Friday, July 3, 2009

இனப் படுகொலையை மறைக்கும் ராஜ தந்திரம்.

vanni makkal
ஈழத் தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை நசுக்க, எந்தக் கரிசனமும் இன்றி ஒரு மாபெரும் இனப் படுகொலையை நடத்தி முடித்த சிறிலங்க இன வெறி அரசை, தன்னாட்டு மக்களை பாதுகாக்கும் கடமையை (Responsibility to Protect – R2P) கைதுறந்த காரணத்திற்காக உலக நாடுகள் தண்டிக்க வேண்டும் என்று கோரிவரும் நேரத்தில், அது கடைபிடித்த அரச பயங்கரவாத வழிமுறைகளை நியாயப்படுத்தி, காப்பாற்றிடும் ராஜ தந்திர முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன
ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணும் பாதையை தன்னிச்சையாக முறித்துவிட்டு, இராணுவ ரீதியாக தீர்வு காணும் முடிவுடன், தெற்காசிய நாடுகளின் முழுமையான ஒத்துழைப்புடன் அது நடத்தி முடித்த இனப் படுகொலை, இன்று உலகின் கண்களை தாமதமாகத் திறந்ததினால் உருவான சர்வதேசச் சட்டச் சிக்கலில் இருந்து தன்னை காத்துக் கொள்ளும் முயற்சியில் சிறிலங்க அரசு இறங்கியுள்ளது. அதன் சீரிய முயற்சிகளின் ஒரு அங்கம்தான் சமீபத்தில் ‘பாரம்பரியமிக்க’ ஆங்கில நாளிதழ் ஒன்றில் சிலி நாட்டின் தூதராக இலங்கையில் பணியாற்றிய ஜார்ஜ் ஹீன் என்பவரின் ‘ஆழமான’ கட்டுரையாகும்.
“தங்கள் நாட்டை (சிறிலங்கா) கடந்த 25 ஆண்டுகளாக நாசப்படுத்திவந்த பயங்கரவாதத்தை போரின் மூலம் முடிவிற்கு கொண்டு வந்த சிறிலங்க அரசை பாராட்டுவதற்குப் பதிலாக, அதன் மீது தனது நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பை கைவிட்டதாக குற்றம் சாற்றுவது முறையான செயல் அல்ல” என்று சிறிலங்க அரசை சர்வதேச சட்டங்களின் கீ்ழ் தண்டிக்க முயன்றுவரும் ஐரோப்பிய நாடுகளை குறை கூறியுள்ளார் ஜார்ஜ் ஹீன்.
இனப் படுகொலையை மறைக்க…
இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போரின் (சிறிலங்க அரசு குறிப்பிடும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பதையும் பயன்படுத்துகிறார்) இறுதிகட்டத்தில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் சிறிலங்க‌ப் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது அங்கு சென்று வந்த ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கீ மூன், அவருடைய அலுவலகத் தலைமை அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோராலும், அநதப் படுகொலை நிகழ்த்தப்பட்ட இடத்தை செயற்கைக் கோள் எடுத்த படங்களின் வாயிலாகவும் உறுதி செய்துகொண்ட நிலையிலேயே, தன்னாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை கைவிட்ட குற்றத்தை சிறிலங்க அரசின் மீது உலக நாடுகள் சுமத்தி வருகின்றன.
