Friday, September 4, 2009

பன்றிக் காய்ச்சல் – விவரங்கள், அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு முறைகள்.

 

  உலக நாடுகள் எல்லாமே ஒன்றுசேர்ந்து பன்றிக் காய்ச்சலுக்கு எதிராய்ப் போராடிக்கொண்டு இருக்கின்றன. April 2009 இல் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த நோய் உலக அளவில் பல உயிர்களைப் பலிவாங்கியது போதாதென்று இன்னமும் இதன் அட்டகாசம் தொடர்கிறது. அரசாங்கத்தின் முயற்சிகள் ஒருபுறம் இருக்க, அதில் குறைகளைச் சொல்வதே சிலரின் வாடிக்கை. நாமும் இப்படி இருக்க வேண்டியதில்லையே.. சரியான விவரங்களைத் தெரிந்துகொண்டு பீதியடையாமல் இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே.

  பன்றிக் காய்ச்சலுக்குக் காரணமாய் இருக்கும் H1N1A Virus:

  swine-flu-transferமனிதனுக்கு சளி - ஜுரம் வருவதுபோல் பறவைகளுக்கும், பன்றிகளுக்கும் வருவதுண்டு. அவைகள் முறையாக Human Infuenza, Avian Influenza, & Swine Influenza  என்று சொல்லப்படுகிறது. ( Influenza  என்றால் சளி – ஜுரம் – காய்ச்சல், இதனை வரச்செய்யும் கிருமியை Influenza Virus  என்று குறிப்பிடப்படுகிறது). சாதாரண நிலையில் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லை. ஆனால், பன்றியின் உடலுக்குள் Human Infuenza Virus  & Avian Infuenza Virus  ஒரே நேரத்தில் இருந்தால், இவ்விரண்டு கிருமிகளுக்கிடையே மாற்றங்கள் ஏற்படும். H1N1A Virus என்பது இதன் விளைவாக உருவாக்கப்படும் புதியவகைக் கிருமி. இந்த H1N1A Virus  பன்றியிலிருந்து மனிதனுக்குள் சேர்வதால் வரும் நோய்தான் பன்றிக்காய்ச்சல். இந்தப் புதிய வகைக் கிருமி முதல்முறை சேர்வதால், இதற்கான நோய்த் தடுப்புச் சக்தி நமது உடலில் இருப்பதில்லை. இயற்கையாகவே நல்ல நோய் தடுப்புத்திறன் உள்ளவர்கள் பாக்கியசாலிகள்.

  பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் (In Increased Order of Intensity)

  SwinFlu3_Symptoms

 1. 5 நாட்களுக்குமேல் சளி , காய்ச்சல், மூக்கொழுகல்

 2. வழக்கத்திற்கும் அதிகமான வாந்தி – பேதி ( கர்ப்பவதிகள் கவனத்திற்கு)

 3. தொண்டை வலி, உடல் வலி

 4. இதயத்துடிப்பு வேகமாய் இருப்பது

 5. தோல் நீலமாகவோ சாம்பல் நிறத்திலோ காணப்பட்டால்

 6. அதிகப்படியான சோர்வு, எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருப்பது, கைக்குழந்தை என்றால் அம்மா மடியை விட்டு வராமல் இருப்பது

 7. மூச்சுத்திணறல் , நியூமோனியா என்றால் உயிருக்கே ஆபத்து

  பன்றிக் காய்ச்சலுக்கான பாதுகாப்பு முறைகள்:

 1. அலுவலகம், பள்ளிக்கூடம், நண்பர்களுடன் விளையாட்டு என்று வெளியே போய்வந்ததும் கை-கால் கழுவுதோடு இல்லாமல், இன்னொரு முறை குளிப்பது உசிதம். குழந்தைகள் , வயதானவர்கள் என்றால் நீரில் டெட்டால் சேர்த்து 2 – 3 முறை கை-கால் கழுவினால் போதுமானது.

 2. முடியுமென்றால் அடுத்த சில வாரங்களுக்கு ஜனக்கூட்டம் அதிகம் புழங்கும் இடங்களுக்கு ( சினிமா , கடற்கரை ,  Malls , Club, சுற்றுலா) செல்வதை தவிர்க்கவும்.

