Thursday, May 21, 2009

ஓடும் பேருந்தும், என் எண்ணங்களும்… (சங்கமம் போட்டிக்காக…)

தனியாய் நான் பேருந்து நிலையத்தில், என்னை சுற்றி மக்கள் கூட்டம் ஆனால், நான் தனியாகத்தான் இருக்கிறேன். என்னை பற்றி யாருக்கும் கவலை இல்லை. அவரவர்களுக்கு வேலை இருந்தது. சரி, என்னை போல யாரவது இருக்கிறார்களா? எல்லாரும் கூட இருந்தும் தனியாய் வாழ்பவன், யாருமில்லையா? ஏன், இல்லை நானிருக்கிறேன்! என்று கூறியது போல இருந்தது திரும்பி பார்த்தேன். என் வாழ்க்கையின் திருப்பு முன் இதுதான், என்று எனக்கு அப்போது தெரியாது. அங்கே, ஒரு பேருந்து அமைதியாக நின்று கொண்டிருந்தது. இதுவா? சிந்தித்தேன். ஆம், தன் வாழ்வில் இந்த பேருந்து எத்தனையோ பேரை, சந்தித்தாலும் இவை தனியாய்த்தான் இருக்கிறது. இதன் கூடவே பயணிக்கும் பலர், நேரம் வரும் போது விட்டு செல்கிறார்கள். என் வாழ்க்கையும், அது போலத்தானா?

பேருந்து என்னை அழைப்பது போல, ஒலிப்பான் சத்தம் கேட்டது, வாஞ்சையுடன், எதிர்பார்ப்புகளுடன், நடத்துனர் என்னை அழைப்பது போல தோன்றிற்று. இது பேருந்தின் வேலைதானோ? எனக்கு ஒரு வாழ்க்கை பாடம் நடத்த, என்னை கூப்பிடுகிறதோ? வலது கால் எடுத்து வைத்து ஏறினேன். பேருந்து என்னை ஏற்று கொண்டு புறப்பட்டது.

பேருந்தின் இருக்கை அமைப்பு என்னை குழப்பியது. எங்கே? அமர்வது, முதல் இருக்கையிலா? கடைசி இருக்கையிலா? என்ன கேள்வி இது? எங்கே வேண்டுமானாலும் உட்காரலாமே? வாழ்க்கையிலும் இதே பிரச்சனைதான், ஆனால் இடம் கிடைக்கும் இடத்தில் தான் இப்போது அமர முடியும். நமக்கு விரும்பிய இடங்கள் (இருக்கைகள்) எல்லாம் எப்போதும், கிடைப்பதில்லை. இதுதான், உண்மை. வாழ்க்கையிலும் நமக்கு கிடைத்த இடங்களை (இருக்கைகள்) விரும்பி அமர்வது தான் நன்று.

எனக்கும் ஒரு இடம் கிடைத்தது, அமர்ந்து கொண்டேன். ஓடும் பேருந்தில் என் எண்ணங்கள் இன்னும் வேகமாக ஓடியது. அமைதியாக பேருந்து எனக்கு பாடம் நடத்த தொடங்கியது.

காசு கொடுத்து பயணச்சீட்டு வாங்கினேன். இது பேருந்து எனக்கு கற்று கொடுக்கும் பாடத்துக்கு கட்டணம் என்று நினைத்து கொண்டேன். பேருந்தை நன்றாக பார்த்தேன், அனைவரும் இருந்தார்கள். இங்கு ஜாதி மத பேதமில்லை, அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். அருகருகே, அமர்ந்து இருக்கிறோம். ஏழை, பணக்காரன் வித்தியாசமில்லை. அழகு, அவலட்சணம் பாகுபாடு இல்லை. படித்தவன், படிக்காதவன் வேறுபாடு இல்லை. அனைவரும் ஒரு இலக்கை நோக்கி அமர்ந்து இருக்கிறோம். என் சிந்தனை ஓடியது… இந்த உலகமே, ஒரு பேருந்தாக இருக்க கூடாதா? மனிதனுக்குள் வேற்றுமை இல்லாமல், அனைவரும் அன்பு என்ற ஒரு இலக்கை நோக்கி செல்லாமே?

என்று என் சிந்தனை சிறகடித்து பறக்கும் போதே, பேருந்து தூக்கி வாரிப்போட்டது. சாலையில் பள்ளம் இருப்பதால், இந்த பள்ளம்தான் தீவிரவாதமோ? நான் உங்களை ஒன்று சேர்க்க விட மாட்டேன் என்று கூறுகிறதோ? பெரிய, பெரிய பள்ளம் எனும் தீவிரவாதம், அன்பை நோக்கி செல்லும் உலக பேருந்தை கவிழ்க்க பார்க்கிறதோ? இல்லை, இல்லை அதனால் முடியாது. நெஞ்சம் சமாதானம் சொன்னது.

பேருந்து முன்னேறி செல்லும் வேகத்தை பார்த்தேன், அது எனக்கு கூறியது உன் வாழ்க்கையிலும், முன்னேற இந்த வேகம் அவசியம். ஓடினால்தான் ஆறு, நின்றால் அது குட்டையாய் மாறிவிடும் என்பதை குறிப்பால் உணர்த்துவது போல தோன்றிற்று. பேருந்து காட்டிய வேகத்தில், விந்தைகள் பல இருக்கின்றன போலும். பேருந்து முன்னேற முன்னேற, அதன் அருகில் இருந்த பனை மரங்களும், இன்னும் பல பொருட்களும் பின்னோக்கி சென்று மறைந்தன… இதே போலதான் நம் வாழ்க்கையிலும், வயது ஆக, ஆக இளமை, மறைந்து முதுமை வருகிறது. இங்கு நாம் எதையும் இழக்கவில்லை. நாம் போக நினைத்த பாதயில்தான் போய் கொண்டு இருக்கிறோம். இதில் இழப்பில்லை, முதுமை என்பது இளமை கடந்து நாம் செல்ல வேண்டிய பாதை.

எங்கே போகிறோம், எவ்வளவு தூரம் போகிறோம், எதை அடைய போகிறோம் என்பதெல்லாம்… நம் எண்ணங்களை பொறுத்தே அமையும்.

இது உண்மை என்பது போல, நடத்துனர் மணி அடித்து பேருந்தை நிறுத்தினார். எனக்கு வாழ்க்கை பற்றி பாடம் எடுத்த பேருந்து, எனக்கு தேர்வு வைத்தது… நான் வந்து இறக்கிய இடத்தில் இருந்து நான் என் ”வாழ்க்கை தேர்வை” எழுத ஆரம்பித்தேன்…

இவன், மு.இரா.


0 comments:

Post a Comment