Sunday, September 6, 2009

ஒழுக்கங்கெட்டத் தனத்திற்கு ஒருதலைக் கற்பே காரணமாகும் – தந்தை பெரியார்.

image

இந்து மதம் என்றும் இந்துக்கள் என்றும் நம்மைச் சொல்லிக் கொண்டு, இந்து மதம் சாஸ்திர புராண சம்பந்தமான விஷயங்களைத் தமிழர் தலையில் சுமத்துவதும், தமிழர்கள் அதற்குக் கட்டுப்படுவதும் நியாயமா? இந்து மதப் புராணங்களில் ‘கற்பு'க்கு லட்சணம் ஒரு பெண் (நளாயினி), தனது புருஷன் குஷ்டரோகியாய் இருந்து கொண்டு தாசி வீட்டுக்குப் போக வேண்டுமென்று சொன்னாலும், அவனைக் கழுவி எடுத்துக் கூடையில் வைத்துத் தலையில் தூக்கிக் கொண்டு போய் தாசி வீட்டில் வைத்து, விடிந்த பிறகு மறுபடியும் தாசி வீட்டிலிருந்து தன் வீட்டிற்குத் தூக்கிவர வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்து மதத்தை வலியுறுத்துகிற ஒருவன், தன் மகளுக்கு இப்படிப்பட்ட புருஷன் அமைந்து அவன் தன் பெண்ஜாதியை இப்படிச் செய்ய வேண்டுமென்று சொல்லுவானானால், ஒப்புக்கொள்ளுவானா?...

ஆண், பெண் கூட்டு வாழ்க்கையில் இப்போது வழங்கி வரும் கருத்தமைந்த ‘கற்பு' என்னும் வார்த்தையே அவசியமற்றது என்றும், அது வாழ்க்கை இன்பத்திற்குக் கேடு பயக்கின்றதே ஒழிய, அதனால் நன்மை இல்லை என்றும் சொல்லுவேன். இன்று வழங்கும் ‘கற்பு' பெண்களுக்கு மாத்திரமே ஒழிய ஆண்களுக்கு இல்லை. அது, பெண்களை நிர்ப்பந்திப்பது போல் ஆண்களை நிர்ப்பந்திப்பதில்லை. சமுதாயத்தில் ஒழுக்க ஈனம் ஏற்பட்டதற்குக் காரணம், இந்த ஒருதலைக் கற்பேயாகும். பெண்கள் அடிமையாக்கப்பட்டதற்கும் இந்த ஒரு தலைக் கற்பே காரணமாகும். இந்த ஒரு தலைக்கற்பு உள்ளவரை, சமுதாயம் சீர்படப் போவதில்லை என்பதே எனது உறுதி.

ஆண்களின் ஒழுக்க ஈனமான நடத்தைகளை இந்துமதக் கடவுள், சமயம், சாத்திரம், புராணம் ஆகியவை ஒப்புக் கொள்ளுகின்றனவா இல்லையா என்று கேட்கிறேன். இவை கூடாது என்று சொல்லுகிற ஒரு தமிழன், தன்னை இந்து மதத்தைச் சார்ந்தவன் என்று சொல்லிக் கொள்ள முடியுமா? இப்படிச் சொல்லுவதன் மூலம் ஆண்களைப் போலவே பெண்களும் ஒழுக்க ஈனமாக இருக்க வேண்டுமென்று போதிப்பதாகக் கொள்ளக்கூடாது. பெண்களைப் போலவே ஆண்களும், ஒழுக்கமாக இருக்கச் செய்வதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் சட்டமோ, சமுதாயமோ செய்ய வேண்டும். செய்யாவிட்டால், சில பெண்களாவது முன் வந்து அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்யத் துணிவதாகவாவது காட்ட வேண்டும். உரிமையில்தான் சுதந்திர உணர்ச்சி இருக்கிறது. அது இல்லாத இடத்தில் அடிமை உணர்ச்சிதான் இருக்கிறது. அதனாலேயே நமது பெண்கள் அடிமைகளானார்கள். அப்பெண்களின் வயிற்றில் பிறந்த நாம் அடிமை வாழ்வு வாழ்கிறோம்...

