கிரன் முதல் புலம்பெயர் இளைய சமுதாயம் எவ்வளவு தூரம் மானிட நேயம் பற்றிய பல்நோக்கு ஆழ்ந்த அறிவுசார் சிந்தனையாளர்களாக தாயக மண்பற்றிய இறுக்கமான பற்றுடையவர்களாக வளர்ந்து வருகிறார்கள் என்பதனை நாம் காணமுடிகிறது.

மலையேறும் முயற்சியில் அவருடைய அனுபவம் பற்றியும், அதன் ஆபத்து நிறைந்த பயணம் பற்றியும், அவரிடம் வினவிய போது அவர் வெளியிட்ட அனுபவங்களும், கருத்துக்களும் உலகத் தமிழர்களை பெருமிதம் கொள்ளச் செய்கின்றன.

ஏனெனில் தமிழர்களுடைய வரலாற்றில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வெற்றி கண்டமுதல் ஈழத்தமிழன் என்ற பெருமை, கீரன் அரசரட்ணத்தையே சென்றடைகின்றது. கீரன் அரசரட்ணம் 1977 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் விடத்தல்தீவு என்னுமிடத்தில் பிறந்தவர்.

அவர் தனது ஆரம்பக் கல்வியை விடத்தல் தீவு அலிகார் முஸ்லீம் மகாவித்தியாலயத்திலும், பின்னர் புலமைப் பரிசிலில் சித்தியடைந்து பருத்தித்துறை காட்லிக் கல்லூரியிலும் கல்வி கற்று தனது 13வது வயதில் அதாவது 1990ம் ஆண்டு ஈழத்தில் ஏற்பட்ட போர் நெருக்கடியினால் பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்தார்.

இவர் இலண்டனில் கணிதத் துறையில் கலாநிதிப் பட்டப்படிப்பை முடித்து தற்போது பிரித்தானியாவில் முதன்மையான முதலீட்டு வங்கி ஒன்றில் முகாமைத்துவப் பிரிவில் உப தலைவராகவும், ஆலோசகராகவும் பணியாற்றும் கீரனிடம் மலையேறுவதற்கு அவரைத் தூண்டிய காரணங்கள் பற்றி வினாவியபோது தனது இளம் வயதில் ஏற்பட்ட மனவடுக்களை பின்வருமாறு விபரித்திருந்தார்.

குடும்பத்தில் ஆறு சகோதரர்களுடன் பிறந்த கீரன் அவருடைய 13 வது வயதில் அதாவது 1990ம் ஆண்டில் அவருடைய சகோதரர் சிலாபத்துறைக்கு பயணம் செய்த போது சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவரைத் தேடி இராணுவ முகாமுக்குச் சென்ற அரச ஊழியரான இவருடைய தந்தையாகிய அரசரட்ணத்தையும் கைதுசெய்த இராணுவத்தினர் அங்கிருந்து தள்ளாடி இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்படும் வழியில் குமார் அரசரட்ணம் இராணுவத்தினரால் தந்தையின் கண்முன்னே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் அவருடைய ஆழ்மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தியிருந்தது. இதன் விளைவாக கடந்த 18 வருடங்களாக புலம்பெயர்ந்து இலண்டனில் வாழும் இவ்விளைஞன் தான் பெற்ற மாறாத வடுக்களை ஈழத்தமிழர்கள் பெற்றுக் கொண்டிருக்கும் போது மனம் தாங்காது இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் ஈழத்தமிழர்களுக்காக தன்னாலான இயன்ற பணியை மக்களுக்குச் செய்ய வேண்டும் என்ற ஆதங்கமும், வேணவாவும் தன்னை இந்த உயிராபத்து நிறைந்த கவனயீர்ப்புப் போராட்டப் பயணத்திற்கு தன்னை உந்திற்று என்றார்.

மேலும் இவருடைய மலையேறும் பயணத்திற்கான எந்தவொரு முன்னாயத்தங்களையோ அல்லது மலையேறும் பயிற்சிகளையோ எடுக்காமல் வெறும்மனோபலத்தையே நம்பி இந்தக் கிளிமஞ்சாரோ மலையில் ஏறி வெற்றிகண்டிருக்கின்றார்.

இவ் வெற்றிகரப் பயணத்திற்காக ஐரோப்பிய வெள்ளையின மக்கள் வழங்கிய அன்பளிப்பு 30 ஆயிரம் பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்சுகள் பணத்தினை வன்னி மக்களின் வணங்காமண் துயர்துடைப்பு கப்பல்ப் பயணத்திற்கு வழங்கியிருக்கிறார்.

