Friday, July 3, 2009

'தமிழா... உன் கதி இதுதானா?'- ஜூனியர் விகடன்.

 

eelam "உன்னதமானவர்கள் வீழ்ந்துவிட்டனர்.ஆளரவமற்ற இருட்புலத்தில்
அவர்கள் புதைக்கப்பட்டனர்.
யாரும் கண்ணீர் சிந்தவில்லை.
யாரோ அவர்களைக்
கல்லறைக்கு எடுத்துச் சென்றனர்.
அவர்தம்
புகழ்வாய்ந்த பெயர் கூறிட
அங்கே சிலுவையோ...
சமாதியோ... மண்டபமோ
ஏதுமில்லை.
புல் முளைத்திருக்கிறது அங்கே.
தாழ்ந்திருக்கும் புல்லிதழ் ஒன்று
அந்த இரகசியத்தைத் தாங்கியிருக்கிறது.
கரை மீறிச் சீறியடிக்கும்
அலைகள் மட்டுமே சாட்சியம்.
வல்லமை வாய்ந்த
அவ்வலைகள் கூட
தொலைதூர இல்லத்துக்கு
செய்தியைக் கொண்டுபோக முடியாது..."
என்ற வி.என்.ஃபிக்னரின் கவிதை ஒன்று, வன்னிப் பகுதியில் நிகழ்ந்து விட்ட சோகத்தைச் சொல்வதற்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது..!
விடுதலைப் புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டதாக ராஜபக்சவின் இராணுவம் அறிவித்துவிட்டது. பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை அரசு எக்காளமிடுகிறது. பிரபாகரன் செத்துவிட்டதாக ஒரு சான்றிதழ் பெற நாராயணனும், சிவசங்கர மேனனும் புதுடில்லியிலிருந்து கொழும்புக்குப் பறந்தனர். ராஜபக்சவின் வெற்றிச் சிரிப்பில், இருவரும் முகமலர்ந்து நிற்பதை செய்தித்தாள்கள் படமாக்கின. ஒரே நாளில் பல்லாயிரம் தமிழர் படுகொலை செய்யப்பட்டது, நம் பிரதமரின் தூதுவர்களைத் துளியும் பாதிக்கவில்லை. தமிழினத்தின் உயிர் அவ்வளவு அற்பமாகப் போய்விட்டது!
சிங்களர்கள் அனுராதபுரத்திலும், கொழும்பிலும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இதயத்தை அழுத்தும் சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாமல் தமிழ்க் குடும்பங்கள் ஒடுங்கின. இனி எல்லாம் நலமாக நடந்தேறும் என்று இந்திய அரசும், உலக நாடுகளும் 'நாடி ஜோசியம்' சொல்வதை நாம் நம்ப முயல்வோம்!
ஹிட்லரின் இன அழிப்புப் படையால் ஆஸ்விட்ச் வதை முகாமிலும், புச்சன்வால்ட் மரண முகாமிலும் சொற்களில் இறக்கிவைக்க முடியாத சோகங்களை அனுபவித்த, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எலீ வீஸல் தன், 'இரவு' என்ற படைப்பில் வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே நினைவுக்கு வருகின்றன.
'என் வாழ்க்கையையே சபிக்கப்பட்ட ஒரு நீண்ட இரவாக மாற்றிய அந்த நாளை நான் என்றுமே மறக்கமாட்டேன். அந்தப் புகையை, மௌனமான நீலவானத்தின் கீழ் புகை வளையங்களாக மாறிய அக்குழந்தைகளின் சிறிய முகங்களை என்னால் மறக்க முடியாது.
என் நம்பிக்கையை முற்றிலும் விழுங்கிய அத்தீச்சுவாலைகளை, வாழும் ஆசையை முற்றாகப் பறித்துவிட்ட, ஆதியும் அந்தமும் அற்ற அந்த இருண்ட அமைதியை எப்படி மறப்பேன்? எனது கடவுள் நம்பிக்கையையும் ஆன்மாவையும் கொன்று, எனது கனவுகளை சாம்பலாக்கிய அந்தக் கணங்களை நான் என்றும் மறக்கமாட்டேன். கடவுளைப் போல் நான் வாழ விதிக்கப்பட்டாலும், அந்த நாளை என்றென்றும் மறக்கமாட்டேன்!' என்று அவர் வெளிப்படுத்திய அதே உணர்வுகளுடன்தான் ஒவ்வொரு ஈழத்தமிழரும் இறுதி வரை இருப்பர் என்பது நிஜம். 'பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகளால்தான் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது. அது மட்டும் நிறைவேறியிருந்தால், இன்று ஈழத் தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் வந்துசேர்ந்திருக்கும்!' என்று சொல்லிவந்தவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு கனிந்திருக்கிறது. பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் விடுதலைப் புலிகளை வென்றுவிட்டதாகவும் பிரகடனம் செய்திருக்கும் இலங்கை அரசு, சிங்களருக்கு சமமாக அனைத்து உரிமைகளையும் எஞ்சியிருக்கும் ஈழத்தமிழருக்கு வழங்க, இப்போது இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?
இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு இப்போது நடைமுறையில் இருக்கும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழருக்கு சம உரிமை சாத்தியமா? இலங்கை முழுவதும் சிங்களத்துடன் தமிழும் ஆட்சி மொழியாக இதயசுத்தியுடன் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ் வழி கற்றவர்கள் அரசு நிர்வாகத்தின் சகல துறைகளிலும் அமர்ந்து பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுமா? முழுமையான கூட்டாட்சி மலராமற்போனாலும், தமிழக அரசுக்குரிய ஆட்சியுரிமைகளாவது வடக்கிலும் கிழக்கிலும் அமைக்கப்படும் அரசுகளுக்குக் கிடைக்கக்கூடுமா? கிழக்குப் பகுதியில் திருகோணமலைப் பக்கம் திட்டமிட்டு சிங்களரைக் குடியேற்றி தமிழர் நிலங்களை அபகரித்தது போன்று, வடக்கில் வன்னிப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் நடக்காமல், தமிழரின் வரலாற்று வாழ்வாதாரப் பகுதிகள் பாதுகாக்கப்படுமா? இராணுவத்திலும் காவல்துறையிலும் தமிழர் கணிசமாக இடம்பெற சிங்களப் பேரினவாதப் பௌத்த வெறியர்கள் அனுமதிப்பார்களா? இந்த வினாக்களுக்கெல்லாம் இவர்கள் முதலில் விடை காணட்டும்.
"பிரபாகரன்தான் வன்முறையை வளர்த்தெடுத்தார். விடுதலைப் புலிகளால்தான் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஈழம் அமைதி இழந்ததற்கு இவர்களுடைய இரத்த வெறியே காரணம்!" என்று இங்குள்ள காங்கிரஸ் நாட்டாமைகள் கிளிப்பிள்ளைபோல் இன்று வரை கூறி வருகின்றனர். நூறு எலிகளை விழுங்கிய பூனை தீர்த்த யாத்திரை போன கதைதான் சிங்கள வெறியர்களின் செயல் என்பதை இவர்களுக்கு யார்தான் புரியவைப்பது?
சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று 1956 இல் அறிவிக்கப்பட்டதும், நாடாளுமன்றத்துக்கு முன்னால் காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழினத் தலைவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, கொழும்பில் தமிழர் சொத்துகளைச் சூறையாடியது யார்? பண்டா - செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி 1958 இல் அறப்போரில் ஈடுபட்டபோது, தமிழர் பலரைப் படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களிடம் பாலியல் பலாத்காரம் நடத்தி, அவர்களுடைய உடைமைகளைத் தீக்கிரையாக்கியது யார்? தென்னிலங்கையிலிருந்து பல்லாயிரம் தமிழர் தமிழகத்துக்கும், ஈழ நிலத்துக்கும் புகலிடம் தேடி ஓடச்செய்தது யார்? யாழ்ப்பாணத்தில் 1974 இல் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தபோது, வெடிகுண்டு வீசி மோசமான தாக்குதலை முன்நின்று நடத்தியது யார்? மலையகத் தமிழர் மீதும், தெற்கில் வாழ்ந்த அப்பாவித்தமிழர் மீதும் 1977 இல் வெறித் தாக்குதல் நடத்தி, இனக்கலவரத்தை வளர்த்தது யார்? பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவந்து 1970 ஜூலையில் தமிழ் இளைஞர்கள் மீது நரவேட்டை நடத்தியது யார்? 'தமிழரின் அறிவுக்கோயில்' என்று கொண்டாடப்பட்ட யாழ். நகர் நூலகத்தின் 95 ஆயிரம் நூல்களை எரித்துச் சாம்பலாக்கியது யார்? 1983 ஜூலை 25 அன்று வெலிக்கடை சிறையில் 37 தமிழ் இளைஞரும் 27 ஆம் நாள் 18 தமிழரும் குரூரமாகக் கொல்லப்பட்டது யாரால்?
