Thursday, July 2, 2009

மாறிவரும் உலகமும் நாடுகடந்த தேசிய அரசும் - சி.இதயச்சந்திரன்

manmohan
அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியோடு உருவான உலகளாவிய தாக்கங்கள், இன்னமும் பல வருடங்கள் நீடிக்குமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடந்த வருட பிற்பகுதியில் ஏற்பட்ட இம்மாற்றங்கள், உலக ஒழுங்கைப் பாதித்துள்ளதாகக் கூறப்படும் அதேவேளை ஏகாதிபத்தியங்களின் தலைமைப் பதவியை நீண்ட காலமாக தக்க வைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு புதிய சவால்கள் ஆசியாவிலிருந்து தோன்றுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏறத்தாழ இரண்டு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களை, தனது அந்நிய நாணய சேமிப்பாக வைத்திருக்கும் சீனாவின் அடுத்த நகர்வு, ஆசிய நாணய நிதி உருவாக்கமாக இருக்குமென நம்பப்பட்டது.
ஆனாலும் இதில் இணைந்து கொள்வதாக இருந்த ஜப்பான், இந்÷தானேசியா, தென்
கொரியா போன்ற நாடுகள், புதிய உலக ஒழுங்கு மாற்றங்களைப் புரிந்து இந்த நாணய நிதிய உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை.
இதன் எதிர்வினையாக பிரிக் (ஆகீஐஇ) எனப்படும் பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் அடங்கிய அமைப்பின் கூட்டறிக்கை பல புதிய விடயங்களை தெரிவிக்க முயற்சிக்கிறது.
உலக வர்த்தக அமைப்பு மற்றும் ஐ.நா. சபை மறுசீரமைக்கப்பட்டு, இந்தியா, பிரேஸிலின் வகிபாகம் அதிகரிக்கப்பட வேண்டுமென்கிற விடயம் இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
ஒருவகையில் மேற்குலகோடு, பொருளாதார மேம்பாட்டிற்கான உறவினை வலுப்படுத்த முனையும் பிரேஸில், இந்தியா போன்ற நாடுகளை, தமது அணிக்குள் இழுத்து, அமெரிக்காவைப் பலவீனப்படுத்தும் சீன ரஷ்யாவின் காய்நகர்த்தல்களாக "பிரிக்' மாநாட்டினைக் கருதலாம்.
ஆசியப் பிராந்தியத்திலிருந்து சற்று விலகி நிற்கும் ஈரான், ரஷ்யா போன்றவை இந்திய சீன நாடுகளின் இணைவோடு மேற்குலகமற்ற புதிய பொருளாதார அசைவினை இங்கு உருவாக்க முயற்சிக்கிறது.
பிராந்திய அரசியல் முரண்பாடுகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து, அமெரிக்காவின் பலவீனத்தை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி, அந்த அடித்தளத்திலிருந்து தன்னையொரு பிராந்திய மேலாதிக்க முதன்மை நாடாக மாற்ற, சீனா முன்னெடுக்கும் நகர்வுகளாக சமகால புதிய கூட்டணி செயற்பாடுகளை நோக்கலாம்.
ஆசிய, ஆபிரிக்க கனிமவள மூலதனச் சந்தையை முழுமையாகக் கையகப்படுத்தும் அதேவேளை எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கு நாடுகளையும் பொருளாதார வளமிக்க தென் அமெரிக்க நாடான பிரேஸிலையும் தமது அணிக்குள் இணைப்பதனூடாக அமெரிக்காவின் பொருளாதார நிமிர்வுக்கான முயற்சிகளை மட்டுப்படுத்தலாமென சீனா கருதுகிறது.
ஆகவே, ஒரு சாராரின் பலவீனத்திலிருந்து மறுதரப்பார் பலமாகும் பொதுவான இயங்கியல் போக்கு இங்கு இனங்காணப்படுகிறது. பொருண்மிய பலமும் படை வலுவுமே உலகின் அசைவியக்கத்தை தீர்மானிக்கும் முதன்மையான காரணிகளென்பதை உலக ஒழுங்கு வெளிப்படுத்துகிறது.
