Thursday, July 2, 2009

பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்)

சூரியன்
Author: சூரியன்
கடன் வாங்கலாமா?
1.    மிக மிக அவசியத் தேவைகளுக்கு வாங்கலாம்.
2.    தொழில் விரிவிற்குச் சரியாகத் திட்ட மிட்டு, கணக்கிட்டுக் கடன் வாங்குதல் வேண்டும்.
இதை நான் சொல்வதற்குக் காரணம், பலர் மிகக் குறைவான வட்டிக்குப் பணம் கிடைக்கிறது என்பதன் காரணமாகவும், சில மிக அவசியமில்லாத தேவைகளுக் காகவும், வாங்கி விடுகின்றனர்.
இவ்வாறு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்திக் கொண்டிருப்பதால் அவர் களது,
1.    சேமிப்பு பாதிக்கப்படுகிறது.
2.    எதிர்பாராத செலவுகள் அவர்களுக்கு வரும்போது தடுமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பாய் அமையும்.
3.    அவசியம் இல்லாததற்கு கடன் வாங்கும் பொழுது மனதில் சுமைதான்.
கடன் வாங்கும்பொழுதே இதைத் திருப்பிக் கட்டுவது எதன் மூலம் (Source of Income) என்பது பற்றியும் எப்பொழுது திருப்பிக் கட்டப் போகிறோம் என்பது பற்றியும், எவ்வளவு வட்டி என்பது பற்றியும் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.
அதேபோல் வருமானம் வந்த உடன் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் சிலபேர் வருமானம் வந்த மகிழ்ச்சியால் வேறெதற்கோ செலவு செய்து விட்டு, அடுத்த வருமானத்தில் கொடுத்து விடலாம் என்று கடனைத் தள்ளிப் போட்டு விடுகின்றனர்.
கடனைக் குறிப்பிட்ட காலத்தில் திருப்பிச் செலுத்துவதால் கடன் வாங்கிய இடத்தில் நாணயம் காப்பாற்றப்படும் நமக்குள்ளே நம்மைப் பற்றிய ஒரு சுயமதிப்பு அதிகரிக்கும். கம்பீரம் பெருகும். நாணயத்தைக் காப்பாற்றி விட்டால் அவசரத் தேவைகளுக்கு எப்பொழுதும் பணம் கிடைக்கும்.
தொழில் தேவை தவிர வேறு எதற்குமே வாழ்க்கையில் கடன் வாங்காத அளவிற்கு வாழ்க்கையை திட்டமிட்டு அமைத்தால் வாழ்க்கை சந்தோசமாக அமையும்.
‘கடனை நண்பர்களிடமும் உறவினர் களிடமும் வாங்க வேண்டாம்;
கடனை வங்கியிடம் வாங்குங்கள்.
ஏனென்றால் உறவுகள் கோபப்படாமல் இருப்பது மிக முக்கியம்.
- ஓர் அறிஞர்
செலவுகள்
ஆடம்பரச் செலவுகளையும், தவிர்க்கக் கூடிய செலவுகளையும் தவிர்க்க வேண்டும். அது சேமிப்பாக மாறினால் வாழ்வுக்கு பாதுகாப்புக் கிடைக்கும்.
போலிக் கௌரவத்திற்காக செய்யப்படுகிற செலவுகளை நீக்க வேண்டும். அதனால் பெறுகிறமதிப்பைவிடப் பணம் நிறைய சேர்த்து வைத்தால் அதற்குக் கிடைக்கிற மதிப்பே வேறு.
ஆடம்பரச் செலவுகள் செய்து கிடைக்கிற அங்கீகாரத்தைவிட அந்தப் பணத்தைச் சேமித்து ஆபத்துக்கு உதவினால் வருகிறசந்தோசம் பெரிது.
KIM WOO - CHOONG : Founder & Chairman, DAEWOO GROUP சொல்கிறார்.
‘பணத்தை முதலீடு செய்யுங்கள். வீண் சுகங்களுக்காக அதைப் பயன்படுத்த வேண்டாம்.
ஓர் அறிஞர் சொன்னார், சிறு சிறு செலவு களைப் பற்றியும் கவனமாக இருங்கள். ஏனென்றால் கப்பலில் உண்டாகும் சிறு துளை யானது அக்கப்பலையே மூழ்கடித்து விடும்.
எனக்கு தெரிந்த ஒரு வங்கி அதிகாரி சொன்னார். சிலர் திருமணத்திற்காகக் கடன் வாங்கி செலவிடுகிறார்கள். பிறகு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். திருமணங்களில் செய்யப்படுகிற, பல செலவுகளைக் குறைத்து அந்த பணத்தை மணமக்களுக்குக் கொடுத்தால் அவர்களுடைய வாழ்க்கையைச் சந்தோசமாக ஆரம்பிப்பார்கள்.
வள்ளுவர் சொல்கிறார்,
‘அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்’.
பொருள் : தன் வருவாய் அளவறிந்து வாழாதவனின் வாழ்க்கை இருப்பது போலத் தோன்றி இல்லாமலே கெடும்.
இப்பொழுது நிறுவனங்களில் Cost control, Cost Production என்று எந்தெந்த வகைகளில் எல்லாம் வீண் செலவுகளைக் குறைத்தால் வருமானத்தை அதிகப்படுத்தலாம் என்ற ஆராய்ச்சிகள் பெருகி வருகின்றன.