அத்தோடு மலையேறுவதற்கு ஏற்பட்ட செலவு 7000 பவுண்ட்சுகளை தனது சொந்தப் பணத்திலிருந்தே பயன்படுத்தியிருக்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவரது கடினமானதும், உயிராபத்து நிறைந்ததுமான இப்பயண அனுபவம் பற்றி கீரன் கூறும்போது,

தன்சானியாவில் கிளிமஞ்சாரோ மலையடிவாரத்தில் உள்ள மொசி என்னும் கிராமத்திலிருந்து 05.04.09 அன்று இரவு 09 மணியளவில் இவரது பயணம் ஆரம்பமாகியது. அன்று மலையேறுவதற்கு உலகெங்கிலுமிருந்து அங்கு வந்து 45 பேர் கலந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் யாவரும் குறைந்தது நான்கு வருடமலையேறும் பயிற்சியைப் பெற்றவர்களாவர். இவர்களில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஸ்ரீவ் என்பவர் பயணத்தின் இடையில் மரணமானார். ஏனைய 44 பேரில் இருவர் மட்டுமே மலைச்சிகரத்தைத் தொட்டனர்.ஏனையவர்கள் தொடர்ந்து ஏறமுடியாமல் திரும்பி விட்டனர்.

இவருக்கு உதவியாக மலையேறுபவர்களுக்கு வழிகாட்டியாக செல்ல யூமா என்ற மலையடிவார கிராமவாசி நியமிக்கப்பட்டிருந்தார். இவர்கள் இருவரும் தொடர்ந்து எட்டுமணி நேரம் 26 மைல்கள் நடந்து மண்டாரோ என்ற தளத்தை அடைந்தனர்.

அதன்பின் 6ஆம் திகதி இரவு மண்டாரோவிலிருந்து புறப்பட்டு 09 மணி நேரத்தில் 30 மைல்கள் தூரத்தைக் கடந்து 07ம் திகதி காலை கோரம்போ என்னும் தளத்தை அடைந்தனர். பின்னர் கோரம்போவிலிருந்து இரவு 10 மணியளவில் மீண்டும் தமது மலையேறும் பயணத்தைத் தொடர்ந்து 8ம் திகதி காலை 6.30 மணிக்கு கீபோ என்ற இடத்தை அடைந்தனர்.

கிளிமஞ்சாரோ மலையில் மூன்று சிகரங்கள் உள அவற்றில் முறையே சாரா, மொபென்சி ஆகியவற்றைத் தாண்டி இறுதியான உயர்ந்த மலைச்சிகரப்பகுதியை கீபோ என்றழைப்பர். இந்தக் கீபோத்தளத்தின் உச்சிதான் 5891.8 மீற்றர் (19,330 அடிகள்) உயரத்தில் உள்ள உகுரு பீக் என அழைக்கப்படுகின்றது.

இந்த கீபோ தளமானது 4800 மீற்றருக்கு மேற்பட்ட பகுதியாகும். இப்பகுதியில் மனிதன் ஏறுவது என்பது மிகக் கடுமையானதும், செங்குத்தான பனிப்பாறைகளைக் கொண்டதுமாகும். இந்தக் கீபோத் தளத்தை மனிதன் அடைந்து விட்டால் அங்கு ஒட்சிசனின் வீகிதம் குறைவடைந்து விடும்.இதனால் சுவாசிப்பதென்பது மிகக் கடினம்.

மனிதனின் வயிற்றுப்பகுதி பாரம் கூடித் தொங்குவது போன்ற வலியான உணர்வை ஏற்படுத்தும். அத்தோடு தொடர்ச்சியான வாந்தி எடுத்தலை ஏற்படுத்தும். மேலும் மூளையின் தொழிற்பாட்டை முடக்கி மூளை பாரமாகி மூளையினுள் வியர்வையை ஏற்படுத்த வல்லது.

மேற்படி மலையேறும் பயணம் இரவிலேயே மேற்கொள்ளப்படும் ஏனெனில் பகல்ப் பொழுதில் சூரிய ஒளி காரணமாக பனிப்பாறைகள் உருகுவதனால் ஏறுபவர் மலையிலிருந்து சறுக்கி விழ வேண்டிய நிலை ஏற்படும்.

கீபோத்தளத்தில் 9ம் திகதி இரவு 10 மணிக்கு மலை ஏறப்புறப்பட்டு 5000 மீற்றர் உயரத்திலுள்ள இந்தியன் பொயின்ற் என்ற இடத்தை அடைந்தனர். இந்தியன் பொயின்ற் என்றால் இந்திய மனித வர்க்கத்தினரால் அடையக் கூடிய அதிகூடிய உயரப்பகுதி.

இதற்கு அப்பால் மேல் நோக்கிச் சென்றால் இந்திய வர்க்கத்தினர் உயிராபத்தை எதிர் கொள்வர். இந்த இந்தியன் பொயின்ற் பகுதிக்கு மேல் தொடர்ந்து 300 மீற்றர் செங்குத்தான உயரப்பகுதியில் ஜமேக்கன் பொயின்ற் என்ற தளம் உள்ளது.