இதனை தவறென்று வாதாட முற்பட்டு, ராஜபக்ச ஆதரவு ஆங்கில நாளேட்டில் எழுதியுள்ள ஜார்ஜ் ஹீன் (Jorge Hein), தன்னாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பை (Responsibility to Protect) சிறிலங்க அரசு தட்டிக் கழிக்கவில்லை என்று கூறி தனது வாதத்தை துவக்கியிருக்க வேண்டும் அல்லது போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவது தவறு என்றோ அல்லது உறுதிச் செய்யப்படாதது என்றோ கூறி துவக்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் அவர் துவக்கவில்லை. சந்திரிகா குமாரதுங்கா சிறிலங்க பிரதமராக இருந்தபோது அந்நாட்டு அயலுறவு அமைச்சராக இருந்த லக்ஷ்மண் கதிர்காமரின் திறமைகளையெல்லாம் பட்டியலிட்டுவிட்டு, அவர் படுகொலை செய்யப்பட்டதையும், அவ்வளவு துல்லியமாக அவரை படுகொலை செய்யும் திறன் இதுவரை காணாத பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளால் மட்டுமே முடியும் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்படும் விடயம் என்று கூறி ஆரம்பித்து பிரச்சனைக்கு வருகிறார்.
எந்தப் பிரச்சனைக்கு வருகிறார் என்றால், இறுதி கட்ட இனப் படுகொலை நடந்ததா இல்லையா என்பது பற்றியல்ல, மாறாக எப்படிப்பட்டது விடுதலைப் புலிகள் இயக்கம் என்பதை விவரிக்கத் துவங்குகிறார். சிறிலங்க அரசு திட்டமிட்டு, தெற்காசிய நாடுகளின் உதவியுடன் நடத்தி முடித்த இனப் படுகொலையை மறைக்க முற்படும் ஜார்ஜ் ஹீன், உண்மையில் இப்படிப்பட்ட ‘உள்நாட்டுப் போருக்கு’ காரணமான இனப் பிரச்சனையை விவரமாக விளக்கிவிட்டு, அதற்கு அரசியல் ரீதியான தீர்வு காண சிறிலங்க அரசு ‘எடுத்த’ முயற்சிகளையெல்லாம் பட்டியலிட்டுவிட்டு, பிறகு அதிபர் ராஜபக்ச மேற்கொண்ட இராணுவ ரீதியிலான தீர்வுத் திட்டத்தை ஆதரித்து எழுதியிருப்பாரேயானால், அங்கு பணியாற்றிய ராஜ தந்திரியின் கருத்தாக அதனை கருதியிருக்கலாம்.
அவ்வாறு செய்யாமல், ராஜபக்ச அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்கு உதவிய இந்தியா, சீனா, பாகிஸ்தான், இரஷ்யா ஆகிய நாடுகள் என்ன காரணத்தை கூறினவோ அதனையே இவரும் கூறி – பயங்கரவாதத்திற்கு எதிரான போர் – தமிழர்களுக்கு எதிரான போரை நியாயப்படுத்துகிறார்! ஏனெனில் அங்கு விடுதலைக்காக போராடியவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரையிட்டால்தான், அவர்களுக்கு ஆதரவளித்த மக்களையும் ஒட்டுமொத்தமாக துடைத்தொழிப்பதற்கு நியாயம் கற்பிக்க முடியும். இந்த வித்தையை ராஜபக்ச அரசு – குறிப்பாக அந்நாட்டு அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்பய ராஜபக்ச கையாண்டுள்ளார். அதனால்தான், பாதுகாப்பு வலயத்திலிருந்த மருத்துவமனையை இராணுவ இலக்குதான் (legitimate military target) என்று கூறி அதன் மீது சிறிலங்க இராணுவம் குண்டு வீசியதை நியாயப்படுத்தினார்!
எனவே போரில் பாதிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்லது அவர்களுக்கு துணை போனவர்கள் என்று கூறிவிட்டால், அதன்பிறகு ‘உள்நாட்டுப் போரில்’ கொல்லப்பட்டவர்களைப் பற்றி எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாது அல்லவா? அப்படித்தானே இராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும் அமெரிக்காவும் அதன் நேச நாட்டுப் படைகளும் செய்தன! இல்லாவிட்டால் ஈராக்கில் மட்டும் 11,50,000 பேர் கொல்லப்பட்டதற்கு என்ன நியாயம் கூற முடியும்? எனவே அந்த ‘சட்டபூர்வமான’ வழிமுறையை கொண்டு பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதை மறைக்க முயன்றுள்ளார் ஜார்ஜ் ஹீன். நல்ல ராஜ தந்திரி.