சரியாகப் பட்ஜெட் போட்டுக் குடும்பத் திலும், தொழிலும் திட்டமிட்டு செலவு செய்தால் வாழ்க்கையை பிரச்சனை இல்லாமல் நடத்தலாம்.
சில தொழில் செய்வோர், தொழிலில் வருகிற இலாபத்தை மிகப்பெரும் வீடுகள் கட்டியும், பல கார்கள் வாங்கியும், விருந்தினர் மாளிகை கட்டியும் செலவிட்டு விடுகின்றனர்.  எதிர்பாராத விதத்தில் வரவேண்டிய பணம் வராத பொழுது, Working Capital - பொருள் உற்பத்தி செய்ய தேவைப்படுகிறபணம் இல்லாமல் தவித்துக் கடன் வாங்குவர். Market குறைந்து விட்டாலோ, எதிர்பாராத ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ தொழில் முடக்கம் ஏற்பட்டுவிடும்.
ஆகவே, தொழிலுக்குத் தேவைப்படுகிற பணத்தை மற்றசெலவுகளுக்கு ஒரு நல்ல நிலைக்கு வரும்வரை மாற்றாமல் இருப்பது நல்லது.
எனக்குத் தெரிந்த பல கோடிகளை பன்ழ்ய் ர்ஸ்ங்ழ் செய்யக்கூடிய பல தொழிலதிபர்கள் இன்னும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகின்றனர். மிகப்பெரும் கோடீஸ்வரர் TATA கூட பல ஆண்டுகள் வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார்.
தொழிலையும், தொழில் வளர்ச்சியையும் முக்கியமாகக் கருதுபவர்கள் பெரும் செல்வந்த ராக மாறுவார்கள்.
முதலீடு செய்தல் (Investment)
இந்தியாவில் பல பொதுமக்கள் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நிறுவனங்களைப் பற்றி சரியாக ஆராயாமல் அவற்றில் முதலீடு செய்து அவற்றில் கோடிக்கணக்கான பணத்தை இழந்தது எல்லோர்க்கும் தெரியும். இப்பொழுது ஒரு எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டிருக்கிறது.
முதலீட்டு ஆலோசகர்களை (Investment Consultant) கண்டுபிடித்து அணுகி ஆலோசனை கள் கேட்டு முடிவெடுத்து முதலீடு செய்தால் பணத்திற்குப் பாதுகாப்பு கிடைக்கும்.
‘Investigate before investing’
அதாவது,
‘முதலீடு செய்யும் முன்பு தகவல் சேகரித்து அலசி ஆராயுங்கள்’ நீங்கள் பணம் போடும் நிறுவனம் பணத்தை வாங்கி வைத்து எதில் முதலீடு செய்கிறார்கள்? என்கிற விவரங்களைக் கேளுங்கள். அவர்கள் அதை தவறான வழியில் அல்லது வளர்ச்சியடையாத துறைகளில் முதலீடு செய்தால் பணம் திரும்பி வராது.
நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் கம்பெனியின் வரலாறு, அதன் நம்பகத்தன்மை அதன் அரசு அங்கீகாரம் போன்ற பல விபரங்களை தெளிவாக்கி பின் முதலீடு செய்யுங்கள்.
பொதுவாக எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும் எல்லாப் பகுதிகளும் வெளிச்சமாய்த் தெரிய வேண்டும். ஏதேனும், இருட்டுப் பகுதி இருந்தால் தோல்விகள் வர வாய்ப்புண்டு.
‘Whenever there is darkness
There is a possibility for failure’
சேமிப்பு (Savings)
உலக அளவில் பொதுவாகச் சொல்லப் படுகிற ஒரு கருத்து சம்பாதித்த வருமானத்தில் குறைந்தது 10% சேமிக்க வேண்டும்.
சேமிப்பு என்று போட்டுவிட்டால், அதை எந்தச் சிக்கலான நேரத்திலும் செலவழிக்க எண்ணக்கூடாது.
சேமிப்பு விதி (The Law of Savings) என்ன சொல்கிறதென்றால், ஒரு மனிதன் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டுமென்றால் வாழ்க்கை முழுவதும் தங்களுடைய வருமானத்தில் குறைந்தது 10% சேமிப்பு செய்து கொண்டே இருக்க வேண்டும்.
Parkinson’s Law என்ன சொல்கிற தென்றால், வருமானத்தின் அளவிற்குச் செலவுகள் பெருகிக் கொண்டே இருக்கும்.
சிலர் செய்வது என்னவென்றால் பணச் சிக்கல் என்று வந்துவிட்டாலே முதலில் கை வைப்பது சேமிப்பைத் தான்.
ஒருவருக்கு வருமானத்தைப் பெருக்கும் சக்தியும், காலமும் இருக்கும்பொழுதே சேமிப்பை எடுக்காமல் வாழ முடியவில்லை என்றால், வருமானம் இல்லாமல் போகும் வயதான காலத்தில் என்ன செய்ய முடியும்.


0 comments:

Post a Comment