இதுவரை உலக மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டிருந்த அமெரிக்கா தலைமையிலான மேற்குலக கூட்டுக்கு எதிராக சீனா தலைமையிலான பிறிதொரு மேலாதிக்க அணி எவ்வாறு கருக்கொள்ளும் அதனூடாக அதன் இருப்பு நிலை எந்த வகையில் நிலை நிறுத்தப்படுமென்பதையும் பார்க்க வேண்டும்.
அரசுகளின் மிக முக்கியமான இலக்கானது, தமது இருப்பினை எவ்வாறு தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதை நோக்கியே நகர்கின்றது. அத்தோடு சர்வதேச இயங்கு நிலையின் அடிப்படைக் கட்டமைப்பானது, ஏனைய நாடுகளுடனான பாதுகாப்புப் போட்டி குறித்து கவனம் செலுத்துகிறது.
இங்கு சர்வதேச கட்டமைப்பில், மூன்று விதமான பண்புகள், தொழிற்படுவதாகக் கூறப்படுகின்றது. அதில் தமக்கும் மேலான நிறைவேற்று அதிகாரம் கொண்டவர்கள் அற்ற, ஆட்சியாளர்களால் ஆளப்படுதல் முதன்மையானது. அடுத்ததாக வலிந்த தாக்கு திறன் கொண்ட இராணுவத்தை இயக்கும் பலம் பொருந்திய சக்தியைக் கொண்ட நாடுகள். இறுதியாக, ஏனைய நாடுகளின் நிகழ்கால, எதிர்காலத் திட்டங்களை ஊகித்தறிய முடியாத நாடுகளென்று வகைப்படுத்தப்படுகிறது.
இதில் தமக்கும் மேலானவர்கள் இல்லாத கட்டமைப்பைப் பேணும் நாடுகள் குறித்தே அச்சம் ஏற்படுகிறது.
அதாவது, இந்நாடானது தனது ஏக மோக மேலாதிக்க இருப்பினை நிலை நாட்ட வேண்டுமாயின் எதிராளிகளை விட பன்மடங்கு பலம் பொருந்தியவராகத் திகழ வேண்டுமென நினைக்கிறது.
பலமிக்க சக்திகளின் கட்டமைப்பில், தனது ஏகபோகத்தை உறுதிப்படுத்துவதே அந் நாட்டின் குறிக்கோளாக இருக்கும்.
நவீன உலகின் முதன்மையான ஏகாதிபத்தியமாக விளங்க வேண்டுமென பல தசாப்தமாக முயன்று வெற்றி பெற்றிருக்கும் அமெரிக்கா, இதற்கு நல்ல உதாரணமாகும்.
இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால் பிராந்திய ஆதிக்கத்தினூடாக முழு உலகத்தையும் தனது மேலாதிக்கத்துள் கொண்டு வந்த அமெரிக்க நகர்வுகளே புதிய உலக ஒழுங்கைத் தீர்மானித்தது.
அதாவது, அமெரிக்கா பிரயோகித்த மூலோபாய நகர்வுகள் சற்று வித்தியாசமானது. ஐரோப்பாவுடன் இணைந்த பிராந்தியத்தில் தனது படைப்பல பொருளாதார ஆதிக்கத்தை நிறுவுவதன் ஊடாக முழு உலகையும் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
அதேவேளை, தன்னைப் போன்று இன்னுமொரு மேலõதிக்க சக்தி, ஐரோப்பா தவிர்ந்த வேறெந்த பிராந்தியத்திலும் உருவாகாமல் தடுத்தது.
கொரியப் போர், இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஜப்பான் மீதான அணுகுண்டு வீச்சு, வியட்நாம் யுத்தம், பின்னர் நிறுவப்பட்ட அமெரிக்கப் படைத் தளங்கள் யாவும் அப் பிராந்தியத்தில் தனக்குச் சமனான இன்னுமொரு பெரும் வல்லரசு உருவாகாமல் தடுக்க அமெரிக்கா மேற்கொண்ட நகர்வுகளைக் குறிக்கும்.