கால் நூற்றாண்டிற்கு மேலாக அங்கு நிலவிவருவது அந்நாட்டின் பூர்வீக‌க் குடிகளின் சம உரிமைப் போராட்டத்தின் அடுத்தக் கட்ட வளர்ச்சியான விடுதலைப் போராட்டம் என்பதையும், அதற்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பதற்கு அடுத்தடுத்து வந்த சிறிலங்க அரசுகள் தவறிவிட்டன என்பதையும் மிகச் சாதுர்யமாக மறைத்துள்ளார் ஜார்ஜ் ஹீன்.
தீர்வுத் திட்டத்தை தூக்கி எறிந்த சிறிலங்கா
2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை சிலி நாட்டின் தூதராக ஜார்ஜ் ஹீன் கொழும்புவில் பணியாற்றியுள்ளார்.
இந்த காலகட்டத்தி்ல்தான் இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் பேச்சுவார்த்தைகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், சிறிலங்க அரசிற்கும் இடையே நார்வேயின் அனுசரணையுடன் நடந்துவந்து, அதன் உச்சக் கட்டமாக நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்கு வகை செய்யும் நோக்கில் இடைக்கால சுய நிர்வாக அதிகார அமைப்பை (Interim Self Governing Authority _ ISGA) நிறுவுவதற்கான திட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்க அரசிற்கு அளிக்கிறார்கள்.
தாங்கள் அளித்த தீர்வுத் திட்டத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று புலிகள் வற்புறுத்தவில்லை. மாறாக, இதனை ஒரு அடிப்படையாக்கி இறுதியான அரசியல் தீர்வை உருவாக்க பேச்சுவார்த்தையின் மூலம் முயற்சிப்போம் என்று அறிக்கையும் விடுகிறார்கள்.
இலங்கைத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண தயார் என்று கூறிவந்த சிறிலங்க அரசு, இத்தீர்வு திட்டத்தை ஆராய்ந்து பார்க்கிறோம் என்று கூட சொல்லாமல் கிடப்பில் போட்டது. அமைதிக்கான முன்னெடுப்புகளை ஓரளவிற்கு மேற்கொண்டு வந்த, அப்போது பிரதமராக இருந்த ரனில் விக்கிரசிங்கே அரசின் அதிகாரத்தை பறித்தார் அதிபராக இருந்த சந்திரிகா. இவர் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக அமைதித் தீர்வு காண்பேன் என்று கூறி (1995இல்) தமிழர்களின் பேராதரவுடன் ஆட்சிக்கு வந்தவர். இரண்டு முறை அதிபராக இருந்தார், அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதை விட, அதற்குத் தயாராக இருந்த விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பதற்கான முயற்சிகளை சர்வதேச ரீதியில் மேற்கொண்டார். அதற்குத்தான் இவருக்கு ‘தமிழரான’ லக்ஷ்மண் கதிர்காமர் பெரிதும் உதவினார்.
அவருடைய ராஜ தந்திர திறனைத்தான் ஜார்ஜ் ஹீன் வெகுவாகப் புகழ்ந்து புளங்காகிதம் அடைகிறார். விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று சித்தரிக்க எத்தனையோ காரணங்களை அடுக்கும் ஜார்ஜ் ஹீன், ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லட்டும். உலகில் எந்த பயங்கரவாத இயக்கம் ஒரு விரிவான அரசியல் திட்டத்தை – சர்வதேச சட்ட விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட – திட்டத்தை முன்வைத்தது?
ஒரு மூன்றாம் நாட்டின் அனுசரணையுடன் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில், தங்களை இன ரீதியாக ஒடுக்கிவரும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய பயங்கரவாத இயக்கம் எது?
விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக ஒழித்துக்கட்டுவதே தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு தரும் என்று கூறி கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை கொன்று குவித்ததே சிறிலங்க இராணுவம், அதற்கு எதிராக போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம் பதிலடி கொடுத்து பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரை கொன்றது, காயப்படுத்தியது. ஆனால், அவர்களால் கொல்லப்பட்ட சிப்பாய் அல்லாத சிங்களவர் யாராவது உண்டா? அப்படி ஒரு செய்தியை இப்படிபட்ட ராஜ தந்திர புலிகளால் காட்ட முடியுமா? ஒரு சிங்களப் பெண் கற்பழிக்கப்பட்டார் என்று கூற முடியுமா?
இரண்டரை ஆண்டுகளாக நடந்த இந்தப் போரில் சிறிலங்க இராணுவ இலக்குகளை குறிவைத்து 6 முறை விமான தாக்குதல் நடத்தினார்களே விடுதலைப் புலிகள், அதில் ஒன்றாவது சிங்கள மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்டதா?
ஆனால், பாதுகாப்பு வலயம் என்று அறிவித்து அங்கு அப்பாவி மக்களை வரவழைத்து, அவர்கள் அங்கு தஞ்சமடைந்த பிறகு, அங்கிருக்கும் மருத்துவமனை, சிறுவர்கள் கூடம் என்று குறிவைத்து தாக்குதல் நடத்தியதே சிறிலங்க இராணுவம்? அது அரச பயங்கரவாதமல்லாவா? சொந்த நாட்டு மக்களை பாதுகாத்திட வேண்டும் என்ற கடமையில் இருந்த வழுவிய குற்றமாகதா இது? இது சிறிலங்க அரசின் அரச பயங்கரவாத நடவடிக்கையா இல்லையா?
சிறுவர்களை தங்கள் படைகளில் சேர்த்த குற்றங்களைச் செய்த பயங்கரவாத இயக்கம் என்கிறார். தமிழ் சிறுவர்களையும், சிறுமிகளையும் சிறிலங்க இராணுவத்தினர் உச்சி மோந்து அன்பு காட்டினரோ? இப்பொழுது கூட, சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் இளம் வயதினர் ஒவ்வொரு நாளும் கடத்தி பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகின்றனரே? சிறுவர்கள் கடத்திச் செல்லப்படுகின்றனரே? படிக்கச் சென்ற சிறுவர்கள், சிறுமிகள் மீது இப்படிப்பட்ட அரச பயங்கரவாதம்தானே 1974 முதல் சிறிலங்க அரச படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்டது? மறுக்க முடியுமா? புகைப்படங்களும், ‌வீடியோ காட்சிகளும் இந்தக் கதைகளைத் தானே இன்றுவரை பேசுகின்றன.
கொழும்பு நகரில் சிறிலங்க நாடாளுமன்றத்திற்கு முன்னால் சம உரிமை கேட்டு சாத்வீக வழியில் போராடிய தமிழர் தலைவர் செல்வநாயகம் உள்ளிட்டோர் மீது சிறிலங்க காவலர்களும், காடையர்களும் தாக்குதல் நடத்தவில்லையா? அமைதியாக கூடி தமிழ் மாநாடு நடத்திய மக்கள் மீது காவல் துறையினரே வன்முறை செய்து 9 பேரைக் கொல்லவில்லையா?