சிங்கள வெறியர்களின் படுபாதகச் செயல்களை ஒரு பட்டியலில் முடித்துவிட முடியாது. புத்த பூமியை இரத்த பூமியாக்கியவர்கள் சிங்களர்கள். அவர்களுடைய வன்கொடுமைக்கு எதிராக வந்து நின்றவர்கள் விடுதலைப் புலிகள். இதுதான் வரலாறு.
எள் முனை உரிமையும் பெறாமலேயே ஏராள மான இழப்புகளைச் சந்தித்துவிட்டது ஈழத் தமிழினம். தமிழீழம் காணும் கனவில் பல்லாயிரம் வீர இளைஞர்கள் களத்தில் பலியாகிவிட்டனர். வான்படை, கடற்படை, தரைப்படையென்று முப்படைகளை உருவாக்கி... ஒரு வலிமை மிக்க, கட்டுப்பாடான இராணுவத்தைக் கட்டமைத்த பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. வீடிழந்து, உறவிழந்து, மன அமைதியை முற்றாக இழந்து, மூன்று லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் இரக்கமற்ற இராணுவத்தின் முன் மார்பெலும்பு தெரியும் மழலைகளுடன் கையேந்தி நிற்கின்றனர். போதும் இந்தப் போர்!
சிங்களருக்கு சமமான உரிமைகளுடன் தமிழரை வாழ வைக்க முடியும் என்று சர்வதேச நாடுகள் நம்புகின்றன. நிறைவேறாத முயற்சி அது என்று அந்த நாடுகளின் அதிபர்களுக்கு விரைவில் புரிந்துவிடும். 'புத்த மதத்துக்கு முக்கியத்துவம் தராமல் தமிழரோடு ஒப்பந்தம் போடுகிறாயா?' என்று பண்டாரநாயகாவை சுட்டுக்கொன்ற புத்த சந்நியாசிகளின் பூமியில், தமிழருக்குக் குறைந்தபட்ச உரிமைகள் கொடுக்க ராஜபக்சவே முன்வந்தாலும் ஒன்று கொல்லப்படுவார்... அல்லது அதிகார நாற்காலியிலிருந்து அகற்றப்படுவார். பிரபாகரன் இல்லாத நிலையில், கொழும்பில் இருக்கும் ஆறு லட்சம் தமிழர் வாழ்வில் எந்த நேரத்திலும் அமைதி பறிக்கப்படும். காலம் பின்னாளில் நடத்தவிருக்கும் பாடம், நம் பிரதமருக்கும் சர்வதேசத் தலைவர்களுக்கும் உரிய ஞானம் தரும்.
இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு, ஈழத் தமிழருக்கு இந்தியா அரசியல் அதிகாரங்களை இனி வாங்கித் தரும் என்று நாம் நம்புவோமாக! அதற்குமுன்பு வதை முகாம்களில் ஆடு-மாடுகளைப் போல் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்குப் போதிய உணவும் குடிநீரும் மருந்தும் கிடைக்க வழி செய்ய வேண்டும். இருப்பிடங்களை இழந்து நிற்கும் பத்து லட்சம் பேரும் மிக விரைவில் தங்கள் சொந்தக் குடியிருப்புகளுக்குத் திரும்ப வழி காணவேண்டும். நிவாரண உதவிகளை நேரடியாக சர்வதேச நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் வழங்க அனுமதிக்க வேண்டும். ராஜபக்ச வாக்களித்தபடி, ஆறு மாதங்களில் ஈழத் தமிழரின் இதய ரணங்கள் ஆறும் வகையில் அரசியல் தீர்வை அளிக்க வேண்டும்.
பிரபாகரன் மீது பழியைப் போட்டு நம் சொந்தங்களை சாவுப் பள்ளத்தில் தள்ளியதை வேடிக்கை பார்த்த இந்திய அரசு, இனியாவது செயலில் இறங்க வேண்டும். ஆனால், மன்மோகன் அரசோ ராஜபக்ச சகோதரர்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பதைத் தடுப்பதில் தீவிரமாக இருக்கிறது. தமிழினம் எங்கே போய், யாரிடம் தன் விதியை நொந்து கொள்வது?!
இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன், பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளின் முயற்சியில் ஹிட்லரோடு இணைந்து மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்தவர்களுக்கு எதிராக 'நூரம்பர்க் விசாரணை' நடத்தப்பட்டு, தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
போர்க் குற்றங்களுக்காகவும் மனிதகுல உரிமைகளுக்கு மாறான அத்துமீறல்களுக்காகவும் யாரையும் விசாரணைக் கூண்டில் நிறுத்தி, தண்டிப்பதற்காக சர்வதேச நாடுகள் முன்வந்தன. 'சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்' உருவானது. 'உலகின் நீதிக்கும் அமைதிக்கும் அடித்தளம், மனித குலத்தின் கண்ணியம் காக்கப்படுதலே' என்று தெளிவுபடுத்துகிறது. 'சித்ரவதை, வன்கொடுமை, இழிவாக நடத்தப்படுதல் ஆகியவை மனித உரிமை மீறல்' என்கிறது அந்தப் பிரகடனத்தின் ஐந்தாவது பிரிவு.
'ஒரே நாளில் பல்லாயிரம் தமிழரைப் படுகொலை செய்த ராஜபக்ச அரசைக் கண்டித்து ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பிரிட்டனும் ஐரோப்பிய நாடுகளும் வேண்டின. டென்மார்க் முயன்று 17 நாடுகளின் ஆதரவைத் திரட்டி மனித உரிமை சபையைக் கூட்டச் செய்தது. ஆனால், இலங்கை அரசு நிராயுதபாணிகளைக் கொன்று குவித்ததை நியாயப்படுத்தி, கம்யூனிச வரலாற்றில் களங்கத்தை ஏற்படுத்திய ரஷ்யாவும் சீனாவும் கியூபாவும், இந்தியத் தமிழரின் எதிர்ப்பு வருமே என்று சிறிதும் கவலைப்படாமல் மன்மோகன் அரசும், ராஜபக்சவைக் காப்பாற்றக் களம் அமைத்தன!
வியன்னாவில் ஒரு சீக்கிய மதகுரு படுகொலை செய்யப் பட்டதும், பஞ்சாப் பற்றி எரிந்தது. மன்மோகன் சிங் பதறுகிறார். வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வியன்னாவுடன் பேசுகிறார். ஆனால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழரின் பிணங்கள் விழுந்து மண் முழுவதும் மயானமானது. இந்திய அரசின் இதயம் மட்டும் இரங்கவில்லை. மன்மோகனின் மனம் பதறவில்லை; சோனியாவிடமிருந்து ஒரு சொல் வரவில்லை!
'சகோதரன் ஒருவனை விலங்கு பிணைத்திருப்பது உங்களை வருத்தாவிட்டால், நீங்கள் உண்மையில் இழிந்த அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும். வல்லமையற்றவர்க்கும் வாயில்லாதவர்க்கும் பரிந்து பேச அஞ்சுவோர் அனைவரும் அடிமைகளே!' என்றார் ஜேம்ஸ் ரஸ்ஸல். இங்குள்ள தமிழர்கள் இனவுணர்வற்ற அடிமைகள். ஐந்நூறு ரூபாய்க்குத் தங்கள் வாக்கை விற்பவர்கள். வாய்வீரம் பேசுவதில் மட்டும் வல்லவர்கள். பதவி தரும் சுகத்துக்காக ஏங்குபவர்கள். சொந்த நலனுக்காக இனநலனை இழப்பவர்கள்.
ஈழத்தில் வாடும் தமிழரும், புலம்பெயர்ந்து வாழும் தமிழரும் தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம். ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். 'அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்' என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது.
முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு, ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் என்று எந்த உரிமை மறுக்கப்பட்டாலும் உறக்கத்திலிருந்து எழாத தமிழரையும், பல்லாயிரம் ஈழத் தமிழர் பலியான நாளில் குடும்ப உறவுகளை மத்திய அமைச்சர்களாக்க புதுடில்லி புறப்பட்ட தமிழினத் தலை வரையும், நம் இந்திய அரசு சரியாகவே இனம் கண்டு வைத்திருக்கிறது. அதனால்தான் அது ராஜபக்சவுக்கு அரியணை தாங்கி ஆலவட்டம் வீசுகிறது. தமிழினத்தின் புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.
'பாண்டியனின் வழி நீயா? இமயக்கோட்டில் பறந்திருந்தது உன் கொடியா? இலங்கை நாட்டை ஆண்டவர்கள் உன்னவரா? கலிங்கர் மண்ணை அதிரடித்தது உன்குலமா? கடல்கள் மூன்றைத் தாண்டியவர் பரம்பரையா? புட் பகத்தில், சாவகத்தில் கொடி போட்டான் பிள்ளையா நீ? மாண்ட வரலாற்றினுக்கும் உன்றனுக்கும் மயிரளவும் தொடர்பில்லை, எதற்கு வார்த்தை?' என்று சரியாகத்தான் சொன்னார் கண்ணதாசன்!
- தமிழருவி மணியன்.


0 comments:

Post a Comment