அதேபோன்று கிழக்கு ஐரோப்பாவிலுள்ள சோவியத் யூனியனை உடைத்து தனது ஆதிக்க எல்லைகளை விரித்துக் கொண்ட விவகாரத்தையும் கவனிக்க வேண்டும். அத்தோடு லத்தீன் அமெரிக்க நாடுகளில் அரசுக்கெதிரான எதிர்ப்புரட்சிவாதிகளை ஊக்குவித்து அங்குமொரு அரசியல் ஸ்திரமற்ற நிலையை அமெரிக்கா தோற்றுவித்தது.
எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கையும் அமெரிக்கா விட்டு வைக்கவில்லை. தனது படை வலுவைப் பிரயோகித்தே, அங்கு பலமடைய முயன்ற தேசிய அரசுகளை செயலிழக்கச் செய்தது. இஸ்ரேலினை மையமாகக் கொண்டு தொடர்ந்தும், அப் பிராந்தியத்தில் சுமுக நிலை ஏற்படாதவாறு தடுக்க முயல்வதாகக் கருதலாம்.
ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக அமெரிக்கா, மேற்கொண்ட கடும் முயற்சியின் பலனாக உருவாக்கப்பட்ட ஓருலக மேலாதிக்கம், ஆசியாவிற்கு நகர்ந்து செல்லாமல் தடுக்க, தற்போது மேற்கொள்ளும் ஜீ20 மாநாடுகள், பாலஸ்தீன பேச்சுவார்த்தைகள் உதவப் போவதில்லை.
சோவியத் யூனியனை உடைத்தது போன்று, சீனாவின் மீது, பிளவு உத்திகளை பிரயோகிக்க முடியாத கையறு நிலையில் அமெரிக்கா உள்ளது. பொருளாதார நிமிர்விற்கு சீனாவின் அனுசரணை அத்தியாவசியமானது என்பதே, அத்தகைய சோவியத் பாணி கடும் போக்கினை சீனா மீது மேற்கொள்ளாமல் தடுக்கிறது.
ஆனாலும் படை வலுவைப் பிரயோகிக்காமல் பிராந்திய ஆதிக்கத்தை வலுப்படுத்தும் சீனாவின் தந்திரோபாயத்தை அமெரிக்கா உணர்ந்து கொண்டாலும் அதனால் எதுவுமே செய்ய முடியாததொரு அவலம் நிகழ்கிறது.
வன்னிப் போர் இதற்கொரு காத்திரமான உதாரணம். ஆசியாவிலிருந்து மேற்குலகை வெளியேற்றும் முதற்படியாகவும் இதனை நோக்கலாம்.
கிழக்கு ஆசியாவின் கடற்பாதை கேந்திர முக்கியத்துவமிக்க தாய்வானை வைத்து அமெரிக்கா மேற்கொண்ட நகர்வுகள் பலனளிக்கவில்லை. புதிதாக பிரச்சினைகளை உருவாக்கி, சீன அணி நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கலாமென எண்ணி வட கொரியா மீது பாய்ந்தாலும் அந்நாடு திரும்பிப் பாய்வதற்கு தயாராக இருக்கிறது.
இந்நிலையில் சீனாவோடு அணி சேர்ந்திருக்கும் நாடுகளுக்கிடையே முரண்பாடுகள் இருந்தாலும் அமெரிக்க மேலாதிக்கத்தின் நீட்சி தொடருமாயின், தமது ஏகாதிபத்தியக் கனவினை நிறைவேற்ற முடியாமல் போகுமென்று ஒவ்வொரு நாடும் கணிப்பிடுகிறது.
ஒபாமாவின் புதிய நிர்வாகம், இந்திய ஆட்சியாளர்களுடன் நெருங்கிய உறவினை வளர்க்கவில்லையென்று காந்தி தேச கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றார்கள். வான் பாதுகாப்பு ஏவுகணைப் பொறிமுறையால் ரஷ்யாவும் தொதி நிலையில் உள்ளது. இலத்தீன் அமெரிக்க நாடுகளும் அமெரிக்க எதிர்ப்புணர்வு ஆட்சியாளர்களால் நிரம்பி வழிகிறது.