இதையெல்லாம் பார்த்தப் பிறகுதானே உருவானது ஆயுதப் போராட்டம்? சும்மாவா சுட்டார்கள் ஆல்பிரட் துரையப்பாவை? இந்த வரலாற்றையெல்லாம் கவனமாக மறைத்துவிட்டு (மூன்றாண்டுக் காலம் கொழும்புவில் பணியாற்றியவருக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்), தனது நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக எழுந்த பிரிவினைப் போராட்டத்தை ஒடுக்க அந்நாட்டு அரசிற்கு சட்டப்பூர்வமான சுய காப்பு உரிமை உள்ளது என்று கூறுகிறார் ஜார்ஜ் ஹீன்! தனது எழுத்தோவியத்தை முடிக்கும் போது தமிழர்களின் சட்டப்பூர்வமான குறைகளை நிறைவேற்ற சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்றும் கூறுகிறார்! என்னே முர‌ண்பாடு! Legitimate Grievances of the minority Tamils என்பதை ஒப்புக் கொள்ளும் இந்த ராஜ தந்திரி, அது என்ன? எவ்வாறு உருவானது? அதற்கான தோற்றவாய் எது? உருவான காலம் எது? எப்படி பெரிதானது? அது ஆயுதப் போராட்டமாக உருவெடுக்கக் காரணம் என்ன? என்பதை நியாயமாக ஆராய்ந்திருப்பாரெனில் யார் பயங்கரவாதி என்பதும், அரச பயங்கரவாதம் எது என்பதும் தெளிவாகியிருக்கும் இவர் எழுத்தை படிப்பவர்க்கு.
தங்களை தனது முழு சக்தியையும் கொண்டு ஒடுக்கும் வலிமை வாய்ந்த எதிரியை வீழத்த ஆயுத வலிமையை ஏற்பதும், தங்கள் இன்னுயிரை ஈந்து தம்மக்களை அப்படிப்பட்ட கொடுமையிலிருந்தும் காப்பதுதான் தற்கொலைத் தாக்குதல். கொடுமையான எதிரியை ஒழித்துவிட்டு, அவனின் படையிடம் சிக்காமல் தங்களையே அழித்துக் கொள்வதும், தங்களையே கருவியாக்கி, தமது இனத்தை அழிக்கும் எதிரிகளை அழிப்பதும் நாகரீக மானுடத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட போராட்ட வழிமுறைகள்தான். இது தவறென்றால் நாம் வாஞ்சிநாதனையும், உத்தம் சிங்கையும் கொண்டாட முடியாது. பகத் சிங்கை நமது நாட்டின் பெருமையாக கருதி சிறப்பு தபால் தலையையும் வெளியிட முடியாது. ஒரு இனத்தின் மீட்சிக்காக தங்களையே தியாகம் செய்வோரை எப்படி அழைப்பது என்பது அந்த இனத்தின் உரிமை. அதே நேரத்தில் அரச பயங்கரவாதத்தை சகித்துக் கொண்டு, ஏதோ ஒரு அரசியல் தீர்வை ஏற்றுக் கொண்டு, அமைதி காத்து வாழ் என்று கூறுவதற்கு உலகிற்கு உரிமை கிடையாது.
ஈழத் தமிழினத்தின் போராட்டத்திற்கான அடிப்படையை விளங்கிக் கொள்ள வேண்டும், அதன் மீது தீர்வை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் தங்களுடைய போராட்டத்திற்கான தீர்வு எது என்பதை இறுதியாக தீர்மானிக்கும் பொறுப்பு அந்த மக்களுக்கு மட்டுமே உரியது.
இதனை உணர்ந்து கொண்டவர்கள் மனிதாபிமானிகள் – அவர்கள் ராஜ தந்திரிகளாக இருந்தாலும் – சிறிலங்க அரசு நடத்தி முடித்த போரில் பல பத்தாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் உயிர்களுக்காக அந்நாட்டு அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறுவார்கள். த‌ங்களுடைய ராஜ ‌வி‌சுவாச‌த்தை‌க் கா‌ட்ட ‌விரு‌ம்புவோ‌ர் எழு‌தினா‌ல் மட்டுமே உண்மையையும், நியாயத்தையும் மறைத்து ராஜ தந்திர நியாயம் கற்பிக்க முடியும்.
- இணைய உலகம்.
நன்றி: http://www.nerudal.com


0 comments:

Post a Comment