Thursday, July 2, 2009

இலங்கையில் ''தமிழர் அரசு'' நிச்சயம் அமையும்: சட்டசபையில் முதலமைச்சர் கருணாநிதி உரை.

தமிழர்களுக்கு சம உரிமை தமிழ்மொழிக்கு சமதகுதி தமிழர்களுக்கான அதிகாரபகிர்வு இதற்காக நாம் போராடும் நிலைதான் தற்போது உள்ளது. எனினும் இலங்கையில் நிச்சயம் தமிழர்கள் அரசு அமையும் என்று முதலமைச்சர் கருணாநிதி இன்று சட்டசபையில் கூறியுள்ளார்.
இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதற்கும் மத்திய அரசு மூலம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகு அங்குள்ள தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தரவும் மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் காங்கிரஸ் கட்சி கொறடா பீட்டர் அல்போன்ஸ் பாமக தலைவர் ஜி.கே.மணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராமசாமி ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்று பேசினார்கள்.
இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் திறந்தவெளி பகுதியில் ஆடு மாடுகளை போல் அடைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அவர்கள் அந்த மக்களுக்கு தேவையான உணவு மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் என்றும் அவர்களுடைய வாழ்விடங்களுக்கு சென்று பாதுகாப்பாக வாழ்வதற்கு இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றும் நிலை இருப்பதால் அதை தடுத்து நிறுத்தி ஏற்கனவே உள்ளது போல வடக்கு கிழக்கு பகுதிகளை மீட்டு தமிழர்கள் முழு உரிமை பெற்று சிங்களவர்களுக்கு இணையான சமவாழ்வு வாழ்வதற்கு இந்திய அரசு மூலம் தமிழக அரசு உடனடி முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
இதற்கு நீண்ட பதிலளித்து முதலமைச்சர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைய தினம் இலங்கை தமிழர் பிரச்சனையை அரசியல் பிரச்சனையாக ஆக்காமல் அனைத்து கட்சியினரும் ஒரே விதமான கருத்தை தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இலங்கையில் நடைபெறும் பிரச்சனை என்பது சிங்களவர்களுக்கும் தமிழ் இனத்திற்குமான போராட்டமாகும். 50 ஆண்டு காலமாக இலங்கை தமிழர் தலைவர் செல்வா அமிர்தலிங்கம் குட்டிமணி ஜெகன் காலம் முதல் போராட்டம் நடை பெறுகிறது.
இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். தமிழ் மொழி சீரழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக போராட்டம் நடைபெற்றது. இதற்காக தமிழீழம் அமைய வேண்டும் என்ற குரலும் எதிரொலித்தது.
இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளுக்கு இதில் பல்வேறு நிலைப்பாடு உண்டு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழீழம் என்கிற பிரிவினைக்கு ஆதரவு இல்லை. மாநில சுயாட்சி என்ற அளவில்தான் தீர்வு அமைய வேண்டும் என்பதுதான் அவர்களின் கொள்கையாக இருந்து வந்தது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்போது தமிழீழம்தான் தீர்வு என்று மாற்றிக் கொண்டனர்.
பாமக கூட தமிழீழம்தான் தீர்வு என்று பேசி வந்தது. ஆனால் இன்று மாநில சுயாட்சி போதும் என்ற அளவிற்கு பேசி இருக்கிறார்கள். அதுதான் இப்போது முடியும். தமிழர்களுக்கு சம உரிமை தமிழ்மொழிக்கு சமதகுதி தமிழர்களுக்கான அதிகாரபகிர்வு இதற்காக நாம் போராடும் நிலைதான் தற்போது உள்ளது.
மத்திய மாநில அரசுகள் ஒருவரை யொருவர் குறித்து செயல்பட்ட காரணத்தால்தான் இங்கு தமிழ்மொழிக்கு எப்படி அந்தஸ்தை பெற்றிருக்கிறோம். இதே போல அங்கு இலங்கையில் தமிழர்களை மதிக்கின்ற ஒரு அரசு அமைய வேண்டும்.
எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து ஒரு தமிழர் அரசை அமைக்கும் நிலை உருவாகலாம். ஒரு காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே அதிபராகலாம் என்று அமெரிக்காவில் இருந்த நிலை மாறி இப்போது கருப்பர் இனத்தை சேர்ந்த ஒபாமா அதிபராகி இருக்கிறார். இதே போல இலங்கையிலும் தமிழர்களின் அரசு அமைவதற்கு வெகு தூரம் இல்லை என்கிற நம்பிக்கையை நாம் பெற வேண்டும்.
தமிழர்களை காப்பாற்ற வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரம் வளமிக்கதாக ஆக்க வேண்டும் என்பது முக்கியமா? அல்லது ராஜபக்ஷேவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? என்பதை நாம் சிந்தித்து பேச வேண்டும்.
அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்றால் அது சிங்கள அரசின் மூலம்தான் முடியும். அதற்காக இந்தியாவை நாம் வற்புறுத்த செய்ய வேண்டும்.
நம்முடைய குரல் உயர்ந்த அளவிற்கு மத்திய அரசின் குரல் உயர்த்தப்படவில்லை என்ற கருத்தை இங்கு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் பேசியதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.
எனவே சிங்களவர்களுக்கு எதிராக பேசி அவர்களை கோபமடைய செய்யக் கூடாது. சிங்கள பௌத்த துறவிகள் கூட நம் மீது கோப அக்னியை வீசக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.
எனவேதான் இலங்கை தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நீக்குபோக்குடன் நம்முடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
இலங்கை பிரச்சனையை பொறுத்தவரை ஆதி முதல் அந்தம் வரை முழுமையாக தெரிந்தவன் நான். இதை "பண்டாரக வன்னியன்' என்ற நாவல் மூலம் நான் விரிவாக எழுதியிருக்கிறேன்.
இலங்கை தமிழர்களுக்கான நிவாரணப் பொருட்கள் அவர்களை சென்றடைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஏற்கனவே செஞ்சிலுவை சங்கம் மூலம் தமிழக அரசோ மத்திய அரசோ நிவாரண உதவிகளை அவர்களுக்கு வழங்கி இருக்கிறது.
தற்போது வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்களும் பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்றடைவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. நிச்சயம் தமிழர்களிடம் அந்த பொருட்களை கொண்டு சேர்க்கும்.
இலங்கை தமிழர்களுக்கு தற்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தொண்டைமான் மற்றும் அவருடைய மகன் ஆகியோர் என்னை வந்து சந்தித்திருக்கிறார்கள். ஒரு குழு வந்து இலங்கையில் பார்வையிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். மத்திய அரசின் அனுமதி பெற்று உரிய அதிகார அழைப்பின் பேரில்தான் அங்கு செல்ல முடியும் என்று நான் தெரிவித்திருக்கிறேன்.
தற்போது இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய வழிவகைகளை சிங்கள அரசு மூலம் நீங்கள் செய்யுங்கள். நாங்கள் துணை நிற்கிறோம். நிச்சயம் உரிய நல்ல பலன் கிடைக்கும் என்று அவர்களிடம் நானே பேசியிருக்கிறேன்.
இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அமைச்சர்கள் மூலமாகவும் தெரிவித்திருக்கிறேன். நானே தொலைபேசி மூலமாகவும் பேசியிருக்கிறேன். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். எப்போதும் இதே போல தமிழர்களாக ஒற்றுமையாக இருந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்போம். இவ்வாறு கருணாநிதி கூறினார்.
இதையடுத்து பேசிய ஜி.கே.மணி பாமகவை பொறுத்தவரை தமிழீழம்தான் இறுதி தீர்வு என்பதில் உறுதியாக இருக்கிறோம். இடைக்கால தீர்வாக தமிழர்களுக்கு மாநில சுயாட்சி கிடைக்க வேண்டும் என்றுதான் கூறினேன் என கூறினார்.


0 comments:

Post a Comment