அநேகம் பேர்களுக்குச் சேர்க்கையால்தான் பிள்ளைப் பேறு கர்ப்பம் உண்டாகின்றது என்பதுகூடத் தெரியாது. ‘ஏதோ கடவுள் கொடுக்கிறார். கடவுள் வயிற்றில் கொண்டு விடுகிறார். கடவுளே வளர்க்கிறார். கடவுளே பெற்ற பின்பும் நோய் உண்டாக்குகிறார். கடவுளே சாகடிக்கிறார்' என்று கருதிக் கொண்டு, இது விஷயங்களில் மிருகங்களைவிட கேவலமாய் நடந்து கொள்ளுகிறார்கள். சேர்க்கை விஷயம் அது சம்பந்தமான உடல்கூறு ஆகியவைகளைப் பற்றித் தெரிவது, வெகு கேவலமாக இங்கு பேசப்படுகிறது. கதைகளில், புராணங்களில் நாடகத்தில் பச்சை பச்சையாய்க் கேட்கிறபோதும், பார்க்கிறபோதும் ஆனந்தக் கூத்தாடுகிறோம்.

அந்தக் கலைகளை நமது ஆண் - பெண் இருபாலருமே ஓர் அளவுக்காவது தெரிந்து இருக்க வேண்டும். அது தெரிந்து கொள்ளாமல் வெறும் மிருகப் பிராயமாய் இருப்பதாலேயே அநேக நோய், சாவு, ஊனம், மனச்சஞ்சலம், பொருந்தா வாழ்வு ஆகியவை பெருகுகின்றன. குழந்தைகள் பெறுவதில் கர்ப்ப காலத்தில் எப்படி இருக்க வேண்டும், குழந்தை பிறந்த பிறகு எப்படி இருக்க வேண்டும், எத்தனை நாள் பொறுத்து மறுபடியும் கர்ப்பம் தரிக்க இடம் கொடுக்க வேண்டும் என்பவைகளையாவது ஒவ்வொரு பெண்ணும் தெரிந்திருக்க வேண்டும்.

சேர்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பது தெரியாமல் நடந்து கொண்டு நோய் வந்தால், அதற்குப் ‘பொம்பளை நோவு' என்று சொல்லிவிடுகிறார்கள். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், பெண்களுக்கு அது சம்பந்தமான நோய் வந்தாலும், பெண்கள் அதையும் ‘பொம்பளை வியாதி' என்றுதான் சொல்லுகிறார்கள். இது, பெண்கள் சமூகத்திற்கே இழிவான காரியமாகும்.

ஆண் - பெண் தன்மை, உடல்கூறு, சேர்க்கை விளக்கம், கர்ப்பம், பிள்ளைப்பேறு ஆகியவைகளைப் பற்றிச் சர்க்கார், அத்தருணம் நெருங்கிய பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அல்லது மேல் வகுப்புக்குப் பாடமாகவாவது வைக்க வேண்டும். இவை நன்றாக மக்கள் அறிந்தால், இக்காரியங்களில் ஒழுக்கத் தவறுதல்கூட ஏற்படாது என்பது எனது அபிப்பிராயம். சின்ன தவறுதல் கூட ஏற்படாது என்பது எனது அபிப்பிராயம். இன்ன இன்ன பதார்த்தம் சாப்பிட்டால், உடலுக்கு ஒத்துக்கொள்ளாது, நோய்வரும் என்று கருதினால், எப்படிச் சாப்பிடாமல் விட்டுவிடுகிறானோ, அதுபோல் இன்ன மாதிரி நடந்தால் கேடுவரும் என்று தெரிந்தால், அதைச் செய்யாமல் தப்பித்துக் கொள்வான். அப்படிக்கில்லாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று தெரியாமல், இஷ்டப்படி நடந்து கொண்டு வந்த வினையைக் கடவுள் செயல் என்று சொன்னால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன வித்தியாசம்?

(காஞ்சிபுரத்தில் 16.6.1940 அன்று நடைபெற்ற திருமண விழாவில் ஆற்றிய உரை)


0 comments:

Post a Comment