 3. வேலை நிமித்தம் என்றாலோ அல்லது தனிப்பட்ட முறையில் தவிர்க்க முடியாத காரணங்கள் என்றால் மட்டுமே பயணம் செய்யுங்கள். உள்நாட்டுப் பயணம் – வெளிநாட்டுப் பயணம் இரண்டுமே இப்பொழுது நிலவும் காலகட்டத்தில் தவிர்க்கவேண்டியவையே.

 4. பயணத்தில் போவதற்கு முன்னே அருகில் உள்ள மருத்துவரை அணுகி தற்காப்புக்கான மருந்துகளையும் முறைகளையும் தெரிந்துகொள்ளுங்கள். ( நீங்கள் போகும் ஊரை / நாட்டைப் பொறுத்து இது மாறுபட வாய்ப்பு உள்ளது). மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கவும்

 5. வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்தாரையோ நண்பர்களையோ உடனே சென்று பார்ப்பதைத் தவிர்க்கவும். அவர்களும் படித்தவர்கள் தான், நிலமையைப் புரிந்து கொள்வார்கள்

 6. பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க N-95  என்று குறிப்பிட்டுள்ள பிரத்தியேக முகமூடியைப் பயன்படுத்தவேண்டும் என்று WHO ( World Health Organisation – உலகச் சுகாதாரக் கழகம்) அறிவித்துள்ளது. சாதாரணமாய் இதன் விலை 50 – 80 இந்திய ரூபாய்கள் மட்டுமே. ஆனால் சில சமூகவிரோதிகள் இதனைக் கள்ளச் சந்தையில் 200 – 250 ரூபாய்கள் என்று விற்கிறார்கள்.

 7. வீட்டில் யாராவது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டால், அவரது நோய் அறிகுறிகளைக் கூர்ந்து கவனியுங்கள். சாதாரண காய்ச்சல் தான் என்று மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து சாப்பிடாதீர்கள்.

 8. எப்பொழுதும் கைக்குட்டை வைத்திருங்கள். இருமல் , தும்மல் வரும்போது வாய் – மூக்கை மூடிக்கொள்ளுங்கள். சற்று நிதானித்த பிறகு வென்னீரில் வாய், முகம், கையைக் கழுவுங்கள்.

 9. விரல்/கால் நகங்களைச் சீராக வெட்டிக்கொள்ளுங்கள். பிள்ளைகளுக்கும் செய்யுங்கள்.

 10. சத்தான உணவைச் சாப்பிடுங்கள். நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை இயற்கை முறையில் அதிகரிக்க இதுவே சிறந்தது.

  பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து உருவாக்க ஆராய்ச்சி முயற்சிகள்:

  சில நூற்றாண்டுகளுக்கு முன்னே போலியோ , தொண்டையடைப்பான், அம்மை (Small pox)  போன்ற நோயினால் பாதிக்கப்பட்டால் அதனை "கர்ம வினை" என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், இப்பொழுதோ இதற்கான தடுப்பு மருந்துகளைப் பிள்ளைகளுக்கு முறையே கொடுத்தால் இம்மாதிரியான கொடுமையிலிருந்து காப்பாற்றலாம் என்று நாம் தெரிந்து கொண்டுள்ளோம்.

  இதே போல், பன்றிக் காய்ச்சல் வரச்செய்யும் H1N1A கிருமி மிக சமீபத்தில்தான் கண்டறியப்பட்டுள்ளது. இதன் ஆட்கொல்லி வீரியம் எல்லாரையும் பதறச்செய்கிறது. உலக நாடுகள் அனைத்தும் இதற்கான தடுப்பு மருந்தை உருவாக்குவதில் மிகத் தீவிரமாக செயல்படுகின்றன.. ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த Novartis, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த CSL மற்றும் இந்தியாவில் ஹைதிராபாதைச் சேர்ந்த Bharat Biotech, தில்லியைச் சேர்ந்த Panacea மற்றும் பூனேவில் உள்ள  Serum Institute மிக தீவிரமாக உள்ளார்கள். இவர்களின் முயற்சி நல்ல முறையில் முன்னேற்றங்களை அடைந்து வருவதாகத்தெரிகிறது. உயிர்களைப் பலி வாங்கும் இந்த நோயிடமிருந்து நமக்கெல்லாம் விரைவில் விடுதலை கிடைக்கும் என்று நம்புவோம்

  --தீபா கோவிந்த்


0 comments:

Post a Comment