இத்தகைய இரு துருவ நிலையை ஊதிப் பெருப்பித்து, ஆசியாவின் தனித்துவ சக்தியாக சீனா வளர்வதை, அமெரிக்கா எவ்வாறு தடுக்கப் போகிறதென்பதை அதன் விரைவான பொருளாதார மீட்சியே தீர்மானிக்கும்.
இலங்கையின் கேந்திர நிலை குறித்து, சீனாவிற்கும் இந்தியாவிற்குமிடையே ஒருவித சமரசப் போக்கு தற்காலிகமாக உருவாகும் வாய்ப்புண்டு.
ஆனாலும் அமெரிக்காவின் பிராந்திய மேலாதிக்க தலைமைத்துவத்தை பிரித்தானியா ஏற்றுக் கொண்டது போன்று, சீனாவால் கட்டியெழுப்பப்படும் ஆசிய மேலாதிக்க சாம்ராஜ்யத்தை இந்தியா ஏற்றுக் கொள்ளுமாவென்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இரு நாடுகளின் இராஜதந்திர ஆடுகளமாகத் திகழும் இலங்கை அரசாங்கம், தனது முக்கியத்துவம் குறித்து மிகைப்படுத்தப்பட்ட கற்பனை உலகில் ஆழ்ந்துள்ளது போல் தெரிகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகப் பகுதியானது, சீனாவினது இடைத் தங்கல் நிலையமென்பதை இந்தியாவும் புரிந்து கொள்ளும்.
பாகிஸ்தானின் குவடார், இலங்கையின் அம்பாந்தோட்டை, பங்களாதேஷின் சிட்டகொங், மியன்மாரின் சிட்வே துறை முகங்கள் யாவும் சீனாவின் கடல் வணிகத்திற்கான மாகோ, முறிகண்டி தரிப்பிடங்கள் போன்றவைதான்.
போர்க் காலங்களிலேயே இவற்றிற்கான முக்கியத்துவம் உணரப்படும். ஆனாலும் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா மீதும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் துறை முகங்களிலும் ஆதிக்கம் நிலைநாட்டப்படாவிட்டால் சீனாவிற்கான கனிமவள, எண்ணெய் வளங்கல் தடைப்படும்.
ஈரானோடு, சீனா, ரஷ்யா ஒட்டிக் கொண்டிருக்கும் சூத்திரத்தின் பின்னணியும் அதுவேதான்.
ஆகவே, ஈழத் தமிழினத்தின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தைப்
பொறுத்தவரை, ஆசியாவில் ஏற்படும் இத்தகைய புதிய மேலாதிக்க உருவாக்கத்தினை உள்வாங்கிப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
ஐ.நா. பாதுகாப்புச் சபையிலும், மனித உரிமைகள் சபையிலும் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கெதிரான தீர்மானம் தோல்வியுற்றதற்கு மேலே விபரித்த புவிசார் அரசியல் மாற்றங்கள் பெரும் பங்கினை வகித்திருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது ஈழ விடுதலைப் போராட்டமானது மேற்குலகிற்குச் சார்பானதென்கிற தோற்றப்பாட்டினை இந்தியாவும் இலங்கையும் ஏற்öகனவே உலகப் பரப்பெங்கும் உருவாக்கி இருந்தது.
ஆகவே புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வாழும் தமிழ் மக்கள், தாங்கள் உருவாக்கப் போகும் "நாடு கடந்த தேசிய அரசு' என்பது, எவ்விதமான பார்வையினை, அமெரிக்க எதிர்ப்பு அணியினரிடையே உருவாக்கப்
போகிறதென்பதை அவதானிக்க வேண்டும்.
அதனைப் புரிந்து, சரியான நகர்வினை மேற்கொள்ளாவிட்டால் மேற்குலகிற்குள்ளே, தமிழ் அரசியல் போராட்டங்கள் முடங்கி விடும்.
-நன்றி வீரகேசரி வாரவெளியீடு -


0 comments:

Post a Comment