ஜமேக்கன் பொயின்ற் என்பது ஆபிரிக்க கறுப்பின மனித வர்க்கத்தினரால் (காப்பிலி) அடையக்கூடிய பகுதி. இப்பகுதிக்கு அப்பால் இவர்கள் சென்றால் இறக்க நேரிடும். இத்தளத்தினை கீரன் அரசரட்ணம் அடைந்த போது 32 தடவைகள் தான் வாந்தி எடுக்க நேர்ந்ததாக குறிப்பிடுகிறார்.

அதே நோரம் தன்னால் இதைத்தாண்டியும் முன்னேற முடியும் என்ற மனஉறுதி ஏற்பட்டதாகவும் கூறுகின்றார். தொடர்ந்து ஜமேக்கன் பொயின்ற் பகுதியிலிருந்து மிகப் பெருத்த சிரமத்திற்கும், உடல் உபாதைகளுக்கும் மத்தியில் தொடர்ந்து மேல் நோக்கி நகர்ந்து

5685 மீற்றர்கள் உயரத்திலுள்ள ‘கில்மன் பொயினற்' என்ற இடத்தையும் தாண்டி இங்கிருந்தும் மேல் நோக்கிச் சென்று 5756 மீற்றர் உயரத்திலுள்ள ஸ்ரெல்லா பொயின்ற் என்ற இடத்தை அடைந்தார்.

பின்னர் அவரது தளராத முயற்சியால் அங்கிருந்து முன்னேறி கிளிமஞ்சதாரோ மலையின் அதியுச்ச சிகரமான 5995 மீற்றர் உயரத்திலுள்ள உகுரு பீக் என்றழைக்கப்படும் உச்சியை 9ஆம் திகதி அதிகாலை 7.20 மணியளவில் அடைந்து அங்கு தமிழீழத் தேசியக் கொடியை நாட்டி வரலாற்றுச் சாதனை படைத்தார்.

பொதுவாக கிளிமஞ்சாரோவின் சிகரத்தில் மனிதன் ஐந்து அல்லது ஆறு நிமிடங்கள் வரையே தரித்து நிற்க முடியும் அதன் பின்னர் சுவாசிப்பது கடினமாகி மூச்சுத்தினறல் ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும்.

ஆனால் இச்சிகரத்தில் தொடர்ந்து 35 நிமிடங்கள் தரித்து நின்றதனால் கீரன் அரசரட்ணம் அவர்களால் கீழிறங்க முடியாத நிலை ஏற்பட, அவருடைய உதவியாளர் யூமோ என்பவர் ஒருமணி நேரம் கைத்தாங்கலாக மேலிருந்து கீழ் நோக்கி கொண்டுவர நேர்ந்தது.

இதிலிருந்து இப்பயணத்தின் ஆபத்தினை நாம் உணரமுடியம். இமயத்திலே புலிக்கொடியை ஏற்றினான் சோழன் என்று இலக்கியங்களில் தான் நாம் பார்க்கிறோம். ஆனால் தமிழர்களின் வரலாற்றில் முதல்த் தடவையாக உலகின் மனித நேயச்சின்னத்தின் சிகரமான கிளிமஞ்சாரோவில் தமிழன் கொடியை ஏற்றிவைத்தார்.

அக்கொடி அங்கே 'உலகமே தமிழனின் துயரைத் துடைத்து அவனின் இழந்த இறைமையைப் பெற்றுத்தா' என அசைந்து ஆடி உலகை அழைத்துக் கொண்டிருக்கிறது.

மேற்படி மலையேறும் பயணத்தின் மூலம் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்களுக்கு மிகப்பெரும் செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. எதுவித பயிற்சியுமின்றி தமிழர்களால் மலையேறிச் சாதனை படைக்க முடியும்.

தமிழர்களின் மனோபலத்தின் முன்னால் எந்த சக்தியும் தடையாக நின்றுவிட முடியாது தமிழர்களால் சாதிக்க முடியாதது. என்று எதுவுமே கிடையாது என்பது இதன்மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இளையவர்களே உங்களாலும் சாதிக்க முடியும்.

மனமுண்டானால் இடமுண்டு. தாயகத்திற்கான பணியில் உங்களால் இயன்ற பங்கினை இந்த நெருக்கடி மிகுந்த காலகட்டத்துள் செய்து தமிழர் சுயநிர்ணயத்திற்கான நீண்ட வரலாற்றுப் பயணத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

-தி.திபாகரன் -

இலண்டன்

நன்றி: ஈழமுரசு (18.04.2009)

www.tamilkathir.com


0 comments:

Post a Comment