Thursday, May 28, 2009

உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் தன்னம்பிக்கை கவிதைகள்.

நீ மண்ணுக்காக போராட
தயங்குகிறாய் ஆனால்
ஒவ்வொரு விதையும்
மண்ணோடு போராடியே
மரமாகிறது.


வியர்வை சிந்தாத உன்னாலும்
மை சிந்தாத பேனாவாலும்
எதையும் சாதித்திட முடியாது.

தடை தாண்டி
ஓடிக் கொண்டிருப்பவனுக்கு
தடைகள் கண்ணுக்குத் தெரியாது
நீ நினைப்பது போல வாழ்க்கை
ஒன்றும் மரதன் ஓட்டமல்ல
அது தடைதாண்டும் ஓட்டமே.



பெருமை
என்பது உன்னைவிட
திறமைசாலிக்கு நீ
கைதட்டுவதில் அல்ல
அவனையும் உனக்காக
கைதட்ட வைப்பதுதான்.

இந்த உலகம் பூந்தோட்டமல்ல
நீ வளர தண்ணீர் ஊற்ற
இந்த உலகம் பெருங்காடு
நீயாகத்தான் வளரவேண்டும்.


உனக்கு
நண்பன் இருக்கிறானோ
இல்லையோ உனக்கு எதிரி
இருக்க வேண்டும்.

ஏனெனில்
உன்னிடம் அணைக்கும் சக்தியைவிட
உன்னிடம் எதிர்க்கும் சக்தியையே
நான் அதிகம் எதிர்பார்க்கிறேன்.

யாரு உன்னை உறிஞ்சி
எறிந்தாலும் முளைத்து வா
பனங்கொட்டையாய்
அதில்தான் உள்ளது
தனித்தன்மை.

யாருக்காகவும் கண்ணீர்விடு
யாரும் துடைக்க வருவார்கள்
என்பதற்காய் கண்ணீர் விடாதே.

உன்னில்
வளரும் நகத்தையும்,
முடியையும் வெட்ட
மறப்பதில்லை நீ

ஆனால்..
நீ வளர மறந்தால்
இந்த உலகமே உன்
கழுத்துக்கு கத்தியாகும்.



வாழ்க்கையில் மிதக்க
கற்றுக் கொள்ளாதே
நீ இறந்தால் தானாகவே
மிதப்பாய்

நீந்தக் கற்றுக்கொள்
அதுவே நீ கரைசேர
உதவி செய்யும்.

தோல்விகள்
என்பது உன்னை தூங்க
வைக்க பாடும் தாலாட்டு அல்ல

நீ நிமிர்ந்து நிற்பதற்கான
தேசிய கீதம்.

குட்டக் குட்ட
கல்லாகாதே
குட்டக் குட்ட
சிலையாகு.

வாழ்க்கை என்பது
ஒரு புத்தகம் அதில்
ஒரு பக்கம் மட்டும்
வாழ்க்கையல்ல

ஒவ்வொரு
பக்கங்களானதே
வாழ்க்கை.

உன்
பேனாவைக் கூட
மூடிவைக்காதே
அதை திறக்கும்
வினாடிகளில் கூட

நீ
எழுத நினைத்ததை
மறந்துவிடக் கூடும்.

இந்த உலகம் உனக்கு
சிறையல்ல நீதான்
கைதியாய் வாழ்கிறாய்.

நன்றி: கவிஞர் காசியானந்தனின் கவிதைகளில் இருந்து !!!!!!


1 comments:

Kandumany Veluppillai Rudra said...

very nice! thank you.

Post a Comment